மாஸ்கோ பயணமும் மன மாற்றமும்
முகமது அலி, கானா நாட்டில் பயணம் மேற்கொண்டபோது, ஆப்பிரிக்காவைப் பற்றி, வெள்ளையர்கள் சித்தரித்த அனைத்தும் பொய் என்று எப்படி உணர்ந்து கொண்டாரோ அதே போல் மாஸ்கோ பயணத்திற்குப் பிறகு, சோவியத் யூனியனைப்பற்றி, அமெரிக்கா கூறிய அனைத்தும் கட்டுக்கதை என்பதை உணர்ந்தார். அதற்கு முன்னால் சோவியத் யூனியன் பற்றி அமெரிக்காவில் போதிக்கப்பட்ட கருத்துக்களை அவர் உள்வாங்கி இருந்தார். மாஸ்கோ போனால் மறுபடி திரும்பி வரமுடியாது என்று கூட பலரும் பயமுறுத்தினார்கள். ஆனாலும், முகமது அலி 1978 ஜூன் மாதம் சோவியத் யூனியன் தலைநகர் மாஸ்கோ மற்றும் தாஷ்கணட், சாமர்கண்ட் ஆகிய இடங்களுக்கு பத்து நாட்கள் பயணம் மேற்கொண்டார். சோவியத் நாட்டின் அழைப்பின் பெயரில் முகமது அலி இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.
அப்போது சோவியத் நாட்டின் ஜனாதிபதி, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த பிரஷ்னேவை முகமது அலி சந்தித்துப் பேசினார். கிரெம்ளின் மாளிகையில் 35 நிமிடம் நடந்த இந்த சந்திப்பு முகமது அலிக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு மரியாதை ஆகும். அதுவரை பிரஷ்னேவ் எந்த ஒரு விளையாட்டு வீரரையும், கிரெம்ளின் மாளிகையில் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியது கிடையாது. கிரெம்ளின் மாளிகையில் தனிப்பட்ட முறையிலான பிரஷ்நேவுடனான முகமது அலியின் சந்திப்பு என்பது சோவியத் யூனியன் உலக குத்துச்சண்டை வீரன் முகமது அலிக்கு அளித்த சிறப்பு கவுரவம் ஆகும்.
“சாம்பியன்கள் என்ன சாதித்தார்கள்? எத்தனை பட்டம் பதக்கம் பெற்றார்கள் என எல்லா விஷயங்களையும் மக்கள் மறந்து விடுகிறார்கள். ஆனால் சாம்பியன்கள், மக்களாகிய தங்களை எப்படி உணர்ந்தார்கள் என்பதை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்“என்று கவிஞர் மாயா ஏஞ்சலோ கூறியுள்ளார். முகமது அலியையும் மக்கள் அப்படித்தான் நினைவில் வைத்திருந்தார்கள். வியட்நாமுக்கு எதிராக போரிட என் மனசாட்சி சம்மதிக்காது என்று கூறி அமெரிக்க ராணுவத்தில் கட்டாய சேவைபுரிய முகமது அலி மறுத்ததால் உலகம் முழுவதும் அவருக்கு மரியாதை இருந்தது. அந்த மரியாதை சோவியத் யூனியனில் அதிகமாக இருந்தது.
குத்துச்சண்டை சாம்பியனான முகமது அலி, அமெரிக்காவில் கருப்பர்களுக்கான சம உரிமைகளுக்காக போராடக்கூடிய வீரர் என்றே சோவியத் நாட்டின் பத்திரிகைகளில் செய்திகளை வெளியிட்டார்கள். ஜனாதிபதி பிரஷ்னேவ், முகமது அலி பற்றிய தனது வரவேற்புகுறிப்பில்‘‘அமெரிக்காவில் நீக்ரோ மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக முகமது அலி எடுக்கும் நடவடிக்கை எனக்கு நன்றாக தெரியும்” என்று எழுதினார். நீங்கள் மக்களை நேசித்தால் மக்கள் உங்களை மறக்க மாட்டார்கள் என்ற கவிஞர் மாயா ஏஞ்சலோவின் வரிகளுக்கு முகமது அலி சாட்சியாக இருந்தார்.
சோவியத் யூனியனில் தொழில்முறை குத்துச்சண்டையை ஏற்றுக் கொள்வதில்லை. வணிக ரீதியிலான அந்த குத்துச்சண்டையை மிக மோசமான விளையாட்டாக சோவியத்யூனியன் கருதியது. காரணம் தொழில்முறை குத்துச்சண்டையில் ஒருவருக்கு ஒருவர் ஆக்ரோஷமான முறையில் தாக்கிக் கொண்டு ரத்தக்களறியில் ஈடுபடுவதை காண்பதற்கு செல்வந்தர்கள் பணம் செலுத்துகிறார்கள்; விளையாட்டை வணிக சூதாட்டமாக மாற்றுகிறார்கள் என்று சோவியத் யூனியன் கருதியது.
அவ்வாறு இருந்தும் முகமது அலியினுடைய சாதனைகளுக்காகவும் கருப்பின மக்களுக்கு ஆதரவாக, நிறவெறிக்கு எதிராக அவர் எடுத்த அரசியல் நிலைப்பாடுக்காகவும் சோவியத் யூனியனில் அவருக்கு உயரிய மரியாதை கொடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் சோவியத் யூனியனில் குத்துச் சண்டை வீரர்களை பொதுவாக அமெச்சூர் வீரர்கள் என்று அழைத்தார்கள். அவர்கள் அரசு நிதியுதவி பெறும் அமைப்புகளால் ஆதரிக்கப்பட்டார்கள். குத்துச்சண்டையில் சிறந்து விளங்குபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்து கவனித்துக் கொண்டார்கள்.
சோவியத் ஜனாதிபதி பிரஷ்னேவை சந்தித்துப் பேசியதில் முகமது அலி மிகவும் பூரிப்படைந்தார். அந்த சந்திப்பு பற்றி முகமதுஅலி கூறுகையில், ‘‘பிரஷ்னேவ் என்னை தனது அலுவலகத்திலேயே சந்தித்து பெருமைபடுத்தியதோடு மட்டுமல்லாமல், எனக்கு அவருடைய ‘போர் நினைவு குறிப்புகள்’ புத்தகத்தை கையெழுத்திட்டு கொடுத்தார். மேலும், ஒரு கைக்கடிகாரத்தை பரிசாக அளித்தார். என் மனைவிக்கு அழகான ரஷ்ய பரிசு பெட்டியை கொடுத்தார். நான் அவரை கட்டிப்பிடித்து இரு கன்னங்களிலும் முத்தம் கொடுத்தேன். நான் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுத்து என்னை திக்குமுக்காட வைத்தார். அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நீக்ரோ… சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்களுடன் சாப்பிட முடியாத நீக்ரோ… சில ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர் உணவகங்களில் தடுக்கப்பட்ட நீக்ரோவிற்கு இது ஒரு பெரிய மரியாதையாக கருதுகிறேன்“ என்று புளகாங்கிதம் அடைந்தார்.
மேலும், செய்தியாளர்கள் கூட்டத்தில்,‘‘எனக்கு பிரஷ்நேவை தெரியும் என்று வேறு எந்த அமெரிக்க திரைப்பட நட்சத்திரமோ அல்லது விளையாட்டு வீரரோ பெருமை பேச முடியாது’’ என குதூகலித்தார். முகமது அலி தான் சென்ற இடமெல்லாம், ஏறிய குத்துச்சண்டை மேடைகளில் எல்லாம் ‘‘நான் தான் பெரியவன்’’ என்று பேசுவார். அந்த வார்த்தையை என்றைக்குமே அவர் விட்டுக் கொடுத்ததில்லை. தன்னம்பிக்கையின் அடித்தளமாக, அடிநாதமாக அந்த வார்த்தையை அவர் பயன்படுத்தினார். ஆனால் பிரேஷ்நேவை சந்தித்தவுடன் அவர் கூறுகையில், ‘‘நான் பெரியவன் அல்ல’’ என்று கூறினார்.
சோவியத் ஜனாதிபதி ஒரு போர் வெறியர் என்று அமெரிக்க பத்திரிக்கைகள் சித்தரித்த சூழலில், ‘‘பிரேஷ்நேவ் அமைதி விரும்பி. சாந்த குணம் உள்ள மனிதர். அவர் என்னிடம் சமாதானம், அமைதியைப் பற்றி மட்டுமே பேசினார். மனிதநேயம் பற்றி அவர் என்னிடம் விரிவாக பேசினார். சோவியத் யூனியனின் சிறப்புகள் பற்றியும், சமாதானம் மற்றும் அமைதிக்காக தன் நாடு ஆற்றி வரும் பணிகள் என்னிடம் எடுத்துரைத்தார். சோவியத் யூனியன் அணு ஆயுத தாக்குதல் நடத்த உள்ளது என்ற பிரச்சாரத்தை அமெரிக்கா செய்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நான் அதுபற்றி கேள்விப்படவில்லை. அப்படிப்பட்ட எந்த சிந்தனையும் சோவியத் தலைவரிடம் இல்லை என்று முகமது அலி கூறினார். அவர் சோவியத் யூனியனிலிருந்து திரும்பியபோது அவருக்கு கென்னடி விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் மத்தியில் பேசிய அலி, ‘‘சோவியத் மக்கள் நான் பார்த்ததிலேயே மிகவும் அமைதியான மக்கள்’’ என்று பெருமையாக கூறினார்.
நான் முதலில் ரஷ்யாவில் தரை இறங்கியபோது கொஞ்சம் பதட்டமாகவே இருந்தேன். ரோபோ மனப்பான்மை கொண்ட சோகமான மனிதர்கள், ஏஜெண்டுகள் தொல்லை தரும் விதமாக நடந்து கொள்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் நான் அங்கு கண்ட காட்சிகள் மிகவும் அதிசயமாக இருந்தது. 100 தேசிய இனத்தவர்கள் ஒற்றுமையாக வாழும் காட்சியைக் கண்டு நான் அசந்து போனேன்; மகிழ்ச்சி அடைந்தேன் என்று குறிப்பிட்டார்.
மேலும், நான் சோவியத் யூனியனில் தங்கி இருந்த காலத்தில் ஒரு துப்பாக்கியையோ அல்லது ஒரு போலீஸ்காரரையோ, பாலியல் தொழிலாளியையோ பார்க்கவில்லை என்று பெருமை பொங்க முகமது அலி குறிப்பிட்டார். அங்கு நானும் என் மனைவியும் பாதுகாப்பாக இருந்தோம். அதிகாலையில் உடற்பயிற்சிக்காக மாஸ்கோ நகரத் தெருக்களில் ஓடும் போது, அமெரிக்காவில் உள்ளதைப் போல, யாரும் என் தலையில் தட்டி பணம் பறிப்பார்களோ என்ற பயம் இல்லை. வழிப்பறி கொள்ளையர் இல்லாத ஒரு நகரமாக மாஸ்கோ இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
நான் என் சுற்றுப்பயணத்தின்போது, ரஷ்யர்களிடையே மத சுதந்திரம் இருப்பதை பார்த்தேன். யூதர்கள் ஜெப ஆலயங்களுக்கு செல்கிறார்கள். முஸ்லிம்களுக்கு எல்லா இடங்களிலும் மசூதிகள் உள்ளன. கத்தோலிக்கர்கள் சுதந்திரமாக வழிபாடு நடத்துகிறார்கள் என்று முகமது அலி பகிரங்கமாக தெரிவித்தார். சோவியத் யூனியனில் மத சுதந்திரம் இல்லை என்ற அமெரிக்காவின் பொய் பிரசாரத்தை பலரும் அறிந்து கொள்ள முகமது அலியின் ரஷ்ய பயணம் நேரடி சாட்சியாக அமைந்தது.
மாஸ்கோவில் மூன்று நாள் பயணத்திற்கு பிறகு முகமது அலி உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகருக்கு சென்றார். இந்த நகரம் இஸ்லாமிய வரலாறு மற்றும் கலாச்சார செயல்பாட்டுக்கான முக்கியமான தளம் என்ற முறையில் அங்கு சென்றார். சமர்கண்டில் மிகப் பழமையான கட்டிடங்களையும் ஆய்வகத்தையும் பார்வையிட்டார்.
முகமது அலியின் மாஸ்கோ பயணம் என்பது சோவியத் யூனியனை பற்றியும், அந்த மக்கள் பற்றியும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் சித்தரித்திருந்த தவறான கற்பிதங்களை தவிடுபொடியாக்கியது. சோவியத் யூனியனைப் பற்றிய முகமது அலியின் கருத்துக்கள், உலக மக்களுக்கு உண்மை நிலை என்னவென்று வெளிச்சம் போட்டு காட்டியது.
முகமது அலியை பொறுத்தவரை மாஸ்கோ பயணமும் பிரஷ்நேவ் சந்திப்போம் அவருக்கு மனதளவில் ஊட்டச்சத்தாக வேலை செய்தது. அவரின் குத்துச்சண்டை காலம் முடிவடையும் நேரத்தில், ஓய்வு பெறக்கூடிய காலத்தில் கடந்த காலத்தை தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டு என்ன செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் சோவியத் பயணம் பெரும் புகழையும் வரவேற்பையும் முகமது அலிக்கு பெற்றுக் கொடுத்தது.
ஒரு குத்துச்சண்டை வீரனின் அரசியல் களம் இத்துடன் இருக்கவில்லை விரிவடைந்து கொண்டே சென்றது. ஆனால் அவை ஒரு லட்சிய வாதியின் நேர்கோட்டுப் பாதையில் செல்லவில்லை.