ஆலைகளின் அதிக நீர் பயன்பாடு! அறியாத நம் மக்கள் படும் பாடு!
சமீபத்தில், கோடை கால நாட்களில், ஒரு சம்பவம் நினைவு!
நான் தெருவில் நடந்து செல்லும்போது கண்ட காட்சி, பல்வேறு எண்ணங்களை என்னுள்ளே ஏற்படுத்தின அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆம்!ஒரு புறம் நகராட்சி குடி நீர் குழாய் முன் வரிசையாக வண்ண, வண்ண பிளாஸ்டிக் குடங்கள், தெருவிலிருந்து இறங்கி முக்கிய நெடுஞ்சாலை வந்தபோது, நல்ல உடையணிந்த இளைஞர் ஒருவர் தன் காரில் சாய்ந்து கொண்டு, குளிர்மென் பானம் ஒன்றினை பருகும் காட்சி! என்ன முரண்பாடு!!?, உயிரின் அடிப்படை தேவையான நீர் தேடி அடித்தட்டு மக்கள் அங்கே வரிசையில் காத்திருப்பு ஒரு பக்கம் இருந்தாலும்,400 மில்லி அளவுள்ள, வேதிப்பொருள், வண்ணமூட்டி கலந்த குளிர் பானம், ஐம்பது ரூபாய் கொடுத்து குடிக்க இங்கு வசதி, வாழ்க்கை கொண்டவர்கள் மறு பக்கம் இருக்கும் நிலை காண்கிறோம்!. எனினும் இந்தமென் பானங்கள் தயாரிக்க ஆலை எவ்வளவு நிலத்தடி நன்னீர் பயன்படுத்துகிறது என்பது நம்மில் பலரும் அறியாத உண்மை! குடிநீர் தேவையினால் நம் நாட்டில் பல இடங்களில் பிரச்சனைகள் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இருக்கும் நிலையில், ஆலைகள் நிலத்தடி நீர் பயன்படுத்தும் நிலை பற்றி சிந்திப்போமா!!?
நம் நாட்டின் பல்வேறு தொழிற்சாலைகள் நன்னீர் பயன்பாடு அதிகம் மேற்கொண்டு, கழிவு நீர் வெளியேற்றம் செய்து வருகின்றன. பொருள் உற்பத்தி, அதனால் கழிவு நீர் மற்றும் தனிப்பட்ட நீர் நுகர்வு, மேலும் கழிவு நீர் பராமரிப்பு போன்றவை விவாதத்துக்கு உரிய நிலையில் உள்ளது.
மோட்டார் வாகனம், மென் பானங்கள் தயாரிப்பு, செராமிக் கற்கள், பால் பொருட்கள், சாராயம், உரம், பதப்படுத்தப் பட்ட உணவு, இரும்பு சிறு உலை, கண்ணாடி, பெட்ரோ கெமிக்கல், காகிதம், கூழ், சர்க்கரை, சாயம், ஆடை உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களில் நீர் பயன்பாடு அதிகம் உள்ளது. இந்த ஆலைகளின் நீர்த்தேவை, நிலத்தடி நீர், மேற்பரப்பு நீர், உள்ளூர் நிர்வாகம் மூலம் குழாய் நீர், வாகன தொட்டி நீர் ஆகிய பல வழிகள் மூலம் பெறப்படுகின்றன.
மேலும் கொதிகலன் மூலம் குளிர்ச்சி செய்யும் நன்னீர், கழிவு நீர் மீள் சுழற்சி மூலம் மாற்றம் பெற்று, மீண்டும் பயன்படுத்தி வருதல் சற்று உற்று நோக்கி கவனிக்கும் நிலையில் இருக்கிறது.
நீர் நுகர்வு, பயன்பாடு பிரச்சினைகள் பற்றி ஒழுங்குப்படுத்த, நிர்வகிக்க கண்காணிக்க,1998 ஆம் ஆண்டு மத்திய நிலத்தடி நீர் ஆணையம் (CENTRAL GROUND WATER AUTHORITY) நம் நாட்டில் ஒன்றிய அரசினால் உருவாக்கப்பட்டது.இந்த அமைப்பு 2012 ஆம் ஆண்டு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. மீண்டும் 2015 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டாலும் அதில் 50%மீண்டும் உட்புகுத்தி செழிக்க செய்ய வேண்டும், ஆனால் எவ்வித கடும் நடை முறைகள் பின்பற்ற இயலாத நிலையில், நியாயமான நீர் நுகர்வு, நீருக்கான விலை போன்ற அம்சங்கள் இந்த நெறிமுறைகள் கொண்டிருக்கவில்லை. அதனால் நீர் தணிக்கை முறை,ஆலைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறியப்பட்டது.
மீண்டும் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ம் தேதி, மத்திய நிலத்தடி நீர் ஆணையம் (CGWA) நீர் பயன்பாடு பற்றிய புதிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டது. இதில் 2015 வெளியிட்ட நெறி முறைகளின் குறைகளை சரியாக செய்ய வில்லை. எனவே தேசிய பசுமை தீர்ப்பாயம் (NATIONAL GREEN TRIBUNAL-NGT)2018 ஆம் ஆண்டு வெளியிட்ட நெறிமுறைகளையும் அங்கீகரிக்கவில்லை. பொதுவாக ஒரு சீரான கொள்கை இந்த பிரச்சினையில் இல்லை. நிலத்தடி நீர் தொழிற்சாலைகள் பயன்படுத்தும்போது, கட்டணம், சூழல் பாதிப்பு நஷ்ட ஈடு பற்றிய தகவல் முற்றிலும் இல்லை என்பதும், நீர் பற்றாக்குறை பகுதியில் கூட , ஆணையம், தொழிற்சாலைகள் எளிதில் நீர் பெற ஏற்ற வகையில் செயல்படும் நிலை கண்டு வருத்தம் கொள்ள வேண்டியுள்ளது. நீர் பயன்பாடு பற்றி கடுமையான சட்டம் இல்லை.
இந்த நிலை பல தொழிற்சாலைகள் துவங்க NGT மூலம் பெறப்படவேண்டிய தடையின்மை சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள் பரிசீலீப்பதில் தாமதம் ஏற்படும் நிலை
உருவானது. உடனே ஆலைகளின் நிர்வாகம் அரசின் உதவி நாடின. CGWA ஆணையம் மீண்டும் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 24, புதிய நடைமுறைகள் உருவாக்கி வெளியிட்டது. அதன் அடிப்படையில் ” நீர் தணிக்கை “முறை
பின்பற்றி அதன் அறிக்கை சமர்ப்பித்து, தடையில்லா சான்றிதழ் பெற அறிவுறுத்தியது. ஆனால், நீர் தணிக்கை முறை பல குறை பாடுகள் கொண்டு அமைந்துள்ளது.
நீர் தணிக்கை முறையில் நன்னீர் புவியிலிருந்து எடுக்கும் சரியான அளவு, கழிவு நீர் வெளியேறும் அளவு பற்றிய தெளிவான செய்முறை பின்பற்றவில்லை. இதன் உண்மை நிலை கண்காணிப்பு பற்றி விளக்கம் இல்லை. கழிவு நீர் சுத்திகரிப்பு, தோட்டத்தில் பயன்பாடு பற்றி நோக்கும் நிலை தேவை.2020 ஆம் ஆண்டு வழிகாட்டு ஆலோசனைகள் அனைத்தும் பொதுவாக உள்ளது. நீர் உற்பத்தி கணக்கெடுப்பு மற்றும் ஆழ் குழாய் எண்ணிக்கை மட்டும் கொடுக்கபட்டுள்ள நிலை, வருந்துதற்குரியது. விரிவான தணிக்கை முறையில் முறையாக தணிக்கை பயிற்சி, தொழிற்சாலை குழுவில் ஆலோசனை,நீர் பராமரிப்பு ஆய்வு, சரியான அளவீடு கொண்ட வரைபடம், மீள் பயன்பாடு, கண்காணிப்பு, கசிவு, நீர் தரம், வெளியேறும்போது அதன் நிலை போன்ற அம்சங்கள் சேர்க்கப் படவேண்டும். குறிப்பிட்ட வெவ்வேறு தொழில் நீர் பயன் பாடு பற்றிய தணிக்கை முறை வேறுபடும் அந்நிலையில் உரிய தணிக்கை செய்முறை மாற்றம் மேற்கொள்வது அவசியம் ஆகும். தணிக்கை முறைக்கான சான்றிதழ் கல்வி முறை உருவாக்க முயலவேண்டும்.
நீர் தணிக்கை முறையினை CII, FICCI, NPC ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டும் மேற்கொள்வது மாற்றப்பட்டு மேலும் நம்பிக்கை கொண்ட தரமான நிறுவனங்கள் இதில் ஈடுபடுத்துதல் அவசியம் ஆகும். நீர் தணிக்கை முறை மிக சரியாக பின்பற்றினால் மட்டுமே நிலத்தடி நீர் எடுத்து பயன்படுத்துதல் நியாயமாக நடைபெறும். முறையாக கண்காணிப்பு, சீராக நடை முறைகள் மேற்கொள்ளும் நிலை நாம் அனைவரும் எதிர் பார்ப்பது தவறல்ல. ஒரு புறம் நம் நாட்டில் நீர் பற்றாக்குறை மக்களை பாதிக்க செய்கிறது.
உலகின் 17%மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் 4%மட்டும் நீர் வளம் உள்ளது. இந்தியாவில் 60% மாவட்டங்கlளில் நிலத்தடி நீர் பற்றாக்குறை வரும் இருபது ஆண்டுகளில் மிக மோசமாகும் நிலை உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அத் துமீறிய நீர் எடுப்பு, நீர் தொற்று ஆகிய முக்கிய காரணங்களால்,மக்கள் நீர் ஆதார குறைவினால் துன்பம் அடைகின்றனர். விவசாயத்திற்கு அதிகம் நீர் தேவை என்பது அனைவரும் அறிவோம். ஆனால், மாநில அரசுகளுக்கு இடையில் உள்ள பிரச்சனை முறையாக ஆற்று நீர் கிராமங்களில் கிடைப்பதில்லை. பருவ கால மாற்றம் ஒரு புறம் வறட்சி, கடல் நீர் உயர்வு ஆகிய சூழல் இடர்கள் ஏற்படுத்தி வருவதும் அதிகம் ஆகிவிட்டது.நிலத்தடி நீர் அறிவியல் நிபுணர் டாக்டர். வீணா ஸ்ரீனிவாசன் அவர்கள் நீர் பற்றாக்குறைகாரணமாக கிராம மக்கள், நகரங்களில் குடியேறுகையில் , அங்கும் இதே நிலை தொடர்கிறது. நீர் பயன்பாட்டு மேலாண்மை குறைபாடுகளும், தவிர்த்தல் நன்று.
வளர்ச்சி நோக்கி ஒரு நாடு பயணிக்கும் போது, தொழிற்சாலை பெருக்கம் தவிர்க்க இயலாது. ஆனால் அவை முறையாக நீர் பயன்படுத்துவது, கழிவு நீர் வெளியேற்றம் பற்றிய கண்காணிப்பு, மாசிலா சூழல் ஆகியவை உறுதி செய்ய வேண்டும். அடித்தட்டு மக்களின் அடிப்படை தேவைகுடி நீர் பிரச்சனை தவிர்க்க நிலத்தடி நீர் பற்றிய கொள்கை, சட்டங்கள் மேலும் மாற்றம் பெற வேண்டும். சட்டங்கள் உருவாக்கிவிட்டால் மட்டும் போதாது. அவற்றை நடைமுறை படுத்த உறுதியான அரசு துறை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் பொது மக்கள், கற்றவர்கள், அரசு துறை ஆகியோர் முறையான நீர் பிரச்சனை விழிப்புணர்வு பெறவேண்டும். சிந்தித்து பார்ப்போமா!!!???

