புரட்சிகளின் பயணம் தொடருமா?
முக்கிய நிகழ்ச்சி நிரலுடன் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பிரான்ஸ் நாட்டுப் பயணத்தை மேற்கொண்டார்.இந்திய – பிரான்ஸ் இரு நாட்டு உறவுகள் பெரும்பாலும் இராணுவ ஒத்துழைப்பு, ஆயுத பேரங்களை மையமாகக் கொண்டே இருந்து வந்துள்ளது.
இந்தப் பயணத்தையொட்டி, 26 ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்குகிறது. அத்துடன், 3 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்பட ஏறத்தாழ 85 ஆயிரம் கோடி ஒப்பந்தத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2015- ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றபோது 36 ரஃபேல் விமானங்கள் வாங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக மோடி அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு நிறுவனம் மீடியாபார்ட் பல கோடி யூரோ பணம் இந்திய இடைத்தரகருக்கு அளிக்கப்பட்டதை வெளிக்கொணர்ந்தது. இந்த விசாரணை நிகழ்ந்து வரும் நிலையில் தற்போது மேலும் ராணுவ ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகின்றன.
இன்றைய உலகில் நாடுகள் தங்களை ஆயுதபாணியாக்கிட,அதிக நிதியை ஒதுக்குகின்றனர். மக்கள் நலத் திட்டங்களை சுருக்கி, ராணுவ செலவினத்தை அதிகப்படுத்துவது முதலாளித்துவப் பாதை.இந்தியாவாக இருந்தாலும், பிரான்ஸ் நாடாக இருந்தாலும் இந்த முதலாளித்துவப் பாதையில் தப்பாமல் நடைபோடுகின்றனர்.
லெனின் குறிப்பிட்டார்:”நவீன ராணுவ மயம் என்பது முதலாளித்துவத்தின் விளைபொருள்.” இன்றைய உலக நடப்பு இதனைத் தெளிவாக்குகிறது.எனவே, முதலாளித்துவத்தை அகற்றுவது இன்றைய வரலாற்றுத் தேவை. முதலாளித்துவம் அதிகாரத்திற்கு வந்த வரலாறு பிரெஞ்சு புரட்சியின் வரலாறு.
பாஸ்டில் சிறை
பிரதமர் மோடியின் அரசுமுறைப் பயணத்தில்,”பாஸ்டில் தினம்” என்றழைக்கப்படும் பிரான்சின் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக நரேந்திர மோடி பங்கேற்றார். பாஸ்டில் தின அணிவகுப்பில் இந்திய முப்படை அணி பங்கேற்றது.
பாஸ்டில் சிறை தகர்ப்பு நடந்த ஜூலை 14, 1789 தினம்தான் பாஸ்டில் தினமாகவும், பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமாகவும் கொண்டாடப்படுகிறது. பாரிஸ் நகர மக்கள் பாஸ்டில் சிறைக் கதவுகளை உடைத்து மன்னராட்சியை வீழ்த்தும் புரட்சியை துவங்கிய தினம் இது. மானுட வரலாற்றில் மிக முக்கியமான பிரெஞ்சுப் புரட்சியின் துவக்கம்தான் பாஸ்டில் சிறை தகர்ப்பு. “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கங்களை முன்வைத்து எழுந்த மகத்தான புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி.
மோடி சார்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் இந்த 3 முழக்கங்களில் எதன் மீதும் நம்பிக்கை இல்லாத இயக்கம்.இந்துத்துவா சித்தாந்தம் சிறுபான்மை எதிர்ப்பை மையமாகக் கொண்டது.ஆர்.எஸ்.எஸ் – சங் பரிவாரங்கள் சகோதரத்துவ, சமத்துவ, கோட்பாடுகளை தகர்க்கும் இயக்கங்கள். இந்தப் பின்னணி கொண்டவராக மோடி இருந்தபோதும்,ஒரு இந்திய பிரதமர் மகத்தான பிரெஞ்சுப் புரட்சியின் பாஸ்டில் தினத்தில் கலந்து கொள்வது இந்தியாவிற்கு பெருமை தரும் நிகழ்வுதான்.
பாரிஸ் நகரில் பாஸ்டில் சிறை அரசியல் கைதிகளை அடைத்து வைத்திருந்த சிறை. அன்றைய மன்னராட்சியின் கொடுமைகளுக்கெல்லாம் அடையாளம்.16- ஆம் லூயி மன்னன் ஆட்சி சாதாரண மக்கள் மீது கடுமையான வரிச்சுமை,பொருளாதாரத் தாக்குதல்களை தொடுத்து வந்தது. மக்கள் கடும் அதிருப்தி அடைந்து ஆயுதங்களோடு பாஸ்டில் சிறையை முற்றுகையிட்டனர். அந்த சிறை மக்கள் வசமானது. லூயி மன்னன் கில்லட்டின் எனப்படும் கழுவிலேற்றப்பட்டான்;அவனது தலை துண்டிக்கப்பட்டது. அரசி மேரி உள்ளிட்டு மன்னராட்சிக்கு ஆதரவான பல்லாயிரக்கணக்கானோர் கில்லெட்டினுக்கு பலியாகினர்.
