தொடர்:3 நிறவெறிகோடு  உலக குத்துச்சண்டை பட்டயம் - அ.பாக்கியம் thodar:3 niraverikkodu ulaga kuthusandai pattayam -a.bakkiyamதொடர்:3 நிறவெறிகோடு  உலக குத்துச்சண்டை பட்டயம் - அ.பாக்கியம் thodar:3 niraverikkodu ulaga kuthusandai pattayam -a.bakkiyam

 

முகமது அலி குத்துச்சண்டை களத்திற்கு வருவதற்கு முன்பாக அமெரிக்காவில் கருப்பர்கள் விளையாடுவதற்கு தடை இருந்தது. குறிப்பாக ஜிம் க்ரோ சட்டங்கள் (Jim Crow laws) அமலில் இருந்தது. ஜிம் க்ரோ சட்டங்கள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில், உள்ளூர் அரசாங்கம் அதாவது மாநில மற்றும் ஸ்தல அரசாங்கங்களால் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் பெயரே கருப்பர்களை இழிவுபடுத்துவதாக இருந்தது. கருப்பர்கள் பொது நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு தடுக்கப்பட்டனர். 1877 ஆம் ஆண்டு துவங்கி 1960ஆம் ஆண்டுகள்வரை அமெரிக்காவின் தெற்கு பகுதியில் இது தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. கருப்பர்கள் பொது இடத்தில் தங்க முடியாது; பொது நிகழ்வில் பங்கேற்க முடியாது; வாக்களிக்க முடியாது என்ற முறையில் இந்த சட்டம் இருந்தது. அடிமை முறை சட்டபூர்வமாக நீக்கப்பட்டு இருந்தாலும் நடைமுறையில் நிறவெறி தலைவிரித்து ஆடியது. அமெரிக்காவின் வடக்கு பகுதியிலும் நிறவெறி போக்குகள் வலுவாகவே தென்பட்டன.

கருப்பர்கள் அடிமைகளாக இருந்த பொழுது அவர்களை குத்துச்சண்டையில் மோத விட்டு வெள்ளை முதலாளிகள் வேடிக்கை பார்த்தார்கள். அடிமைமுறைகள் சட்டப்படி ஒழிக்கப்பட்டபிறகு, குத்துச்சண்டை விளையாட்டில் கலந்து கொள்வதும் நடத்துவதுமாக இருந்தனர். வெள்ளையர்களுடன் கருப்பர்கள் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று தடை விதிக்கப்பட்டது. அதற்கான உடல் வலிமை, தகுதி கருப்பர்களுக்கு இல்லை என்று ஜிம் க்ரோ சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டது. கருப்பர்களுக்கு என தனியான போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகள் பரிசுப் போட்டிகளாக மாறின. அதைத் தொடர்ந்து உலக கருப்புநிற ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் (World Coloured  Heavy Weight Championship) என்ற பட்டத்தை பெறுவதற்கான போட்டி உருவாக்கப்பட்டது. இந்தப் போட்டியை எந்த அமைப்பும் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்க வில்லை. எனினும் நடைமுறையில் பொதுவாக மக்களால் அங்கீகரிக்கப் பட்டது. வெள்ளையர்களும் தங்களோடு மோதாமல் இருந்தால் போதும் என்ற முறையில் இந்த நிறக்கோடு போட்டியை தடுக்கவில்லை.

இந்தப் போட்டியில் கருப்பர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்கள் புகழடைந்தனர். 1876 ஆம் ஆண்டு சார்லஸ் சி ஸ்மித் (Charles C. Smith) என்ற கருப்பர் முதன்முதலில் கருப்பர்களுக்கான உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை பெற்றார். இந்தப் போட்டிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. 1908ஆம் ஆண்டு ஜாக் ஜான்சன் (Jack Johnson) ஒரு வெள்ளையனை வீழ்த்தி உலகப் பொது ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை பெற்ற பிறகும் கருப்பர்களுக்கிடையிலான போட்டி நடந்து கொண்டுதான் இருந்தது.

1937-ம் ஆண்டு மற்றொரு புகழ்பெற்ற கருப்பின குத்துச்சண்டை வீரர் ஜோ லூயிஸ், ஜிம் பிராடக் என்ற புகழ்பெற்ற வெள்ளை நிற குத்துச்சண்டை வீரரை வீழ்த்தும் வரை கருப்பர் போட்டிகளை நடத்திக் கொண்டிருந்தனர். இதன் பிறகுதான் இந்தப் போட்டி நிறுத்தப்பட்டது. ஜாக் ஜான்சன் வெள்ளையரை வீழ்த்தி வெற்றி பெற்றவுடன் கருப்பர்களுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். இதற்கான காரணம் பலவாறு கூறப்பட்டாலும், ஜாக் ஜான்சன் நிறவெறி அடிப்படையிலான பிரிவினைகளை ஊக்குவிக்க விரும்பவில்லை. எனவே ஜாக்சன் கருப்பர்களுக்கு இடையில் மட்டும் நடைபெறும் போட்டி தொடரக்கூடாது என்று முயற்சி செய்தார். வெள்ளை நிறவெறி இதை தொடர்ந்து நடத்துவதற்கான முயற்சிகளை செய்தது.

2004-ம் ஆண்டு உலக குத்துச்சண்டை கவுன்சில் (World Boxing Council) கருப்பர்களுக்கு இடையேயான உலக குத்துச்சண்டை ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்குவதற்கான ஆலோசனையை முன்வைத்தது. ஆப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த வீரர்கள், ஆப்பிரிக்காவில் வாழுகின்ற எந்த இனத்தை சேர்ந்த குத்துச்சண்டை வீரர்களும் இதில் கலந்து கொள்ளலாம் என்று நுட்பமான முறையில் இனவெறி விளையாட்டை புகுத்தினர். இதற்கு உலகளாவிய எதிர்ப்பும் உள்ளூர் எதிர்ப்பும் கடுமையாக வந்ததால் முன்மொழிவு கைவிடப்பட்டது. இந்த முன்மொழிவைக் கொண்டு வந்த அமைப்பு சாதாரணமான அமைப்பு அல்ல. உலகில் குத்துச்சண்டை நடத்தக்கூடிய உலக குத்துச்சண்டை சங்கம், சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு ,உலக குத்துச்சண்டை அமைப்பு போன்ற நான்கு அமைப்புகளில் ஒன்றாகும். நிறவெறி அடிப்படையிலான விளையாட்டை கட்டமைப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர். அதன் மூலம் மக்களை ஒன்று சேர விடாமல் தடுத்து, தங்கள் நலனை பாதுகாக்க ஆளும் வர்க்கம் அன்றைக்கு மட்டுமல்ல… இன்றைக்கும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறது.

நிறவெறிக்கோட்டை நிர்மூலமாக்கியவன்:

மாபெரும் கால்வெஸ்டன்(Galveston Giant) என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்படுகிற ஜான் ஆர்தர் ஜான்சன் (John Arthur Johnson)  முதல் முதலாக உலக குத்துச்சண்டை ஹெவி வெயிட் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளையனை வீழ்த்தி பட்டத்தைப் பெற்றார். இந்த வரலாற்றுச் சாதனை படைத்த கருப்பரை சுருக்கமாக ஜாக் ஜான்சன் என்று அழைப்பார்கள். 1908ஆம் ஆண்டில் கிடைத்த இந்த வெற்றி அமெரிக்காவின் நிறவெறி கலாச்சாரத்தின் மீதும், அதன் நிறவெறி கொள்கையின் மீதும் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கியது. இந்த வெற்றி எப்படி ஒரு கருப்பருக்கு சாத்தியமானது?

முகமது அலியின் தாய்,தந்தை நேரடியாக அடிமையாக இல்லை. அவரின் தாத்தா,பாட்டிதான் அடிமைகளாக இருந்தனர். ஆனால் ஜாக் ஜான்சனின் தாய் டினா, தந்தை ஹென்றி, இருவரும் வெள்ளையர் பண்ணை யில் அடிமைகளாக இருந்தனர். பண்ணை வேலைகளையும் செய்ய வேண்டும் வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும் என்ற நிலைமையில் தான் அவர்கள் அடிமைகளாக இருந்தனர். இதனால் ஜாக் ஜான்சன் வறுமையில் வாடினார். நிற வெறியால் ஒதுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் மட்டுமே பள்ளிக்குச் செல்ல முடிந்தது. வறுமை அவரை வேலையை நோக்கி விரட்டியது. துறைமுகக் கப்பல்களிலும், குதிரை தொழுவத்திலும், உடற்பயிற்சி கூடத்திலும், அற்ப சம்பளத்தில் தனது வயிற்றை கழுவிக் கொண்டிருந்தார். அப்பொழுது கிடைத்த மிக சிறிய தொகையில் அரை வயிற்றுக்கு ஆகாரம் தேடிக்கொண்டதோடு, குத்துச் சண்டைகளுக்கான கையுறை வாங்குவதற்கும் காசை சேர்த்து வைத்தான்.

ஜாக் ஜான்சன் தொழில் முறை குத்துச்சண்டை வீரராக நவம்பர், 1, 1898,  கால்வெஸ்டனில் அறிமுகமானார். சார்லி குரூப்ஸ் என்ற கருப்பரை இரண்டாவது சுற்றிலேயே வீழ்த்தி தி டெக்சாஸ் ஸ்டேட் மிடில் வெயிட் சாம்பியன் பட்டம் பெற்றார். மே 8, 1899 சிகாகோவில் கிலோன்டிங் என்ற கருப்பின வீரருடன் மோதி வெற்றி பெற்றார். கருப்பு ஹெர்குலஸ் என்று இவருடன் மோதிய கிலோண்டிங்கை அழைப்பார்கள். அவருடன் மோதி வெற்றி பெற்றதால் ஜாக் ஜான்சனின் பெயர் சொந்த ஊரில் பிரபலமானது. பிப்ரவரி 25, 1901 ஜாக் ஜான்சன் தனது சொந்த ஊரில் அனுபவம் வாய்ந்த குத்துச்சண்டை வீரர் ஜோ சோயின்ஸ்கியுடன் (Joe Choynski)  மோதி தோல்வி அடைந்தார். அந்த நேரத்தில் டெக்சாஸ் மாநிலத்தில் பரிசுப் போட்டிக்கான குத்துச்சண்டை தடை செய்யப்பட்டு இருந்ததால் இருவரும் கைது செய்யப்பட்டு 23 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது ஜாக் ஜான்சன் ஜோ சோயின்ஸ்கியிடம் குத்துச்சண்டைக்கான நுணுக்கங் களை கற்றுக் கொண்டார். பயிற்சியும் பெற்றார் இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

ஜாக் ஜான்சன் உரிய பயிற்சிக்குப் பிறகு அக்டோபர்21,1902ல் முன்னாள் கருப்பின சாம்பியன் பிராங்க் சைல்டை (Frank Childs) தோற்கடித்தார். இதுவரைதான் வெற்றிபெறாத உலக கருப்பர் ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு பிப்ரவரி 3 1903, டென்வர் ஹெட் மார்ட்டினுடன்  (Denver Ed Martin.) 20 சுற்று  போட்டியில் பங்கேற்றார். 12வது சுற்றில் அவரை வீழ்த்தி உலக கருப்பின ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றார். ஜாக் ஜான்சனுக்கு அதில் பெரும் மகிழ்ச்சி இல்லை. காரணம் வெள்ளை நிறவெறிக்கு எதிராக வெள்ளையர்களை வீழ்த்த வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருந்ததால் இந்த பட்டத்தால் அவர் மகிழ்ச்சி யடையவில்லை. அதேநேரத்தில் வெள்ளையருடன் மோதுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த பட்டத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.

1903 முதல் 8 ஆண்டுகள் வரை கருப்பினச் சாம்பியன் பட்டத்தை ஜாக் ஜான்சன் வைத்திருந்தார். கருப்பர்களுக்கான சாம்பியன்ஷிப்பின் 60 ஆண்டுகள் வரலாற்றில் சாம்பியன் பட்டத்தை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொண்டதில் மூன்றாவது இடத்தை ஜாக் ஜான்சன் பிடித்தார். இவருக்கு முன்னால்  ஹாரி வீல்ஸ் (Harry Wills)3351 நாட்களும், பீட்டர் ஜாக்சன் 3041 நாட்களும், ஜாக் ஜான்சன் 2151 நாட்களும் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டனர்.

 

2 thoughts on “தொடர்:3 நிறவெறிகோடு  உலக குத்துச்சண்டை பட்டயம் – அ.பாக்கியம்”
  1. BLACK RECONSTRUCTION
    IN AMERICA An Essay Toward a History of the Part Which Black Folk Played in the Attempt to Reconstruct

    Du Bois, W. E. B.. Black Reconstruction in America (The Oxford W. E. B. Du Bois) . Oxford University Press. Kindle Edition.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *