சங்ககால சமுதாயம் பற்றியும், தொல்லியல் நோக்கில் சங்ககால சமுதாயம் குறித்தும் பல நூல்கள் வந்திருக்கின்றன.  அதில் சமீபத்தில் சிந்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகமும் ஒன்று.  பொதுவாக தமிழ் பற்றிய ஆய்வுப் புத்தகங்களை நான் அதன் ஆழமும் தமிழின் கடினமும் கண்டு தவிர்த்து விடுவேன்.  இந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த போது எளிமையான தமிழில் இருந்தது கண்டு வாங்கி விட்டேன்.  என் எதிர்பார்ப்பை புத்தகம் ஏமாற்றவில்லை.

நமது தமிழகத்தின் வரலாற்றை எடுத்துக் கூறும் தொல்லியல் அகழ்வாய்வுகளை அரசியல் நோக்குடன் தடுத்து வரும் இக்காலத்தில் நமது பெருமையை அறிவது என்பது முக்கியமாகத் தோன்றுகிறது.  நமது சங்ககால இலக்கியங்களை தமிழ்தாத்தா உ.வே.சா. அகழ்ந்தெடுத்துக் கொடுத்துள்ளார்.  பொதுவாக இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடிகளாக விளங்குபவை.  அதனுடன் தொல்லியல் அகழ்வாய்வில் கிடைக்கும் விவரங்களைப் பொருத்திப் பார்க்கும் போது ஒரு பரந்த பார்வை கிடைக்கும்.  அந்தப் பணியை இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் நன்கு ஆய்வு செய்து எளிய தமிழில் விளக்கியுள்ளார்.

புத்தகம் ஏழு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.  தமிழகத் தொல்பழங்காலமும் நிலவியல் கூறுகளும்; ஆற்றங்கரைத் தொல்லியல்-கள ஆய்வு; நம்பிக்கைகளும் சடங்குகளும்; தொல்குடிகளும் தொல்லியல் சான்றுகளும்; வேளிரும் வேந்தரும்; வணிகமும் நகரங்களும்; சமயமும் பண்பாடும் என ஏழு அத்தியாயங்கள்.  அவர் அதற்காகப் பயன்படுத்திய நூல்களின் பட்டியல் பின்னிணைப்பாக உள்ளது.

Keezhadi Special: Archaeology important- Dinamani

தமிழகத்தின் தொல்லியலை பழங்கற்காலம் முதலே எடுத்துக் கொண்டுள்ளார் ஆசிரியர்.  அதற்காகச் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள், இடங்கள், கிடைத்த பொருட்கள் என வரிசைப்படுத்தி அதிலிருந்து சமூகம் பற்றிய முடிவுகளை எடுத்துக் காட்டுகிறார்.  பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம், வெண்கலக்காலம், இரும்புக்காலம் என்ற வரிசை உலகெங்கிலும் இருந்தாலும், தமிழகத்தில் வெண்கலக்காலம் இல்லை என்பது போலவே சான்றுகள் சுட்டுகின்றன.  அதேபோல் லெமூரியா கண்டம் குறித்தும், சிலப்பதிகாரம் அது பற்றிக் கூறுவதையும் மேற்கோள் காட்டுகிறார். தமிழர்களின் இனங்களாக நீக்கிரிட்டோ இனம், ஆஸ்திரிக் மக்களின் மூதாதையர், திராவிடர் என்பதாக எடுத்துக் காட்டுகிறார். அவர்களது இன்றைய வழித்தோன்றல் இனத்தவர், அவர்களது தொழில் என்று இன்னபிற விஷயங்களையும் விரிவாக விளக்குகிறார்.

ஆறுகளில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வரலாற்றை  அறிவது இரண்டாம் அத்தியாயம்.  அப்போது இருந்த நகரங்கள் ஆற்றங்கரையோரம் செழித்திருந்ததை இது விளக்குகிறது.  குலக்குறி வழிபாடு, தாய்த்தெய்வ வழிபாடு, வெறியாட்டம் என சடங்குகள் எனப் பல விவரங்களை மூன்றாம் அத்தியாயம் விளக்குகிறது.  அடுத்த அத்தியாயம் தொல்பழங்குடி மக்களின் வாழ்வியலை விளக்குகிறது.  ஐந்தாவது அத்தியாயம் சங்ககால அரசியலை ஆராய்கிறது.  வேளிர்கள், வேந்தர்கள் என படிநிலைகளாக அவர்கள் இருந்ததையும், அவர்களது காசுகள் போன்றவையும் விளக்கப்-படுகின்றன. ஆறாவது இயலாக பொருளாதாரம் பற்றிய ஆய்வு உள்ளது.  ஏழாவதாக, அன்று இருந்த சமயங்கள், அவை பற்றிக் கிடைக்கும் சான்றுகள், பிராமிக் கல்வெட்டுகள் போன்றவை விளக்கப்படுகின்றன.  எவ்வாறு சங்ககால மக்கள் சூழலோடு ஒத்திருந்தது என்பதையும் இந்த அத்தியாயம் விளக்குகிறது.

இந்தப் புத்தகத்திலிருந்து பல விஷயங்களை என்னால் புதிதாக அறிய முடிந்தது.  தமிழ் படித்திருந்தால் ஒருவேளை இவை முன்பே தெரிந்திருக்கலாம்.  வழக்கம் போல ஏன் தமிழ் படிக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை.

பொதுவாக பகவன் என்பது சமஸ்கிருதம் என்றே எனது நினைப்பாக இருந்தது.  ஆனால் பக என்றால் பகிர்ந்து கொடுத்தல், பகிர்ந்து கொடுப்பவன் பகவன், பெறுபவன் பக்தன் என்ற தமிழை இதில் அறிந்தேன்.  அதேபோல் மதுரை செழிப்பாக இருந்ததால், அது பாண்டியனால் கைப்பற்றப்பட்டது, முன்பு வேறு ஒருவரின் ஆட்சியில் இருந்தது என்பதும் எனக்குப் புதிய தகவல்.  மதுரையில் வணிகர்கள் தமது பொருட்களை பரிமாறிக் கொள்வதற்காகக் கூடுவதால்தான் அதன் பெயர் கூடல்நகர் என விளங்கியது என்பதும் எனக்குப் புதிய தகவல்.  மதுரைக்கு வந்த வணிகர்கள் தங்கி வியாபாரம் செய்ய அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் அதிகாரிகளுக்கும் ...

தொல்லியல் அகழ்வாய்வில் கிடைக்கும் பொருட்கள் கி.மு.400 இலேயே தமிழுக்கு எழுத்து வடிவம் இருந்தது என்பதை நிரூபிக்கின்றன.  இப்போது மதுரைக்கு அருகில் கீழடியில் கிடைத்த பொருட்களும் இந்தக் கூற்றை நிரூபிக்கின்றன.  நகரங்கள் இரண்டாம் நகர்மய காலத்தில் சங்ககால சமூகத்தில் தோன்றியவை.  அதாவது கி.மு400க்கும். கி.பி.200க்கும் இடையில் தோன்றியவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை விட நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துவது ஒரு தமிழக வணிகனுக்கும் கிரேக்க வணிகனுக்கும் இடையில் ஏற்பட்ட வியாபார ஒப்பந்தம் கி.பி.150 காலத்திலேயே நடந்துள்ளது என்பதாகும்.  அதற்கான சான்று கிடைத்துள்ளது.  அதேபோல் வெளிநாடுகளிலிருந்து இங்கு வணிகத்துக்காக வந்தவர்கள் ஆட்சியாளர்களுக்குக் கொடுத்த பரிசுப் பொருட்கள் அதாவது மாலைகள், காசுகள் போன்றவையும் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இந்தியாவில் கிடைத்த ரோமானியக் காசுகளில் 80% தமிழகத்தில்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் தமிழகத்தின் மிளகு எகிப்தில் பெர்னிகே என்ற ஊரில் கிடைக்கிறது என்பது பல நாடுகளுடன் தமிழக வணிகர்கள் தொடர்பு கொண்டிருந்ததைக் காட்டுகிறது.

அதேபோல் முக்கிய நகரங்களை இணைக்கும் பெருவழிகள் இருந்துள்ளன.  சில காலமாக ஹைவே என்பதற்கு சரியான தமிழைத் தேடிய போது தோழர் குமரேசன் உயர்வேகப்பாதை என்ற பதத்தைப் பயன்படுத்தியிருந்தார்.  அதை விட இந்தப் பெருவழி என்ற பதம் மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது.

இன்று பொருளாதார விஷயங்களில் பெருமுதலாளிகள், கார்ப்பரேட்டுகள் ஆதிக்கம் செலுத்துவதையும், அரசின் முடிவுகள் அவர்களுக்கு ஆதரவாக எடுக்கப்படுவதையும் கண்டு வருகிறோம்.  இந்தப் புத்தகத்தில் சில வணிகர்கள் தாமே காசு வெளியிடும் உரிமையையும் பெற்றிருந்தனர் என்கிறது.  நல்லவேளை இப்போதைய நிலை இன்னும் அதுவரை செல்லவில்லை.

கீழடி அடையாளம் காணப்பட்டது எப்படி ...

ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் இடதுசாரி வரலாற்று நிபுணர்கள் தென்னகத்தைக் கண்டு கொள்ளவேயில்லை, கீழாகப் பார்க்கிறார்கள் என்று குறிப்பாகத் தாக்கியிருந்தார்.  ஆனால் இந்தப் புத்தகம் அதை நொறுக்கித் தள்ளி விட்டது.  பல இடங்களில் ஆசிரியர் ரொமிலா தப்பாரை மேற்கோள் காட்டுகிறார்.  சிந்துவெளி நாகரீகத்தில் கிடைத்த பொருட்களில் இருந்த சில பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் என்று ரொமிலா தப்பார் சுட்டிக் காட்டுகிறார்.  எனவே தமிழர்களின் வரலாற்றை எங்கிருந்து ஆராயத் தொடங்க வேண்டுமென்றால் சிந்துவெளியிலிருந்து தொடங்க வேண்டுமென்கிறார்.  சிந்துவெளி நாகரீகம் பற்றி பாலசந்திரனின் ஆராய்ச்சி நினைவுக்கு வருகிறது.

ஒரு மிகச்சிறந்த ஆய்வு புத்தகத்தை எளிய தமிழில் தந்ததற்கு ஆசிரியர் திருமிகு சசிகலாவுக்குப் பாராட்டுக்கள்.  அவரைப் பற்றிய விவரங்களை புத்தக்த்தில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.  அது ஒரு குறையாக உள்ளது.

ஒரு அருமையான தமிழ் ஆய்வை பதிப்பித்த சிந்தன் பதிப்பகத்துக்குப் பாராட்டுக்கள்.

விலை. ரூ.250

பக்கங்கள்: 236

தொடர்புக்கு: 9445123164

 கி.ரமேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *