இந்துத்துவாவின் உதிரி அமைப்புகளும் அடியாட்படைகளும்
2023 ஆகஸ்ட் மாதம் ஒன்றிய மோடி அரசின் மெகா ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ள மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கை நாடு முழுவதும் மீண்டும் சர்ச்சைப் புயலை உருவாக்கியுள்ளது. ஏழு திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய கணக்குத் தணிக்கைக் குழு விரிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது. குறிப்பாக ஒன்றிய அரசின் பாரத் மாலா திட்டத்தில், ஏலம் விடுதலில் முறைகேடு நடந்திருக்கிறது. துவாரகா விரைவுப்பாதை கட்டுமானத்தில், ஒரு கிலோ மீட்டருக்கு திட்டச்செலவான 18 கோடி ரூபாயில் இருந்து 250 கோடி ரூபாய் செலவழித்தது ஏன்?, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகளில் விதிமுறைகளை மீறி பயணிகளிடம் 132 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏழரை லட்சம் பயனாளிகளின் விவரங்கள், ஒரே தொலைபேசி எண்ணில் இணைக்கப்பட்டுள்ளது. அயோத்யா மேம்பாட்டுத் திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்குத் தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கான பணம், ஒன்றிய அரசின் விளம்பரங்களுக்காக மடை மாற்றப்பட்டுள்ளது. எச்.ஏ.எல் விமான எஞ்சின் வடிவமைப்பில் தவறு செய்த வகையில் 154 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தேசம் இதுவரை சந்திக்காத இத்தனை பெரிய வரலாற்று ஊழலை செய்துள்ள பாஜக அடுத்து என்ன செய்யும் என நினைக்கிறீர்கள்? இது குறித்து விவாதம் வராமல் திசைதிருப்பும் வேலைகளை செய்வார்கள். இணையவெளி முழுவதும் இந்த பிரச்சைனை மீறி ஒரு பிரச்சனையை உருவாக்குவார்கள். இப்பிரச்சினையை எழுதும் இணைய ஊடகங்கள் மீது கீழ்தரமான தாக்குதல் நடத்த்ப்படும். இல்லையெனில் தேசத்தின் ஏதோ ஒரு பகுதியில் கலவரம் உருவாக்கப்படும், அதில் கொடூரமான சம்பவங்கள் அரங்கேற்றப்படும். நமது கவனம் அதை நோக்கி செலுத்த வைக்கப்படும். உங்களுக்கு இது அதிர்ச்சியாய் இருக்கக்கூடும். ஆனால் அதுதான் இவர்கள் வரலாறு. இவர்களுக்கென இவைகளை செய்ய ஒரு நிழல் இராணுவம் உள்ளது. இப்புத்தகத்தை வாசிக்கும் போது அறிவீர்கள். இவர்களுக்கு சம்மந்தம் இல்லையென அறிவித்து கொலைகளை செய்யும் இவர்களது அமைப்புகளை.

முகம் மறைத்த அகத்தின் அழுக்கு:
சனாதன சக்திகள் தத்துவார்த்தத் தளத்தில் எப்படி மனுதர்மத்தைக் கைக்கொண்டு இந்து தேசியத்தை அமைக்க எதிர்த் தத்துவங்கள் மீது கருத்தியல் தாக்குதல் நடத்துகிறதோ அதே போல, தேசம் முழுவதும் தங்கள் எதிரிகளாகக் கட்டமைத்தவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்திவருவதின் ஒரு சிறிய தொகுப்புதான் இது.
1925-ல் உருவாக்கப்பட்டு இதுவரை இந்தியாவின் எந்த ஒரு சட்டத்தின் கீழும் எங்கேயும் பதிவு செய்யப்படாமலேயே பண்பாட்டு இயக்கம் என்று அறிவித்து அரசியலையே மையப்புள்ளியாக வைத்து இயங்குகின்ற, ஆதிக்க மனோபாவ இந்துக்களை கொண்டிருக்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். சீருடை ஆயுதப்பயிற்சி, ஆயுதம் இல்லாப் பயிற்சி போன்றவற்றோடு பெனிட்டோ முசோலினி உருவாக்கிய இத்தாலிய பாசிச இயக்கங்களின் பாணியில் உருவாக்கப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ்.
இதன் வலையமைப்பு சீராகப் பெருகிப் பெருகித் தற்போது 30க்கும் மேற்பட்ட துணை அமைப்புகளோடு ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட திட்டப்பணிகளை நாடு முழுவதும் செய்து வருகிறது. ஆனால் அதிகமாக கேள்விப்பட்டிராத அல்லது வெளியில் தெரியாத எண்ணற்ற பெயர்களில் பல திட்டப் பணிகளையும் சங்பரிவார் செய்து வருகிறது.
பாஜக மட்டும்தான் அதிகாரப்பூர்வமாக அரசியலில் ஈடுபடுவதற்காக ஆர்எஸ்எஸ்ஸால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்று நாம் கருதினாலும், நேரடியாக அரசியல் செய்வது ஆர்எஸ்எஸ்தான். தேர்தலில் போட்டியிடுவதை தவிர ஒரு அரசியல் கட்சி செய்யும் அனைத்தையும் இது செய்கிறது. மக்களைத் திரட்டுவது, அரசியல் பிரிவினைகளை உண்டாக்குவது, சிக்கல்களை வளர்த்தெடுப்பது, தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது, வாக்குச்சாவடி அளவிலான பிரச்சாரங்களை ஒருங்கிணைப்பது என அனைத்திலும் தலையிடுகிறது. அல்லது அதுதான் முடிவு செய்கிறது.
அதுமட்டுமில்லாமல் உத்திகளையும், சித்தாந்த வழிகாட்டல்களையும், ஊழியர்களையும், தலைவர்களையும் பாஜக உள்ளிட்ட இதர துணை அமைப்புகளுக்கு வழங்குவது ஆர்எஸ்எஸ்தான். அதுமட்டுமில்லாமல் நேரடியாகவோ அல்லது அதன் துணை அமைப்புகளின் மூலமாகவோ ஏராளமான வகுப்புவாத கொந்தளிப்புகளிலும் இதன் பங்கு இருக்கிறது.
பல்வேறு அமைப்புகள் இருந்தாலும் அந்த அமைப்புக்குள் எந்தவித தொடர்பும் அற்ற ஒரு தொடர்பு இருந்துகொண்டே தான் இருக்கிறது. இந்த தொடர்பற்ற தொடர்பு தான் ஆர்.எஸ்.எஸ்-ன் மிகப்பெரிய பலமாகவும் இருக்கிறது. உதாரணத்திற்கு கல்புர்கி, கௌரி லங்கேஷ் (கர்நாடகா), கோவிந்த்பன்சாரே (மகாராஷ்டிராம்) படுகொலைகளில் ஈடுபட்டது ஆர்.எஸ்.எஸ் நிழல் இராணுவங்களே ஆனால் நேரடியாக இதில் ஆர்.எஸ்.எஸ் -ன் தொடர்பு இல்லை என அவர்களால் தப்பிக்க முடிகின்றது. காரணம் அவர்கள் உருவாக்கி வளர்த்து வருகின்ற இத்தகைய உதிரி அமைப்புகளே.
தேசத்தின் மிகப் பெரிய நாசச் செயல்களான மகாத்மா காந்தியின் படுகொலை துவங்கி, பாபர் மசூதி இடிப்பு வழியாக இன்றுவரை ஆர்எஸ்எஸ் அல்லது சங்பரிவார் அமைப்புகள் செய்திருக்கிற பல்வேறு துறைகளிலும், பல்வேறு தளங்களிலும் பல்வேறு வெடிகுண்டு வழக்குகளிலும் அவர்கள் நேரடியாக சிக்காமல் தப்பிக்க அவர்களின் இத்தகைய கட்டமைப்பு ஒரு காரணமாய் இருந்திருக்கிறது.
புதிய புதிய அமைப்புகளை துவக்குவதற்கும், புதிய புதிய பெயர்களில் செல்வதற்கும் அவர்கள் எப்போதும் தயங்கியது கிடையாது. வரலாற்றுப் போக்கில் இந்தியாவில் இடதுசாரி இயக்கங்கள் இத்தகைய முயற்சிகளில் மிக மிகப் பின்தங்கி இருப்பது வேதனைக்குரிய ஒன்றுதான்.
ஆர்எஸ்எஸின் விஷப் பின்னல்களை திரேந்திர அவர்கள் நிழல் ராணுவங்கள் என்ற நூலில், ஆய்வு பூர்வமாக பல இடங்களில் சுற்றித் திரிந்து பதிவு செய்திருக்கிறார். இந்தியாவில் இருக்கிற அனைத்து நிலவரங்களையும் முழுமையாக ஆய்வு செய்வது அவர் நோக்கம் அல்ல, அதற்கா வாய்ப்பும் குறைவு. ஆனால் பாஜகவோடு நேரடியாக சம்பந்தப்பட்டு இருக்கின்ற நான்கு இயக்கங்களையும் நேரடித் தொடர்பு இல்லை என்று வெளிப்படையாக அறிவித்துக் கொள்கின்றன, அல்லது நடித்துக்கொண்டிருக்கின்றன நான்கு இயக்கங்களுக்கும் இடையே உள்ள பிணைப்பை மிகவும் ஆய்வு பூர்வமாக, உண்மைதன்மையோடு இந்த புத்தகத்தில் விளக்கியிருக்கிறார்.
சனாதன் சன்ஸ்த்தா, இந்து புவ வாகினி. பஜ்ரங்தளம், ஸ்ரீராம் சேனா, இந்து ஐக்கியவேதி, அபினவ் பாரத், போன்சாலா இராணுவப்பள்ளி, இராஷ்ட்ரிய சீக் சங்கத் ஆகிய எட்டு அமைபுகளே இந்நூலில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவை.
பகுத்தறிவாளர்கள் படுகொலைகள்:
தன்னைதானே கடவுள் என அழைத்துக்கொள்ளும் ஜெயந்த் பாலாஜி அதாவ்லே என்பவரால் உருவாக்கப்பட்டதுதான் சனாதன் சன்ஸ்த்தா என்ற அமைப்பு. கோவாவின் இராம்நதி கிராமத்தில் பிரம்மாண்டமான மாளிகைதான் இவர்களது தலைமையிடம். இதனருகில் ஓடுகிற நதிகளில் பயன்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஆணுறைகளை கொட்டி நிலங்களை பாழ்படுத்திய அமைப்பு இது. 2009 அக்டோபர் 16ஆம் தேதி மாலையில் மடகாவினில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு கோவா காவல்துறையினர் அதிரடியாக சனாதன் சன்ஸ்தா ஆசிரமத்துக்குள் நுழைந்தனர்.
2008 ஆம் ஆண்டில் தானே மற்றும் வழி பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தியதற்காக இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பலரையும் மகாராஷ்டிரா காவல்துறை கைது செய்தது. அதே ஆண்டு ஜூன் 4ஆம் தேதி அன்று தானேவில் உள்ள கட்காரி ரங்கயதன் அரங்கத்தின் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு குண்டு வெடித்ததில் 7 பேர் காயமடைந்தனர். பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட விக்ரம்பாவே மற்றும் ரமேஷ் கட்காரி என்ற சனாதன் சன்ஸ்த்தா அமைப்பின் உறுப்பினர்கள் இருவருக்கும் மும்பை நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. இவ்வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுமே குற்றவாளிகளுக்கும் அமைப்புக்கும் தொடர்பில்லை எனச் சொல்லி சனாதன் சன்ஸ்தா தட்டிக்கழித்து மடகாவ் குண்டுவெடிப்பு விசாரணையில் அவ்வியக்கத்தின் உண்மையான முகத்தை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்தது காவல்துறை.
இவ்வியக்கம் பயங்கரவாத இயக்கமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என கோவா காவல்துறை மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் பயங்கரவாத தடுப்பு படையினர் மத்திய உள்துறை அமைச்சகத்தில் சமர்ப்பித்து சனாதன் சன்ஸ்தா இயக்கத்தை தடை செய்யக் கோரினர். அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பின்பு பாஜக ஆட்சி வந்ததால் அவர்களைத் தொடக்கூட முடியவில்லை.
அதன் விளைவு மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த தபோல்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மகத்தான தலைவர் கோவிந்த் பன்சாரே, ஹம்பி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கல்புர்கி படுகொலை செய்யப்பட்டார். இந்த எல்லா படுகொலைக்கு பின்பும் இந்த அமைப்பே இருந்தது. இவர்களுக்குப் பாதுகாப்புக் கேடயமாக இருப்பது சனாதனத்தை பாதுகாக்கும் ஆர்.எஸ்.எஸ்.
யோகி எனும் குற்றவாளி:
1999ஆம் ஆண்டு சமாஜ்வாதி பாராளுமன்ற உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு செய்து அந்த வழக்கில் சிக்கியவர் தான் யோகி ஆதித்யநாத். 2002இல் நடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மிகமோசமாக தோற்று அதிகாரத்தை சமாஜ்வாதி கட்சியிடம் இழந்ததும், 2002 ஆம் ஆண்டில் யோகி ஆதித்யநாத் ”இந்து யுவ வாகினி” என்னும் அமைப்பை துவக்கினார். இந்த இயக்கம் துவங்கப்பட்டதிலிருந்தே நஞ்சு கலந்த மதப் பிரச்சாரத்தை மிகத்தீவிரமாக முன்னெடுத்தது. எந்த ஒரு வாய்ப்பையும் தவற விடாமல் மிகச் சிறிய பிரச்சனையைக் கூட நழுவவிடாமல் கலவரம் செய்யப் பயன்படுத்திக் கொண்டது.
சிறுபான்மையினரை இந்துக்களின் எதிரிகளாக சித்திரிப்பது, லவ் ஜிகாத், முஸ்லிம்களின் புலால் உண்ணும் பழக்கங்கள், அவர்களது குணம், இந்து மத நம்பிக்கைகளையும் தேசிய சின்னங்களையும் அவர்கள் வேண்டுமென்றே அவமதிப்பார்கள் என எதிர்க் கதைகளை உருவாக்கியது. இதற்கு அடுத்தடுத்தத் தேர்தல்களில் கைமேல் பலன் கிடைத்தது. 1999 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 1339 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்த யோகி, 2004 தேர்தலில் அதே தொகுதியில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் வாக்குகள், 2009 இல் மூன்று லட்சம் வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி பெற்றார்.
இந்து யுவ வாகினியின் உறுப்பினர்கள் களத்தில் ஆதித்தியநாத் தவிர யாருக்கும் அடிபணியாத அடியாட்கள். ”கௌரக் ஷா பிதாதீதாஸ்வர் பரம்பூஜ்ய ஆதித்யநாத் ஜி மஹராஜ்” எனதான் அழைப்பர். ஆர்எஸ்எஸ், இந்து மகாசபை, பஜ்ரங்தள், யுவ வாகினி என அனைத்து அமைப்புகளின் மதவெறி செயல்பாடுகள் மூலம் கிடைத்த வாக்குகளை வைத்து தான் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வராக இன்று ஆதித்யநாத் விட்டிருக்கிறார்.
ஆதித்யநாத் மீது பல வழக்குகள், அவரது ”இந்து யுவ வாகினி” மற்றும் இந்துவ அமைப்புகள் மீது சாட்சியங்கள் அடிப்படையில் எண்ணற்ற வழக்குகள் இவைகள் அனைத்தையும் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் மிக பொறுப்புணர்வோடு கையாண்டிருந்தால் ஆதித்யநாத் சிறையிலிருந்து இருந்திருப்பார். ஆனால் யோகி இன்று முதல்வர் இப்போது குற்றம் சாட்டியவர்களை, நேர்மையானவர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்.
ரவுடிகள் கூடாரம்:
பஜ்ரங் தளம் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் பங்கேற்ற மிகப்பிரபலமான அமைப்பு. அதை மார்தட்டிக் கொண்டு பேட்டி அளித்தவர்கள். இப்பொதும் மங்களூரில் இருக்கின்ற வியாபாரிகளை தாக்குவதும் அவர்கள்தான் அவர்களைப் பாதுகாக்க ஆட்களை அனுப்புவதும் அவர்கள்தான். அதாவது தனியார் பாதுகாப்பு நிறுவனம் நடத்தி அடியாட்களை அனுப்புவது பஜ்ரங்தள் தலைவர்களே! இவர்கள் இயக்கத்தினால் நிகழ்த்தப்படும் கலவரங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு காவல்துறையின் அணுகுவது பயனற்றது என்று மங்களூர் வியாபாரிகளும் பொதுமக்களும் கருதுவதால் பஜ்ரங்தள் இயக்கத்திற்கு கலவரம் லாபம் கொழிக்கும் தொழிலாய் மாறியுள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பதையும் அதை தொடர்ந்து ராமர் கோயில் கட்டுவது மையமாகக் கொண்ட இயக்கத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்காகவே 1980களில் விஷ்வ இந்து பரிஷித் அமைப்பால் உருவாக்கப்பட்ட இளைஞர் குண்டர் படைதான் பஜ்ரங்தள். ’பலமும் வலிமையும் உடைய’ என்கின்ற அர்த்தத்தைக் கொண்ட பஜ்ரங்தள் என்ற வார்த்தையை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஆனால் நரசிம்மராவ் அரசின் நடவடிக்கை மிகவும் மோசமாக இருந்தது. 1992 டிசம்பர் 10 ஆம் தேதி வி.எச்.பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளை மத்திய அரசு தடை செய்தது. ஆனால் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக சமரசப் போக்குடனேயே நடந்துகொண்டது மிகச் சொற்ப எண்ணிக்கையிலான நபர்களே கைது செய்யப்பட்டனர். பல முக்கிய பிரமுகர்கள் தலைமறைவாகச் சென்று விடவும் அனுமதிக்கப்பட்டனர். குறுகிய காலத்தில் ஆர்எஸ்எஸ் பஜ்ரங் தளம் மீதான தடை நீக்கப்பட்டது
பல்லாண்டுகாலம் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அமலாக்கப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிராக மிகப்பெரிய கலவரத்தை தூண்டியதில் இந்த அமைப்பே முதலில் நின்றது. மோடி முதல்வராக இருந்த போது குஜராத்தில் இஸ்லாமிய மக்கள் மீது கொடூரமான கொலைகளைச் செய்தவன் பாபு பஜ்ரங்கி. இவன் பஜ்ரங்க்தள் தலைவன். இவன் நடத்திய படுகொலைகளை பெருமையோடு டெகல்கா பத்திரிக்கை நிருபரிடம் பட்டியலிட்டு அம்பலப்படுத்தப் பட்டபோது அவ்வமைப்பிற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என ஆர்.எஸ்.எஸ் மறுத்தது. ஆனால் பஜ்ரங்தள் ஆர்.எஸ்.எஸ் ஆலகால விஷத்தை உணவாகக் கொண்டு வளந்த இயக்கம் என்பதை உலகறியும்.
ஸ்ரீராம் சேனா எனும் கூலிப்படை :
”பள்ளி காலம் மட்டும் இளமை காலம் முழுவதையும் கர்நாடக ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இருந்தேன். சிறையில் நான் கண்டெடுத்த பாதையில் பயணிக்கத் துவங்கினேன் நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஒரு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக அவ்வியக்கம் கொடுத்த பொறுப்புகளையும் பணிகளையும் செய்து வந்தேன்” இப்படி வாக்குமூலம் கொடுத்தது ஸ்ரீராம் சேனா எனும் காவிப்படையின் தலைவர் முத்தாலிக். ஆனால் அவர்கள் யாரென்றே தெரியாது என சாதிக்கும் ஆர்.எஸ்.எஸ்?
1993 இல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அடிப்படைவாத பண்பாட்டை இயக்கமான விஹெச்பி அமைப்பின் பொறுப்பாளாராக இருந்தவர். 1994 கர்நாடக பஜ்ரங்தள் இயக்கத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அங்கு ஏற்பட்ட முரண்பாட்டால் கூட்டத்துடன் சிவசேனாவிற்கு மாறி அதன் கர்நாடக பிரிவுக்கு தலைமை தாங்கினார். மராட்டி மற்றும் கன்னட மொழி வெறியர்களுக்கு இடையிலான மோதல்கள் வெடித்தன. எனவே சிவசேனாவிற்காக கர்நாடகாவில் இயங்குவது இயலாத காரியமாகி விடும் என்பதால் 2006-ல் ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பை துவக்கினார்.
கலவரங்கள் நாசவேலைகளில் கலாச்சார காவல் நடவடிக்கைகள் வகுப்புவாத வன்முறைகள் போன்றவற்றின் பெரும்பாலான வழக்குகளில் ஸ்ரீராம் சேனாவின் பெயர் இல்லாமல் இல்லை. இதனால் தன்னுடைய போராட்ட களத்தை ஸ்ரீராம் சேனாவிடம் பஜ்ரங்தள் இழந்தது, தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள முயன்றது. 2002 போட்டி இந்துத்துவ அமைப்புகளுக்கு நடுவே மாட்டிக் கொண்ட மங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வகுப்புவாத கலவரங்கள் தொடர்ந்து நடந்தன.
2008 ஆகஸ்ட் 26 டெல்லியில் சஹ்மத் என்கின்ற ஒரு அரசு சாரா நிறுவனம் நடத்திய கலை கண்காட்சியில் புகழ்பெற்ற ஓவிய கலைஞரான எம்.எப்.உசைனின் ஒவியங்களை ஸ்ரீராம் சேனாவின் உறுப்பினர்கள் சேதப்படுத்தி அழித்தனர். இதனால் தேசம் முழுவதும் இந்த இயக்கம் மீது வெளிச்சம் பட்டது. 2009 ஜனவரி மாதத்தில் கர்நாடக காவல்துறை ஹூப்ளி குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக ஸ்ரீராம் சேனாவின் தொண்டர்கள் 9 பேரை கைது செய்தது.
அதே ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி மங்களூரில் அம்னீசியா இரவு விடுதியில் இந்து கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மீறுகிறார்கள் என பல இளம்பெண்களை அடித்து வதைத்தன் மூலம் தேசம் முழுவதும் எதிர்ப்பை சந்தித்தது. கடுமையான நெருக்கடிகளுக்கு பின்பு கர்நாடக பாஜக அரசு அவர்களை கைது செய்யும் நாடகத்தை நடத்தியது.
மிகப்பெரிய இந்து பாதுகாவலர்களை போல தங்களை காட்டிக் கொண்டாலும் இது முழுக்க முழுக்க கூலிக்கு மாரடிக்கும் கூட்டமே. தெகல்கா பத்திரிக்கை நிருபர் ஒருவர் ஒரு ஓவியக் கண்காட்சியில் கலவரம் செய்து புகழ்பெற வைக்க எவ்வுளவு தொகை எனப் பேரம்பேசி ஸ்ரீராம் சேனாவின் தலைவர் முத்தாலிக்கிடம் 50,000 பணம் கொடுத்து அம்பலப்படுத்தியது. அதவது கூலிப்படையை நிழல் ராணுவங்களாக பயன்படுத்திக் கொள்கிறது
இவர்களது நிழல் இராணுவ கதைகள் இன்னும் இருக்கிறது.

