thodar1 ; pirai pozhuthin kathaikal - m.manimaaranதொடர் 1: பிறைபொழுதின் கதைகள் - ம.மணிமாறன்
thodar1 ; pirai pozhuthin kathaikal - m.manimaaranதொடர் 1: பிறைபொழுதின் கதைகள் - ம.மணிமாறன்

மறக்க முடியாத அந்த நொடிப்பொழுது இன்னும் என் மனதை விட்டு அகலவேயில்லை. வறண்ட புன்னகையை உதிர்த்தபடி படியிறங்கிப் போன அந்தக் குழந்தையின் பளிங்குக்கண்கள் என்னை வெறித்துப் பார்த்ததே, அதன் வெட்கையின் சூடு எனக்குள் தகித்து கிடக்கிறது. துயரத்தின் சாவியை கைவிட்டுச் சென்ற அந்த கருப்பிருட்டு நாளுக்குள் நான் வெகு காலம் உழன்று கிடந்தேன். ஏன் ஏன் எனும் கேள்விகள் என்னைத் தொலைத்து எடுத்தன. ஒருவர் கூட அந்தக் குடும்பத்தை பஸ்ஸில் இருந்து இறங்காதீர்கள் என தடுத்து நிறுத்தவில்லை. எனக்குள் திரண்ட சொற்களை தொண்டைக்குழியை விட்டு மேலேறே விடாமல் தடுத்தது எது. என்னைப் போலவே பலரும் பஸ்ஸிற்குள் முனுமுனுத்துக் கிடந்தார்களா? அமைதியாக கிடந்தவர்களையும தன்னுடைய கூட்டம்தான் எனச் சேர்த்துக்கொள்ளும் துணிச்சலும் தைரியமும் எப்படி அந்த நான்கு பேருக்கு மட்டும் வந்தது. பேச்சிற்கு நடுவே உங்களுக்காகாகவும் தானே சேர்த்து பேசுகிறேன்,நீங்க பேசாம இருங்க என வெடித்த அந்த பையனின் சொற்கள் பஸ்ஸை அமைதியாக்கிடும் தந்திரம். தேசப் பிரிவினை நாட்களின் போது துவக்கப்பட்ட இந்த தந்திர முறைகள் இன்றுவரையிலும் நீடித்திருக்கிறது. . அதிலும் இவ்வளவு கடும் சொற்களை அதுவரை அறிந்திருக்காத மனிதர்களின் மீது எப்படி கொலைக்கருவிகளைப் போல வீசமுடியும். எந்த விதத்திலும் நேரடியாக சம்பந்தமே இல்லாத சம்பவத்திற்காக இவர்களை திட்டுவது எந்த விதத்தில் சரி. காவிக்கறை படிந்த பற்களுக்கு நடுவே புகையிலையை திணித்த அந்த நடுத்தர வயது ஆள்தான் முதலில் துவங்கினான். ” பாரு என்ன தின்னக்கமா கிளம்பிருக்குங்க. கோயம்புத்தூர்ல குண்டு வச்சது இவிங்கதான். அங்க ஊரையே குண்டு வச்சு கொளுத்திட்டு பகுமானமா பஸ் ஏற வந்திருச்சுங்க. கொஞ்சம் கூட கூச்சமில்ல”…இந்த வசைச்சொற்களை அந்தக்குடும்பம் நிச்சயமாக எதிர்பார்த்திருக்காது. தங்களுக்குள்ளாக சுருளத் துவங்கியதை அவர்களின் வாடத்துவங்கிய முகங்கள் எடுத்துக் காட்டியது. “ஏ! வாப்பா.நாம எப்ப குண்டு வச்சம். ஒரு வேளை நீ வச்சுட்டு ஓடி வந்திட்டியா” எனக் கேட்ட குழந்தையை அந்த தாய் அடக்கினாள். “சும்மா இருத்தா, நாம மதுரையத் தாண்டி என்னைக்கு போயிருக்கோம். நமக்கு யார் இருக்கா கோயம்புத்தூர்ல.”..உள்ளுக்குள் முனுமுனுத்தாள் அந்தத் தாய். யார் என்றே அறிந்திருக்காத ஊரின் நடுவில் குழந்தைகளை குற்றவாளிகளைப் போல நிறுத்தியிருக்கும் சூழலை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினான் அந்தத் தகப்பன். நான்காக இருந்த குரல்கள் பெருகியது. பஸ்ஸே மூர்க்கமாக அந்தக் குடும்பத்தை மிரட்ட, தன் மீது வீசப்பட்ட வசைச் சொற்களின் உக்கிரம் தாங்க முடியாமல் பஸ்ஸில் இருந்து இறங்கினார்கள் ஐவரும்.

