அதிக இரைச்சல்! அழகு சூழலில் விரிசல்!
“பெட்ரோ மாக்ஸ் லைட்டே வேணுமா”!!? என்ற வசனம் உச்ச, உரத்த குரல் பேசிய திரைப்பட பிரபலம்,45 ஆண்டுகளுக்கு முன்பு பேசியது இன்று வரை இளைய தலைமுறைக்கும், வழக்கம் ஆகிவிட்டது. மேலும் நம் மக்கள் உரத்த குரலில், பேசுவது, கேட்பது என்பது இயல்பாகிவிட்டது. சத்தங்கள் விரும்புகின்ற சமுதாயம் ஆக நெடுங்காலமாக நாம் இருக்கிறோம். உரத்த குரலில் நாடகத்தில்பேசி பழகிய பல நடிகர், நடிகைகள் திரைப்படத்திலும் மிக பிரபலம் ஆகியது ஒரு புறம் இருந்தாலும், நம் கோயில் திருவிழா, மக்கள் கூடும் திருமணம், போன்ற சமூக விழாக்கள், போக்குவரத்து வீடுகளில் தொலைக்காட்சி, பேருந்து பயணங்களில் செல் பேசி இடர்கள், வீடுகளில் மிக்ஸி, கிரைண்டர், தையல் கருவி, குக்கர் ஆகியவற்றால் வரும் ஓசைகள் இருப்பது சூழல் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. நிச்சயமாக நம் தற்கால சமுதாயம் இதனை பற்றி சிந்தித்து பார்ப்பதாக தெரியவில்லை.
நான் இருபது ஆண்டுகளுக்கு முன் பட்டுக்கோட்டை என்ற நகரிலிருந்து தஞ்சாவூர் நகரம் நோக்கி, அதிகாலை பேருந்தில் பயணிக்கும் போது,ஏற்பட்ட நிகழ்வு இன்றும் நினைவில் உள்ளது. ஆம்! பேருந்தில் பயணித்த மற்றொரு இளம் தாயின் கைக் குழந்தை, பேருந்தில் ஒலித்த பாடல் வீச்சு கேட்டு அலறி அழுதபோதும், பின்னர் அந்த ஒலி நின்று போன நிலையில் குழந்தை அழுகை நின்ற போதும், எனது எண்ணத்தில் ஏற்பட்ட பதட்டம், ஒலி மாசுவின் கடுமைத் தன்மையினை உணர்வு பூர்வமாக அறிய வைத்தது.நகர சூழலில், நாள் தோறும் மக்கள், கடைகளில், காய்கறி சந்தைகளில், அரவை இயந்திர ஆலைகளில், வானில் பறக்கும் விமானங்களால், தொழிற்சாலை, மோட்டார் வாகனம், கட்டிட பணிகள் , ஆன்மீக தலங்களில் ஒலி பெருக்கி பாடல், மின்சார ரயில்,, என்று வாழ்க்கையில் சந்திக்கும் ஒலி மாசு பிரச்சனை அதிகம் அல்லவா?!
நவீன உலகத்தின் செல்போன் பேசுவது, அதன் மூலம், பாடல் கேட்க, ப்ளூ டூத், காதில் கருவி இணைத்தல் போன்றவை அணிவதும், தற்கால இளைஞர்களின் நாகரீகம் ஆவது, அவர்களின் செவி பிற்காலத்தில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது, என்பதையும் அவர்கள் அறிவதில்லை. சரி, ஒலி மாசு என்பதும், அதன் விளைவு எவ்வாறு,மனித ஆரோக்கியத்தினை பாதிக்கின்றது! நம்மில் பலரும் சிந்தித்து பார்ப்பது மிகவும் குறைவு ஆகும். இரைச்சல் அல்லது கடும் ஒலியினால் உடல் அளவில் மனநிலை பாதிப்பு, தலை வலி, இரத்த அழுத்த உயர்வு, இதய பாதிப்பு, நரம்பு, மூளை நோய்கள், கவனம் குறைவு, நடத்தையில் விரும்பத்தகாத மாற்றம் போன்றவை ஏற்படும் ஆம், பல்வேறு உடல், மன நிலை மாறுபாடுகள் ஏற்படுத்தும் ஒலி எவ்வாறு காதுகளை, அடைந்து மூளை அதை நமக்கு புரியவைக்கிறது!? சாதாரண ஒலி யானது புறகாதுகள் ஒலி அலைகளாய் சேகரிக்கப்பட்டு, நடுக்காதில் உள்ள செவிப்பறை மேல் மோதி, அங்கு காணப்படுகின்ற மூன்று (MALEUS, INCUS, STAPES ), குருத் தெலும்புகள் வழியாக, காக்கலியா (COCHLEA )என்ற நத்தை வடிவ உட் செவி உறுப்பினை அடைகிறது. அதன் உட்புறத்தில் அமைந்துள்ள கற்றை தொகுப்பு காது செல்கள் மூலம், செவி நரம்பின் வழியாக, மூளையின் ஒலி உணர்வு பகுதி சென்று வேதி அலைகள் ஆக அடைகிறது. அதுவே நமக்கு ஒலி உணர்த்தும். இந்த ஒலி அளக்க டெசிபெல் (decibel -dB )என்ற அளவீடு பயன்படுகிறது. இலைகள் சருகு ஓசை -20-30 dB ஆகும். இடி போன்ற கை தட்டல்-,120dB, ஆம்புலன்ஸ் அபாய ஒலி -140dB, பட்டாசுகள், வெடி ஓசை -140-160dB, என பல்வேறு சத்தங்கள் ஒலி அளவீடு, கணக்கெடுப்பு எடுக்கப் பட்டுள்ளது.85dB அளவீடு ஒலியினை தொடர்ந்து 8மணி நேரம் கேட்டாலும்,100dB அளவு 15 நிமிடம் கேட்டு கொண்டிருந்தாலும்,140dB -160dB அளவு ஒலி தொடர்ந்து 5நிமிடம் கேட்டாலும், செவிகள் மிககடுமையான பாதிப்புகள் உருவாக்க வாய்ப்புள்ளது.
ஒலிகள் இல்லாமல் உலகம் இல்லை, சுற்றுசூழல் அமைப்பில் இனிய ஒலிகள், இதயத்திற்கு இதம் தரும்! குழந்தை சிரிப்பு, மெல்லிய புல்லாங்குழல், வயலின் போன்ற இசைகருவிகளின் மென்மையான ஒலிகள் மனதில் மருந்து போல் அமைதி ஏற்படுத்தும். ஆனால் பப் போன்ற, ஆர்ப்பாட்டம் மிகுந்த, ஆரவார ராக் இசை 110 முதல் 120 dB அளவுக்கு இரைச்சல் ஏற்படுத்தும். தொழிற்சாலை பகுதியில் இத்தகைய பாதிப்புகளால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். ஜப்பான் நாட்டின் வட பகுதி மத்திய ஹோக்கீடோ என்ற இடத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் ஒலி மாசு, இரைச்சல் அதிகம் ஆனால் இயற்கை, உயிரின பல்வகைமை (BIODIVERSITY )அதிகம் பாதிப்பு அடைவது அறியப்பட்டுள்ளது. குறிப்பாக பறவை, வெட்டுக்கிளி பூச்சிகள், தட்டான் பூச்சி ஆகியவற்றின் இனத்தொகை குறைவு ஆவதும், பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹிரல் ஜானிவாலா (2017) மற்றும் குழு நடத்திய ஆய்வுப்படி செவி குறைபாடு, சமூக எதிர் மறை நடத்தை, வெறுப்பு, பேசும் தொடர்பு, கோபம், தன்னம்பிக்கை குறைவு, தூக்கம் இல்லாத நிலை, இதயநோய், மனநிலை மாற்றம் ஆகியவை ஒலி அல்லது இரைச்சல் வழி உருவாகுகின்றன.
ஒலி மாசு பிரச்சனை கட்டுப்படுத்த மிக தீவிர நடவடிக்கைகள் அரசு எடுக்க வேண்டும். ஆனால் இதனை ஒரு சிறு குற்றம் அல்லது தொந்தரவு என்பதாக மட்டும் சமூகமும், அரசுத் துறையும் காண்பதாக தெரிகிறது. அதிக ஒலி ஏற்படுத்தும் பேருந்து, கனரக வாகனம் ஒலிப்பான் முதல், தொழிற்சாலை, சமுதாய நிகழ்ச்சி, கூட்டங்கள் போன்ற செயல்பாடுகளில் , அத்துமீறிய ஒலிமாசு உருவாகும்போது கடும் சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் இருப்பது நன்று.
விழா காலங்கள், திருமண, இறப்பு ஊர்வலம் நிகழ்வுகளில், சாலையில், பட்டாசு, வெடிகள் வெடிப்பதால் ஒலி,மாசு பிரச்சனை கண்காணிக்கப்பட்டு.தடை செய்யும் போது,மக்கள் இதன் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வு அடைய வாய்ப்புள்ளது.அதிக ஒலி எழுப்பும் பட்டாசு உற்பத்திகட்டுப்பாடு , திரைப்பட அரங்கம், திருமண மண்டபம் ஆகிய இடங்களில் ஒலி பெருக்கி கட்டுப்பாடு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு துறைகள், சிந்தித்து பார்த்து திட்டங்கள் இடுவது முக்கியம் ஆகும்.
காவல் துறை, மோட்டார் வாகனம் போக்குவரத்து துறைகள் அதிக ஒலி எழுப்பும் இரு சக்கர வாகனங்கள் நடமாட, தடை ஏற்படுத்தினால் சிறப்பு.ஒலிமாசு என்பது பெரிய அளவில் இருக்கும் போது தொழிற்சாலையினை சுற்றி மரங்கள் நடுவது, பணியாளர் செவி நலன் பேணுவதற்கு காது உறைகள் பயன்பாடு, மற்றும் பாதுகாப்பு மேற்கொள்ள நிர்வாகம், அரசு துறை செயல்படினும், பொது மக்கள் மற்றும் இளைஞர்கள், தாய் மார்கள் மிகுந்த கவனத்துடன், ஒலி மாசு விழிப்புணர்வு பெறுவது, தற்காத்துகொள்வது மிகவும் அவசியம் ஆகும். மாநகரங்கள், நகரங்களில் வளர்ச்சி என்ற நிலையில் மக்கள் தொகை பெருக்கம், வாகனம் பெருக்கம்,புதிய பெரு வணிக வளாகங்கள் (MALL ) உருவாகும் செயல்கள் தொடர்ந்து இருந்து வருகையில், இரைச்சல் அல்லது ஒலி மாசுவானது , அழகு சுற்று சூழல் மற்றும் அயராது வாழ்வில் உழைக்கும் மனிதர்கள் ஆரோக்கியம் சீர்கேடு அடைய விடாமல் இருக்க நாம் அனைவரும் சிந்தித்து செயல்படுதல் நன்று. ஒவ்வொரு தனி நபர் தனது அன்றாட செயல்பாடு ஒலி மாசு உருவாக்காமல், நம் அண்டை, அயலாளர் நலன் கருதி மேற்கொள்ள மனப்பாங்கினை பெறவேண்டும்.

