தொலைபேசி நாட்கள் எஸ்ஸார்சி Tholaipesi Natgal Book Review By Essarci

 

 

 

சென்னைத்தொலைபேசியில் 35 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி ஓய்வுபெற்றவர் எழுத்தாளர் விட்டல் ராவ். தற்சமயம் பெங்களூரில் வசித்து வருகிறார். தன்னுடைய பணிக்கால அனுபவங்களை சுவாரசியமானதொரு கட்டுரை நூலாக்கியிருக்கிறார். அம்ருதா இலக்கிய இதழில் தொடர்ந்து விட்டல் ராவால் எழுதப்பட்ட 25 வார பங்களிப்பை அம்ருதா பதிப்பகம் ’தொலை பேசி நாட்கள்‘ என்னும் ஒரு புத்தகமாய் வெளியிட்டு பெருமைப்படுத்தியிருக்கிறது. விட்டல் ராவ் கலை இலக்கியம் பற்றி ஆழமான புரிதல் உள்ள எழுத்துப் படைப்பாளி. பேசும் புதிய சக்தி இதழிலும் ஒவியம் சிற்பம் கட்டிடக்கலைப் பற்றி விரிவான கட்டுரைத்தொடர் ஒன்றை எழுதி வருகிறார்.

மேலட்டையில் பிரமாதமாக விட்டல் ராவின் வண்ணப்புகைப்படத்தோடு இப்புத்தகத்தை அம்ருதா பதிப்பகத்தார் கொண்டு வந்துள்ளார்கள். சந்தியா நடராஜன் நல்லதொரு அணிந்துரை வழங்கியிருக்கிறார்கள். எழுத்தாளர் பாவண்ணன்’ இவர்தான் விட்டல் ராவ், நம்மாளு’ என்று சொல்லி சந்தியாநடராஜனுக்கு அறிமுகப்படுத்தியதையும் குறிப்பிடுகிறார்.

‘எல்லோருக்கும் ஆசைப்பட்ட வேலையோ தொழிலோ அமைவதில்லை. கிடைத்தவேலையில் ஜீவித்துக்கொண்டு ஆன்மப்பசிக்குத் தீனி போடுகிறவர்கள் மிகச்சிலரே. அந்த மிகச்சிலரில் விட்டல் ராவ் மேல்நிலைத் தகுதிக்குரியவர் என்பதில் எனக்கேதும் ஐயுறவு இல்லை.’ இப்படி ஆவணப்படுத்துகிறார் சந்தியா நடராஜன். தொலைபேசி வரலாற்றைப் பேசிக்கொண்டே நேற்றைய சென்னையையும் அறிமுகப்படுத்திச் செல்கிறார் விட்டல் ராவ் என்று சரியாகவே பதிவு செய்கிறார் சந்தியா நடராஜன்.

தன்னுடைய உரையை ’ஓர் உரை’ என்று புதிய தலைப்பிட்டு எழுதும் விட்டல் ராவ்‘ நீண்ட கால அன்புறவும் பரஸ்பர அக்கறையும் கொண்ட எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான என் அருமைச்சகோதரி திருமதி திலகவதி அவர்கள் விரும்பிக்கேட்டுக் கொண்டதற்கிணங்கி ’தொலைபேசி நாட்களை’ அம்ருதா இதழில் 25 மாதங்கள் தொடராக எழுதி முடித்து வெளியிடச்செய்தேன்’ என்று செய்தி சொல்கிறார். இக்கட்டுரைகளில் இன்பம், துன்பம், மகிழ்ச்சி, நகைச்சுவை, எரிச்சல், எதிர்ப்பு, உவகை சாகசம், வரலாறு என்று பல்வேறு சங்கதிகள் அடங்கியுள்ளன என்று விளக்கம் தருகிறார்.

பாஸ்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் அலெக்சாண்டர் கிரஹாம்பெல் 1876 ல் டெலிபொனைக் கண்டுபிடித்தார். அது ஐந்தாண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. லண்டனைத் தலைமை இடமாகக்கொண்ட ஓரியண்டல் டெலிபோன் அண்ட் எலெக்ட்ரிக் கம்பெனி என்ற ஒரு தனியார் நிறுவனத்தின் ஏஜண்டுகளான அர்புத்னாட் அண்டு கம்பெனியின் மேற்பார்வையில் சென்னையில் தொலைபேசி சேவை தொடங்கப்பட்டது என்று ஆரம்பிக்கிறார் விட்டல் ராவ்.

தொலைபேசி நாட்கள் என்னும் முதற்கட்டுரையில் நடிகர் மேஜர் சுந்தரராஜன் பற்றி விட்டல் ராவ் குறிப்பிடுகிறார். இவர் இந்தத்துறையில் டெலிபோன் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர். திரையுலகில் பிரகாசித்த நடிகர். மேஜர் சந்திரகாந்த் என்னும் திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்றார். அதிலிருந்து மேஜர் சுந்தரராஜன் ஆனார் என்கிற அரிய விஷயம் சொல்கிறார் விட்டல் ராவ்.

தொலைபேசித்துறையில் பணியாற்றி இலக்கியத்துறையில் பிரகாசித்த பாவண்ணன் என்கிற பாஸ்கரன், சுப்ரபாரதிமணியன், எஸ்.சங்கரநாராயனன், விட்டல்ராவ் எனும் விட்டல், ரா சேஷாத்ரி, ஜெயமோகன், லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) இலந்தை.சு.ராமசாமி என்று தன் நினைவுக்குத்தெரிந்த பிரபலங்களை அடுக்கிச்செல்கிறார்.

பொதுமக்கள் பேசுவதற்கான செந்நிறக்கூண்டுகள்- பப்ளிக் கால் ஆபிஸ் – நகரில் ஆங்காங்கே நிறுவப்பட்டிருக்கும்.அதனுள்ளாய் சில விஷமிகள் நுழைந்து தொலைபேசி சேவையில் கிடைக்கும் இலவச எண்களோடு பேசுவார்கள். அடுத்தமுனையில் பெண் ஊழியர்கள் இருப்பார்கள். அவர்களோடு தேவையில்லாமல் பேசுவது விஷமிகளின் வாடிக்கையாகியிருந்தது. அவர்களை எப்படி ஸ்விட்ச் ரூம் மெக்கானிக்குகள் கண்டுபிடித்து காவல்துறைக்கு தெரிவித்து தண்டனைக்குள்ளாக்கினார்கள் என்பதனையும் விட்டல் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராகப் பொறுப்பு ஏற்றபோது அவருக்குச் சில மிரட்டல் கால்கள், அசிங்கமாகப் பேசும் கால்கள் வந்ததாகவும் அதன் மீது காவல்துறை உதவியோடு நடவடிக்கை எடுக்கப்பட்டதனையும் வாசகர்க்குச்சொல்கிறார் நூல் ஆசிரியர்.

விட்டல்ராவ் நல்ல ஓவியர். தொலைபேசி இலாகா சார்பாக அகில இந்திய ஓவியப் போட்டி ஹைதராபாத்தில் 1966 ல் நடைபெற்றதாகவும் அதனில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு பெற்றதையும் நமக்குச்சொல்கிறார். பின்னர் எழும்பூர் தினத்தந்தி அலுவலக மைதானத்தில் விட்டல் ராவ் நடத்திய ஒவியக்கண்காட்சியைப்பற்றி அழகாகக் குறிப்பிடுகிறார். காட்சிக்கு வைத்த படங்கள் 22. அதனில் சில படங்கள் ஆண் பெண் நிர்வாண நவீன ஓவியங்கள். தொலைபேசி ஊழியர்களில் பெரும்பான்மை ஆண் பெண்களுக்கு பெரிய விஷயமாக, ஆர்வமூட்டுவதாக, அருவருப்பூட்டுவதாக, கிளர்ச்சிகரமாக, அசிங்கமானதாக, கிளிகிளுப்பூட்டுவதாக, இந்த நவீன ஓவியங்களே இருந்தன என்பதை யதார்த்தமாகக் குறிப்பிடுகிறார் விட்டல் ராவ்.

சென்னைத்தொலைபேசியில் பணியாற்றிய ரா. சேஷாத்ரி ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர். ஆனந்த விகடனிலும், தினமணி கதிரிலும் முத்திரைக் கதைகளையும் நட்சத்திரக்கதைகளையும் எழுதியிருப்பவர். இவர் இதே இலாகாவில் டைரக்டர் ஆஃப் விஜிலன்ஸ் உயர்பதவி வகித்தவர் என்பதை மறக்காமல் குறிப்பிடுகிறார். தொலைபேசி இலாகாவில் சென்னை மக்கள் தொடர்பு அதிகாரியாய் பணியில் இருந்த இலந்தை சு .இராமசாமி, அமுத சுரபி கலைமகள், கல்கி, ஆகிய இதழ்களில் எழுதிப்புகழ்பெற்றவர் என்பதையும் சொல்லிச்செல்கிறார் விட்டல் ராவ். சென்னை தொலைபேசி இல்ல இதழ் டெலி நியூஸ் என்பது அதனில் வெளியிடுவதற்காக தன்னை இலந்தை சு. இராமசாமி பேட்டி கண்டதையும் அப்போது எழுத்தாளர் சா.கந்தசாமி உடன் இருந்ததையும் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார். தொலைபேசித்துறையில் எலக்ட்ரானிக் எக்ஸ்சேஞ்களை அறிமுகப்படுத்திய தொழில்நுட்ப வல்லுநர் சாம்பிட்ரோடா பற்றி நிறைய செய்திகளை வாசகர்க்குச்சொல்கிறார்.

இந்தத் துறையில் டெலிபோன் டயல் என்பது எப்படி வந்தது என்கிற சுவாரசியமான கதையை வாசகர்க்குச்சொல்கிறார் விட்டல் ராவ். அமெரிக்காவில் கான்சாஸ் நகரில் ஸ்டோவ்ஜர் என்பவர் சவப்பெட்டிகளை தனக்கு வரும் ஆர்டர்களுக்கு சப்ளை செய்பவர். நம்பர் ப்ளீஸ் எக்சேஞ்கள் இயக்கத்தில் இருந்த போது அங்கு பணியாற்றிய பெண்கள் அடிக்கடி ’எங்கேஜ்டு எங்கேஜ்டு’ என்று சொல்லி ஸ்டோவ்ஜரை நோக அடித்து இருக்கிறார்கள். ஆக இதிலிருந்து விடுபட 1891 ல் அவரே கண்டுபிடித்ததுதான் டயல். டயல் வந்த பிறகு வேண்டும் தொலைபேசி எண்ணை அந்த அந்த வாடிக்கையாளரே சுழற்றிக்கொள்ள முடியும். ஆப்ரேடர்களின் உதவி இல்லாமலே வாடிக்கையாளர் பேசி முடித்துவிடுவார். இதனைக்கண்டுபிடித்த ஸ்டோவ்ஜர் பெயராலேயே அந்த எக்ஸ்சேஞ்சும் அழைக்கப்பட்டது.

சென்னை ஆலந்தூர் கடைத்தெருவில் மளிகைக்கடை வைத்திருந்த சங்கரலிங்க நாடார்’ ஐயா நம்ம டயல சுத்தினா, அது அப்படியே நிக்கி’ என்று சொன்னதைத் தத்ரூபமாகக் குறிப்பிடுகிறார் விட்டல் ராவ்.

இலவச சேவைகளுக்கு வாடிக்கையாளர்களே மனமுவந்து ஊழியர்களுக்கு கொடுத்த இனாம்’ பக்‌ஷீஸ்’ பின்னாளில் எப்படி கையூட்டாக உருப்பெற்றது என்கிற கதையையும் வாசகர்க்குச்சொல்கிறார் நூல் ஆசிரியர். ஊழியர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமைஆகி அவஸ்தை பட்ட துன்ப வரலாறும் ஊடாகவே வந்துவிடுகிறது.

டெலிபோன் டைரக்டரிகள் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு விநியோகிப்பதற்காக ஊழியர்கள் நியமிக்கப்படுவதை தமாஷாகச்சொல்கிறார் விட்டல் ராவ். அந்த ஊழியருக்கு ஆங்கிலம் தெரியவேண்டும், அவர் டை கட்டிக்கொள்ளவேண்டும். சென்னைத்தொலைபேசி டைரக்டரிகள் 1941ல் தி அசோசியேட் பிரிண்டர்ஸ் என்னும் அச்சகத்தில் அச்சிடப்பட்டன. அச்சுப்பிழையின்மை, எழுத்துக்களின் கூர்மை, சிறந்த வடிவமைப்பு எல்லாம் ஒருங்கே கொண்ட அச்சகமாக அது அந்நாளில் கொண்டாடப்பட்டது. பிறகு ‘குமுதம்’ அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அன்று குமுதத்திற்குரிய குனேகா செண்ட் வாசனையோடு அந்த டைரக்டரிகள் விநியோகிக்கப்பட்டன.பிறகு டைரக்டரி தயாரிக்கும்பணி ‘யெல்லோ பேஜ்’ நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. பிறகு ஒரு காலத்தில் டைரக்டரி வழங்குவதே நின்றுபோனது என்பதைக்குறிப்பிடுகிறார் விட்டல் ராவ்.

மவுண்ட் ரோடில் அண்ணா சிலை இருக்குமிடத்திற்கு அருகில் இருக்கும் வி ஜி பி காட்சிக்கூடம் பற்றிச் சொல்கிறார். அங்கு நாற்காலி மேஜை வாங்கப்போகிறார் கதை சொல்லி. அந்தக்கடையில் ஒரு விளம்பரம் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.’ தவணை முறையில் நாங்கள்தான் இந்தியாவிலேயே முதன் முதலாக டிரான்சிஸ்டர் ரேடியோவை நரிக்கிறவர்களுக்கு அளித்தோம்’. இன்று டிரான்சிஸ்டர் என்றால் வாழும் தலைமுறைக்கு அது என்னவென்றே தெரியாத சூழ்நிலையை அல்லவா காண்கிறோம். அறிவியலின் கொடையால் உலகம் எங்கு எங்கோ சென்று கொண்டிருக்கிறது.

கதை சொல்லி டெரிடோரியல் ஆர்மியில் பயிற்சிக்கு என கல்கத்தா பயணமாகிறார். அங்கு விக்டோரியா மெமோரியல் மியூசியம் சென்று பார்க்கிறார். அங்குதான் விட்டல் ராவ், பெயிண்டர்கள் டானியல்களின் ஓவிய பிரிண்ட்கள் அடங்கிய காலரியைக் காண்கிறார். தமிழகக்கோட்டைகள், கோயில்கள், மாளிகைகள், மகாபலிபுரக்காட்சிகள் என்று 1780ல் செய்திருக்கும் வண்ண பதிப்போவியங்களை நோக்குகிறார். பின்னாளில் விட்டல் ராவ் தமிழகக்கோட்டைகள் என்னும் நூல் எழுத இவ்விஷயமே காரணமாக அமைந்தது என்பதையும் வாசகனுக்குச் சொல்கிறார்.

தொழிற்சங்கம் என்னும் தலைப்பிட்ட கட்டுரை சிறப்பாக அமைந்துள்ளது. விட்டல் ராவ் தான் பணி ஓய்வு பெறும்வரை மே தின விழாவில் கலந்துகொண்டதை பெருமையோடு குறிப்பிடுகிறார். மே தின வரலாற்றையும் வாசகர்க்குச்சொல்கிறார். 1886 மே முதல்நாள் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் என்னும் இடத்தில் தொழிலாளர்கள் ’எட்டு மணி நேரம் மட்டுமே உழைப்பு’ என்று கோஷமிட்டு ஊர்வலம் செல்கின்றனர். கூட்டத்தைக் கலைக்க அங்கு துப்பாக்கிச்சூடு நடைபெறுகிறது. பல தொழிலாளர்கள் காயமுறுகிறார்கள். போராட்டத்திற்குத் தலைமையேற்ற ஜார்ஜ் எங்கெல்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ்,ஆல்பர்ட் பார்சன்ஸ்,சாமுவேல் பில்டன், அடால்ஃப் ஃபிஷெர்ஸ் என்று ஐவர் தூக்கிலடப்பட்டு கொல்லப்பட்டனர்.அவர்களின் நினைவாகவே உலகெங்கும் மே தினம் கொண்டாடப்படுகிறது என்கிற மேதினச் செய்தியைச்சொல்கிறார் விட்டல்.

தொலைபேசித்துறையின் பலம் பொருந்திய தொழிற்சங்கமாக NFPTE இருந்தது. அதிலிருந்து 1970ல் FNPTO என்னும் ஒரு புதிய சங்கம் உருவானது. ஓம் பிரகாஷ் குப்தா என்னும் தலைவர் நீண்டகாலம் NFPTE அமைப்பில் பொறுப்பில் இருந்ததைச் சொல்கிறார் விட்டல் ராவ். தமிழகத்தில் தொலைபேசித் தொழிற்சங்க இயக்கத்தில் மறக்கமுடியாத தலைவர்கள் என்று, தோழர் ஞானையா, பிரேமநாதன், முத்தியாலு, சந்திரசேகரன், ஏ. கே வீரராகவன், சீனுவாச ராவ், பாண்டுரெங்கன், ஏ. டி ருக்மணி, அப்துல் மஜித், ஜே.ரங்கநாதன் மற்றும் ஜெகன் ஆகியோரைக்குறிப்பிடுகிறார்.இடது வலது இரு அணிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் என்று ஜெகனை நேர்மையோடு குறிப்பிடுகிறார் விட்டல் ராவ்.

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் போது அதனை எதிர்த்துச் சில தொழிலாளர்கள் வேலைக்கு வருவதும் உண்டு. அந்த கருங்காலி ஊழியர்களுக்கு நிர்வாகம் சிற்றுண்டி காபி மதிய உணவு ஏற்பாடு செய்து வழங்கிய சிறுமையைக் குறிப்பிடுகிறார். இணைப்பக உயர் அதிகாரியே தன் கையால் ரொட்டியில் வெண்ணெய் தடவி அவர்களுக்குத் தந்த அனாசார செயலையும் விடாமல் எழுதியிருக்கிறார். பொதுத்தொலைபேசி கூண்டுக்குள் சென்று பணியில் இருக்கும் கருப்பு ஆடுகளை வண்டை வண்டையாகத்திட்டிய தீவிர தொழிற்சங்கப் பற்றாளர்களையும் நமக்குக் காட்டிச்செல்கிறார் விட்டல் ராவ்.

1943 டிசம்பர் 12 அன்று இரவு ஜப்பானிய குண்டு வீச்சு சென்னையில் நிகழ்ந்ததைச் சித்திரமாய்த் தீட்டித்தருகிறார் விட்டல் ராவ். வீசப்பட்டு சேதம் ஏற்படுத்திய ஜப்பானிய குண்டின் சிதறிய பாகம் ஒன்று இன்றளவும் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலுள்ள, கோட்டை மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது என்கிற வரலாற்றுச்செய்தியையும் வாசகன் அறிந்து கொள்கிறான்.

செயிண்ட் தாமஸ் மவுண்ட் தொலைபேசி அகத்தில் இருந்த ஆலமரங்கள் செங்கல் முட்டுக்கள் அங்கு பிடிக்கப்பட்ட பாம்புகள் எல்லாம் பற்றிச் சுவாரசியமாக வாசகர்க்குச்சொல்கிறார் நூல் ஆசிரியர். ருமால் பாவாடை ஆன கதை என்னும் கட்டுரையில் சில சுவாரசியமான செய்திகளை நமக்குச்சொல்கிறார். ருமால் என்பது தலைப்பாகை. அதற்கு ஒண்ணரையடி நீளத்துக்கு வால் தொங்கும். இலாகா லைன் இன்ஸ்பெக்டர்கள் தலைக்கு ருமால் சுத்திக் கட்டிக்கொள்ளவேண்டும். ருமால் தனித்தனியே இரண்டு நிறங்களினாலான கதர்த்துணியால் ஆனதாய் இருக்கும். ஒன்று காக்கி மற்றொன்று இரத்தச்சிவப்பு, ஒரு ஊழியருக்கு இரண்டு ருமால்கள் வழங்கப்படும். பொன்னுசாமி என்னும் ஊழியர் ருமால் தைப்பதற்கு ஒத்துக்கொண்டு அதனில் மீதமாகிய துணியை தொடர்பகத்திலுள்ள பதினைந்து பெண் ஊழியர்களுக்கு உள் பாவாடை தைக்க ஏற்பாடாகிய சுவாரசியமான செய்தி சொல்லப்படுகிறது. அந்த உள் பாவாடைகள் தலையணை உறைகளாக மட்டுமே தைக்கப்பட்ட சோகத்தையும் வாசகன் அறிந்து கொள்கிறான்.

சடகோபன் என்னும் நேர்மையான ஊழியரை, லஞ்சம் கொடுத்தால் மறுக்கும் நேர்மையான தொழிலாளியையும் அடையாளம் காட்டுகிறார் விட்டல் ராவ். அவருக்கு ‘சஞ்சார் ஸ்ரீ’ எனும் உயரிய விருது அளிக்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறாது என்பதனையும் இங்கே நாம் தெரிந்துகொள்கிறோம்.

எம் ஜி ஆர் அமெரிக்காவில் சிகிச்சை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார். மொஹித்தே மைதானம் வண்ண விளக்குகளால் மின்னுகிறது. மக்கள் கடல் போல் கூடி அவரை வரவேற்கிறார்கள். விட்டல் ராவின் கவலை எல்லாம் அவர் வருகைக்காக கொடுத்த அவசர தொலைபேசி இணைப்புகள் சரியாக இயங்கி நம் பேர் சொல்லவேண்டுமே என்றுதான். மெய்யான தொழிலாளிக்கு உணர்வு அப்படித்தானே இருக்க முடியும்.

பேஜர் என்னும் செய்தி அனுப்பும் கருவியினையும் தொட்டுச்செல்கிறார் விட்டல் ராவ். அதன் வழி ஒருவர் பேச முடியாது. ஆனால் ஒரு பேஜரிலிருந்து அடுத்த பேஜருக்கு செய்தி மட்டுமே அனுப்பலாம்.

தந்தி என்னும் வசதி உலக அரங்கில் மூடுவிழா கண்டதைப் பதிவு செய்கிறார். 1970 ல் தினமணி கதிர் நடத்திய சிறுகதைப்போட்டியில் விட்டல் ராவ் முதற்பரிசு பெற்ற செய்தியை தந்தி மூலமே சாவி அவர்கள் அவருக்கு அனுப்பி வைத்ததையும் வாசகர்க்குச்சொல்கிறார்.

பின்னர் பாரத் சன்சார் நிகம் லிமிடெட் என்கிற கார்ப்பரேட், BSNL உதயமாகிறது.

ஓய்வூதியம் என்னவாகுமோ என்று கவலைப்பட்ட இலாகா ஊழியர்களுக்கு மய்ய அரசின் தொலைத் தொடர்புத்துறை மூலம் அது அவர்களுக்கு பிரச்சனையே இல்லாமல் வழங்கப்படும் என்கிற நற்செய்தி, தொழிற்சங்கப்போராட்டத்திற்குப் பிறகே சாத்தியமானது என்பதனையும் வாசகர்க்குச்சொல்கிறார் விட்டல்ராவ்.

இறுதியாய் ஒரு சாம்ராஜ்யம் வீழ்ந்து போனது என்கிறார் விட்டல் ராவ். கனக்கும் இதயத்தோடு மட்டுமே இதனை எழுதுவதாய்க் குறிப்பிடுகிறார். இப்படைப்பில் இத்தனைச்செய்திகளையும் படித்து விட்ட வாசகன் நூலாசிரியரின் கழுகுக்கண்களுக்கு எதுவும் தப்பவில்லை என்பதையும் வழி மொழிகிறான்.

நூல்: தொலைபேசி நாட்கள்
ஆசிரியர்: விட்டல் ராவ்
வெளியீடு: அம்ருதா பதிப்பகம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *