thodar 19: samakaala sutru suzhal savaalgal - prof.p.ram manohar தொடர் -19: சம கால சுற்று சூழல் சவால்கள் - முனைவர். பா. ராம் மனோகர்
thodar 19: samakaala sutru suzhal savaalgal - prof.p.ram manohar தொடர் -19: சம கால சுற்று சூழல் சவால்கள் - முனைவர். பா. ராம் மனோகர்

தொடர் -19: சம கால சுற்று சூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

இடர் தரும் சூழல் மாற்றம்!
இடம் பெயருகின்ற மனித இனம்!

முனைவர். பா. ராம் மனோகர்.

உயிரினங்கள் அனைத்தும் இடம் பெயரக்கூடியவை, என்பது நாம் அறிந்த ஒன்று!உணவு, இனப்பெருக்கம், பருவ கால மாற்றம் போன்ற காரணங்களுக்காக பறவைகள், சில விலங்குகள், தம் வாழிடத்திலிருந்து இடம் பெயர்வது சூழல் கட்டாயம்! இதனை” வலசை போதல் “(Migration )என்று அறிவியல் பூர்வமாக கூறப்படுகிறது. எனினும் இயற்கை வாழிடங்களிலிருந்து, மனிதர்கள் பருவ கால மாற்றம் என்ற காரணத்தினால் கூட இடம் பெயர்கின்ற நிலை, உள்ளது.

பொதுவாக போர், உள்நாட்டு கலவரம், வன்முறை, மற்றும் பொருளாதார காரணங்களுக்கு, பல்வேறு பகுதியிலிருந்து ஒரே நாட்டிற்குள், மக்கள் இடம் பெயர்கின்ற நிலை அவ்வப்போது நாம் அறிந்த செய்தி ஆகும். எனினும் பருவ கால மாற்ற மனித இடம் பெயர்வு கோவிட் தொற்று நோய் பேரிடர் காலத்தில் மிக அதிகம் இருந்ததாக தகவல் உள்ளது.இந்த நிலை, 100 நாடுகளில் காணப்பட்டது.

இத்தகைய மனித இடம் பெயர்வு, பற்றிய உலக இடம் பெயர்வு அறிக்கையின் படி (WORLD MIGRATION REPORT -2020) 2019 ஆம் ஆண்டில் 31.5 மில்லியன் ஆக இருந்த எண்ணிக்கை,2020ஆம் ஆண்டு 40.5 மில்லியன் ஆக உயர்வு பெற்ற நிலை வேதனைக்குரியது. ஐரோப்பா வில் உள்ள ஜெனிவா நகரில் அமைந்துள்ள உள்நாட்டு இடம்பெயர்வு கண்காணிப்பு அமைப்பு (INTERNAL DISPLACEMENT MONITORING CENTRE ) 2018 ஆம் ஆண்டு தரவுகளின் படி ,1.6 மில்லியன் அகதிகள், இடம்பெயர்வுக்காக முகாம்களில், தங்கவைக் கப்பட்டுள்ளனர்.2022 ஆம் ஆண்டு, உலக இடம் பெயர்வு அறிக்கை வெளியிட்ட தகவல் படி,145 நாடுகளின் 30.7மில்லியன் மக்கள், பேரிடர் காரணமாக இடம் பெயர்ந்து வந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு 14.6 மில்லியன், வெப்ப உயர்வினால்,46,000, வறட்சியினால் 32000 நபர்கள் இவ்வாறு பாதிப்பு அடைந்துள்ளனர். குறிப்பாக,2008-2020 ஆம் ஆண்டுகளுக்கு இடையில்,2.4 மில்லியன் மக்கள், வறட்சி,1.1 மில்லியன், அதிக வெப்பத் தினால் இடம் பெயர்ந்து இருப்பதால், பருவ கால மாற்றம் பூமிக்கு ஏற்படுத்தும் பிரச்சினைகள் தெளிவாகிறது.

2020 ஆம் ஆண்டு கொரோனா, பேரிடர் பாதிப்பு, காரணம் ஆக அதிக பட்சமாக,5.1. மில்லியன் மக்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிலும், சீனாவில் 5 மில்லியன், மற்றும் இந்தியாவில் 4 மில்லியன் மக்களும் இடம் பெயர்ந்து வந்த நிலை அதிர்ச்சி தருகிறது.2050 ஆம் ஆண்டுக்குள் உலகத்தில் 6 பெரும் பகுதிகளில், 216 மில்லியன் தம் நாடுகளுக்குள்ளே அகதிகள் ஆக மாறி விடப்போவது மேலும் அதிர்ச்சி. இதில் ஆப்பிரிக்கா, கிழக்கு ஆசிய, பசிபிக் நாடுகள், தெற்கு ஆசியா போன்ற பகுதி மக்கள் முழுமையாக துன்பப்படும் நிலை ஆகிவிடும்.

சரி, ஆனால், இந்தியாவில் இதே பருவ கால மாற்றங்கள் காரணமாக (வெள்ளம், வறட்சி, புயல், கடல் அரிப்பு, வெப்ப அலை,)மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். உலகில் 7 வது இடத்தில் இந்த மோசமான பாதிப்பு நாடாக உலக பருவ கால இடர் நிலை அட்டவணை -2021, (GLOBAL CLIMATE RISK INDEX-2021), ஆய்வு தகவல் தொகுப்பு வெளியிட்ட GERMAN WATCH என்ற தொண்டு நிறுவனம் கூறுகிறது. நம் நாட்டில், பீட் (மகா ராஷ்ட்ரா ),அல்மோரா (உத்தரக்காண்ட் ), சுந்தரவனம் (மேற்கு வங்காளம் ), கேண்தர் பாடா (ஒடிசா ), சஹார்சா (பீகார் )ஆகிய மாவட்டங்களில் முறையே வறட்சி, மழை குறைவு, வெப்ப உயர்வு, புயல், கடல் மட்ட உயர்வு, கடல் அரிப்பு,, வெள்ளம் ஆகிய பருவ கால பிரச்சினைகள் மக்கள் இடம் பெயர காரணம் ஆகிவிட்டது. குறிப்பாக இப்பகுதியில் 26%புயல்கள் கடந்த நூற்றாண்டு சந்தித்ததை விட அதிகம் ஆகும். பீட் மாவட்டத்தில் 1999-2018 வரை, மழை குறைவினால் விவசாயம் பாதித்துள்ளது. ஒடிசா கடற்கரைபகுதி 1999-2016 ஆண்டுகளுக்குள் கிட்டத் தட்ட 485 கிலோமீட்டர் கடற்கரை அழிந்து விட்டது. அல்மோரா பகுதியில் மழை குறைவு அப்பகுதிகளுக்கு மக்கள் வாழ்வாதாரம் இழந்து போக வைத்துள்ளது. மேலும் இந்த ஐந்து முக்கிய பருவ கால பாதிப்பு பகுதிகளில் (HOT SPOTS )70%முதல் 95%மக்கள் இடம் பெயர்வு செய்கின்றனர். டெல்லியில் அருகாமை மாநில (உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் )மக்கள் நீர் பற்றாக்குறை துன்பம், மக்கள் கூடி வாழ்வாதாரம் தேடி அலைய வைத்துள்ளது.

உண்மையில், இந்த பிரச்சனை பற்றிய உண்மைகள் நம் நாட்டில் பெரும்பான்மை மக்கள் அறியாமல் இருக்கின்ற ஒன்று. ஆம், உள்நாட்டுக்குள் அகதிகளாய், வாழ்கின்ற அடித்தட்டு ஏழை மக்கள், சாதாரணமாக உழைப்பது, அன்றாட உணவு உண்ண மட்டும் தான்! மேலும் அத்தகைய மக்கள், தங்குமிடம், பாதுகாப்பு, குடும்பம், குழந்தைகள் நிலை, கல்வி, மருத்துவ வசதி பற்றிய சிந்தனை நமக்கு வருவது அரிதாகிவிட்டது. மாநகரங்களில் இவர்கள் உழைப்பு சுரண்டப்படுவது ஒரு புறம் இருந்தாலும், அவர்கள் நம் நடுத்தர, உயர் வருவாய் பிரிவினருக்கு தொந்தரவு ஆக கருதும் நிலை உள்ளது. இடம் பெயரும் மக்களில்,மகளிர்
தொழிலாளிகள் ஆக மாறும் போதும், அவர்களின் பாதுகாப்பு, உடல் நல பராமரிப்பு,சத்துணவு குறைபாட்டின் காரணமாக எடை குறை குழந்தை, மூத்த ஆண், பெண்கள் பிரச்சனை போன்ற சவால்கள் எதிர் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது.

பருவ கால மாற்றம், நம் நாட்டில் மிக அதிக இடர்கள் ஏற்படுத்தி வரும் தற்போதைய காலத்தில் அரசுத் துறைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பல மீட்பு செயல், விழிப்புணர்வு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. பேரிடர்கள் வரும் காலத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழு (NDRF) உடனே குறிப்பிட்ட பாதிப்பு பகுதியில், அரிய உயிர் காக்கும் பணிகள் மேற்கொள்கிறது. எனினும், பேரிடருக்கு பின் அப்பகுதியிலிருந்து, வெளியேறும் மக்கள், இடம் பெயர்வு பற்றி , அரசு துறைகளோ, மக்களோ அதிகம் அக்கறை காண்பிப்பது இல்லை என்பது உண்மை.

இடம் பெயர் மக்கள், குறிப்பாக பருவ கால பிரச்சனைகள் அதிகம் தாக்கும் நம் நாட்டில், இது தொடர்பான, நிலையான ஒருங்கிணைந்த கொள்கை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.பொது மக்கள் அதிக விழிப்புணர்வு கொள்ளவேண்டும். கொரோனா காலத்தில் ஏராளமான உழைக்கும் மக்கள் இடம் பெயர்ந்து வரும் போது செய்திகள் அதிகம் வந்தது , அவர்களின் நிலை ஓரளவு மக்கள் அறிய வாய்ப்பு கிடைத்தது. முக்கிய பருவ கால பாதிப்பு பகுதிகள் அரசினால், குறிக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் கண்காணிக்கபட வேண்டும். அவர்கள் இடம் பெயரும் பகுதியிலும் இந்நிலை பின்பற்ற வேண்டும். பொதுவாக நீர் பிரச்சினை காரணமாக விவசாய அழிநிலை ஏற்பட்டால் அதற்குரிய நடவடிக்கைகள், கடல் மட்ட உயர்வு நிலப்பகுதியில் உரிய பாதுகாப்பு செயல்பாடுகள் மேம்படும் நிலை வர வேண்டும்.

மனிதர்கள் தவிர மற்ற விலங்குகள், பறவைகள், பருவ கால மாற்றத்தினால், வலசை போகும்போது அவை தமக்குரிய தகவமைப்பு பெற்று அதற்கு ஏற்ற வாழ்க்கை , அவற்றின் இடம் பெயரும் நீர்நிலைகளில், வாழ்விடங்களில் ஏற்படுத்திக் கொள்ளுகின்றன. ஆனால் இடம் பெயரும் மனிதர்கள், தாம் போகும் பகுதியை பற்றி அறிய இயலாது. அங்குள்ள சூழல் பற்றிய முன் அனுபவம் எதுவும் சிறிது கூட இல்லாமல் போகும் நிலை இருப்பதால், அவர்களுக்கு அரசு நல்வாழ்வு திட்டங்களை உருவாக்க, செயல்படுத்த உரிய முன்னுரிமை தர முயல வேண்டும். பொது மக்கள் இந்த சுற்றுச் சூழல் சவால், பற்றியும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *