மனிதர்கள், இரக்கம் கொண்டு அதிகம் சக மனிதர்களை மனம் மகிழ்ச்சி கொள்ளச் செய்ய அவர்கள் பசி தீர்க்க முனைவது நாம் அனைவரும் அறிந்ததே!. அதே போல் நம்மோடு வாழும் விலங்குகள் மீதும் நேசம் வைத்து, வளர்ப்பு பிராணிகள் நிலையில் இரக்கம் கொள்வது நாம் அறிந்த ஒன்றுதான்!எனினும் நகரங்களில் வசிக்கின்ற நாய்கள், குரங்குகள், புறாக்கள் போன்றவை தற்காலத்தில் பெரும்பாலும் நாம் எதிர்பார்க்காத சுகாதாரப் பிரச்சினை மனிதர்களுக்கு உருவாக்க வாய்ப்புகள் உள்ளது.
நகர சூழல் தெருவில் வசிக்கும் நாய்கள், (STRAY DOGS ) குறிப்பிட்ட பகுதியில், தம் எல்லைகளை வகுத்துக் கொண்டு, அங்குள்ள மனிதர்களிடம் தோழமையாய் இருப்பதால், அவர்கள் தம் பகுதியில் பாதுகாப்பு கருதி அந்த விலங்குகளுக்கு உணவு அளிப்பது, அவர்கள் குழந்தைகள், அவற்றுடன் நட்பு கொண்டு விளையாடுதல் போன்றவை நாம் வழக்கமாக கண்டு வரும் காட்சிகள் ஆகும். இதே போல் நீல பாறை புறாக்கள் (BLUE ROCK PIGEON )உயரமான கட்டிடங்கள், கோவில்கள், பழைய கோட்டை பகுதி, ஆகிய இடங்களில் கூட்டம், கூட்டமாக காணப்படும் பறவைகள், இவற்றுக்கு ஆன்மீக ரீதியாக, கருணை கொண்டும், பல மனிதர்கள் தானியங்கள் இரைத்து தாம் விலங்குகள், பறவைகள் பசி தீர்த்துவிடுவதாக, எண்ணி திருப்தியும், மகிழ்ச்சியும், அதிகம் அடைகின்றனர்.குரங்குகள் மீது மனிதர்களுக்கு அச்சம் இருந்தாலும், அவற்றின் நடத்தைகள், வேடிக்கை உணர்வு தருவது, ஒரு புறம் உள்ளது.நகரங்களில் இவை கோவில் பகுதியில் அதிகம் வசித்து வந்தால் குறிப்பிட்ட மதத்தின் பெரும்பான்மை மக்கள், குரங்குகளை வழிபாடு செய்து அவற்றிற்கு செயற்கை உணவுகள் தரும் கலாசாரம் நம் நாட்டில் தொன்று தொட்டு பின்பற்றப்படுகிறது.
ஆனால் நாய்கள் மூலம் ரேபிஸ் (RABIES), என்ற வெறி நாய் கடி, என்ற நோய் மிகுந்த பாதிப்புகளை மக்களுக்கு ஏற்படுத்துகிறது. அரசு துறைகள், உள்ளூர் நிர்வாகம், நாய்கள் இன பெருக்கம் கட்டுப்பாடு செய்ய “விலங்கு தொகை கட்டுப்பாடு (“ANIMALS BIRTH CONTROL ) முறையில் பல செயல்பாடுகளை கண்காணிக்க இந்திய விலங்கு நல வாரியம் (Indian Animal Welfare Board ) திட்டங்களை 2009 ஆம் ஆண்டு உருவாக்கி,2010 ஆம் ஆண்டு விதிகள் ஏற்படுத்தியது. எனினும் தற்போது வரை, ஆண்டு தோறும் 20 மில்லியன் நாய்கடி பாதிப்புகள், நம் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1995,96ஆம் ஆண்டுகள், சென்னை, மற்றும் ஜெய்ப்பூர், நகரங்களில் கடுமையான நடவடிக்கைகள் விலங்கு இனத் தொகை கட்டுப்பாடு சார்பாக எடுக்கப்பட்டன. எனினும் 2008 ஆம் ஆண்டில் தமிழ் நாடு, மட்டும் நம் நாட்டில் வெறி நாய் கடி நோய் கட்டுப்பாடு மேற்கொண்டு வரும் நிலையில், முதன்மை பெற்றுள்ளது.
நீல பாறை புறாக்கள், அவற்றின் கழிவு எச்சம், மற்றும் உதிரும் சிறகுகள் மூலம் சுவாச நோய்கள் மற்றும் மெனிஞ்சிடிஸ், (Meningitis), நீயுமோனிட்டீஸ் (Pneumonitis ), cryptococcal disease, Psittacosis போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், பூனே, மும்பை மாநகரங்களில் மக்கள் பாதிக்கப்பட்டு, அங்கு உள்ளூர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, மக்களை அறிவுறுத்தி வந்துள்ளது.
குரங்குகள் பெரும்பாலும் இயற்கைப் பகுதியில் வாழ்ந்து வருபவை, ஆனால் அவை அருகில் உள்ள நகரப் பகுதியில் உள்ள மக்கள் தரும் செயற்கை உணவுகளால் ஈர்க் கப்பட்டு கோவில், பூங்கா, மற்றும் மனித வசிப்பிடங்களில், வந்து தங்கிவிடுகின்றன.குறிப்பாக, ரீசஸ் என்ற செம்முக குரங்குகள் (Rhesus Macaque ), வட இந்திய பகுதியிலும் தென்னிந்திய நகரங்களில், கிராமங்களில், குல்லாய் குரங்குகள் (Bonnet Macaque ) மக்களுடன் இணைந்து வாழ்கின்றன. அவை உணவு தேடி வருவதும், குப்பை மேடுகளில், அலைந்து திரிவதாலும், மனிதர்களுக்கு பல நோய் பரப்புகின்றன என்பது உண்மை. ரேபீஸ் மற்றும் ஒட்டுண்ணி நோய்கள் இவற்றின் எண்ணிக்கை பெருக்கத்தால் ஏற் படுகின்றன. காடுகள் குறைவு, மக்கள் இவற்றிற்கு உணவு வழங்கி வருவதால் வட இந்திய நகரங்களில் குரங்குகளும் அங்கேயே தங்கி இனம் பெரு கிவிடுகிறது. ராஜஸ்தான் மாநில தலைநகரம் ஜெய்ப்பூர் பழைய நகரத்தில் (7.26ச. கி. மீ பரப்பளவு ) ஒரு சதுர கிலோமீட்டர் அளவில் 346 ரீசஸ் செம்முக குரங்குகள் 1985 ஆம் ஆண்டில் காணப்பட்டதாக ஆய்வு தகவல் (MONKEYS OF OLD CITY OF JAIPUR, BNHS JOURNAL..Vol. 86.No. 2 August 1989, REENA MATHUR, RAM MANOHAR, AND A. LOBO )உள்ளது. தற்போது மிக அதிக எண்ணிக்கை இருப்பினும், ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நகரத்தில் அரண்மனை, கோவில்கள் இருப்பதால் ஆன்மீககாரணி அடிப்படையில் உணவு, பழங்கள், தானியங்கள் ஆகியவை நெடுங்காலமாக குரங்குகள், மாடுகள், புறாக்கள் போன்ற விலங்குகளுக்கு பொது மக்களால் விநியோகிக்கப்படுவது வழக்கம் ஆகிவிட்டது. பங்களாதேஷ் நாட்டில் விலங்கு ஆராய்ச்சியாளர்கள் குரங்குகள் மூலம் சிமியன் போமி வைரஸ் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது என கூறுகின்றனர். தாய்லாந்து நாட்டில் லோப் புரி என்ற பகுதி நீள வால் குரங்குகள் எண்ணிக்கை அதிகம் காணப்படும் நிலையில் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவற்றிற்கு உணவு அளிப்பது வழக்கம் ஆகிவிட்டது.இந்த மனித இரக்கம் அதன் தொடர்புடைய குரங்குகளிடையே நடத்தை மாற்றம், நோய்கள் பரவும் நிலை,கவலைக்குரியதாகும்.
நகரங்களில் வளர்ப்பு விலங்குகள், தனி நபர்கள் கண்காணிப்பு மூலம் உணவு, மருத்துவ சேவை ஆகியவை பெறுவது அந்த உயிரினங்கள் ஆரோக்கியம், சுகாதார நிலை,சீராக இருப்பது எவ்வித பிரச்சனை இல்லை. ஆனால் தெருவில் திரியும் நாய்கள், புறாக்கள், குரங்குகள் ஆகிய விலங்குகள் எண்ணிக்கை பெருகும் போது, அவற்றினால் பல இடர்பாடுகள் வருவதும் தவிர்க்க இயலாது. உணவு அதிகம் தருவதால் இனப்பெருக்கசெயல் உந்தப்பட்ட ஒவ்வொரு விலங்கு சிற்றினமும் தம் சந்ததி உருவாக்க முனைகிறது. எனினும் இயற்கை சமநிலை என்றால் குறிப்பிட்ட வன உயிரினம், அபரிமிதமாக பெருகினால், அதன், சூழலில் , அதன் இனத் தொகை கட்டுப்பாடு செய்ய எதிரி அல்லது கொன்று தின்றும் விலங்குகள் தம் பணிகள் செய்துவரும். இங்கு நகரத்தில் மனிதர்கள் அந்த உண்மை அறியாத நிலை பரிதாபமே!ஆம், இரக்கம், கருணை, ஆன்மீக நிலை, போன்ற பண்புகளை முன்னிறுத்தி விலங்குகள் மீது அன்புடன் இருக்கும் வாய்ப்பு என எண்ணிஅதிக உணவீட்டம் நாய், குரங்கு, புறாக்கள் போன்ற விலங்குகள் பெற செய்கின்றனர்.ஆனால் இது சரியா என்பது நாம் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்று!
குரங்குகள், நகரங்களில் அருகில் உள்ள காடுகளில் மரங்களில் தங்கி தாவர உணவு உண்டு வாழ்ந்து வந்த நிலை மாறி செயற்கை உணவுகள், மக்களால் அதிகம் வழங்கி, அவற்றின் எண்ணிக்கை பெருகி, அந்த உயிரினங்களின் நடத்தை மாறிவிட்டது. புறாக்கள், தானியங்கள் அதிகம் மக்களின் கருணை எண்ணத்தால் மிக அதிகம் நகர கட்டிடங்கள், கடைத்தெரு, போன்ற பகுதிகளில் நாடி வருவது நாம் காணுகின்றோம். நாய்கள் மீது இரக்கம் கொண்டு உணவு தந்த நிலையால் அவை தொல்லை, நோய் தருகின்றன. இந்த உண்மைகளை பொது மக்கள் சிந்தித்து புரிந்து கொள்ள வேண்டும்.
விலங்குகள் காப்பாற்றவேண்டியவை என்றாலும் அவற்றின் இனத்தொகை நோய் பரவல், தொந்தரவு, ஆகியவற்றால் மனிதர்கள் பாதிக்க படுவதால் அரசுத் துறைகள், உள்ளாட்சி நிர்வாகம், பொது மக்கள், மக்களின் பிரதிநிதிகள், அறிவியல் அறிஞர்கள்,வணிகர்கள், ஆகிய பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்களை பெறுவது, முறையாக கண்காணித்து, விலங்கு நலன் மற்றும் மக்கள் நலன் இரண்டையும் பற்றி அறிந்து பின்னர் திட்டம் இடவேண்டும். இரக்கம் என்பது மக்களிடம் தேவையற்ற நிலையில், அறிவியல் இயற்கை கோட்பாடு பற்றியும் புரிந்து கொள்ளாத நிலையும் மிகுந்த வருந்துதற்குரிய ஒன்றாகும்! இனிமேலாவது நாம் சிந்திப்போமா!!?