நிலப்பிரபுத்துவ, மன்னராட்சிக்கு எதிராக மக்கள் திரண்டு அடக்குமுறை ஆட்சியை அகற்றினர்.இதுவே,பிரெஞ்சுப் புரட்சியின் மகத்துவம்.சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் கிளர்ந்தெழுந்த இந்தப் புரட்சி, மானுட வரலாற்றில் அடுத்து எழுந்த புரட்சிகர மாற்றங்களுக்கு எழுச்சியூட்டியது.
பிரெஞ்சுப் புரட்சி பின்னாளில் ஒடுக்கப்பட்டு தோல்வியில் முடிவடைந்தது. இந்தப் புரட்சியில் வர்க்கங்களின் பங்கேற்பைப் பற்றி விளக்கும்,மார்க்சும் லெனினும் விளக்கியுள்ளனர்..“பிரெஞ்சுப் புரட்சி ஒடுக்கப்பட்ட போதிலும், வரலாற்றைப் படிக்கும் ஒவ்வொருவதும் அதை வெற்றிகரமானதென்றே கருதுவர்” என லெனின் எழுதினார்.ஏனெனில்,“பிரெஞ்சு புரட்சி முதலாளித்து ஜனநாயகத்திறகும், முதலாளித்துவ சுதந்திரத்திற்கும் வித்திட்டது” என்றார் லெனின்.
மார்க்ஸ் “பிரெஞ்சுப் புரட்சி ஒரு முதலாளித்துவப் புரட்சி என்பதில் ஐயமில்லை. அது முதலாளித்துவ தன்மை கொண்டதால், சமூகத்தின் உழைக்கும் மக்களை அது சுரண்டலிலிருந்து விடுவிக்கவில்லை” என்றார்.
நிலப்பிரபுத்துவ அமைப்பு தகர்ந்து, முதலாளித்துவம் ஆளுகிற நிலைக்கு வருவதற்கு வித்திட்டது, பிரெஞ்சுப் புரட்சி. பழைய கொடுங்கோன்மையிலிருந்து மக்கள் விடுபட்டு, மானுட வரலாறு முன்னேறிடுவதற்கான ஒரு திருப்பமாகவே பிரெஞ்சுப் புரட்சி விளங்கியது.
புரட்சிகளின் தோல்வி
பழையனவற்றை தூக்கியெறிந்து சமதர்ம மாற்றுக்கான தேடலும், போராட்டங்களும் வரலாற்று நெடுக இருந்து வந்துள்ளன. 1792 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி, மக்களும், விவசாயிகளும் பெருமளவு பங்கேற்ற புரட்சியாக இருந்தாலும், அந்த புரட்சியாளர்களின் சமத்துவம் எனும் இலட்சியம் ஈடேறவில்லை.முதலாளித்துவம் ஆளுகைக்கு வந்தது.
ஆனால், மானுடத்தின் சமத்துவ தாகம் அடங்கிடவில்லை.1792 – பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு, 79 வருட இடைவெளியில் 1871 -ல் , பாரிஸ் தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியது; பாரீஸ் கம்யூன் எனப்படும் எழுச்சி நிகழ்ந்தது.
பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கிய பாரீஸ் கம்யூன் ஆட்சி கடுமையான வன்முறை கொண்டு அழிக்கப்பட்டது.முதலாளித்துவம் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.
அடுத்த 50 வருட இடைவெளியில் 1917- ரஷ்யப் புரட்சியும், 1949ல் சீனப் புரட்சி, பிறகு கியூபப் புரட்சி என புரட்சி வரலாறுகள் தொடர்ந்தன.
புரட்சிகளின் தோல்விகள் நிரந்தரமானதல்ல. பாட்டாளி வர்க்க விடுதலைக்கான புரட்சிப் பயணம் தொடர்ந்து வருகிறது.பாஸ்டில் தினம் இந்த வரலாற்று உண்மையை நினைவுறுத்தும் தினமாக அமைந்துள்ளது.
அது முதலாளித்துவத்தை நிறுவியதால், முதலாளித்துவ அமைப்பின் பிரதிநிதிகளான நரேந்திர மோடியும், பிரெஞ்சு அதிபர் மேக்ரானும்,மற்றும் முதலாளித்துவ உலகமும் அதனைக் கொண்டாடுகின்றனர்.
ஆனால், மானுடத்தின் சமத்துவ வேட்கையும், போராட்டங்களும் பல கட்டங்களைத் தாண்டி முன்னேறி வருகிறது. இன்றைய உலகம் சோசலிசம் நோக்கிய புரட்சிப் பயணத்தில் பயணிக்கிறது. இது கற்பனை அல்ல. அறிவியல் ரீதியான வரலாறு, எடுத்துரைக்கும் உண்மை.
(தொடரும்)