thodar-8-sanathanam-ezhuthum-ethirpum-s-g-ramesh-babu தொடர்- 8 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் - எஸ்.ஜி. ரமேஷ்பாபு
thodar-8-sanathanam-ezhuthum-ethirpum-s-g-ramesh-babu தொடர்- 8 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் - எஸ்.ஜி. ரமேஷ்பாபு

தொடர்- 8 : சனாதனம்: எழுத்தும் எதிர்ப்பும் – எஸ்.ஜி. ரமேஷ்பாபு

தொடரும் நிழல் ராணுவக் கதைகள்

கேரளாமீது வைக்கப்படும் குறி: கேரளாவில் பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு அடித்தளம் இடுவதற்காக இந்து ஐக்கிய வேதி என்ற அமைப்பை உருவாக்கியது. பிரபல பாடகரான கே.ஜே.ஜேசுதாஸை குருவாயூர் கோவிலில் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு கோவில் நிர்வாகத்திடம் கேரளாவின் கூட்டுறவு மற்றும் தேவசம்போர்டு அமைச்சராக இருந்த சுதாகரன் கேட்டுக்கொண்டார். கே.ஜே.ஜேசுதாஸை மக்காவில் அனுமதிக்குமாறு இதேபோன்று கடிதமொன்றை சவுதி அரேபியா அதிகாரிகளுக்கு அனுப்புவார்களா என பிரச்சாரம் செய்தனர்.

”1921 ஆம் ஆண்டு மாப்ளாவில் வெறிபிடித்தவாறு முஸ்லிம்கள் நடந்து கொண்டபோது வேறு வழியின்றி தங்களுடைய வீடுகள், சொத்துக்கள், கோவில்கள் என அனைத்தையும் விட்டுவிட்டு இந்துக்கள் வெளியேற வேண்டியிருந்தது கேரள வரலாற்றின் அவமானகரமான பக்கங்கள் அவை.” என வரலற்றை திரித்து நச்சு விஷ வித்துக்கள் இவ்வமைப்பால் தூவப்பட்டது.

ஆனால் உண்மை என்ன?

1921இல் மாப்ளா என்றழைக்கப்பட்ட முஸ்லிம் விவசாயிகள் தங்களுடைய நிலவுடைமையாளர்களான நம்பூதிரிகள் மற்றும் நாயர்களை எதிர்த்துப் போராடினார் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரங்களோடு நிரூபித்து இருக்கின்றனர். ஆதிக்கசாதி நிலவுடைமையாளர்கள் மிக மோசமான வடிவங்களிலான சுரண்டலுக்கு எதிராக நடத்தப்பட்ட விவசாயிகள் எழுட்சிக்கு மதச் சாயம் பூசி ஒடுக்கியது பிரிட்டிஷ் அரசாங்கம். முதன்முதலில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நம்பூதிரியும் நான்கு நாயர்களும் கூட உண்டு என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

இந்து ஐக்கிய வேதி மற்றும் இன்னும் பிற ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் ஒட்டுமொத்த கேரள இந்துத்துவ அரசியலும் உச்சத்தில் இருக்கும் சங்பரிவாரத்தின் தலைமைச் செயலகத்தில் தான் தீர்மானிக்கப் படுகிறது. கேரளாவில் 3000 கோவில்களுக்கு மேலாக நிர்வகித்து வரும் தேவஸ்தான கமிட்டிகளிடமிருந்து கேரள கோவில்களை விடுவிக்கும் கோரிக்கைகளை இந்த இயக்கம் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் மற்றும் கிருஸ்த்துவர்களின் வழிபாட்டுத் தலங்களை அந்தந்த சமூகத்தினரின் நிர்வாகி நிர்வகிப்பதைப் போல இந்து கோவில்களில் நிர்வாகத்தையும் இந்துக்களிடம் உடனே கொடுத்துவிட வேண்டும் எனக் கோருகின்றனர். (இந்த கோரிக்கை குறித்தும், இது எத்தனை பொய்யான கோரிக்கை என்பது குறித்தும் ”யார் கைகளில் இந்து ஆலையங்கள்” என்ற என்னுடைய புத்தகத்தில் விரிவாக உள்ளது.).

2016 தேர்தலில் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் (என்.டி.பி) என்கின்ற ஈழவ சாதி இயக்கம் பாஜகவோடு கூட்டணி அமைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டது. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ஈழவ சமூகத்து மக்களின் சமூக மற்றும் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இயக்கமாக இருந்ததால் மாநிலத்தின் அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை அது பெற்றிருந்தது. இதன் விளைவாக 2011 இல் 6.3. சதமாக ஆக இருந்த பா.ஜ.க வாக்கு சதவீதம் 2016ல் 16 சதமாக ஆக அதிகரித்தது.

அபிநவ் பாரத்: கோட்சேவின் வாரிசுகள்: காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் தம்பியான கோபால் கோட்சேவின் மகள், மற்றொரு வகையில் சாவர்க்கரின் தம்பியான நாராயணன் சாவர்க்கரின் மருமகள்தான் ஹிமானி. இவரின் அரசியல் அனுபவத்தை விடவும் அவருக்கிருந்த இரட்டை பாரம்பரியமே அவரை இந்து மகாசபா சபைக்கும் அதனைத் தொடர்ந்து அபினவ் பாரத்துக்கும் அழைத்து வந்தது. மகாராஷ்டிராவில் அதிதீவிர சாவர்க்கர் விசுவாசிகளால் 2006 இல் துவக்கப்பட்ட இயக்கம்தான் அபிநவ் பாரத்.

மலேகான் குண்டுவெடிப்பில் இந்து தீவிரவாதிகளான அவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் கைதான போது, அதனை ஹிமானி வெளிப்படையாக நியாயப்படுத்தி பேசினார். ”தோட்டாவுக்கு பதில் தோட்டா எனும்போது ஏன் குண்டுவெடிப்புக்கு பதிலடி மற்றொரு குண்டு வெடிப்பாக இருக்கக் கூடாது என்றார்”. மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் விசைத்தறி நகரமான மாலேகானில் 2008 செப்டம்பர் 29 இல் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு மட்டும் இல்லாமல் போயிருந்தால் அபினவ் பாரத் என்கின்ற இயக்கம் பரவலாக அறியப்படாமல் போயிருக்கும்.

பயங்கரவாத வழக்குகளில் அச்சம்பவத்தின் விசாரணை மாறுபட்டதாக இருந்தது. மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ’ஹேமந்த் கார்கரே’ என்பவர்தான் மலேகான் குண்டுவெடிப்பு விசாரணையை தலைமை ஏற்று நடத்தினார் இந்தியாவில் பயங்கரவாதத்தை பரப்புவதற்காகவே வலதுசாரி இந்து தீவிரவாத இயக்கங்கள் இருப்பதை முதல் முறையாக இந்த விசாரணை வெளிக்கொண்டு வந்தது.இதில் குற்றவாளியான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் இப்போது எம்.பியாக உள்ளார்.

அபிநவ் பாரத் பயங்கரவாத பக்கத்தை கண்டுபிடித்த மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படையினர், அதுவரையிலும் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டவை என்று கருதப்பட்ட பல்வேறு வெடி குண்டு வெடிப்புகளுக்கும் இந்து மதவாதிகளுக்கும் உள்ள தொடர்பினை வெளிக்கொண்டு வரத் தொடங்கினர். 2010 டிசம்பரில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் ஆன சுவாமி அசீமானந்தாவின் கைதுக்குப் பின்னர் நாடு முழுவதும் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் இந்து தீவிரவாத செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

2015 ஜூன் மாதத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ரோகினி சலியன் ”குற்றவாளிகளை உடனடியாக விசாரிக்க வேண்டாம் என்று தன்னை தேசிய புலனாய்வுத் துறை கேட்டதாக” குற்றச்சாட்டை முன்வைத்தார். காரணம் அந்த கொலையாளிகளுக்கு ஆதரவான அல்லது கொலையாளிகளை வளர்த்த பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வந்ததுதான்.

போன்சாலா ராணுவப் பள்ளி – ராணுவ மயமாக்கப்படும் சிறுவர்கள்: மாலேகான் குண்டுவெடிப்பு நிகழ்வுக்கு பின்னரே மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படையினர் கண்காணிப்பு வளையத்திற்குள் போன்சாலா ராணுவப் பள்ளி சிக்கியது. குண்டுவெடிப்பு தொடர்பான நிகழ்வுகளை விசாரிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலருக்கு பள்ளியுடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. அபினவ் பாரத் இயக்கத்துக்கு சில முக்கியமான உதவிகளை ஆர்எஸ்எஸ் நடத்தும் இந்த ராணுவப் பள்ளி செய்திருக்கிறது. மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சி கொடுப்பதும் பல்வேறு ராணுவ பாதுகாப்பு பணிகளுக்காக தேர்வுகளில் பங்கேற்க அவர்களை தயார்படுத்துவதுமே அதன் நோக்கம்.

அப்பள்ளியை உருவாக்கியவர் மூஞ்சே 1930களில் அவர் ஐரோப்பா சென்றபோது பாசிஸ்டுகள் பயிற்றுவிக்கும் முறைகளை கண்டார். பின்னாளில் போன்சாலா ராணுவப் பள்ளி துவங்குவதற்கு அதன் மூலம் இந்து வகுப்புவாத அரசியலை முன்னெடுக்கும் அவரது ஐரோப்பிய பாசிச படிப்பினையை அடித்தளமாக அமைந்தது.

ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவரின் அரசியல் குருதான் இந்த மூஞ்சே. 1927 முதல் 1930 வரை அகில பாரத இந்து மகா சபையின் தலைவராக இருந்தவர். ஆங்கிலேய ஆட்சியாளர்கள், பாரம்பரிய மன்னர் குடும்பங்கள் மற்றும் பெரு வியாபாரிகள் ஆதரவைப் பெற்றுத்தான், ரகசிய இந்துமத நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றும் ராணுவ பள்ளியை துவக்கினார்.

மராட்டிய மன்னர் குடும்பத்திற்கு தனது விசுவாசத்தைக் காட்டும் விதமாகவும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய மராட்டியப் பேரரசை ஆட்சி காலத்தில் சூழல் திரும்ப வேண்டும் என்கின்ற விருப்பத்தை காட்டும் விதமாகவும் போன்சாலா என்ற பெயரையே பள்ளிக்கு தேர்ந்தெடுத்தார். ”எங்கள் குடும்பமே நாக்பூர் மன்னர் குடும்பத்திற்கு விசுவாசமாக பணியாற்ற பணியாற்றிய பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பம் ஆகும் அதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம்” என்று குவாலியர் மகாராஜா சிந்தியாவுக்கு அவர் கடிதம் எழுதினார்.

1950களின் இறுதியில் மூஞ்சே தொடக்கிய ராணுவ பள்ளியை தன்னுடைய முழுமையான கட்டுப்பாட்டில் ஆர்.எஸ்.எஸ் கொண்டுவந்தது. 1996 ஜூன் மாதம் நாக்பூர் பள்ளியின் மற்றொரு கிளையை துவக்குவதில் முக்கிய பங்காற்றியது. நாசிக்கில் 160 ஏக்கர் பரப்பளவிலும், 30 ஏக்கர் பரப்பளவில் நாக்பூரில் அதன் கிளையையும் இயங்கி வருகின்றன. இராணுவத்தை மத வயப்படுத்துவதே இதன் நோக்கம்.

ராஷ்டிரிய சீக் சங்கத் – சீக்கிய மத்தை அழிக்க சதி: 1984 இல் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களை பயன்படுத்திக் கொண்டு அவர்களைப் பாதுகாப்பதற்காக 1986 நவம்பர் 26ஆம் தேதியன்று ராஷ்டிரிய சீக் சங்கத் என்ற இயக்கம் உருவானதாக அறிவிக்கப்பட்டது. உண்மையில் இது ஆர்.எஸ்.எஸ்ஸின் இன்னொரு சதித்திட்டம். 1984 நவம்பரில் சீக்கிய மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தினால் அம்மக்களிடம் ஏற்பட்டிருந்த பய உணர்வை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அதன் மூலம் சீக்கியர்கள் இந்துக்கள் தான் என்கின்ற தன்னுடைய கருத்தை முனைவதற்காகவே இந்த அமைப்பை உருவாக்கியது ஆர்.எஸ். எஸ்.

சீக்கியர்கள் தனியான மத குழுவை சேர்ந்தவர்கள் இல்லை. இந்து மதத்தின் ஒரு சிறு பிரிவினர்தான் அவர்கள் என்றும் ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால்தான் சீக்கியர்களுக்கு தனியான அடையாளம் இருப்பது போன்ற மாயை உருவாக்கப்பட்டது என்றும் பிரச்சாரம் செய்தனர். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கு சீக்கிய அடையாளமே காரணம் என்று வகுப்புவாத கலவரத்தையும் நியாயப்படுத்தும் விதமாக பேசினர்.

இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் எதிர்த்து இரு முனைகள் பதிலடி கொடுக்கப்பட்டது. ஒரு முனையிலிருந்து போர் வீரர்கள் போர்க்களத்திலும், பக்தி இயக்கம் என்ற பெயரில் இந்து மதத் துறவிகளும், ஞானிகளும் ஆன்மீக எழுச்சியை நடத்தினர். நாடு முழுவதுமாக இயங்கிய பக்தி இயக்கங்கள் வேதங்களிலும், இதிகாச புராணங்களிலும், தர்ம சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டதையே அவர்கள் சொன்னார்கள் என கதை கட்டினர்.

அப்படி போராடிய சாதுக்களில் ஒருவர்தான் குருநானக். அவர் அழைப்பை எற்றவர்கள் சீக்கியர்கள் என்று அழைக்கப்படனர் என வரலாற்றை திரித்தனர். ரிக், சாம, யஜுர், அதர்வண மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை தொடர்ந்து சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்தை ஆறாவது வேதமாக பஞ்சாபின் இந்துக்கள் கருதுவதாக இவர்கள் மடைமாற்றினர். ஆனாலும் சீக்கிய மக்களிடம் இவர்களது வேலைகள் எடுபடவில்லை, தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். 1997 இல் பஞ்சாபில் உருவான அகாலிதளம் பாஜக கூட்டணி மற்றும் 1998 மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை சாதகமாக மாற்றி பலை விஷ விதைகளை அங்கு விதைத்துள்ளனர். மோடி ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் முயற்சிகளை துவங்கியிருக்கின்றனர்.

தமிழகத்தில் பரவும் காவி இருள்:

இந்த்துவா அமைபுகளில் வலைப்பின்னல் குறித்த சிறிய சித்திரங்கள் தான் மேலே பார்த்தவைகள் எல்லாம். அவர்களின் இலக்கு ”அகண்ட இந்து ராஸ்டிரம்”!? அதற்காக அவர்கள் குறுகிய நோக்கங்களை கொண்ட இலக்குகளை திட்டமிடுவதில்லை. எந்த ஒரு இலக்கும் குறைந்தபட்சம் கால் நூற்றாண்டு திட்டங்கள்தான். ஆனால் உண்மையில் தேசத்தின் மீது அக்கறை கொண்டுள்ள, மதச்சார்பின்மை மீது அக்கறை கொண்ட இயக்கங்கள் எப்படி இயங்குகின்றன என்பது விவாததிற்குரிய ஒன்றாகும்.

தமிழகம் பெரியார் மண், திராவிட இயக்க பாரம்பரியம் கொண்டது, இடதுசாரிகள் பாரம்பரியமாக உள்ள மண் எனவே இங்கு மதவெறி அவ்வுளவு எளிதில் வெற்றி பெறாது என தோழர்கள் முழங்குவதை கேட்க முடிகிறது. உணமைதான் எனினும் முழு உண்மையா என்ற கேள்வி எழுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியிலும், அதிமுகவிலும் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. எனது பள்ளி மற்றும் கல்லூரியில் கால நண்பர்கள் இப்போது இயக்கங்களில் முக்கிய பொறுப்புகளில் இயங்கி வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சியுடன் அவர்கள் கட்சி கூட்டணி வைத்த பின்பு நடக்கிற விவாதங்களின் அவர்களது மாற்றங்களை எளிதாக யூகிக்க முடிகிறது. இன்னொரு பக்கம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

வன்னியர் சங்கம் போராட்டங்களை நடத்தி, பல உயிர்களை பலிகொடுத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) என்கின்ற ஒரு பிரிவை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் வழங்கிய மண்டல் கமிஷனை எதிர்த்து பாஜக ஆர்.எஸ்.எஸ் செய்த கலவரங்களையும் அதனால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்ததும் அவர்கள் நினைவில் இல்லை. மிக இயல்பாக பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர்களை இந்துதுவ சக்திகள் மூளைச்சலவை செய்து கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுடைய பதிவிலிருந்து தெரியவருகிறது.

இன்னொரு பக்கம் அதிமுகவை பற்றிச் சொல்லவே தேவையில்லை, எந்த அரசியல் சித்தாந்தமும் இல்லாதவர்கள். மோடியை எதிர்த்து எந்தவொரு கேள்வி கேட்டாலும் அந்தக் கேள்வியின் அடிப்படையைக் கூட புரிந்து கொள்ளாமல் பிஜேபியின் பின்னூட்டங்களை அப்படியே எடுத்து பதிவு செய்கிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம் கொரானா நோய்த்தொற்று காலத்தில் மத்திய மாநில அரசுகள் தவறுகளை கேள்விக்கேட்டால் பாஜக நபர்களைப் போல ஆர்.எஸ்.எஸ் பதிவுகளை பின்னூட்டமாக அதிமுக, பாமக நண்பர்கள் அப்படியே நகலெடுத்து எல்லோருக்கும் வழங்கியது.

மற்றொரு பக்கம் கிருஷ்ணசாமி போன்ற தலித் தலைவர்கள் அப்பட்டமாக பிஜேபியின் ஊதுகுழலாக மாறி இருக்கிற சூழலில் சித்பவன பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டு, பார்ப்பன மேலாதிக்கத்தை கட்டியமைக்க தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை, ஆர்.எஸ்.எஸ் யாருக்கு எதிராகத் தன்னுடைய பார்ப்பன மேலாதிக்கத்தை கட்டமைக்கிறது அவர்களை வைத்தே அதை அமலாக்கும் பணியை தமிழ்நாட்டிலும் துவங்கி இருப்பது புரிந்துகொள்ள முடிகிறது.

ஆகா மெல்ல மெல்ல தமிழகத்தில் தனது வலைப் பின்னலை மிக அழுத்தமாக ஆர்.எஸ்.எஸ் விரிப்பதற்கு முன்னால் இத்தகைய நூல்களை தமிழக மக்கள் மத்தியில் அதிகம் கொண்டுசெல்ல வேண்டும். காலத்தின் தேவையை உணர்ந்து இதை வெளியிட்ட எதிர் வெளியீட்டாருக்கும், மிக எளிய தமிழில் சிக்கலற்ற மொழிபெயர்ப்பை செய்த இ.பா.சிந்தனுக்கும் பேரன்பும் நன்றியும்!

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *