ஆறிப் போய்விட்டதா, ஆற்றல் திறன்
குறியீடு, அளவீடு முறைகள்!!?
அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, நமதுவாழிட சூழல் மாற்றம் மிக நவீனமயம் ஆகி, மின்சார ஆற்றல் பயன்பாடு, வெவ்வேறு கோணங்களில் அதிக தேவையாகிவிட்டது. குறிப்பாக கட்டிடத் துறையில் மூன்றில் ஒரு பங்கு ஆற்றல் நுகரப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 28000ச. மீ. பரப்பளவு வணிக ரீதியான இடம், நம் நாட்டில் புதியதாக கட்டப்படுகிறதாக தகவல் உள்ளது. வணிக வளாகங்கள், அலுவலகம், அப்பார்ட்மெண்ட், மருத்துவமனை, தொழிற்சாலை போன்ற மிகப் பெரும் அமைப்புகள் அதிக ஆற்றல் நுகர்வது, பெருநகரங்களில், இயல்பாக நிகழ்கின்றவை ஆகும்.இதனை ஒன்றிய ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆற்றல் திறன் மேம்பாட்டு பணியகம் (BUREAU OF ENERGY EFFICIENCY ), இத்தகைய 40% கட்டுமான அமைப்புகளுக்கு ஆற்றலின் தொடர்ந்த தேவை அதிகரித்து வருவதை கணித்துள்ளது.
இந்நிலையில் மிக பெரும் கட்டுமானங்கள், திறன் மிகுந்த ஆற்றலை உருவாக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம் தற்போது எழுந்துள்ளது. குறைவாக ஆற்றல் பயன்படுத்தி, சேமிப்பு மூலம் பொருளாதார இழப்பு தவிர்த்தல்,, அதிக பயன் தரும் தூய்மை ஆற்றல், மாற்று ஆற்றல் போன்ற புதிய, எளிய முறைகள், பசுமை குடில் வாயுக்கள் தவிர்த்தல் ஆகியவற்றின் வழியில் ஒருங்கிணைந்த திறன் கொண்டு ஆற்றலை கட்டுமானங்கள் பயன்படுத்த வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.இந்த முறையானது, கரிம உமிழ்வு (CARBON EMISSIONS ), தேசிய அளவில் குறைக்க உதவிசெய்யும் என்பதும் உண்மை!எனவே ஆற்றல் பற்றாக்குறை பிரச்சனை தீர்ப்பதற்காக ” கட்டிட ஆற்றல் பாதுகாப்பு குறியீட்டு முறை “(ENERGY CONSERVATION BUILDING CODE )ஒன்றினை ஆற்றல் திறன் மேம்பாட்டு பணியகம் உருவாக்கியது. இந்த குறியீட்டு முறை மூலம் கட்டிட வடிவமைப்பு, அவற்றின் மேல் பூச்சு, இயந்திர முறை, கருவிகள், செயற்கை ஒளி, மற்றும் மின்சார மோட்டார்கள் அமைப்புகள் வழியில் ஆற்றல் திறன் மேம்பாட்டினை, பல வணிக ரீதியான கட்டிடங்களில் உருவாக்க முயல்கிறது.
2018 ஆம் ஆண்டு, “ECO NIVAS SAMHITA”என்ற ஆற்றல் திறன் மேம்பாட்டுக் குறியீடு திட்ட முறை குடியிருப்புப் பகுதிகளுக்குப் பின்பற்ற அரசால் முடிவு செய்யப்பட்டது. எனினும் அது கட்டாயம் இல்லை என்பதாலும், கட்டிடத்தின் மேல் பகுதியில் பூச்சு பொருட்கள் தொடர்புடையதாக இருந்த நிலையில் இதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
கேரளா, கர்நாடக மாநிலங்களில் மட்டும், இது ஓரளவு பின் பற்றப்பட்டது. ALLIANCE OF ENERGY EFFICIENT ECONOMY என்ற டெல்லியினை சார்ந்த ஒரு அரசு சாரா நிறுவனம், மின்சார ஆற்றல் கொள்கைகள்,, உரிய முறையில் செயல்படுத்த பல ஆதரவான செயல்பாடுகள் மேற்கொண்டு வருகிறது.பல்வேறு வணிகக் கட்டிடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பெரும் அமைப்பு நிலைகளில் இந்த ஆற்றல் திறன் முறை 2007 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பின்னர் 2017 ஆம் ஆண்டு, மீள் பார்வை செய்து சரி செய்யப்பட்டது.2020 ஆம் ஆண்டு பல புதிய சட்ட நுணுக்கங்கள் இணைக்கப்பட்டது. ஆனால் 2018 ஆம் ஆண்டிலேயே ஒன்றிய அரசு , ஆற்றல் திறன் பாதுகாப்புப் பற்றிய அரசு ஆணை வெளியிட்டது. அதன்படி 100கிலோ வாட், அல்லது அதற்கு மேலும் மின்சாரம் பயன்படுத்தி வருவோர் மற்றும் 120 கிலோவோல்ட் ஆம்பியர் ஆற்றல் தேவை உள்ள நிலையில் இந்த ஆற்றல் குறியீடு முறைகள் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. மாநில அளவில் இந்த திறன் குறியீடு முறை கண்காணிக்க, தனி அரசுத் துறை நிறுவனம் பொறுப்பு எடுத்துக் கொள்வது அவசியம் ஆகிறது. மேலும் 2018 ஆம் ஆண்டு விதிமுறைகள் பின்பற்ற கட்டிட உரிமையாளர், ஆற்றல் திறன் பணிப்பக அலுவலர்கள், ஆகியோர் அக்கறை கொள்ளவேண்டும்.
ஆற்றல் திறன் மேம்பாடு, பாதுகாப்பு குறியீடு முறைகள் பின்பற்றப்படும் நிலையினை ஆய்வு செய்ய டெல்லியைச் சார்ந்த, அறிவியல், சுற்றுசூழல் ஆய்வு மையம்(CENTRE FOR SCIENCE &ENVIRONMENT ) பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் 2022ஆம் ஆண்டில் மேற்கொண்டது. ஒன்றிய ஆற்றல் மின்சார அமைச்சக அறிக்கைகள், ஆற்றல் திறன் பணியகம் (BEE ), மற்றும் தன்னார்வ நிறுவனம் வெளியிட்ட தகவல்கள் போன்றவை மூலம் மேற்குறிப்பிட்ட ஆற்றல் திறன் குறியீடு மேம்பாட்டு முறைகள், பின்பற்றும் நிலை தெளிவாக இல்லை, அவற்றை கண்காணிக்கும் மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளும் திருப்திகரமாக இல்லை என்பது ஆய்வு மூலம் அறியப்பட்டுள்ளது.
ஆற்றல் திறன் குறியீட்டு முறைகள் மேம்படுத்தினால் மட்டுமே, நம் மின்சாரம், சேமிப்பு, பொருளாதார செலவுகள் குறைக்க இயலும். இதனை அனைத்து துறை அமைப்புகள் அலுவலகங்கள், மேற்கொள்ள அரசு (BEE)பல வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் தனியாக ஆற்றல் அளவீடு, திறன் மேம்பாடு செயல்பாடுகள் மேற்கொள்ள ஒரு முகமை உருவாக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மாநில அளவில் அரசின் கண்காணிப்பு அமைப்புகள் மற்ற துறைகளுடன் இணைந்து பணிகள் மேற்கொள்கின்றன. 44%புதுப்பித்த ஆற்றல் வளர்ச்சி நிறுவனம், 19%மின்சாரம் சோதனை அமைப்புகள், 17%மின்சாரம் விநியோகிப்பு அமைப்புகள் 14%நேரடியாக மின்சாரத் துறை இப்பணியில் ஈடுபட்டு வருகின்றன. கேரளா, ஆந்திர பிரதேசம், ஆகிய மாநிலங்களில் முழுமையாகத் தனி அமைப்புகள் இந்த ஆற்றல்திறன் பணிகளை மேற்கொள்கின்றன.36 மாநில அமைப்புகளில் 28 அமைப்புகள் ஆற்றல் திறன் மேம்படுவதற்கு ஆலோசனை வழங்கி, சான்றிதழ் அளிப்பதாக,”2020ஆம் ஆண்டு இந்திய ஆற்றல் திறன் மேம்பாடு “அறிக்கை கூறுகிறது.
2017 ஆம் ஆண்டு ஆற்றல் திறன் மேம்பாடு விதிகள்,மிக வேகமாக செயல்படுத்த திட்டம் இடப்பட்டது. எனினும் ஜூன் 2022, நிலையில்,19 மாநிலங்களில் அங்குள்ள உள்ளூர் சூழல், ஒத்து போகும் வகையில் நிறைவேற்ற முடிவு ஏற்பட்டது.ஆனால் 12 மாநிலங்களில் மட்டும் வெறும் அறிவிப்புகள் வெளியிட்ட நிலை பரிதாபம் ஆகும். உண்மையில் ஆற்றல் திறன் அளவீடு முறை, மற்ற துறைகள் மூலம், கட்டிட அனுமதி வழங்கும் விதிகளில் ஒன்றாக இணைக்கவேண்டும். அதில் 7 மாநிலங்களில் மட்டும் இது சாத்தியம் ஆக்கியது வேதனை ஆகும்.2018 ஆம் ஆண்டு ஆற்றல் திறன் விதிகள், பற்றிய தரவுகள், அனைத்து வணிக அமைப்புகளின் கட்டிடங்கள் மூலம் முறையாக பெறப்படுவது உறுதி செய்ய வேண்டும். 2020 ஆம் ஆண்டில் 36 மாநிலங்களில் 9 மட்டுமே,ஆந்திரா, குஜராத், ஹரியானா, கேரளா, மத்திய பிரதேஷ், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு போன்றவை ஆற்றல் அளவீடு தணிக்கை மேற்கொள்ள முறையாக செயல்பட்டுள்ளன. இவற்றுக்கான செலவினை சில மாநில ஆற்றல் தணிக்கை அமைப்புகள் தாமே ஏற்றுக்கொண்டுள்ளன. மேலும் ஆறு மாநில ஆற்றல் தணிக்கை அமைப்புகள் மட்டுமே வெவ்வேறு வகையான கட்டுமானங்களுக்கு ஏற்ற விதிகளுக்குட்பட்ட, சரியான எடுத்துக்காட்டு (BENCH MARK )ஆற்றல் திறன் குறியீட்டு அளவீடு முறைகளை, தம் உண்மையான தரவுகள் (DATA )வழியில் வெளிப்படுத்திய நிலை பாராட்டக்கூடியது.
ஆம், ஹிமாசலப்ரதேஷ், புதுச்சேரி, பஞ்சாப், ஹரியானா, ஆந்திர பிரதேஷ், கர்நாடகா ஆகிய மாநிலங்களில், ஆற்றல் பயன்பாடு, திறன், மேம்பாடு போன்றவை முறையாக ஆய்வு செய்யப்படுகிறது. சுற்றுச்சூழலின் முக்கிய அம்சமான ஆற்றல், மின்சாரத்திறன் பற்றிய விழிப்புணர்வு இருப்பினும், நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இது பற்றிய விரைவான செயல்பாடு இல்லை என்பது மிக வருந்துதற்குரிய ஒன்று. ஏராளமான, மின்சார பொறியியல் பட்டதாரிகள் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகளிலிருந்து வெளிவரும் நிலையில் அவர்கள் வசம் பணிவாய்ப்புகள் அளித்து, ஆற்றல் தணிக்கை செய்ய நம் அரசுகளுக்கு தயக்கம் ஏன்!? 2022 ஆம் ஆண்டுக்கான “ஆற்றல் திறன் குறியீடு அளவீடு, மேம்பாடு, மற்றும் பாதுகாப்பு நீடித்த நிலையான கட்டிட விதிகள் “என்று மாற்றம் பெற்றுள்ளது. ஆனால் 2018 ஆம் ஆண்டு விதிகள் பின்பற்ற, செயல் படுத்த தரவுகள் இல்லாத நிலை பல மாநிலங்களில் இந்த தணிக்கை அமைப்பு ஒரு சடங்கு போல் அமைந்துள்ளது.
ஆற்றல் பற்றாக்குறை, சாமானியனின் வீடுகளில் வாழ்வாதாரத்தினை பாதிக்கும் போது, பல வணிக வளாகங்கள், பள்ளி, மருத்துவமனைகள் , அரிய ஆற்றல்திறன் பாதுகாப்பு, மேம்பாடு தணிக்கை பற்றிய அக்கறை கொள்ளுமா!? அரசுத்துறை ஆற்றல்திறன் தணிக்கை அமைப்புகள், நடவடிக்கைகள் விரைந்து செயல்படுமா!!?
சிந்திப்போம்!