thodar 35 : bioscopekaran - vittalrao தொடர் 35:பயாஸ்கோப்காரன்- விட்டல்ராவ்
thodar 35 : bioscopekaran - vittalrao தொடர் 35:பயாஸ்கோப்காரன்- விட்டல்ராவ்

தொடர் 35:பயாஸ்கோப்காரன்- விட்டல்ராவ்

ஸ்காண்டிநேவிய சினிமா
சுவீடிஷ் திரைப்படங்கள்

சுவிடிஷ் திரைப்பட இயக்குநர் இங்மர் பெர்க்மனின் Silence (TYSTNADEN)
மிக முக்கிய திரைப்படம் 1963ல் எடுக்கப்பட்ட சைலன்ஸ்
2ம் உலகப் போர் சூழலில் பெர்க்மன் அமைத்த கதையைக் கொண்டது. அன்றைய காலக் கட்டத்தில் சத்யஜித்ரே ஒரே கதாபாத்திரங்களைக் கொண்டு தொடர்ச்சியாக காலக்கிரமத்தில் மூன்று படங்களைக் கொண்டு தொடர்ச்சியாக காலக்கிரமத்தில் மூன்று படங்களை செய்தார். (பதேர் பஞ்சாலி, அபராஜிதோ, அபுசன்சார்)மிரினாள் சென் ஒரே சூழ்நிலையில் அமைந்த மூன்று படங்களைத் தொடர்ச்சியாக செய்தார். (இண்டர் வியூ, கல்கத்தா 71, பாதாதிக்). ஐரோப்பாவில் இங்க்மர் பெர்க்மன் தொடர்ச்சியாக மூன்று படங்களைச் செய்தார். அவை THROUGH AGLASS DARKLY, WINTER LIGHT, THE SILENCE என்பவை. சைலன்ஸ் படத்தில் நாஜிகளின் படையெடுப்புக்கு ஆட்பட்டு முழு மெளன கதியில் அமைதியாக சத்தமில்லாத சூழலில் ஒரு மிகப் பெரிய ஓட்டலை படத்தில் கொண்டு வருகிறார்.

தவிர்க்க முடியாததொரு வறண்ட தனிமை- தாங்க ஒண்ணாத அதன் கழுத்தை நெறிக்கும் தன்மை. பொறுக்க முடியாதபடிக்கு வடிகாலற்ற காதல்- பாலுணர்வு வதை, ஆசை மேலிட்ட ஏக்கம் என்ற மனிதர்களின் மனம் – உடல் பிரச்சினையை அடிநாதமாய்க் கொண்டுபோகும் அற்புதமான திரைப்படம். சிறந்த நடிப்பு, பிரமாதமான ஒளிப்பதிவு ஒப்பற்ற இயக்கம் என்று சேர்ந்து இப்படத்தை பெர்க்மனின் சிறந்த படங்களில் சேர வைக்கின்றன. சுமத்தப்பட்ட திக்கு தெரியாத தனிமையையும் அதன் அழுத்தத்தால் விளையும் பேராவல், உடலிச்சை, வெறுப்பு, பொறாமை ஆகியவற்றை இப்படத்தின் ஊடாக பெர்க்மன் ஆராய்கிறார் என்றும் சொல்லத் தோன்றுகிறது. இளமையைக் கடந்த அக்கா- தங்கைகள், தங்கையின் பத்து வயதுப் பையன் யோஹானும் இந்தப் படத்தில் உலவும் முக்கிய பாத்திரங்கள். மற்ற உதிரி பாத்திரங்களில் முக்கியமானது வயதான ஓட்டல் உரிமையாளர். படத்தில் இவரே பரிசாரகரும்கூட. அந்த ஓட்டலில் வேறு பணியாட்கள் காணப்படவில்லை.

சகோதரிகளும், பையனும் ரயிலில் தங்கள் ஊருக்குப் போய் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போர் சூழல், அந்தச் சூழலை பெர்க்மன், ரயில் பெட்டியின் மூடப்பட்ட கண்ணாடி ஜன்னல் வழியே வெளியுலகை வேடிக்கைப் பார்க்கும் சிறுவன் யோஹானின் பார்வை வழியே நமக்குக் காட்டுகிறார். வெளியே ஒன்றன் பின் ஒன்றாக ராணுவ கவச மோட்டார்கள் போய்க் கொண்டிருக்கின்றன. அக்கா எஸ்தர் ஒரு நோயாளி. கவிதைகள் போன்ற புனைவுலக புத்தி ஜீவி. தங்கை அன்னா கவர்ச்சிமிக்கவள். புரிந்து கொள்ளத் தடையானவற்றையும் புரிந்து கொள்ள முயல்பவன் அவளுடைய பையன் யோஹான். எஸ்தரின் உடல்நிலை மோசமாகவே அவர்கள் நடுவழியில் நாஜிப் படைகளால் வளைக்கப்பட்ட டிமோக (TIMOKA) (ஜிமிவிளிரிகி) என்ற ஊரில் இறங்கி ஓய்வெடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடர இருக்கின்றனர். அந்த ஊரில் அவர்கள் தங்கிய பிரமாண்ட அளவிலான ஓட்டல் யுத்த சூழல் காரணமாய் முற்றிலும் காலியாகவே கிடக்கிறது. இவர்களையடுத்து ஒரேயொரு கேளிக்கை செய்து காட்டும் குள்ளர்கள் குழு ஒன்றுதான் அந்த ஓட்டலில் தங்கியிருக்கிறது. அவர்கள் அனைவரும் ஆண் குள்ளர்கள். தேவைக்கேற்ப அவர்களே பெண் வேடமும் அணிவார்கள்.

இந்தப் படத்தின் கதைக்கேற்ப – சூழலின் இறுக்கத்தின் மத்தியில் பெண்களின் பாலியல் உணர்வை பெர்க்மன் காட்டியுள்ள படிக்கு அன்றைய நேரத்துக்கு இந்தப் படம் சுவீடனைத் தவிர பிற நாடுகளில் பலத்த சர்ச்சைக்குள்ளானது. தடையும் விதிக்கப்பட்டது. பீட்டர் கோவி PETER COWIE) என்பவர் இங்க்மர் பெர்க்மனின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். அவரோடான கலந்துரையாடலின்போது பெர்க்மன், ‘‘சைலன்ஸ்’’படத்தைப் பற்றி அதன் சர்ச்சைகுரிய அற்புத வெளிப்பாடு, அது அமைந்த விதம், பாத்திரங்கள் இரண்டுக்குமான எதிரெதிரான மனம் உடல் அமைப்பு என்பனவற்றை வைத்து பேசுகிறார். வயதான ஓட்டல் உரிமையாளர் மிகுந்த கருணையுள்ளம் கொண்டவராய் எஸ்தருக்கு மருந்து எடுத்துத் தருவது உணவு பரிமாறுவது மற்றும் பிற குற்றேவல்களை தம் மகளுக்குச் செய்வதுபோல செய்கிறார். சிறுவன் ஒரு சமயம் தன் விளையாட்டுத் துப்பாக்கியால் அவரைச் சுட்டுப் பயமுறுத்துகையில் அவரும் அவனுக்குச் சமமாய் விளையாடும் ஒரு மின்னற் பொழுது காட்சி அபாரமாய் படமாக்கப்பட்டுள்ளது. ஆளேயில்லாத அந்த அறைகள் காலியான பெரிய ஓட்டலின் நடைகளிலும் ஆளோடியிலும் யோஹான் தன் விளையாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றிச் சுற்றி வருகிறான். அவன் அன்பைப் பெறுவதில் அக்கா தங்கைகளிடையே போட்டியும் பொறாமையும், தங்கையின் மகனைத் தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறாள் எஸ்தர்.

தனிமையையடுத்து பாலியல் உணர்வு இந்தப் படத்தின் முக்கிய மற்றொரு அங்கம், தனிமையென்பது எஸ்தருக்குத்தான். யோஹானும் அன்னாவும் தனிமையை ஒருவாறு கடந்து சமாளித்து விடுகிறார்கள். பாலுணர்வுக்குள் சிக்கித் தவிக்கும் எஸ்தர் ஒரு கட்டத்தில் தங்கை அன்னாவுடன் ஓரினப் பாலுறவுக்கான முயற்சியிலும் ஈடுபட்டு ஆனால் ஒதுக்கப்படுவதை பெர்க்மன் மிகப் பூடகமாய் நளினமாய் காட்டிவிடுகிறார். ஒரு சமயம் எஸ்தர் சுய இன்பம் பெறும் காரியத்திலும் ஈடுபடுகிறாள். இந்த இரு காரியங்களுக்கும் முற்றிலும் நேரெதிராக அன்னாவால் இருக்க முடிகிறது. தனிமையை உதறிவிட்டு அவள் வெளியிலுள்ள மது அருந்தும் பாருக்கு போகிறாள். அங்கு ஆணும் பெண்ணுமாய் மது அருந்திவிட்டு நடனமாடுகிறார்கள். இவள் தனியே மேஜையில் அமர்ந்து மது அருந்துவது பரிசாரகன் ஒருவனின் கவனத்தை ஈர்க்கிறது. இதை அன்னாவும் கவனிக்கிறாள்.

யோஹான் ஓர் அறைக்குள் நுழைய அங்கு குள்ள நடிகர்கள் கூச்சலிட்டபடியிருப்பதை பார்ப்பதோடு அவர்களின் சிறுத்த உருவங்களைக் கொண்டு அவர்களும் தன்போல சிறுவர்களே என்று நினைத்து ஒரு உயரம் குறைந்த மனிதனைப் பார்த்து தன் ஆட்ட துப்பாக்கியால் சுடுகிறான். அவரும் ஹாவென அலறியவாறு எகிறி விழுகிறான். எல்லோரும் கை தட்டி ஆர்ப்பரிக்க, மற்றொரு உயரம் குறைந்த மனிதர் சிங்கம்போன்ற போர்வையை போர்த்திக் கொண்டு யோஹானைப் பயமுறுத்தி அந்த பயமுறுத்தல் பலிக்காததால் தோற்று விழுகிறான். அந்த சமயம் குள்ளர்களின் தலைமைக் குள்ளரும் நாடகக் குழுவின் தலைவனுமான குள்ளர் வருகிறார். எல்லாரையும் அதட்டி அடக்கிவிட்டு யோஹானை தாஜா செய்து வெளியேறும்படி கூறி அனுப்புகிறான்.

அன்னா அருகிலுள்ள நாடகக் கொட்டகையில் நாடக மொன்றை பார்த்துக் கொண்டிருக்கையில் ஒதுக்குப்புறமான மூலையொன்றில் ஓர் ஆணும், பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டிருப்பதை கவனிக்கிறாள். அதிர்ந்துபோய் வெளியேறுகிறாள். பிறகு அந்த மது விடுதியின் பரிசாரகனை சந்தித்து அழைத்துக் கொண்டு ஆளில்லாத தேவாலயத்துக்குள் நுழைந்து அவனோடு உடலுறவு கொள்ளுகிறாள்.

இந்த ஹஜ்ஜையற்ற சுதந்திரமான உடலுறவு கொள்ளும் நிகழ்வை பெர்க்மன் தேவாலயத்தில் வைத்திருப்பது ஒருவித எதிர்கலாச்சார – கலகக்காரதனத்தோடு எனலாம். இப்படி இங்கு நடக்கவே நடக்காது என்று நம்பிக்கைவைத்திருப்பதையும் மறுப்பையும், கடவுளில்லாத உலகில் இளம் மனித தேடலுக்கு முழுமையான தேவை ஒன்றையும் வாழ்க்கைக்கு வலியுறுத்தும் ஒரு குறியீடாக இடமமர்த்தியிருக்கிறார். பிறகு அன்னா தன் அனுபவங்களை எஸ்தருக்கு கூறுகிறாள். அப்படி அவளுக்கு கூறுவதன் மூலம் அவளுக்கு ஏக்கமும், பொறாமைம் அதிகரிக்கட்டும் என்ற பழிகார உணர்வுடன் கூறுகிறாள். அதன் பின் தன் தற்காலிக காதலனை அந்த ஓட்டலின் காலியான அறைக்குள் அழைத்துச் சென்று, அறையை உட்புறம் தாழிட்டுக் கொண்டு அவனோடு உடலுறவு கொள்ளுகிறாள் பின் தொடர்ந்த யோஹான் கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே நடப்பதைப் பார்த்து விட்டு எவ்வித எதிர்வினையுமின்றி அமைதியாக அங்கிருந்து அப்பாற் சென்று விடுகிறான். இதேபோன்ற நிகழ்வு 1997ல் வெளிவந்த சிறந்த அயல் மொழிப் படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறந்த ரஷ்ய படம் ‘‘ஜிபிணி ஜிபிமிணிதி’’லும் இடம் பெறுகிறது. அதில் அந்த ரஷ்ய சிறுவன் ஆத்திரமடைந்து உட்புறம் தாழிடப்பட்ட கதவைக் காலால் எட்டி உதைத்துவிட்டு அப்பாற் சென்று விடுகிறான். அதே சமயம் எஸ்தர் தன்னிடமுள்ள சாவியைக் கொண்டு கதவைத் திறந்து உள்ளே நுழைய தன் தங்கை யாரோ ஒருவனோடு உடலுறவில் ஈடுபட்டிருப்பதைக் கடும் அதிர்ச்சியடைகிறாள். அன்னா, எஸ்தர் வந்து கவனிப்பதை அறிந்தவளாய் அவளைக் கடுப்பேற்றி பழி தீர்த்துக் கொள்ளும் மனப் பான்மையோடு உடலுறவில் தொடர்ந்து அனுபவித்து அடங்குகிறாள். எங்கே ஒரு வித சென்டிமெண்டல் மெலோடிராமாவுக்குள் படம் ஆழ்ந்துவிடுமோவென்று பதைபதைப்பதற்குள் படம் வேறு திசையில் திரும்புகிறது. பெர்க்மனா கொக்கா…

அக்காவும் தங்கையும் விவாதத்திலீடுபட அன்னிய மனிதனான பரிசாரகன் தன் ஆடைகளைத் தேடுகிறான். பிறகு அன்னா தன் பையனோடு தன் ஊருக்குப் புறப்பட்டுப்போக, எஸ்தர் மட்டும் ஓட்டலிலேயே விடப்பட்டு உடல்நிலை தேறும் வரை இருந்து புறப்படலாமென்று இருக்கிறாள். உணர்ச்சி பூர்வமான ஒதுக்கப்பட்டதொரு தனிமையை ‘‘அமைதி மெளனம் என்ற பொருளில் பெர்க்மனின் சைலன்ஸ்’’ ஒருவித பாதியில் கலைந்த தூக்கம்போல இருக்கிறது. எஸ்தராக இன்கிரிட் தூலின்(INGRID THULIN) அற்புதமாய் நடித்திருக்கிறார் அன்னா பாத்திரத்தில் குன்னெல் லிண்ட் ஃப்ளோமும் (GUNNEL LINDBLOW) யோஹானாக ஜோர்கென் லிண்ட் ஸ்டிரோம் (JORGEN LINDSTROM) சற்று இறுக்கமாய் செய்திருக்கிறார்.

திரைப்படமாக்கலுக்கான மிக அழகிய எடுத்துக் காட்டுக்கான மாதிரியாக இப்படம் திகழ்கிறது. என்று நியூயார்க்கர் பத்திரிகையாலும், ‘‘நவீன திரைப்படத்தின் சிகரம்’’ என்று லண்டன் டைம் அவுட் இதழிலும் புகழாரம் சூட்டப்பட்ட இங்மர் பெர்க்மனின் 1966ம் ஆண்டு திரைப்படம் ‘‘பெர்சோனா’’PERSONA 1966-ல் வெளிவந்த அதியற்புத சுவீடிஷ் திரைப்படம்.

 

படத்தின் இரு நாயகிகளும் நடிப்பும் ஒரு பக்கம் என்றால், அவர்களையும் கதையோட்டத்தையும் இயங்கச் செய்யும் இயக்குனரும் அவரது காமிரா கலைஞரும் அருகாகவே மற்றொரு பக்கம் இணைந்து ஒன்றோடொன்று கலந்த ஓர் ஒப்பற்ற திரைப்படம் பெர்சோனா. திரைப்படத்தின் பொருளடக்கம் குறித்து நாம் பொட்டென்று கூறிவிடுகிறோம் பெர்க்மன் திரைப்படத்தின் பொருள் பற்றி பேசுவதில்லை. பெர்சோனா திரைப்படத்துக்குள் பயாஸ்கோப்காரன் உட்சென்று பயணித்து அதைத் தன் புராதன காலத்து பயாஸ்கோப் வழியாக வாசகர்களுக்கு காட்டுமுன் சில சிறிய படத்தை ஒட்டிய சங்கதிகளைப் பார்த்துவிடலாம். (PERSONA) என்ற லத்தீன் மொழி வார்த்தைக்கான முகத்திரை, பொய்முகம் என்ற பொருளை படத்தை பார்த்து முடிக்கும்போதுதான் விளங்கிக் கொள்ளுகிறோம்.

இந்தப் படத்தில் நாம் பின்தொடருவது இரண்டே இரண்டு பெண் பாத்திரங்களைத்தான், இரண்டே பெண் பாத்திரங்களைக் கொண்டது பெர்சோனா, இவ்வகைமையை (CHAMBER FILM என்பர், இதையே நாடக வடிவிலாயிருந்தால், (CHAMBER PLAY என்பர், எல்லாம் மேற்கத்திய நிகழ்த்துக்கலைப் பிரிவுகள், ஐரோப்பிய சாஸ்திரிய இசைப் பிரிவுகளில் சேம்பர் இசை என்னும் (CHAMBER MUSIC) முக்கியமான ஒரு வகைமை உண்டு. இரண்டு அல்லது மூன்று இசைக் கருவிகளை மட்டும் வைத்து இசை நிகழ்ச்சி நடத்த இசை வடிவாக்கப்படும் சாஸ்திரிய இசை. இது பிரபுக்களுக்கும் அரண்மனையில் கலை நிகழ்ச்சிக்கான அறைக்குள் இசைப்பதற்காக எழுதப்பட்டு வந்தது. இதுபோல இரண்டு மூன்று கதாபாத்திரங்களை மட்டும் கொண்டு குறிப்பிட்ட பரப்புக்குள் நிகழ்த்திக் காட்டப்பட்ட சிறு நாடகங்கள் சேம்பர் நாடகங்கள் (CHAMBER PLAY) என்றும் இவற்றை மேடையேற்ற கட்டமைக்கப்பட்ட நாடக அரங்குகள் சேம்பர் அரங்கு (CHAMBER THEATRE) சிபிகிவிஙிணிஸி ஜிபிணிகிஜிஸிணி என்றழைக்கப்பட்டன. சென்னையில் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்திலுள்ள புகழ்பெற்ற பழம்பெரும் வட்ட வடிவ மியூசியம் தியேட்டர் அவ்வகை சேம்பர் நாடகங்களை மேடையேற்றி நிகழ்த்திக்காட்ட கட்டப்பட்ட சேம்பர் தியேட்டராகும். பெர்க்மன் சேம்பர் திரைப்படங்களில் ஆர்வம் கொண்டவரென்பதோடு நிறையவே செய்திருப்பவர். அவரது பெர்சோனா சிறந்ததொரு சேம்பர்ஃபிலிம் வகையானது. இந்தத் திரைப்படம் இங்க்மர் பெர்க்மனுக்கு மிகவும் பிடித்தமான இரு கருத்துக்களை உள்ளடக்கியது. ஒன்று, மனிதர்கள் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றலுக்கு படும் பெரும் அவதி. மற்றொன்று, தான் எனும் ஆணவம் மையம் கொண்ட மனித வார்ப்பு.

புகழ்பெற்ற நாடக நடிகை எலிசபெத் வோக்ளர் (ELISABET VOGLER) ஒரு நாள் நாடக நிகழ்வின் இடையில் மனம் உடல் ரீதியாக உளவியல் ரீதியாக தாக்கப்பட்டு பேசும் சக்தியை இழந்து நிற்கிறாள். அவளால் எதுவும் பேச இயலவில்லை. எனவே மேற்கொண்டு நடிக்கவும் முடிவதில்லை. வோக்ளர் என்ற பெயரை வாசகர்கள் மறந்திருக்க முடியாது. பெர்க்மனின் ஜிபிணி (THE FACE) திரைப்படத்து கதாநாயகன் மந்திரவாதி வோக்ளர். அந்தப் பெயரை இந்தப் படத்து நாயகி தன் பெயரோடு சேர்த்துக் கொண்டிருக்கிறாள். எலிசபெத் மருத்துவரிடம் போகிறாள். அவர் பரிசோதித்துவிட்டு எல்லாம் சரியாக இருப்பதாகவே கூறுகிறார். அவள் திடீரென்று பேச்சை இழந்து மெளனமானதற்கான காரணம் எதுவுமே தெரியவில்லை. எலிசபெத் திருமணமாகி அவளுக்கு ஒரு பையனுமிருக்கிறான். அல்மா இளம் நர்ஸ். எலிசபெத்தை பிரத்தியேகமாய்ப் பார்த்துக் கொள்ள பெண் மருத்துவர் அவளை ஏற்பாடு செய்கிறார்.

எலிசபெத் தன் கணவனையும் மகனையும் நிராகரித்து ஒதுக்கி விடுகிறாள். தனியான சிறு தீவு ஒன்றில் தனக்குச் சொந்தமான பங்களாவில் சிறிது நாட்கள் எலிசபெத்தை தங்க வைத்து கூட இருந்து கவனித்துக் கொள்ள அல்மாவை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறாள் டாக்டர் ஆளில்லாத தீவில் யாருமற்ற பெரிய வீட்டில் பேசவே இயலாத மெளனிப் பெண்ணோடு பேச முடிந்த மற்றொரு பெண் அல்மா எலிசபெத்தோடு பேசிக் கொண்டேயிருக்கிறாள். சிலர் தனக்குத தானே சதாபேசிக் கொள்ளுவதுபோல.

(AUGUST STRINDBERG) எனும் நவீன நாடகாசிரியரின் (THE STRONGER) என்ற சேம்பர் நாடகத்தை ஒட்டிச் செல்லுவதாக அமையப் பெற்றது பெர்க்மனின் பெர்சோனா கதைக்கரு. திரைப்படத்தின் தொடக்கத்தில் பேச இயலாத எலிசபெத்தோடு சதா பேசிக் கொண்டேயிருக்கும் நர்ஸ் அல்மா, தன் ஆளுமைக்குள்ளிருக்கும் எலிசபெத்தை தன் பிடியில் வைத்திருப்பதுபோல் அதிகாரமிக்க உறுதியும் பலமுமிக்களவாயிருப்பது போல் தோற்றம் தருகிறாள். பெர்சோனாவின் தொடக்கக்காட்சி- க்ரெடிட் காட்டுமுன் மிக முக்கியமானது. இங்க்மர் பெர்க்மன் ஒரு கவிஞர். தான் காட்டப்போகும் திரைப்படத்தை காட்சி ரூபக் கவிதையாக காட்டப் போகும் திரைப்படத்தை காட்சி ரூபக் கவிதையாக காட்டவிரும்பியிருப்பது இந்தத் தொடக்கக் காட்சி, இடையில் ஓரிரு காட்சிகள், மற்றும் இறுதிக் காட்சி என்பவைதெளிவாக்குகின்றன. இங்கு ஓர் அடர்த்தி மிக்க, சட்டென மாறி நகரும் (MONTAGE) மாண்டேஜ் கலைநுணுக்க கை சாத்திரியம் அவரது கவித்துவ காட்சிரூப பிம்ப நகர்வுக்கு ஒத்துப் போகின்றவை. சினிமாவின் அடிப்படை கருவிகளாய் ஒரு புரொஜெக்டர், ஒரு ஜோடி ஆர்க் விளக்குகள் காட்டப்படுகின்றன. ஆர்க விளக்குகள் சூடேறி ஒளிர்ந்து படச்சுருள் ஓடத் தொடங்குகிறது. பல பிம்பங்கள் சட்டென தோன்றி சட்டென கடந்து போகின்றன. திரைப்படத்துக்குள் திரைப்படமாய் ஒரு காட்சியும் தெரிகிறது. 1949ம் ஆண்டில் வந்த திரைப்படம் (PRISON)- லிருந்து அந்தக் காட்சி. 50களின் திகில் படங்களில் ஒன்று (TARANTULA) டாராஞ்சுலா என்பது கம்பளியாலானது போன்ற ரோமம் அடர்ந்து கரிய நிற விசமுள்ள ராட்சத சிலந்தி.

‘‘டாக்டர் நோ’’ படத்தில் ஜேம்ஸ் பாண்டைக் கடித்து விசமேற்றிக் கொல்ல ஓட்டலில் விடப்படும் விஷ சிலந்தியை ஷீவால் அவர் அடித்துக் கொல்லும் காட்சி நினைவிருக்கிறதா? அத்தகைய சிலந்தியொன்றைக் காட்டுகிறார் பெர்க்மன். பிறகு கிறித்தவ சமய நம்பிக்கையை ஒட்டி இரு காட்சிகள், தியாகச் சின்னமாய் ஆட்டுக்குட்டி வெட்டப்படும் துரிதகாட்சி. பிறகு நாதரை சிலுவையில் அறைவதைக் குறியீடாகச் சொல்ல ஒரு உள்ளங்கையில் ஆணியடித்து குருதி வழியும் காட்சியாகக் காட்டுகிறார். அடுத்த காட்சியில் ஒரு பிணவறையின் உள் தோற்றம். ஒரு பையனின் சடலம் போர்த்தப்பட்டு கிடக்கிறது. தூரத்தில் அவனது அம்மா படுத்திருக்கிறாள். பையன் எழுந்து உட்காரவே நமக்கு அவனைத் தெரிகிறது. முந்தைய படமான சைலன்ஸில் விளையாட்டுத் துப்பாக்கியோடு ஓட்டலில் சுற்றும் அன்னாவின் மகன் யோஹான்தான் இவன். சற்று வளர்ந்திருக்கிறான். கையால் துழாவி தன் தாயை அடைய முயற்சிக்கிறான். இந்த இடத்தில் சிறு தலையீடு நடிகை எலிசபெத் ஓக்ளர் காலமெல்லாம் பொய்யான வசனங்களைப் பேசி நடித்து சலிப்பும் விரக்தியுமுற்று தனது பொய்யான வாழ்வை நிராகரிப்பதுபோல் பேசுவதையே நிறுத்திவிடுகிறாள். இது ஒரு எதிர்ப்பு நடவடிக்கை. (PROTEST ACTIVITY) அவள் கணவனையும் மகனையும் நிராகரித்துவிடுகிறாள். கணவன், மகனின் புகைப்படத்தோடு அனுப்பும் கடிதத்தையும் படத்தையும் கிழித்துப் போட்டுவிடுகிறாள்.

 

பிணவறையில் படுத்திருந்த பையன் எழுந்து துழாவுவது தாயைத் தேடி நோபல்பரிசு பெற்ற ஜெர்மன் நாவலாசிரியர் குந்தர் கிராஸ் (KUNTER GRASS) லோகல் அனீஸ்தெடிக்ஸ் (LOCALANAESTHETICS) அதாவது உடலில் குறிப்பிட்ட பாகத்தை வலியுணராதிருக்க மறக்கடிக்கச் செய்யும் மருந்தாகும். இதை விளக்க வியட்நாமில் அமெரிக்கா பெட்ரோல் குண்டு வீசி மக்களை எரித்துக் கொன்றதை எதிர்த்து கண்டித்த புத்த பிக்கு ஒருவர் செய்கோன் நகர் கடைத் தெருவில் தன் மேல் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கும் காட்சியை குந்தர் கிராஸ் தம் நவாலில் வருணித்திருப்பார். பிக்கு எவ்வித வலியுணர்வுமின்றி மெளனமாகவே தன்னை எரிந்துபோக வைக்கும் காட்சி! இக்காட்சி இந்தத் திரைப்படத்தில் தொலைக் காட்சியில் காட்டப்படுகிறது. அதைப் பார்த்து அதிர்ந்து போகிறாள் எலிசபெத். அவளது மெளனத்தைவிடவும் புத்த பிக்குவின் மகா மெளனம்- பன்மடங்கு மெளனததோடு எரிந்து போவதைக் கண்டு ஆடிப் போகிறாள் எலிசபெத்.

தான் பேசுவதையே கவனிக்கும் புகழ்பெற்ற பேச்சற்ற நடிகையோடு உடற்கூறு, மருத்துவம் என்றே பேசிக் கொண்டிருக்கும் நர்ஸ் அல்மா, ஒரு கட்டத்தில் தன் நிலைப்பாட்டில் தடம் மாற வேண்டியவளாகிறாள், வாழ்க்கை பற்றிய உரையாடலில் இறங்கினவள் தன்னைப் பற்றிய அந்தரங்கமான விசயங்களையெல்லாம் எலிசபெத்துக்கு கொட்டி விடுகிறாள். இங்கிருந்து திரைப்படம் வேறு திசையில் திரும்புகிறது. உறுதியாக நிலைத்திருந்த அல்மாவின் உலகியல் பார்வை சரியத் தொடங்குகிறது. தனது சுய-பெர் சோனாவை முகத்திரையை அவன் களைந்தெறிகிறாள். அல்மா தன்னைப் பற்றிச் சொல்லுகிறாள். அது காட்சியாகத் திரையில் விவரிக்கப்படுகிறது. கடற்கரையில் அவளும் அவளது சினேகிதி ஒருவரும் படுத்திருக்கையில், ஓர் இளைஞன் உடற்பசியோடு சினேகிதியைப் பார்க்கிறான் அவள் அவனையழைத்து தன்னோடு உடலுறவு கொள்ள வைப்பதோடு அல்மாவிடமும் அனுப்புகிறாள். அல்மா அவனிடம் எச்சரிக்கயாக சொல்லுகிறாள். ‘‘என்னை கற்பமுறச் செய்துவிடாமல் செய்துக் கொள்’’ என்று ஆனால் அல்மா கற்பமுற்று கருவைக் கலைத்துவிடுகிறாள். எலிசபெத் தன் கணவனுக்கு கடிதம் எழுதுகிறாள். அதில்தன் நிலை பற்றி, அல்மா வைப் பற்றி அவள் வெளிப்படுத்திய அவளது அந்தரங்க நிகழ்வு பற்றியும் எழுதுகிறாள். கடிதத்தை அல்மாவிடம் தந்து தபாலில் சேர்க்கச் சொல்லுகிறாள். புருசனை ஒதுக்கியவள், இப்போது திடீரென்று அவனுக்குக் கடிதம் எழுதுவது வினோதமாய்ப்படவும், அல்மா வழியில் காரை நிறுத்தி கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறாள். தான் அவசரத்தில் உளறிய தன் அந்தரங்க ரகசியத்தை எலிசபெத் தன் கணவனுக்கு கடிதமெழுதி தெரியப்படுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியைத் தரவும் அல்மா பேச்சிழந்து மெளனியாகிறாள். கருப்பு உடை தரித்து மெளனமாய் இயங்குகிறாள். எலிசபெத்தும் அதேபோல் கருப்புடை அணிந்து வருகிறாள். ஒரு கட்டத்தில் தன் பேச்சில் சமநிலையிழந்த அல்மா ஏகமாய் கத்தவும், எலிசபெத் அல்மாவை கன்னத்தில் அடித்து விடுகிறாள் பொறுமையிழந்த அல்மா கொதிக்கும் தண்ணீரை அவள் மீது கொட்ட முயற்சிக்கையில், ‘‘வேண்டாம், அதைச் செய்யாதே’’, என்று பலஹீனமான குரலில் எலிசபெத் பேசிவிடுவதைக் கண்டு அல்மா மட்டுமல்ல நாமும் திகைத்தும் ஒரு கணம் மகிழ்ந்தும் விடுகிறோம். நம்முடைய திரைப்படங்களில் நேர்ந்துவிடச் செய்வதுபோல இந்த கணம் மற்றொரு அதிர்ச்சியாக அமைந்து எங்கே கதாநாயகி தன் பேசும் திறனை மீட்டெடுத்த கதையாக போய்விடுமோவென நினைக்க வைத்து உடனே அத்தகைய நினைப்பை அடித்து நீக்குகிறது பெர்க்மனின் இயக்கம், அவ்விதம் ஓரிரு வார்த்தைகளை ஓர் அதிர்ச்சிகரமான உந்துதலில் உதிர்த்துவிட்டது அல்மாவை நம்மை எலிசபெத்தையும்கூட அதிர்ச்சியுற வைத்துவிடுகிறது. அடுத்த கணமே அவள் பழையபடி பேச இயலாது மெளனியாகிவிடுகிறாள்.

பெர்சோனாவின் புகழ் பெற்ற காட்சியை உள்ளிட்ட உச்சகட்டம் வருகிறபோது, அல்மாவும் எலிசபெத்தும் ஒரே மாதிரியான மோஸ்தரிலான கருப்பு உடை தரித்து எதிரெதிரே பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள். எலிசபெத் தனது திருமணத்தையும் தாய்மையையும் நிராகரித்தது குறித்து அல்மா பேசத் தொடங்குகிறாள். ஆனால் ஏற்கெனவே தான் மகிழ்வின்றி ஒதுக்கிய தன் குடும்ப வாழ்க்கையைக் குறித்த சந்தேகங்களையே தான் பேசிக் கொண்டிருப்பதை விரைவிலேயே அல்மா உணர்கிறாள். இதை உணரும் தருணம் அவள் உறுதியான புதிய வார்த்தைகளைச் சமாளிக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறாள். அவள் கையாண்டு வந்த மொழி நடையும் கூட சிதைவுற்று அவளால் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சொற்றொடர்களைப் பிதற்றத்தான் முடிகிறது. பேச்சையிழந்துவிட்ட ஒருவனின் நிலையும் பொருளற்றும், சீரற்றும் கோர்வையிழந்தும் ஏதோ பேசினோம் என்று தடுமாறிப் பேசும் இன்னொருவனின் நிலையும் ஒன்றே என்பதாக.

இந்த இடத்தில்தான் உலக சினிமா மறக்க முடியாத இங்க்மர் பெர்க்மனின் புகழ்பெற்ற கட்புல காட்சிமாயத்தை ஸ்வென் நிக்விஸ்ட் உண்டாக்குகிறார். இரு பெண்களின் முகங்களும் ஒரேமுகமாக-நம்மை பேயடிக்கும்படியான காமிரா சாத்திரியத்தால் மாண்டேஜ் செய்து குவித்து காட்டுகிறார். ஸ்வென் நிக்விஸ்டின் காமிரா பூம்பூம் ஷகலகாவாகிறது. உண்மையிலேயே அவ்வாறு இரு பெண் முகங்களும் ஒரே முகமாக-ஒரே வார்ப்பாக உளவியல் ரீதி, உடல் ரீதியுமாகிற அற்புத காமிரா காரியம். முற்றிலும் சிதைக்கப்பட்டாற்போன்ற (DISTORTED VISION) ஆனால் இரண்டும் வெவ்வேறல்ல என்று உணர வைக்கும் அசாத்திய காட்சி.

அல்மா வேறு எலிசபெத் வேறு அல்ல எனும் தெளிவில் மீதி செயல்களை அல்மாவே செய்கிறாள் ஒரு கனவும் காண்கிறாள். எலிசபெத்தின் கணவன் கருப்புக் கண்ணாடியணிந்து தோன்றி நிற்க, அல்மா எலிசபெத் முன்னிலையிலேயே அவனோடு உடலுறவு கொள்கிறாள். கனவு கலைகிறது. அல்மா சாமானிய உலகுக்குத் திரும்புகிறாள். அந்த சாமானிய உலகு அவளை ஏற்றுக் கொண்டு, அவளது மற்றொரு வடிவாயிருக்கிற எலிசபெத்தை நிராகரித்துத் தள்ளுகிறது. இறுதிக் காட்சியில் தாம் பழைய மருத்துவ மனைக்கே திரும்புகிறோம். அவர்களிருவரும் பழையபடி, பேச்சிழந்த நோயாளியாகவும் அவளுக்கான நர்ஸாகவும் இணைந்திருக்கும் படத்தின் ஆரம்பக் காட்சிக்கு திரும்புகிறோம். பிறகு காட்சி வெட்டப்பட்டு காமிரா நம்மை பிணவறைக்குக் கொண்டுபோகிறது. அந்தப் பையனைக் காட்டுகிறது. யார் அந்தப் பையன்? எலிசபெத் வெறுத்தொதுக்கி அவனது புகைப் படத்தையும் கிழித்துப் போட்டு தனக்குத் தேவையில்லையென்று தள்ளிய மகனா? அல்லது அல்மா கருச்சிதைவு செய்து அழித்த மனித கருவா? ஆனால் மேற்கொண்டு திரையில் எதுவுமில்லாதபடிக்கு இருள் சூழ புரொஜெக்டர் நின்றுபோகிறது.

இந்த அற்புத திரைப்படத்தில் நர்ஸ் அல்மாவாக பிபி ஆண்டர் செனும் (BIBI ANDERSSON) நடிகை எலிசபெத்தாக லிவ் உல்மனும் (LIV ULLMANN) மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். சொல்லப்போனால் நான் இதுவரை விவரித்தது ஒன்றுமேயில்லை. பெர்சோனா திரைப்படத்தைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக எழுதுவது எளியதல்ல. பெர்க்மனா-ஸ்வென் நிக்விஸ்டா என்பதும், அவர்களிருவரும் ஒன்றாகி ஒரே வார்ப்பாக மாண்டே ஜானமாதிரியும்தான்.

‘‘ஒரு திரைப்படம் முற்றிலுமே யதார்த்தம் என்ற நிஜரூபத்திலிருக்க வேண்டியதில்லை. அது அழகாகவும் அதே சமயம் யதார்த்தமாயுமிருக்கலாம். எனக்கு அழகான புகைப்படக் கலையில் ஆர்வமில்லை. மனிதர்கள் பற்றிய கதைகளைக் கூறுவதிலும் எவ்வாறு அவர்கள் நடந்து கொள்ளுகிறார்கள் என்பதிலும்தான் எனக்கு ஆர்வம்’’, என்றார் ஒளிப்பதிவாளர் ஸ்வென் நிக்விஸ்ட், திரைப்பட வரலாற்றில் இங்க்மர் பெர்க்மன் ஸ்வென் நிக்விஸ்ட் இணையென்பது மகத்தானதாகும். நிக்விஸ்ட் 50களின் தொடக்கத்தில் நிறைய ஆவணப்படங்களை எடுத்தவர். பெர்க்மனோடு இணைந்தது 1953-ல் (SAWDUST AND TINSEL) எனும் படத்தில் ஒளியைப் பற்றிய ஒரேவித உணர்வும் கருத்தும் இருவருக்கும் ஏக கொள்கையாக இருந்துவந்திருக்கிறது. பெர்க்மனின் பதிநான்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் நிக்விஸ்ட். (CRIES AND WHISPERS) மற்றும் (FANNY AND ALEXANDER) என்ற இரு பெர்க்மன் படங்களில் சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதுகள் ஸ்வென் நிக்விஸ்டுக்கு வழங்கப்பட்டன. இந்தியாவில் சிமிசசிகபூர் இணையாக நடித்த இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸின் ‘‘சித்தார்த்தா’’ நாவலைக் கொண்டு 1972ல் கோன்ராட் ரூக் இயக்கிய திரைப்படத்துக்கு ஸ்வென் நிக்விஸ்ட் ஒளிப்பதிவாளராய் காமிராவை இயக்கினார். ‘‘ஒளிப்பதிவில் எளிமையை எட்ட எனக்கு முப்பதாண்டுகள் பிடித்தது’’ என்றார் நிக்விஸ்ட். இருவரும் முப்பது ஆண்டுகள் இணைந்து படங்கள் செய்தனர். ஸ்வென் நிக்விஸ்ட் 2006ல் காலமானார். மறு வருடம் 2007ல் இங்க்மர் பெர்க்மன் காலமானார். அவரது உடல் ஃபாரோ தீவில் அவரது நடிகைகள் லிவ் உல்மனும் பிபி ஆண்டர்செனும் உடனிருக்க நல்லடக்கம் பெற்றது.

 

1974-ல் இங்க்மர் பெர்க்மன் (மாய புல்லாங்குழல்) (THE MAGIC FLUTE என்கிற இசை நாடக (OPERA) வடிவிலான திரைப்படத்தைச் செய்தார். ஐரோப்பிய சாஸ்திரிய இசையில் லயித்தவரான பெர்க்மனின் சில படங்களில் புகழ் பெற்ற இசை மேதை மொசார்டின் (MOZART) இசை கைகோர்த்திருக்கும். அவ்வகையான படம் (THE MAGIC ELUTE). படம் தொடங்குகையில் மொஸார்டின் பெரிய மார்பளவு வண்ண ஓவியம் திரையில் தோன்றுகிறது. தொடர்ந்து அவரது முக்கிய சிம்ஃபனி இசைக் கீற்றொன்று வயலின் இழுப்பாக எழுகிறது. மேடையை நோக்கி அமர்ந்திருக்கும் ரசிகர்களை பகுதி பகுதியாக காட்டிவிட்டு பிறகு முக்கியமானவராக ஒவ்வொரு முகமாய் அருகாமைக் காட்சியாக நமக்குக் காட்டப்படுகையில் இந்தியா உட்பட கீழை நாட்டு முகங்கள், மேற்கு – கிழக்கு ஐரோப்பிய நாட்டு முகங்கள், அமெரிக்க முகம், ஆப்பிரிக்க முகம் என்று தேசம் இனம் மொழி நிற பேதங்களைக் கடந்து இசையே பிரதானமென வெவ்வேறு உணர்ச்சிகளைத் தேக்கிய பன்னாட்டு முகங்களாய் அவர்களைக் காட்டிப் போகின்றனர் பெர்க்மனும் அவரது காமிரா கலைஞர் நிக்விஸ்டும்.

மொஸார்டின் இசை நாடகங்களில் இந்த மாஜிக் ப்ளூட் மிகவும் போற்றப்பட்ட வேண்டப்பட்ட ஒன்று என்பர் மனிதனின் நேசம், காதல், மன்னிப்பு, சகோதரத்துவம் என்பனவற்றைக் கொண்டாடும் வழியிலான இசை நாடகம். பெர்க்மன் இவ்விசை நாடகத்தை 18ஆம் நூற்றாண்டின் நாடக அரங்கு ஒன்றில் அன்றைய மேடை கலை துணுக்கத்துடன் ஒரு வித யுனெஸ்கோ (UNESCO) மாநாட்டுக்கு வந்தாற்போன்ற பன்னாட்டு சார்பாளர்களைப் போன்று தோன்றவல்ல நவீன பார்வையாளர்கள் முன்பாக அரங்க மேடையேற்ற வேண்டுமென்ற ஏற்பாட்டில்தான் படத்தை தொடங்குகிறார். ஒரு தேவதை கதையைக் கொண்ட இசை நாடகம். அதற்கான முழு இசை வடிவையும் மொஸார்ட் இசை சங்கேத மொழியில் எழுதி வைத்துவிட்டு ப் போயிருக்கிறார். மேடையில் திரை விலகுகிறது. டமினோ (TAMINO) என்ற ஓர் அழகிய இளவரசனை பூதாகாரமான ட்ரேகன் ஒன்று தாக்கி விழுங்க வருகிறது. டமினோ மயக்கமுற்று வீழ அவனை விழுங்க முற்பட்ட டிராகனை மூன்று தேவதைப் பெண்கள் தாக்கியழிக்கின்றனர். ஒவ்வொரு தேவதையும் தன்னளவில் இளவரசனின் வசீகரத்தால் மயங்கிப் பாடலாக பேசுகிறார்கள். இசை நாடகமே இசை சேர்ந்த பாடல் வடிவிலான உரையாடல்களைக் கொண்டிருப்பது. டமினோ எழுப்பப்படுகிறான். அதே சமயம் அந்த இடத்துக்கு பாபஜெனோ (PAPA GENO) என்ற இளம் குருவிக்காரன் (பறவைகளைப் பிடித்து பிழைப்பவன்) வந்து சேருகிறான். அவனுடைய பிரச்சினை, எந்த பெண்ணும் அவனை காதலிப்பதில்லை என்பது பாபஜெனோ இளவரசனுக்கு தோழனாகிறான். தேவதைகள் டமினோவுக்கு ஓர் அழகிய பெண்ணின் படத்தைக் காட்டி அவள் ஓர் இளவரசி என்றும் அவளுடைய அத்தையின் கட்டுப்பாட்டிலுள்ளசாரஸ்ட்ரோ (SARASTRO) எனும் கொடிய சூனியக்காரனால் அத்தையின் உத்தரவில் சிறைபிடித்து வைத்திருக்கிறான் என்றும் சாரஸ்ட்ரோ இளவரசி பமினாவை (PAMINA) அடையத்துடிக்கிறவன் என்றும் பமினாவை காப்பாற்றிக் கரம் பிடிக்கும்படியும் சொல்லுகின்றன. அவனுக்கு உதவியாயிருக்க ஒரு மாய புல்லாங்குழலையும் அளிக்கின்றனர். அதை வாசித்தால் கட்டுகள் விலகி விடுதலையுறலாம் டமினோவுடன் குருவிக்காரன் பாபஜெனோவும் சேர்ந்து பமினாவை விடுவிக்க சூனியக்காரன் சாரஸ்ட்ரோ இருக்கும் தேசத்துக்குப் போகிறார்கள். இளவரசன் குருவிக்காரன் உதவியோடும் மாய புல்லாங்குழலின் சக்தியோடும் எதிரிகளை ஏமாற்றி இளவரசியுடன் தப்புகிறான். குருவிக்காரனுக்கும் ஒரு காதலி கிடைத்து எல்லோரும் மகிழ்வது கண்டு மூன்று பெண் தேவதைகளும் சந்தோஷமடைகின்றனர். டமினோவாக ஜோசஃப் கோஸ்ட் லிங்கர் (Josef kostlinger) எனும் வசீகரமான இளைஞர் நன்கு பரிமணிக்கிறார் நிக்விஸ்டின் வண்ண ஒளிப்பதிவில் பாத்திரங்களின் அருகாமைக்காட்சி பிரமிக்க வைக்கின்றன.

•••••

பயாஸ் கோப்காரனின் மேற்கு ஐரோப்பிய சினிமா நிறைவுறுகிறது. இனி கிழக்கு ஐரோப்பிய சினிமா பயணம் துவங்கும்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *