குப்பைகள் எரிப்பு! சமுதாயம் உணருமா,பொறுப்பு!
நமக்கு ஒன்று தேவையில்லை என்றால், அதனை அழித்துவிடும் வன்முறை உணர்வு உண்மையில் சமூக உயர்வு, தாழ்வு, வேறுபாடு கலாச்சாரம் மாற்றம் ஆகியவற்றில் ஓரளவு பாரம்பரியமாக ஏற்றுக் கொண்டு வரலாம். ஆனால், இயற்கை சுற்று சூழல் அமைப்பில் பல்வேறு நுகரும் பொருட்கள் அதிகம், உருவாகி விட்ட நிலையில் கழிவுகள் அபரிமிதமாக தொடர்ந்துபெருகும் நிலையினை நாம் காண்கிறோம். இந்த கழிவுகள் பற்றிய முழுமையான அறிவு நம்மில் பலருக்கு இருப்பினும், உடனடி தீர்வாக, எரித்தல் மூலம் அழித்தல் வழக்கம் ஆகிவிட்டது.
பொருட்களை வாங்கும் போது இருக்கும், ஆர்வம் அவற்றை முறையாகப் பயன்படுத்தி, அவைக் கழிவுகளாக மாறும் போது அக்கறை நம்மிடம் பெரும்பாலோருக்கு இல்லை என்பது உண்மை.மேலும் கழிவுகள் எரிக்கப்படுவது மட்டுமே அவற்றிலிருந்தும், அவற்றால் ஏற்படும் விளைவுகள், நோய்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட எளிய வழியாக எண்ணிக்கொண்டு வரும் நிலை வருத்தம் அளிக்கிறது.
திடக் கழிவு மேலாண்மை பற்றிய பல விழிப்புணர்வு செயல்பாடுகள் தொடர்ந்து பல ஆண்டுகள், நம் அரசுத்துறைகள் மூலம் சமுதாயம் அறிந்து கொண்டிருந்தாலும், பொதுமக்கள், அப்பணியில் நம் பங்கு மிக குறைவு என்றும், அதற்கு உள்ளாட்சி நிர்வாகம், தூய்மை பணியாளர்கள் மட்டுமே பொறுப்பு என்ற தவறான மனப்பான்மை கொண்டு இருக்கின்றனர். உள்ளாட்சி நிர்வாக பணியாளர்கள் கடமை ஒரு புறம் இருந்தாலும், பெரும் நகரங்களில் அல்லது கிராமங்களில் கூட” கழிவு பொருட்கள் எரிப்பு” பல ஆண்டுகள் ஆக தொடர்ந்து நடந்து வரும் விரும்பத்தகாத நிகழ்வு ஆகும்.
மனித உயிர் போனபின்னர் கூட பல மதங்களின் பின்பற்றுதல், முறைகளின் படி மண்ணில் ஆழக் குழிதோண்டி உடல்கள் புதைக்கப் படுவதும்,அதனால் எரிப்பு வழி காற்று மாசு குறைவு என்பது நாம் உணர வேண்டிய ஒன்று. மேலும் கொளுத்தி மகிழ்ச்சி கொள்வது ஒரு விழாவாக, பாரம்பரிய கலாசாரம் எனவும் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி மாதம் போகிப் பண்டிகை கொண்டாடி வரும் நிலையை அறிவோம். ஆனால் குப்பைகளை தரம் பிரிக்காமல், பழையவை என்ற காரணத்திற்க்காக எரிக்க நாம் தயார் ஆவது, ஒரு சுற்றுசூழல் சவால் ஆகும். வட இந்தியப் பகுதி, மலைப் பகுதியில், குளிர்காலத்தில் நேரடியாக அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு பொருட்களை எரித்து அதன் அருகில் அமர்ந்து தம் உடலினை வெப்பம் ஆக்கிக் கொள்ளுதல் வழக்கம் ஆகும்.
இதனால் அவர்கள் பாதிக்க நிறைய வாய்ப்பு உள்ளது என்பது அறியாமல் செய்கின்ற தவறு என்பதையும் உணர்வது இல்லை!. திடக்கழிவு பொருட்கள் எரிப்பு மூலம் ஏற்படும் விளைவுகள், சுற்றுசூழல் மற்றும் மனித உடல் நலத்தினையும் வெவ்வேறு வகையில் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது. புகை வருவது நேரடியாக காற்றின் தூய்மை, மண், ஏரி, குளம் ஆகியவற்றின் மேற்பரப்பு, நிலத்தடி நீர், போன்ற இயற்கை சூழலை அடைந்து நம் கண்களுக்கு புலப்படாத நிலையில் நுண்ணிய மாற்றங்கள் உருவாக்கி விடும். அந்த மாற்றங்கள், தீய பாதிப்புகளைச் சூழலில் வசிப்பவர், பயன்பாடு செய்பவரை தாக்கி விடுகிறது. குறிப்பாக நச்சு வேதிபொருட்கள் நீரில், காற்றில் கலந்து விட்டால், மனிதன், மற்ற உயிரினங்கள் போன்றவை உடன் பாதிக்கச் செய்கின்றன.
காடுகளில் எரிப்பு நிகழ்வதால், அங்கு அரிய மரங்கள், பெரும் விலங்குகள், அழிவு தவிர்க்க இயலாதது. எரிப்பு உண்டாக்கும் சாம்பல் பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மாங்கானீஸ், போரான், தாமிரம், துத்தநாகம் ஆகிய தனிமங்கள் கொண்டு இருப்பது, இயற்கை நீர் சூழலில் கலந்து தேவையற்ற பிரச்சனைகள் உருவாக்க காரணமாகிவிடும். நீர் பரப்பில் அதிக பாசி உருவாகி (SCUM) உணவு சங்கிலி பாதிக்கும். விரும்பத்தகாத துர்நாற்றம் வெளி வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. நவீன காலத்தில் நாம் வெகுவாக பயன்படுத்தி வரும் நெகிழி என்ற பிளாஸ்டிக் பொருட்கள், பழைய, கழிவுகளாய் மாறுகையில் எரிக்கின்றனர். அதனால் டை ஆக்சின், குளோரின் பொருட்கள், உருவாகும். பாலி ஈத்தனால், பாலி ப்ரோபைலீன் போன்றவை வெளிப்பட்டு, இயற்கையினை பாழ் படுத்துவது உண்மை. மேலும் மனிதர்களுக்கு சுவாச நோய்கள், இருமல்,, தலை வலி போன்ற நோய்கள் வரச்செய்கின்றன. கந்தக டை ஆக்சைடு, ஆவியாகும் கரிம வேதியல் பொருட்கள் ஆகியவையும் பென்சோ பை ரீன், பாலி அரோமைட்டிக் ஹைட்ரோகார்பன் இணைந்து புற்றுநோய் உருவாக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
குப்பை எரித்தால் நோய்கள் பல காற்று மாசு மூலம் வருகிறது என்பது நாம் அறிந்தாலும் டெல்லி போன்ற மாநகரங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் முதல் ஜனவரி 2023 வரை பல்வேறு பாதிப்புகளை காற்று மாசு உருவாக 24%காரணம் ஆகிவிட்டது. அந்த மாசு AEROSOLS என்ற கனிம பொருள் 33%ஆகவும், கரையாத நுண் துகள் 2.5 ஆக இருந்த நிலை அதிர்ச்சி!இதற்கு முழுவதும் காரணம் மாநகராட்சி குப்பை எரிப்பு என்பது வருந்த தக்க தகவல் ஆகும். இதன் ஆய்வு கான்பூர் இந்தியன் தொழில்நுட்ப கழகம் (IIT )2015-16ஆம் ஆண்டிலும், டாடா ஆற்றல் ஆய்வு நிறுவனம் 2018 ஆம் ஆண்டிலும் மேற்கொண்டு வந்தனர். இது போல் மதுரா, பிரோசபாத் நகரங்களில் குப்பை எரிப்பு அதிகம் ஆக இருந்தாலும் காவல் துறை முதல் தகவல் அறிக்கை (FIR ), ஒரு சதவீதம் குற்றங்கள் மட்டும் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் நிர்வாக சீர்கேடு மற்றும் அலட்சியம், மக்கள் அறியாமை போன்றவை காரணம் ஆக சமுதாய பாதிப்புகள் நோய்கள் ஆக, இளம் வயதினர், முதியோர் நுரையீரல் நோய்கள், இதயம் நோய்கள் மூலம் பாதிக்க வாய்ப்புகள் அதிகரிக்கிறது
நம் தமிழ் நாட்டிலும் இத்தகைய குப்பை எரிப்பு வழக்கம் குறைவு இல்லை!ஆனால்நாட்டின் மற்ற பகுதிகளில் நிகழ்வதை விட சற்று குறைவு. துப்புரவு பணியில் ஈடுபடும் நபர்களும், பல பயிற்சி பெற்றாலும், குப்பை எரிப்பு என்பது எளிய முறை தீர்வு என அதில் தினம் ஆங்காங்கு ஈடுபட்டு வருவது தவிர்க்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனி நபர்கள் கூட இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் மேற்கொண்டு வரும்போது அதனை தவிர்க்கவும், உரிய விழிப்புணர்வு செய்வது நன்று.
திடக்கழிவு மேலாண்மை பற்றிய பயிற்சி பல ஆண்டுகள் உயர் மட்ட அலுவலர் முதல் கீழ் நிலை பணியாளர் வரை தொடர்ந்து நம் அரசுத் துறைகள் நடத்தி வருவது நாம் அனைவரும் காண்கிறோம். பல்வேறு தூய்மை திட்டங்கள் ஒன்றிய அரசு, பல கோடி ரூபாய் செலவுகள் செய்து, ஓரளவு, சில நகரங்களில் மட்டும், குப்பைகள் உரம் ஆக்குதல், மீள் சுழற்சி போன்றவை சிறப்புடன் நடக்கிறது. ஆனால் விழிப்புணர்வு மட்டும் செயல் தூண்டும் நிலை இருந்தாலும், செயல் முழுமையாக பல இடங்களில் நிறைவு பெறவில்லை. சூழல் காப்பு என்பது வெறும் சடங்கு போல் இல்லாமல் நிச்சயம் மக்கள் பங்கேற்புடன் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது மக்களும் உண்மையான சுற்று சூழல் அறிவு பெற்று அரசுத் துறைகள் நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு தருவது மிகவும் அவசியம் ஆகும். குப்பைகளை ஏரிப்பதால் வரும் சூழல் சீர்கேடு, மனிதர்கள் மற்றும் இயற்கை, விலங்கு பறவைகள் போன்று எல்லோருக்கும் தீய விளைவுகள் தரும் என்பதை உணர்வோமா!!