தூரத்தில் வெறித்துப் பேருந்தை பார்த்தபடி கடந்துபோனது குடும்பம். இரண்டு பெண் குழந்தைகளும் புர்கா அணிந்திருந்தார்கள். சின்னப்பையன் தலையில் வெள்ளைத் தொப்பி வைத்திருந்தான். கருப்பும் வெள்ளையுமாகக் கறைந்த அந்தக் காட்சிச்சித்திரம், நம்முடைய காலத்தின் நில அடையாளமாகத் தேங்கிக் கிடக்கிறது. இது நடந்து இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. கொளுத்தும் உச்சி வெயிலில் கைகாட்டி அந்தக்குடும்பம் பஸ்ஸிற்குள் ஏறியது. பஸ்ஸில் ஏறியதில் இருந்து அவர்களாக இறங்கிச் செல்லும் வரையிலும் பஸ்ஸிற்குள் கொட்டப்பட்ட வார்த்தைகளின் வன்மத்தை அந்தக் குடும்பம் எப்படி தாங்கியிருக்கும். இது என்ன அந்த குடும்பம் மட்டும் எதிர்கொள்ளும் சிக்கலா?. சொந்த நிலத்தில் தனித்து ஒதுங்கிக் கிடக்கும் அகதி மனோபாவ உளச்சிக்கலுக்குள் இஸ்லாமிய அடையாளங்களோடு வாழ நேர்ந்ததற்காக அவர்களையும், அவர்களைப் போலான பெருங்கூட்டத்தையும் இப்படி தனித்துத் தள்ளிய தந்திரக்காரர்கள் இப்போது அதிகாரத்தின் உச்சிக்கொம்பில் அமர்ந்திருக்கிறார்கள்.

அந்தக் குடும்பம் எப்படி எல்லாவற்றையும் கடந்து இது என் ஊர் என நினைக்கும். நாங்கள் இப்படித்தான் உங்களை தனித்தொதுக்குவோம். எல்லாவற்றையும் சகிக்க முடிந்தால் எங்களோடு இருங்கள். இல்லாவிட்டால் உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொண்டு கிளம்புங்கள். இந்தக் குரூரத்தை நாற்பதுகளில் இருந்து எதிர்கொண்டு வரும் முஸ்லிம் சமூகத்தின் பாடுகளைச் சொல்லவேண்டி இருக்கிறது .உண்மையைப்போல கட்டமைக்கப்படுகிற பொய்மைகளை. அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது. அப்படியான முயற்சிகளின் துவக்கப்புள்ளியே இது.

வரலாறு நெடுகத் தன்னுடைய அறிவினாலும், ஆற்றலாலும் நிலத்தை மேம்படுத்திய ஒரு சமுகத்தின் கதைகளின் தொகுதியே உங்கள் முன்பாக விரியப் போகிற ’பிறைபொழுது கதைகள்’ எனும் கட்டுரைத் தொடர்.

விளையாட்டு என்றால் நிச்சயம் இரண்டு அணிகள் இருக்க வேண்டும் என்பது யதார்த்தம்தானே. தொன்னூறுகளின் துவக்கத்தில் உலக மக்களின் கனவு நிலமான சோவியத் ரஷ்யாவுடன் மோதிக் கொண்டிருந்தது உலக வல்லாதிக்க அமெரிக்கா. சோவியத் சிதைந்த பிறகு அதற்குத் தன்னோடு போட்டியிட மட்டுமல்லாது , தன்னை மோதி வெற்றிகொள்ளும் துணிச்சல் காரர்களையும் எதிர் நோக்கியிருந்தது. தன்னோடு மோதுவதற்காக உலக வல்லாதிக்கம் உருவாக்கிய கருத்துநிலைதான் இஸ்லாம் பயங்கரவாதம். தொன்னூறுகளுக்குப் பிறகு உலக மக்களை அச்சுறுத்த அமெரிக்கா கண்டெடுத்த சொற்களை ஒருமுறை உச்சரித்துப் பார்த்தாலே உண்மைக்கு அருகில் நாம் சென்றுவிட முடியும்.

தீவிரவாதம், பயங்கரவாதம்,சதாம்உசேன், பின் லேடன். இவையெல்லாம் வெறும் ஒற்றைச் சொற்களல்ல. தானே உருவாக்கிக் கட்டமைமைத்த நிழல் எதிரிகளுடன் நித்தம் நடக்கிறது யுத்தம். எத்தனை அழிவுகள். எத்தனை உயிரிழப்புகள். அத்தனைக்கும் பின்னால் இருப்பது வர்த்தகச் சூதாடிகளின் கை என்பதை இப்போது கலைஞர்களே உலகெங்கும் கண்டுணர்ந்து சொல்கிறார்கள். இது உலகின் சூழல் என்றால் நம்முடைய நாட்டின் நிலை வேறு வடிவிலானது. இங்கும் கூட இந்த சூட்சுமக்கயிறு தொன்னூறுகளின் துவக்கத்தில்தான் இறுகத் துவங்கியது. மிகவும் குறிப்பாக பாபர் மசூதி இடிப்பின் போது  பொதுவெளியிலும், வழக்கு மன்றங்களிலும், பத்திரிக்கைகளிலும் நிகழ்ந்த உரையாடல்கள் எவ்வளவு நியாயம் அற்றவையாக இருந்தது என்பது இன்றுவரையிலும் பொதுச்சமூகத்தின் புரிதலுக்கு உள்ளாகவேயில்லை. தொழுகைத்தளம்,பள்ளிவாசல் எனச் சொல்லப்பட்டு வந்த பாபர் மசூதியை சர்ச்சைக்குரிய கட்டிடம் என்று எப்போது சொல்லத் துவங்கினார்கள் என யோசித்தால் நமக்கு நிச்சயம் வரலாற்றை வளைக்கும் சூட்சுமம் சங்கிகளின் தந்திரம் புரியும். மதப்பயங்கரவாதிகள் தொழுகைத் தளத்தை இடித்தார்ககள் என்று சொல்லப்பட்டிருக்க வேண்டிய செய்தி, சர்ச்சைக்குரிய கட்டிடத்தை கரசேவகர்கள் இடித்துத் தரை மட்டமாக்கினார்கள் என்றே பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் பிறகு இன்று வரையிலும் இந்திய நிலத்தின் அரசியல் சொல்லாடல்கள் யாவும் மக்களிடமிருந்து விலகி வெகுதூரம் சென்று மதவெறிச் சுழலுக்குள் சிக்கித் தவிக்கிறது.

சில மறக்க முடியாத கொடும் நினைவுகளை வரலாற்றின் பக்கங்களில் விட்டு சென்றிருக்கிறது டிசம்பர் 6. முப்பது வருடங்களாக அந்த நாளை எதிர் கொள்ளும் வலிமையற்று கடந்து போகிறது இஸ்லாமியச் சமூகம். அந்த நாளில் ரயில் நிலையங்கள் அச்சமூட்டுபவையாக மாற்றப்படுகின்றன.

பர்தாக்களுக்குள் வெடிகுண்டுகளை சுமந்து வருகிறார்கள் பெண்கள் என்று சந்தேகமே இல்லாமல் நம்புகிறது இந்தியக் காவல்துறை. ஒவ்வொரு டிசம்பர் 6 இன் போதும் ரயில் நிலைய வாசலில் யாவர் முன்னிலையிலும் பர்தா நீக்கிப் பார்க்கப்படும் பெண்கள் அடையும் உளவியல் சிக்கல்களை எவராவது எழுதியிருக்கிறார்களா?. எனத் தெரியவில்லை. துயரத்தின் சாம்பல் படிந்திருக்கும் அந்தகண்களை உற்றுக் கவனித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்தக்கண்களுக்குள் பதுங்கி இருந்து நொதித்திருக்கும் துக்கத்தின் ஆழம்.

“எப்பா முஸ்லிம்கள் சரியா குளிக்க மாட்டாங்க,கிட்டப் போக முடியாது, கப்படிக்கும். அதனால்தான் உடம்பு பூரா சென்ட் அடிச்சிக்கிட்டு திரியுறாங்க. மாட்டுக்கறிய வளைச்சுத் தின்னு போட்டு சும்மா கிடக்கிறதில்ல, வத, வதன்னு பிள்ளையையும், குட்டியையும் பிதுக்கி தள்ளுறாங்க. நாமதான் ஒன்னு போதும்னு நிறுத்திடுறோம். இப்பப் பாருங்க ஊரு ஊருக்கு குட்டி பாக்கிஸ்தான அவங்க உருவாக்கிட்டாங்க. வளைகுடா நாட்டில இருந்து பெட்ரோல் துட்டு பிளேன்ல இருந்து இறங்கிக்கிட்டேயிருக்கு. அதைவச்சுத்தான் குக்கிராமத்தில கூட பளிங்கு வீடுகளா கட்டிக்கிட்டு மினுக்கிக்கிட்டு திரியுறாங்க.”. இவையெல்லாம் தன் சக மனிதர்களின் மீது துவேஷத்தை உமிழ்கிற வெறுப்பின் சொற்கள். இவற்றையெல்லாம் உண்மையைப் போல பொதுவெளியில் கட்டமைத்தவர்கள் சங்பரிவாரத்தினர். இதனை நிலைப்படுத்திக் கொண்டிருப்பவை ஊடகங்கள். இந்தப் பொய்மைகளை கலைத்து எழுதிட இஸ்லாமிய வாழ்க்கையைப் பாடிய புனைவெழுத்துக்களை ஊடகமாக எடுத்துக் கொள்ளக் காத்திருக்கிறது ’பிறைபொழுது கதைகள்’.

நிஜத்தில் மூன்று பேர் ஒரே நேரத்தில் சேர்ந்து உறங்கிட சாத்தியமற்ற வீடுகளில்தான் தமிழகத்தின் சரிபாதிக்கும் மேலான முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். இதனை சங்கிகள் அறிந்திருக்க எந்த வாய்ப்பும் இல்லை. பீடி சுற்றியும், பூட்டு, குடைகள் ரிப்பேர் செய்பவர்களாகவும், ஈயப்பாத்திரங்களுக்கு முலாம் பூசும் தொழிலாளியாகவும், நெசவாளிகளாகவும் தினசரி வாழ்வினை நெட்டித் தள்ளுகிற எளிய இஸ்லாமியக் குடும்பங்களின் பாதரவை அறிந்தாலும் தெரியாதது போல நகர்ந்து விடுபவர்கள் சங்கிகள்.

ஆனால் சங்கிகள் ஒன்றில் மட்டும் உறுதியாய் இருந்தார்கள். தாடியும், தொப்பியும் போட்டிருந்தால் போதும் இவர்கள் தீவிரவாதிகள் எனும் அடையாளத்தை எளிதில் கட்டமைத்துவிட முடியும். அதுமட்டுமல்ல, இது உண்மைதான் என வெகுஜன உளவியலுக்குள் நிரவிவிட முடியும். அதற்கு ஊடகங்கள் துணையாக இருக்கும் என்று தீர்க்கமாக நம்புகிறார்கள். வெகுமக்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் இந்தக் குரூரத்தை கலைத்து எழுதுவது எதன்வழி எனும் சிந்தனையில் உதித்ததே இந்தத் தொடர்.

தமிழ் இஸ்லாமிய புனைவுப் பிரதிகளுக்குள் மேற்சொன்ன குரூர வரலாற்றை அழித்து எழுதிடும் புனைவெழுத்துக்கள் இருக்கிறதா?.குறைவாக இருந்தாலும் எழுதப்பட்டிருக்கிறது. அரேபிய நிலத்தோடும், துருக்கியிலிருந்து வந்த அந்நியர்கள் எனவும் வெறுத்து ஒதுக்கி இந்த நிலத்தின் பூர்வகுடிகளான தமிழ் இஸ்லாமியர்களை புறக்கணித்திடும் அரசியல் குறித்தும் பேச வேண்டும். இரண்டாயிரத்தின் துவக்கத்தில் எட்வர் சையத்தின் ஒரியண்டலிசம் தமிழுக்கு அறிமுகமான பிறகு இங்கு புதிய இஸ்லாமிய புனைவுகள் வரத்துவங்கின. கீழைத்தேயம் மேற்கத்தியம் எனும் இருபெரும் எதிர்வுகள் கட்டமைக்கப்பட்டு தனித்த இஸ்லாமிய மரபுகள், தொல்குடிப் பழக்கவழக்கங்கள், சடங்குகள் யாவும் படைப்புகளாயின. பொது சிவில் சட்டம், குடியுரிமைச்சட்டம் என அரசதிகாரம் புதிய கத்திகளை இஸ்லாமியர்களின் மீது வீசத்துவங்கியிருக்கிறது. இந்த அரசியல் குயுக்தியையும் சேர்த்தே கதைகளாக்க வேண்டும் படைப்பாளிகள்.

மத அடையாளங்கள் கச்சிதமாகக் கண்டுணரப்பட்டு இந்திய நிலமெங்கும் கொலைவெறித் தாக்குதல்கள் மூர்க்கமாக நிகழ்த்தப்படுகின்றன.

குஜராத் கலவரம், மும்பை குண்டு வெடிப்பு, கோவை கலவரம் என சிறுபான்மை முஸ்லிம் மக்களின் ஞாபகக் குளத்தை அச்சுறுத்தும், நிம்மதியிழக்கச் செய்யும் செயல்கள் நிற்காமல் தொடர்கின்றன.

என்ன செய்ய முடியும் மதச் சிறுபான்மையினரால். இயல்பாகவே மத அடிப்படையில் இஸ்லாமியர்கள் ஓர் அணியில் திரள்கிறார்கள். இதைத்தான் சங்கிகள் எதிர்பார்த்தனர்.”பாருங்க நாம பூராம் சாதியா பிரிஞ்சுகிடக்கோம். அவனுக ஊரு ஊருக்கு பாக்கிஸ்தான் உருவாக்கிற வேலைய செய்யியிறாங்க” என நியாயம் போல சொல்லத் துவங்கியிருக்கிறார்கள். மெது மெதுவாக அவர்களின் குரலுக்கு செவி சாய்க்கும் கூட்டம் துளிர்விடத் துவங்கி இருக்கிறது. இந்த ஆபத்தை புரிந்துகொள்ள வேண்டியது மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளின் கடமை. மறுபுறத்தில் இஸ்லாமியத் தெருக்களில் மத அடையாளங்கள் முன்பைவிட அதிகமாயிருக்கின்றன. தொன்னூறுகளுக்கு முன்பு இத்தனை புர்கா பெண்களை யாரும் பார்த்திருக்க முடியாது. தாடியும், தொப்பியும் அணிந்து கொண்டு தவ்ஹீதுகளுக்கு பின்னால் இளைஞர்கள் திரள்வதற்கு உள்ளூர் ஜமாத்தார்களின் கேள்விகளற்ற அதிகாரம் மட்டும் காரணமில்லை. வாழ்வது குறித்த அச்சம் மிகும் போது மதம் கட்டி வைத்திருக்கும் கூட்டிற்குள் அடைக்கலமாவதைத் தவிர சிறுபான்மையினருக்கு வேறு எந்த வாய்ப்பையும் இந்தியச் சமூகம் வழங்கவில்லை…

இனிவரும் அடுத்தடுத்த கட்டுரைகளில் தமிழில் எழுதப்பட்டிருக்கும் இஸ்லாமிய படைப்புலகம் மட்டுமல்லாது. உலகெங்கும் எழுதப்பட்டிருக்கும் புனைவிலக்கிய படைப்புலகளின் வழியாகவும் ’பிறைபொழுதின் கதைகளோடு’ பேசுவோம்.

உரையாடலைத் தொடர்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *