நூல் அறிமுகம்: *தோழர் சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு* – கா.சீனிவாசன் (இந்திய மாணவர் சங்கம்)புத்தகம்: தோழர் சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு
ஆசிரியர்: ஆர். நல்லகண்ணு
பதிப்பகம்: NCBH

தோழர் சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை படித்தேன். அதில் தோழரின் அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கையை அறிந்தேன். சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து இந்திய நாட்டின் விடுதலைக்காக நாடோடி வாழ்க்கைக்கு மாறியது, பின் ஒரு சோசலிச வாழ்க்கைக்கு மாறியது போன்ற பல நிகழ்வுகளை படித்து தெரிந்து கொண்டேன். சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறு வயதிலேயே தேசப்பற்று கொண்டு விடுதலை எனும் சுவாசக் காற்றை சுவாசிக்க விரும்பி கல்வியை துறந்து வீட்டை விட்டு வெளியேறி நாடோடியாக பல இடங்கள் சென்று பிறகு சிங்கப்பூர் சென்று ஒரு கடை அமைத்து ஆடம்பர வாழ்க்கை வாழத் துவங்கினார். பிறகு சில ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்பி வந்து மீண்டும் விடுதலைக்காகப் போராடி தொடங்கினார். அப்போது அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்.

இறக்கும் நிலையிலிருந்த சீனிவாசராவை ஒரு பெண்மணி காப்பாற்றுகிறார். உடல் நலம் தேறிய சீனிவாசராவ் மீண்டும் விடாப்பிடியாக போராட்டங்களில் பங்கேற்றது என்னை ஈர்த்தது. இப்படியே பல தடவை போராடி சிறைக்கு சென்ற தோழர் சீனிவாசராவ் சிறையில் கம்யூனிஸ்டு தோழர்களை சந்தித்து கம்யூனிசத்தை தெரிந்து கொண்டு பிறகு கம்யூனிஸ்டாக பயணிக்க ஆரம்பித்தார். மக்களை ஈர்க்கும் பல திறமைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். தோழர் சீனிவாசராவ் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த அன்றைய தஞ்சையில் உள்ள பல ஜில்லாக்களில் விவசாய சங்கத்தை கட்டி எழுப்பினார். மேலும் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தியது என பல செய்திகளை அப்புத்தகத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். அவர் காதல் திருமணம் செய்து கொண்டது மற்றும் உழைக்கும் மக்களின் மீது அவருக்கு இருந்த காதல் எனக்கு பிடித்திருந்தது. மொழி ஓரளவு தெரிந்து இருப்பினும் மக்களிடம் சென்று நாம் சுரண்டப்படுகிறோம் என வெறியுடனும், வலியுடனும் கூறும் அந்த தருணம், அந்த வர்க்க உணர்வு பிடித்திருந்தது.

கட்சி கொடுத்த முழு நேர ஊழியர்களுக்கான அலவன்ஸ் தொகையில் மட்டுமே இறுதிவரை எளிமையாகவே வாழ்ந்தார். ஏதோ ஒரு இடத்தில் பிறந்து ஏதோ இடத்தில் வளர்ந்து இங்கு புரட்சியை உண்டாக்கிய தோழர் சீனிவாசராவ் வாழ்க்கை எனக்கு ஒரு தூண்டுதலாக அமைந்தது. அவரின் தியாகம் என் மூலமும் இன்னும் பல தோழர்கள் மூலமும் கொண்டு செல்லப்படும்.

கா.சீனிவாசன் (இந்திய மாணவர் சங்கம்) , 11ஆம் வகுப்பு