ஒத்த கருத்தும், கருத்தொற்றுமையும் கருத்து வேறுபாடும்
ஒத்தக் கருத்து:
சனாதனம் இந்தியாவை ஒற்றைக் கருத்துக்குள் அடைக்க துடிக்கிறது. இந்தியாவின் இயல்பு கருத்தொற்றுமைக்கான உதாரணங்களை முன் வைக்கிறது. இங்கு எழும் கருத்து வேறுபாடுகள் ஜனநாயகத்துடன் விவாதிக்க அழைக்கிறது. இத்தகைய தத்துவார்த்த விவாதத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம், எதை தேர்தெடுக்கப் போகிறோம் என்ற கேள்வி நமது முன்னால் உள்ளது. கருத்து வேறுபாடும், கருத்தொற்றுமையும் மிகுந்த ஜனநாயக அர்த்தம் பொதிந்தவை. ஒத்த கருத்து ஓர்மை வாதம் பேசும் ஜனநாயகமற்ற பாசிசத் தன்மை கொண்டது.
ஒத்தக் கருத்துடையோர் இங்கு வாழ்க அன்றில் வெளியேறுக என்பது சனாதனம், உலக வரலாற்றில் பாசிசமும் இதைதான் சொல்கிறது. மாற்றுக் கருத்துகள் கூடாது. எதிர்ச் சொல் ஆகாது, அடிபணிவதே ஆகச் சிறந்தது, தலைவன் ஒருவனே, கடவுள் ஒருவனே என்பது சாலச்சிறந்தது. ஆகவே சனாதனம் கருத்தொற்றூமையில் பாசிசமாகிறது. இந்தப் புள்ளியில் சனாதானமும் பாசிசமும் இணைந்து வாழும் தன்மை கொண்டது. ஜெர்மன் வதை முகாம்களில் யூத இனத்தைக் கொன்றொழித்தது பாசிசம் எனில், குஜராத்தில் சிறுபான்மையினரான முஸ்லீம்களை கொடூரக் கொலைகளைச் செய்தது சனாதனம். இதில் இருவருக்கும் கருத்தொற்றுமை உள்ளதால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வருவதில்லை.
கோல்வால்கர் வார்த்தைகளில் அந்த ஒத்த கருத்தை பார்ப்போம்: ”தேசம் மற்றும் அதன் கலாச்சாரத்தின் தூய்மையைக் காக்க, ஜெர்மனி செமிட்டிக் இனங்கள் – யூதர்கள் நாட்டைத் தூய்மைப்படுத்தியதன் மூலம் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தேசப் பெருமை இங்கு உச்சத்தில் வெளிப்பட்டுள்ளது. இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள், வேற்றுமைகள் வேரூன்றி, வேற்றுமையில் இருந்து, இந்துஸ்தானில் ஒன்றிணைவது எவ்வளவு சாத்தியமற்றது என்பதை ஜெர்மனியும் காட்டியுள்ளது.”
”ஹிந்துஸ்தானில் உள்ள இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இந்து மதத்தை மதிக்கவும், மரியாதை செய்யவும் கற்றுக்கொள்ள வேண்டும், இந்து இனம் மற்றும் கலாச்சாரத்தை மகிமைப்படுத்துவதைத் தவிர வேறு எதையும் மகிழ்விக்கக்கூடாது – ஒரு வார்த்தையில் அவர்கள் வெளிநாட்டினராக இருப்பதை நிறுத்த வேண்டும், அல்லது இந்து தேசத்திற்கு முற்றிலும் அடிபணிந்து, நாட்டிலேயே இருக்க வேண்டும்.‘’ – We, or Our Nationhood Defined , 1939
ஆக இந்துக்கள் அல்லாதோர் அடிபணிந்து வாழ்வதற்கு கற்றுக்கொண்டு வாழ்வார்கள் ஆயின் வாழ்க என்பதுதான் ஒத்தக் கருத்தின் அபாயம். அதை நோக்கிதான் இந்தியாவைக் கொண்டு செல்ல சனாதனக் கூட்டம் அலைகிறது. அதற்காக தத்துவார்த்த தளத்தில் அவர்களின் சொல்லும் கட்டளைகளை, ஆட்சியதிகாரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி ஆணைகளாக பிறப்பிக்கிறது. கொஞ்சமும் ஜனநாயகத் தன்மையற்ற முறையில், பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறாமல் அறிவிக்கின்றனர்.
ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், ஒரு ரேஷன் கார்டு, ஒரே நேரத்தில் தேர்தல், ஒரே கல்விக் கொள்கை என ஏகமாக அமலாக்கப்படுகிறது. ஒற்றைப் புள்ளியை நோக்கி அதிகாரங்களை குவிக்க அவர்கள் துடிப்பது மிகப்பெரிய அபாயம் என்பதை உய்த்துணர வேண்டியுள்ளது.
கருத்தொற்றுமை:
தமிழகத்தில் ஆதிதிராவிடர்களில் 76 பிரிவுகள், பழங்குடி மக்களில் 36 பிரிவுகள், பிற்படுத்தபட்ட சாதிகளில் 135 பிரிவுகள், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் 7 பிரிவுகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் 46 பிரிவுகள், சீர்மரபினரில் 68 பிரிவுகள் என 368 சாதியினர் உள்ளர். இந்தியா முழுவதும் 30 ஆயிரம் சாதிகள் உள்ளது. 77 இனக்குழுக்கள் உள்ளது. இவைகளிலும் உபகுழுக்கள் உண்டு. இதுவரை உயிருடன் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன. 2001 கணிப்பின்படி, 29 மொழிகள் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன. 122 மொழிகள் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன. இந்து மதம், இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், ஜோராஸ்ட்ரியனிசம், பௌத்தம், சமணம், யூத மதம் மற்றும் பஹாய் மதம் ஆகியவை முக்கிய மதங்களாகும்.
இந்திய நிலப்பரப்பில் தோன்றிய தத்துவங்களுக்கு உலகில் இணையே கிடையாது. வேதங்களிலும், தமிழின் இலக்கியங்களிலும் தத்துவப் போர்கள் வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றைச் சொல்பவை. இன்னும் விரிவாகச் சென்றால் உலகில் எங்கும் இல்லாத பல திணைகள், திணை சார்ந்த வாழ்க்கை முறைகள், அவை சார்ந்த கடவுளர்கள், அக் கடவுளர்கள் சார்ந்த சடங்குகள் அவைகளைக் கொண்டாடும் பண்டிகைகள், வணங்கும் முறைகள், அவைகளுக்கான சடங்குகள், ஆச்சாரங்கள், உணவு முறைகள், ஆடைகளின் வண்ணங்கள், இனக்குழுக்களுக்கான சட்டங்கள், அவை சார்ந்த நம்பிக்கைகள் எனப் பல வேற்றுமைகள் உங்களை தலை சுற்ற வைக்கும். இருப்பினும் அவர் அவர் சார்ந்த நம்பிக்கைகளினூடாக பரந்த நிலப்பரப்பில் கருத்தொறுமையுடன் வாழ்ந்து வருவதுதான் இம்மண்ணின் இயல்பாக இருக்கிறது.
ஒத்தக்கருத்து என்ற மாற்றைத்தை விரும்பாத தேங்கி நிற்கும் சனாதனம் மேலோங்கி இருந்தால், பல இனக்குழுக்களும், மொழிகளும், உயர்ந்த நாகரீகங்களும் இந்தியாவில் அழிந்தொழிந்து போயிருக்கும், செம்மையான இலக்கியங்கள் வழக்கொழிந்து போயிருக்கும்.
ஆனால் கருத்தொற்றுமை என்பது பன்முகம் கொண்டது. எல்லா கருத்துக்களையும் உள் வாங்கிக்கொண்டு அவைகளின் நியாயங்களை ஆதரிப்பது. ஓவ்வொரு மனித கூட்டத்திற்கு அனுபவம் சார்ந்த மொழிகளும் பண்பாடுகளும் உண்டென அறிவது. அவைகளை அனுமதிப்பது. எத்தனை மாச்சரியங்கள் இருப்பினும் அவைகளினூடாக பிரச்சனைக்கான தீர்வை ஒரே நேர்கோட்டில் சிந்திக்க வேண்டும் என வலியுறுத்துவது.
கருத்து வேறுபாடுகளுக்கு இடம் கொடுப்பது. கருத்து வேறுபாட்டின் தர்க்கங்களை அனுமதிப்பது. அவ்வாறாயின் கருத்துவேறுபாடுகள் அனுமதிக்கத்தக்கதா, கருத்து வேறுபாட்டால் மக்கள் பிளவு படமாட்டார்களா? கருத்து வேறுபாட்டால் தேசம் உடைந்து போகாதா? என்றெல்லாம் உங்களுக்கு எண்ணம் வருகிறதா?
வாருங்கள் இன்றைய அறிவுலகில் பெரிதும் போற்றப்படும் வரலாற்று அறிஞராகத் திகழும் பேராசிரியர் ரொமீலா தாப்பர் அவர்களை சந்திப்போம். பண்டைக்கால இந்தியாவிலிருந்து தொடங்கி இன்றைய காலம் வரை சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இயங்கியல் நோக்கில் உரிய ஆதாரங்களோடு தொடர்ந்து நிறுவி டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராக நீண்ட காலம் பணியாற்றி 1991இல் ஓய்வு பெற்ற அவர். ஜனநாயக இந்தியாவின் அடையாளம். 
கருத்து வேறுபாடு:
‘கருத்து வேறுபாடுகளின் குரல்கள் – ஒரு கட்டுரை” என்ற அவரது நூலினை தொடக்கப் புள்ளியாகக்கொண்டு தொடங்கும் ஒரு நேர்கானலை 24 பக்கங்களில் ஒரு சிறு பிரசுரமாக ”இந்து மதமும் இந்துத்துவமும் ஒன்றல்ல..” என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இந்திய வரலாற்றில் கருத்து வேறுபாடாக எழுந்த குரல்கள், இந்து மதமும் மதரீதியான கருத்து வேறுபாடுகளும், வரலாற்றில் இந்து மதம். மதச்சார்பின்மைக்கும் மதரீதியான சகிப்புத் தன்மைக்கும் இடையே உள்ள வேறுபாடு. ஆரிய குடியேற்றம் பற்றி எழுந்துள்ள விவாதங்கள் ஆகிய விஷயங்களை ஆழமாக விவாதிக்கிறது இந்த சிறு பிரசுரம்.
”உண்மையில் கருத்து வேறுபாடுகளே எழாத காலம் என்ற ஒன்று இருந்ததேயில்லை. இதில் நாம் கவனம் செலுத்த வேண்டியதென்னவெனில், நாம் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளும் சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும் கருத்து வேறுபாடு என்பது பயனுள்ளதாக இருந்துள்ளதா? என்பதே ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதெனில், இந்தக் கருத்துவேறுபாடுகள் அக்காலத்திய மதத்திலும், சமூகத்தின் விதிமுறைகளிலும் ஒரு சில புதிய உருவாக்கங்களுக்கு வித்திட்டுள்ளனவா? என்பதை ஆய்வு செய்வதே ஆகும்.” எனக் கருத்து வேறுபாட்டிற்கான விளக்கங்களைத் தருகிறார்.
இந்த சிந்தனை “வேத அடிப்படையிலான பிராமணியம் என்பது ஒரு நிறுவன மதமாக மாறிக் கொண்டிருந்த ஒரு சமூகப் பின்னணியில் துறவு குறித்த பவுத்த மதக் கருத்துகளை மதிப்பீடு செய்யும் ஓர் ஆய்விலிருந்து இது தொடங்கியது.” என கூறுகிறார்.
”வேத அடிப்படையிலான மதம் என்பது அடிப்படையில் ஓர் உயர்சாதி மதமே ஆகும். இதை மறுதலித்த பவுத்தர்கள், சமணர்கள், ஆசீவகர்கள், சார்வாகர்கள் ஆகியோரும் பெரும்பாலும் உயர்சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். எனினும் சமூகத்தின் மற்ற பிரிவினரையும் அணுகும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு மதம் குறித்து பரப்புரை நிகழ்த்துவதில்தான் அவர்கள் தீவிர கவனம் செலுத்தி வந்தனர்.” என்கிறார்.
அதாவது சனாதானத்தின் அடிப்படையிலான வேத மதத்தின் மீது எழுந்த கருத்து வேறுபாட்டால் பிற மதங்கள் எழுந்தது என்கிறார்.அனைத்து வரலாற்று மற்றும் கலாச்சாரப் பரிணாம வளர்ச்சியிலும் கருத்து வேறுபாடு என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் ஆகும். எல்லோருக்கும் கல்வி கொடுப்பதை மறுத்த, குறிப்பாக வேதத்தை கேட்டாலே காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்ன மநு (அ)தர்மத்தை எதிர்த்து, அதனுடன் முரண்பட்டு எல்லோருக்கும் கல்வி கொடுக்கப் பள்ளிகளை துவங்கிய கருத்து வேறுபாடு இந்திய சமூக வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றின.
இந்து மதமெனப்படுவது யாதெனில்..
ஒத்த கருத்தின் அடிப்பையில் இயங்கும் சனாதான சக்திகள் உண்மையில் இந்து மதத்தின் உள்ளார்ந்த அம்சமான பன்முகத் தன்மை மற்றும் பன்முக வாதம் ஆகியவற்றுக்குப் பதிலாக ஒற்றைக் கடவுள் வடிவத்தை அதற்குக் கொடுத்து. இந்துக்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அனைவருக்கும் அதை ஒரே மாதிரியாக அமல்படுத்த வேண்டுமென கட்டளை இடுகிறது. இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல. இந்துத்துவா தத்துவத்தின் இந்த முயற்சியானது பாசிச வகைப்பட்ட சிந்தனை வடிவத்தை தொடர்ந்து பயன்படுத்தும் ஒரு காலனிய முயற்சியே ஆகும்.
பேராசிரியர் கூறுகிறார் “இந்துத்துவா என்பது இந்து மதத்தைப் போன்றது அல்ல. இந்து ராஷ்டிராவை உருவாக்குவது போன்ற அரசியல் நோக்கங்களுக்காக மதத்தைப் பயன்படுத்தும் வகையில் அதை எளிதாக்குவதே அதன் நோக்கம். இதனால்தான் 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிண்டிகேட் இந்து மதம் என்று அதற்குப் பெயரிட்டுள்ளேன். இது அரசியல் அதிகாரத்திற்கு நெருக்கமானவர்களால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. ஒரு கலாச்சார அமைப்பு என்று அவர்கள் தங்களைக் கூறிக்கொள்வது அரசியலில் வதிலிருந்து அவர்களைத் தடுக்காது. ஒரு அரசியல் தலையிடுவதின் திட்டத்தை இலக்காகக் கொண்ட பல குழுக்களை இந்துத்துவா ஒன்றாக இணைக்கிறது. அவை தங்களது தனிப்பட்ட அடையாளங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடும் என்றாலும் சங் பரிவார் என்றே கூட்டாக அழைக்கப்படுகின்றன.
இந்து என்பவருக்கு புதியதொரு வரையறையும் கொடுக்கப்பட்டுள்ளது: ஒன்று, அவரும் அவரது மூதாதையர்களும் பித்ரு பூமி என்று அவர்கள் அழைக்கும் இந்தியாவின் எல்லைகளுக்குள் பிறந்திருக்க வேண்டும், அவருடைய மதமும் புண்ணிய பூமி என்று அழைக்கப்படும் இந்தியாவின் எல்லைகளுக்குள் இருந்து வந்திருக்க வேண்டும். இத்தகைய ஒரு வரையறை எந்தவொரு பண்டைய நூல்களிலும் கொடுக்கப்படவில்லை.”
இந்த்துவாவின் ஒற்றை தேசம் சார்ந்த பார்வையின் அடிப்படையைமிக எளிய சொற்களில் விளக்கி உள்ளார். மிகவும் அழகாக சொல்லிச்செல்கிறார் பேரா.ரொமிலா தாப்பர். சனாதன சக்திகளுக்கு இந்தியாவின் பன்முகப் பண்பாடு மிகவும் பிரச்சினைக்குறியதாய் இருப்பதும் பண்பாட்டுத் தளத்தில் கடும் எதிர்வினைகள் வருவதும் சகிக்கவியலா கோபத்தை உருவாக்குகிறது. எனவேதான் தாக்குதல், கொலைகள், சூரையாடல், சிறுபான்மையினரின் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை விளம்பரபடுத்துவது, காவல்துறையை காவிமயமாக மாற்றி கலவரங்களுக்கு ஆதரவாக நிறுத்தல், அரசு எந்திரங்களை காவிமயமாக்குதல் என அவர்கள் தாக்குதல் அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.
நெருக்கடிகள் முற்றி வரும் சூழலில் சனதான எதிர்ப்பு போராட்டம் களம் நோக்கி அழைப்பது உங்கள் காதில் விழுகிறது தானே ?

