ஆயோம்,
தன் 10 வயது மகள் ஆமுவின்
உடலெங்கும் கத்தியால் கீறியதெதற்கு..?
வாசித்துப் பாருங்கள்..
உங்கள் மூச்சுகாற்றெங்கிலும் பச்சை ரத்த வாடையடிக்கும்.
வெள்ளயர்களின்
மார்பு பிளந்து கப்பலில் இருந்து ஆமூவை அழைத்து வந்ததோடு கருப்பர்களை விடுவிக்க
ஆயோமை அழைத்துபோன
மொமுதுவின் நயவஞ்சகம்தானென்ன..?
வேரோடு பிடிங்கி வெட்டி வீசப்பட்ட
எம் ஜூனாக்களின் கனவுகள் நீசத்தனமாக
களவாடப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட
ரத்தம் தோய்ந்த நிஜங்களை..
பிரான்ஸ் தேசத்தின் வீதிகள், சந்துகளனைத்திலும் பார்க்கலாம் என்றென்றும்.
மனைவியை.. பிள்ளைகளை..
வாழ்க்கையின் அழகையெல்லாம் இம்மி இம்மியாக ருசித்து வாழ்ந்த
என் சாய்பா ஒரே ராத்திரியில்
அழைத்துச் செல்லப்பட்டு
காவலர்களால் தின்று செரிக்கப்பட்ட
கதையும் காரணமும்
அவன் கொண்ட ஒரே ஒரு நம்பிக்கைதான்
என்பது எவருக்குத் தெரியும்..
வல்லூறு மனம் படைத்த முஸ்தபா போன்ற ஆண்களால்தான்
எத்தனை எத்தனை நும்பேக்களும்.. அய்த்தாக்களும் ஏமாற்றப்பட்டு
சித்திரவதை வாழ்வினை மேற்கொண்டு வருகிறார்கள் அந்த மூன்று நாட்களுக்காய்.
குறுமணற் சந்தில் இருக்கக் கூடிய
அத்தனை குடும்பங்களின்
சந்தோசம்.. அவர்களின் கொஞ்சல்..
ஒருவருக்கொருவர் கட்டித்தழுவிய கொண்டாட்ட களியாட்டப் பொழுதுகள்.
ராத்திரிச் சிரிப்பொலிகள்
எப்படி ஒரே ராத்திரிக்குள்
அழிந்தொழிந்தது..
குறுகிய சந்தின் வீடுகளனைத்தும்
சொந்தம் பேசி குதுகளித்த யோரோ என்னவானான்.. சன்னலோரத்து
கின்யே எப்படி காணாமல் போனாள்..
உலகின் சந்தோஷமிக்க குறுமணற்சந்து
துயர்மிக்க இடமானதின் வலி என்ன..?
இப்படியே எழுதிக்கொண்டும்..
அழுது கொண்டும்.. ஒருவர் கரத்தை ஒருவர் அழுத்தி பற்றிக் கொண்டும்
அசைப் போட்டுக் கொண்டே இருக்கலாம்..
செனகல் நாட்டைச் சேர்ந்த
திரைப்பட இயக்குநர், இலக்கியவாதி, தொழிற்சங்த் தலைவர் செம்பென் உஸ்மான் அவர்களின்
“தொல்குடித் தழும்புகள்”
சிறுகதைகளை வாசித்திடும்போது.
பிரான்சிடமிருந்து செனகல் விடுதலைப் பெறுவதற்கு முன்னர்
மூத்தவர்களின் வாழ்வுதனை.. வேதனைகளே.. உயிர் அழும் வலிகளை..
பிரான்ஸ் தேசத்தின் வளர்ச்சிகளனைத்தும் கருப்பின மக்களின் உழைப்பின் அடையாளங்களே எனபதினை ரத்தப்பிசுக்கேறிய வியர்வையின் வாசத்தோடு பதிவு செய்திருக்கிறார் செம்பென் உஸ்மேன் தன் “தொல்குடித் தழும்புகள்”ளின் 12 கதைகளிலும்.
பிரெஞ் வழி ஆங்கிலத்தில்
லென் ஆர்ட்சென் என்பவராலும்..
ஆங்கில வழி தமிழில்
லிங்க்ராஜா வெங்கடேஷ் என்பவராலும்
மொழிபெயர்க்கப்பட்டு தோழர் வே.ராமசாமி அவர்களின் ” கலப்பை” வெளியீடாக வந்திருக்கிறது. வலிமிகுத்த அட்டை படத்தை வடிவமித்திருக்கிறார் ஓவியர் ஜீவமணி.
தனித்துவமிக்க மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு.
கொண்டுவந்த தோழமைகள் அனைவருக்கும் பேரன்பும் வாழ்த்துக்களும்.
நன்றி: கருப்பு அன்பரசன் முகநூல் பதிவிலிருந்து