tholeeshwarar book reviewed by karuppu anbarasan நூல் அறிமுகம்: தோலீஸ்வரர் - கருப்பு அன்பரசன் 
tholeeshwarar book reviewed by karuppu anbarasan நூல் அறிமுகம்: தோலீஸ்வரர் - கருப்பு அன்பரசன் 

நூல் அறிமுகம்: தோலீஸ்வரர் – கருப்பு அன்பரசன் 

#தோலீஸ்வரர்
குறு நாவல்
46 பக்கங்கள்தான்.
(பண்பாட்டு ஆதிக்கத்தின் நிஜங்களை கொண்டு வருகிறது)
#அறிவொளி_மு_முருகேசன்.
#கருப்பு பிரதிகள் வெளியீடு.
விலை ரூபாய் 60/-
ஆதிக்க அதிகார சக்திகளின் பண்பாட்டு அடையாளத் திணிப்பு.. பரவலாக்கள்.
ஒரு கிராமத்தில் உழைத்து வாழும் அய்யனாரின் பெரும் குடும்பத்திற்கு சொந்தமான நடுகல் தெய்வமான குலசாமி, அதிகார ஆதிக்க சாதியின் கைகளுக்குள் வருவாய் பெருக்கும் கடவுளாகி, மக்களின் இறை நம்பிக்கை வியாபாரமாக மாற்றப்படுகிறது வருடத்திற்கு ஒரு முறை அக்கிராமத்தில்.
புயல் அடித்த மாதத்தில் பிறந்ததால் தாய் தந்தை புயல் மாரி என அழைக்க, அந்தப் பெயரும் ஊர் மக்களால் பொசமாரியாகி, பிறகு வாழும் பொருட்டு ஆட்டு தோல் மாட்டு தோல் வியாபாரம் செய்ய.. கயிற்றுக் கட்டிலில் தற்போது மூச்சு இல்லாமல் படுத்து கிடக்கும் நூற்று பதினேழு வயது மாமனிதர் தான் “தோல்” கிழவன்.
எட்டு ஆண் பிள்ளைகள், நான்கு பெண் பிள்ளைகள் என 12 குழந்தைகளை பெற்றெடுத்து எல்லோருக்கும் திருமணம் செய்து கொடுத்து மருமகள்கள் மருமகன்கள் பேரகுழந்தைகள் என ஊரிலேயே ஆகப் பெரிய குடும்பம்தான்
தோல் கிழவனின் குடும்பம்.
தோல் கிழவனின் எதிர்பாராத மரணம் அந்த பெரும் குடும்பத்தின் அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.. சொந்த நிலத்திலேயே தோல் கிழவனின் உடல் புதைக்கப்படுகிறது. புதைக்கப்பட்ட இடத்தில் தோல் கிழவனின் நினைவு செங்கல்லும் நடப்படுகிறது. நினைவு சமாதியாக மாற்றப்படுகிறது.
30 ஆம் நாள் அவரின் சொந்த பந்தங்களால் அந்தக் கிராமத்தில் சடங்கிற்கு பெரும் கூட்டமே கூடிவிடுகிறது. சமாதி முன்பு வைக்கப்பட்ட படையல் இருபதடிக்கும் தாண்டி நிற்பதை ஊரே அதிசயமாக பார்த்தது.
முதலாம் ஆண்டு நினைவு நாளிலும் மீண்டும் இப்படியான பெருங்கூட்டம் கூட..
சடங்குகள் தொடர.. பெரும் கத்தி கொண்டு தோல் கிழவனின் மூத்த மகன் அய்யனார் ஆட்டு தலையை அருத்தெறிய.. உடுக்கை பம்பை என அதிர.. அய்யனார் நரம்புகள் முறுக்கேறி ஆடத் துவங்க.. அய்யனார் உடலுக்குள் தனது தந்தை தோல் கிழவன் புகுந்து இருப்பதாக எண்ணி குழந்தை பேரு இல்லாத அய்யனாரின் தங்கை அவர் காலில் விழுந்து வணங்க.. வேண்ட.. “அடுத்த வருடத்திற்கு நீ இந்த இடத்திற்கு வரும்பொழுது குழந்தையோடு வருவாய்” என்று வாக்கு சொல்ல.. முதலாம் ஆண்டு நினைவு முடிகிறது.
அடுத்த ஆண்டில் எல்லோரும் கூட அய்யனாரின் தங்கை ஒரு குழந்தையோடு வருகிறாள். அய்யனாருக்குள் புகுந்த தோல் கிழவனின் வாக்கு பலித்ததால் தோல் கிழவன் எல்லோருக்கும் சாமியாகிறான். அய்யனார் குடும்பத்தின் குலசாமியாகிறான்.
அய்யனார் வாக்கின் மீது நம்பிக்கை கொண்ட அக்கம் பக்கத்து கிராம மக்களும் தோல் கிழவனின் ஒவ்வொரு ஆண்டு நினைவு நாளுக்கும் அவரவர் வேண்டுதலோடும் ஆடுகளோடும் கோழிகளோடும் படையல்களோடும் வந்து சேர்கிறார்கள். இப்படியாக ஒவ்வொரு வருடமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
பின்னர், தொடர்ந்து ஊரின் ஒவ்வொரு வீட்டிலும் பல பொருட்கள் திருடு போக எவரென்றே அறியாமல் இருக்கிறார்கள். ஆனால் அந்த ஒற்றை நபர் ஊருக்குள் வந்து சேர்ந்ததும் திருடு என்பது இல்லாமல் போகிறது. திருடனே அவன் தான் என்று அறியாத மக்கள் அந்த திருடனையே அம்பலத்துக்காரராக மாற்றுகிறார்கள்.
அம்பலத்து காரரின் அதிகாரத்தாலும் காவல்துறையின் துணையாலும் அய்யனாரின் குடும்பம் பிளக்கப்பட்டு குடும்ப விழாவாக இருந்த தோல் கிழவனின் நினைவு நாள் ஊர் விழாவாக மாற்றப்படுகிறது.  ஒரு நாள் நினைவு நாள் நிகழ்வு
ஒருவார நிகழ்வாக, விழாவாக ஊரால் நடத்தப்பட திட்டமிடப்படுகிறது.  குடும்ப நினைவு நாள் நிகழ்வு அய்யனார் குடும்பத்தை விட்டு ஊரின் விழாவாக தற்போது.
அவ்வாறு மாற்றப்பட்ட அய்யனார் குடும்பத்தின் குலசாமியை ஊர் மக்களின் கடவுள் ஆக்கி அவர்களின் நம்பிக்கையை பணம் ஆக்கிட.. லாபம் பார்த்திட அதிகாரத்தையும், ஆதிக்க சூத்திர சாதிகளின் கண்களில் மண்ணைத் தூவி வஞ்சகத்தையும் கிராமத்தில் இருக்கும் ஒற்றை பார்ப்பனன் பயன்படுத்துகிறான். குடும்பத்தின் குல சாமி  பார்ப்பனக் கும்பலின் தில்லாலங்கடி செயலால் ஒரு ராத்திரியில் பித்தளை அண்டாவுக்கு கரி பூசி பெருந்தெய்வமாக்கப்பட்டு, வணிக மயமாக்கப்படுவதை “தோலீஸ்வரர்” குறுநாவலில் அய்யனார் குடும்பத்தின் தோல் கிழவனின் நடுகல் குலசாமி “ஸ்ரீ மங்கலாம்பிகை உடனுறை ஸ்ரீ தோலிஸ்வர சுவாமி திருக்கோவில்” என உருப்பெறுவதை நாவலாசிரியர் அறிவொளி மு.முருகேசன் தமிழ் வாசக பெருமக்களுக்கு எடுத்துரைக்கிறார்.
ஒரே நாடு ஒரே மொழி ஒரே பண்பாடு ஒரே கலாச்சாரம் என்கிற ஒற்றை முழக்கத்தை முன் நிறுத்தி அதை அமலாக்கத் துடிக்கும் பாசிச சக்திகள் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் தோல் கிழவன் தோலீஸ்வரராக மாற்றப்பட்ட கதையை குறு நாவலாக கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
இந்தியாவில் இருக்கும் பல்வேறு இன குழுக்களுக்குள் இப்படியான முன்னோடிகள் சிறு தெய்வங்களாக குலசாமிகளாக நடுகல் தெய்வங்களாக இருந்து வந்திருக்கிறார்கள். இன்றைக்கு பெரும் தெய்வங்களாக கட்டப்பட்டு காட்சியளிக்கும், பல கிராமங்களில் இருக்கும் பெருங்கோயில்கள் அனைத்தின் நிஜ வரலாறையும் தேடிப் போவோம் என்றால் அவற்றில் உண்மையாக வாழ்ந்தவர்களின் வரலாறுகள் இருக்கலாம். அவர்களின் வரலாறு முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டு எப்படி சிவனாகவும் பெருமாளாகவும் இன்னும் பிற கடவுள்களாகவும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்; மாற்றப்பட்டு வருகிறார்கள்; என்பதை நமக்குள் அனுபவ அறிவு கொண்டு தேடச் சொல்லி இருக்கிறார் நாவலாசிரியர் முருகேசன்.
இறை நம்பிக்கையோடு கூடியிருக்கும் மக்களிடையே ஏமாற்றுபவர்கள் நினைத்தால் எதையும் செய்து முடிப்பார்கள் என்பதற்கு உதாரணமாக குலசாமி சுடுகாட்டிற்கு போகும் முன் மலமிறக்குதல் ஒரு வழக்கமாக்கப்படுகிறது.. அதுவே சடங்காக்கப்படுகிறது. நாவலுக்குள் கிண்டலாகச் சொல்லப்பட்டாலும் அப்படித்தான் பல ஏற்றுக்கொள்ள முடியாத மூடப்பழக்க வழக்கங்கள் பண்பாடுகள் என கட்டமைக்கப் படுகின்றன. ஏமாற்றும் அதிகார வர்க்கத்தால், அய்யனார் வீட்டில் குலசாமியாக இருந்த தோல் கிழவன் ஊர் கடவுளாக மாற்றப்பட்ட போது மலமிறக்குதல் என்பது வழிபாட்டில் எங்கிருந்து புகுந்து கொண்டது என்பதை நாவலை வாசிக்கும் பொழுது நீங்களும் சிரிப்பீர்கள்.
அதிகாரத்தில் இருப்பவர்களின் வழியாக மக்கள் மனங்களில் பண்பாடுகள் பழக்கவழக்கங்கள் ஆதிக்க சக்திகளால் அவர்களின் வசதிக்காக அவர்களின் மேம்பாட்டுக்காக அவர்களின் வியாபாரங்களுக்காக கட்டமைக்கப்படுகின்றன. அதுவே ஒழுக்கம் என்றும், வழக்கம் என்றும், சடங்கு என்றும், சாத்திரம் என்றும், சம்பிரதாயம் என்றும் பரப்பப்படுகிறது.. போதிக்கப்படுகிறது. கேள்வி எழுப்புபவர்கள் பண்பாட்டு விரோதிகள் என்றும் ஒழுக்கத்தை மீறுபவர்கள் என்றும் சித்தரிக்கப்பட்டு அவர்களை கொலையும் செய்வதற்கு தயங்குவது கிடையாது, அதிகாரத்தில் இருக்கும் ஆதிக்கச் சக்திகள்.
பண்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆதிக்க சக்திகளின்  குயுக்தியான திட்டமிடலை.. பண்பாட்டின் அடையாளங்களை வஞ்சகமாய் அழித்து தங்களுக்கான பண்பாடே எல்லாருக்குமானது என்கிற நிறுவுதலை இன்றளவும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் மோசடித்தனத்தை 46 பக்க நாவலில் எங்கும் விறுவிறுப்பு குறையாமல் நகர்த்திச் சென்று இருக்கிறார் நாவலாசிரியர் மு முருகேசன்.
சனாதனம் குறித்த விவாதங்கள் பெருகியிருகக்கூடிய இன்றையச் சூழலில், பரவலாக கொண்டு செல்லப்பட வேண்டிய நாவல்
“தோலீஸ்வரர்”.
ஆசிரியருக்கும்
புத்தக வெளியீட்டு நிறுவனத்திற்கும் அன்பும் வாழ்த்துகளும்.
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *