பருவ கால மாற்றமும், பறி போகும் உயிரினங்களும்!
“தண்ணி கருத்திருச்சு, தவளை சத்தம் கேட்டுருச்சு ” என்ற ஒரு பழைய பாடல், சமீபத்தில் எங்கோ செவியில் விழுந்தபோது, அந்த தவளை உயிரினத்தின் குரல்கள், இரவின்இருளில், நீர் நிலைகளில் தற்காலத்தில் உண்மையில்கேட்பது அரிதாகிவிட்டது என்று எனக்கு தோன்றுகிறது!.
ஆம், இயற்கையில் காணப்படும் முக்கிய உயிரினங்களில் ஒன்றான நீர் நில வாழ்விகள் (AMPHIBIANS )என்ற தவளை, தேரை, ஸலமாண்டர், சிசிலியன்கள் போன்றவை நம்மில் பெரும்பாலானோரால் அறியப்படாதவை.மேலும் அவற்றின் தோற்றம், வாழ்விடம் ஆகியவையும் நாம் அவற்றைக்கண்டு தேவையில்லாமல், வெறுக்கவும், விலகி செல்லவும் வைத்துள்ளது, அல்லவா!? ஆம்! தவளை எப்போதும் ஒரு கேலி, அருவருப்புள்ள விலங்காக பலரால் கருதப்பட்டாலும், இயற்கைச் சூழலில் அவற்றின் பங்கு இன்றியமையாதது.
தவளைகள் வயல்களில் தீமை தரும் பூச்சிகள், கொசுக்கள் போன்றவற்றை உணவாக உண்டு, உணவு வலை (FOOD WEB)நிர்வகிக்கிறது.தவளை இல்லாத நீர்நிலைகளில், பசுமை பாசி படர்ந்துவிடுகிறது. பாசி தவளைக்கு உணவாகும் வாய்ப்பு குறைந்து, நீர் நிலைகள் பாதிக்கின்றன. நீர் வழி தூய்மை பராமரிப்பு, குளங்கள், ஏரிகள் உயிரி நிலை காட்டி (BIOINDICATOR )யாக தவளைகள் விளங்குகிறது.பல்வேறு நாடுகளில் உணவாக, மருத்துவ ஆய்வு உயிரினங்கள் ஆக உள்ளன.12%நோபல் பரிசு ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டதாக தகவல் உள்ளது.
பல்வேறு தவளை இனங்கள் புற்றுநோய், இதய நோய் தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு மருந்துகள் தயாரிக்கும் ஆராய்ச்சிக்கு உதவுகிறது. இத்தகைய அரிய உயிரினங்களின் அருமை அறியாமல் மனித குலம் முழுமையாக அவற்றை அழிப்பது ஒரு புறம் இருந்தாலும், பருவ கால மாற்றம், நோய்கள் போன்றவை சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள வெவ்வேறு தவளை சிற்றினம் மறைவுக்கு காரணம் ஆகிவிட்டது.மாசுபாடு, வாழிட இழப்பு, அந்நிய சிற்றின ஆக்கிரமிப்பு, அதிக வேட்டை(உணவுக்கு மற்றும் செல்ல பிராணி காரணங்களுக்கு )போன்ற பல்வேறு காரணங்கள் தவளை இன அழிவினை கொண்டுவந்துள்ளது. ஆனால் பருவ கால மாற்றம் மட்டும் தற்போது முக்கிய காரணியாக கருதப்படுகிறது.
இந்த 2023 ஆம் ஆண்டு நம் நாட்டின் மேற்கு மலை தொடர்க் காடுகளில் தவளைகளின் இனப்பெருக்க செயல்பாடுகள் மழை குறைவு காரணமாக பாதிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடகக் கடற்கரைப் பகுதியில் 13%மழைக் குறைவு, மற்றும் கேரளா மாநிலத்தில் 50%மழைக் குறைவாக இருப்பதால், தவளை இட்ட முட்டைகள், தலைப்பிரட்டை வளர்ச்சி முழுவதும் முற்றுப் பெறவில்லை என்ற தகவல் உள்ளது.
மேற்கு மலைத் தொடர் பகுதியில், பாறைகளில் சிறு குட்டைகள் (ஒரு சதுர கிலோமீட்டர் அளவிற்கு 1000 எண்ணிக்கை )காணப்படுகின்றன.கூர்க் மலையில் இந்த குட்டை நீர் நிலைகளில் இடப்பட்ட தவளை முட்டைகள் மழை இல்லாததால், காய்ந்து விட்டன.இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (NATURE CONSERVATION FOUNDATION ), அறிவியல் ஆய்வாளர் ஜிதின் விஜயன் என்பவர் வட மேற்கு மலை பகுதியில் 2022 ஆம் ஆண்டு காணப்பட்ட பாறைக் குட்டைகள் தற்போது குறைந்து விட்டதால் இந்த அவல நிலைக்குக் காரணம் ஆகும் என்கிறார்.மரங்களில் கூடு கட்டும் மலபார் தாவும் தவளை ஐந்து ஆண்டுகளாக இங்கு எண்ணிக்கை குறைந்து வருகிறது.வறட்சி, நீர் நிலை வெப்பமாதல், அமிலகாரத் தன்மை, ஆக்சிஜன் குறைவு போன்ற காரணங்கள் அம்போலித் தேரை என்ற தவளை இனம் (Xanthophyrene tigrina) மறைவுக்கு வழி வகுத்துவிட்டது.
இத்தகைய இனம் நம் நாட்டில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் ஆபத்தான நிலை நோக்கி அமைதியாக பயணம் செய்கின்றன. ஆம், இன்று நேற்றல்ல,1989 ஆம் ஆண்டில் உலக நீர் நில வாழ்வி, ஊர்வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாடு (WORLD CONGRESS OF HERPETOLOGY) நடை பெற்ற போது அறிவியல் அறிஞர் பெருமக்கள், தவளை அழிவு பற்றிய கவலை, அச்சம் கொண்டிருந்தனர்.
ஆஸ்திரேலியா மற்றும் கொஸ்ட்டாரிக்கா ஆகிய நாடுகளில் 30% தவளை இனம் அழியும் வாய்ப்பு இருந்தது.2002 ஆம் ஆண்டு முதல் 2011 வரை எடுத்த கணக்கெடுப்பின் படி ஆண்டுக்கு 3.7%தவளை இனம் அழிந்து விடுவது 2013ம் ஆண்டு அறிக்கை மூலம் அறியப்பட்டது.உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட 25780 முதுகெலும்பு உயிரினங்கள் எண்ணிக்கையில் 41% தவளை இனம் எதிர்காலத்தில் அழியும் அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு தகவல் உறுதியாக தெரிவிக்கிறது. ஆஸ்திரேலிய அட்லன்டா தாவரவியல் பூங்கா ஒன்றில் 2016 ஆம் ஆண்டு 12 ஆண்டுகளாக toughies என்ற ஒரே சிற்றின பாதுகாப்பு பெற்ற ஆண் தவளை இன விலங்கு(RABBS FROG) நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டது.
2009 ஆம் ஆண்டு பெண் விலங்கும் அழிந்து போன நிலை பரிதாபம் ஆகும். ஐக்கிய அமெரிக்கா நாட்டில் உள்ள யோஸ் மைட் தேசிய பூங்கா வளாகத்தில் “மஞ்சள் கால் தவளையினை (Yellow legged Frog ) காப்பாற்ற முயற்சி நடந்து வருகிறது. 95% உயிரினங்கள் நோயினால் அழிந்து விட்டன.பூஞ்சை (BATRACHOCHYTRICHITRIYUM DENDROBATIDIS) நோய் தாக்கி இவ்வகை தவளைகள், சுவாச மண்டலம் மற்றும் கழிவு நீக்க மண்டல உறுப்புகள் பாதிக்கப்பட்டு தோல் மீதும் நோய் ஏற்பட்டு இறந்த தகவல் உள்ளது.
தவளைகள், பருவ காலமாற்றம் காரணமாக உருவாகும் நுண்ணுயிர்கள், பூஞ்சை, வைரஸ் போன்றவை பாதித்து தவளையினம் அழியும் நிலை தொடர்ந்து உலகம் முழுவதும் நிகழ்வது வருத்தம் அளிக்கும் செய்தி ஆகும். மேலும் அழகுப் பறவைகள், பெரும் பாலூட்டி இனங்கள் பாதிப்பதால் , ஏற்படும் விழிப்புணர்வு, அக்கறை, கவலை தவளை, ஸலாமாண்டர், சிசிலியன் போன்ற,விலங்குகள் பற்றி நம் பொது மக்கள், மட்டும் அல்ல,கற்று அறிந்தோர் கல்வியாளர்கள் மத்தியிலும் மிகக் குறைவாக இருப்பது உண்மை!, ஒவ்வொரு உயிரினமும், இயற்கைச் சுற்றுசூழல் அமைப்பின் செயல்பாடுகளுக்கு மிக அவசியம் ஆகும் என்பதை நாம் அனைவரும் உணர்வு பூர்வமாக அறிய வேண்டும். தோற்றத்தின் காரணமாக, அவற்றின் இயல்பான நடத்தை காரணமாக, எந்த ஒரு சிறு, பெரு உயிரினங்களையும் அலட்சியம் செய்ய வேண்டாம். அனைத்து உயிரினங்களுக்கும் குறிப்பிட்ட, விருப்ப, தகவமைப்பு பெற தக்க வாழிடங்களை இயற்கை அமைத்துள்ளது.
மனிதன் தன் பேராசை காரணம் கொண்டு அவற்றை அழித்து, ஆக்கிரமிப்பு செய்கின்றான்.ஆம் நீர் வாழ் உயிரினங்கள், மீன்கள், தவளைகள் போன்றவை வசித்து வந்த நீர் நிலைகளை நெடுங்காலமாகவே ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள், பேருந்து நிலையங்கள், வீடுகள் என மாறி வர மனிதன் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொண்டு வந்தான். எனவே அங்கு இருந்த தவளைகள் அழிந்துவிட்ட நிலை அதிர்ச்சியே!. அவை வேட்டையாடப்பட்டு உணவு, மருந்து தயாரிக்க உதவுகின்றன.
குறிப்பாக ரஷ்ய அறிவியல் அறிஞர் குழு ஆய்வின் படி, ஐரோப்பிய பழுப்பு தவளை (Rana temporaria )தோலின் மீது 76 எதிர் நுண்ணுயிரி பெப்டிடு என்ற மருந்து பொருள் உள்ளதாக தெரிகிறது. இதே போல் ஆஸ்திரேலியா வில் வடக்கு காஸ்ட்ரிக் ப்ரூடிங் தவளை (Northern gastric brooding Frog ) குயின்ஸ்லாண்டு பகுதியில் வசிக்கின்றன. அவை தம் இளம் உயிரிகளை வளர்க்கையில், தம் செரிமான சுரப்பு நீர், சுரக்காமல் தடை செய்துகொள்கிறது. இந்த தவளை மருத்துவத்தில் பயன்படுகிறது. இந்தியாவில் 380 தவளை சிற்றினங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 3.79%, ஒவ்வொரு ஆண்டும் குறைகிறது. இங்கு பன்றி மூக்கு தவளை மிக அரிதான ஒன்று.2003 ஆம் ஆண்டு கேரளாவில் இறுதியாக பார்க்கப்பட்டது.
இந்திய மாட்டு தவளை (INDIAN BULL FROG) ஒரு பொதுவான சிற்றினம் நம் நாட்டில் காணப்படுகின்றன. தவளைகள்,நீர் இயற்கை சூழலுக்குஎ ந்த அளவுக்கு அவசியம் என்பதை நம் இளம் தலைமுறை அறிய வேண்டும். பருவ காலமாற்றத்தின் காரணமாக பறி போகும் உயிரினங்கள் பற்றி சிந்தித்து பார்க்க வேண்டும். நாளை மனித இனமும் இத்தகைய அச்சுறுத்தல்களை சந்திக்கும் நிலை வர வாய்ப்புகள் உள்ளது என்பதை அறிய வேண்டும்.