tholviadaintha rajathanthira payanam web series-23 written by a.bakkiyam தொடர்: 23 : தோல்வியடைந்த ராஜதந்திர பயணம் - அ.பாக்கியம்
tholviadaintha rajathanthira payanam web series-23 written by a.bakkiyam தொடர்: 23 : தோல்வியடைந்த ராஜதந்திர பயணம் - அ.பாக்கியம்

தொடர்: 23 : தோல்வியடைந்த ராஜதந்திர பயணம் – அ.பாக்கியம்

தோல்வியடைந்த ராஜதந்திர பயணம்

முகமது அலி, 1980 பிப்ரவரி 3 முதல் 10வரை அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் சிறப்பு தூதராக ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அவருடன் 10க்கும் அதிகமான வெள்ளை மாளிகை அதிகாரிகள் உடன் சென்றனர்.

1980ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோடைகால ஒலிம்பிக் போட்டி சோவியத் யூனியன் தலைநகர் மாஸ்கோவில் நடந்தது. இந்தப் போட்டியை அமெரிக்கா தலைமையில் 60 அமெரிக்க சார்பு நாடுகள் புறக்கணித்தன. 1979-ல் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் தலையீட்டை இந்த புறக்கணிப்புக்கு காரணமாக கூறினார்கள். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளை, மாஸ்கோ ஒலிம்பிக்கை புறக்கணிப்பதில் பங்குபெற  வைக்க வேண்டும் என்பதற்காக முகமது அலியை சிறப்பு தூதராக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அனுப்பினார். ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அரசாங்க தலைவர்களுடன் முகமது அலியை பேச வைத்தார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் முகமது அலியின் பிரபலத்தை பயன்படுத்தியது மட்டுமல்ல… அவருக்கு கருப்பின மக்களிடமிருந்த செல்வாக்கையும், ஆப்பிரிக்க நாட்டில் அவருக்கு இருந்த வரவேற்பையும், இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்ற மத சாயத்தையும் தனது அரசியல் கொள்கைகளுக்காக பயன்படுத்தியது.

1974ம் ஆண்டு முகமது அலி ஜயர் நாட்டில் ஜார்ஜ் போர்மனை தோற்கடிப்பது வரை அமெரிக்காவில் இருந்த அரசும் வெள்ளை இன வெறியர்களும் முகமது அலிக்கு இடையூறாகவே இருந்தனர். இப்படி ஒருவர் இருக்கிறார் என்பதை வெள்ளை மாளிகை கண்டுகொள்ளவில்லை.1974 ஆம் ஆண்டு அவர் வெற்றி பெற்று வந்த பொழுது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த குடியரசு கட்சியின் தலைவர் ஜெரால்டு ஃபோர்டு முகமது அலியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து கவுரவித்தார். ஏகாதிபத்திய அரசியல் சித்து விளையாட்டுக்களுக்கு முகமதுஅலி தேவை என்ற அரசியல் பின்னணியுடன் அமெரிக்க அரசு இதை அரங்கேற்றியது.

இந்நிலையில் 1978 ல் முகமது அலி, மாஸ்கோ சென்று வந்த பிறகு அவருடைய கருத்துக்கள், பொதுவெளியில் சோவியத் யூனியன் மதிப்பை உயர்த்துவதாக இருந்தது. இது அமெரிக்க தலைமைக்கு நெருக்கடிகளை உருவாக்கியது என்பது தனிக்கதை.

முகமதுஅலி, தனித்தன்மையும் ஆளுமையும் கொண்ட நபர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார். அவற்றில் பெரும்பகுதி தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தி பயணித்துள்ளார். சில நேரங்களில் அமெரிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார். மாஸ்கோ ஒலிம்பிக்கை புறக்கணிக்கச் செய்வதற்காக, அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாக அவர் மேற்கொண்ட ஆப்பிரிக்கப் பயணம் கடுமையான எதிர்ப்பை சந்தித்தது.

முகமது அலி ஆப்பிரிக்காவில் முதலில் தான்சானியா,  பிறகு நைஜீரியா, கென்யா, லைப்ரியா, செனகல் ஆகிய நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டார். அந்த நாடுகளில் இருந்த  கடுமையான எதிர்ப்பாலும் தனது பயணம் வெற்றி பெறாது என்று உணர்ந்ததாலும் அத்துடன் திரும்பி விட்டார்.

முகமது அலி முதலில் சென்ற தான்சானியா  நாட்டிற்கு. அந்த நாட்டின் ஜனாதிபதி ஆப்பிரிக்க மக்களின் புகழ் பெற்ற தலைவரன ஜூலியஸ் நைரேரே. அவர், முகமது அலியை சந்திக்க மறுத்து விட்டார். நைஜீரியாவிலும் முகமது அலி எதிர்ப்பை சந்தித்தார். இந்த பயணத்தினால் பயன் எதுவும் ஏற்படவில்லை என்பதை முகமது அலியே உணர்ந்து கொண்டார். பாக்ஸிங்கை விட ராஜதந்திர நடவடிக்கை மிகவும் கஷ்டமானது என்பதையும் அவர் புரிந்து கொண்டார். ஆப்பிரிக்க நாட்டின் தலைவர்களும், பத்திரிக்கை யாளர்களும், பொதுமக்களும் அவரிடம் கேட்ட கேள்விகள், அவரது பயணத்தையே கேள்விக்குள்ளாக்கியது.

அமெரிக்காவுக்கு ஆதரவாக முகமது அலி பயணம் செய்த நாடுகளில் முகமது அலி உங்களை வரவேற்கிறோம்; தயவுசெய்து திரும்பி போய் விடுங்கள்என்ற கோஷம் எல்லா இடங்களிலும் காணப்பட்டது. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பல கேள்விகளுக்கு முகமது அலி பதில் சொல்ல முடியாமல் திணறினார். ‘‘குத்துச்சண்டை விளையாட்டு ஓரளவு என் கட்டுப்பாட்டில் உள்ளது.  இந்த ராஜதந்திர பயணம் என்னால் கட்டுப்படுத்த முடியாத விளையாட்டாக உள்ளது’’ என்று முகமது அலியே கூறினார்.   அமெரிக்காவின் மாஸ்கோ ஒலிம்பிக் புறக்கணிப்புக்கு கருப்பின ஆப்பிரிக்க மக்களிடையே ஆதரவு இல்லை என்று முகமது அலி உணர்ந்து கொண்டார்.

மேலும் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இடங்களில் எல்லாம் “மாஸ்கோ ஒலிம்பிக்கை புறக்கணிக்க சொல்லும் அமெரிக்கா,1976 கனடாவின்  மாண்ட்ரீலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை 28 ஆப்பிரிக்க நாடுகள் – அனேகமாக ஆப்பிரிக்காவில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் புறக்கணித்த பொழுது அமெரிக்கா ஏன் புறக்கணிப்பிற்கு ஆதரவு தரவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. முகமது அலியால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை.

1976இல் தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறி ஆட்சி நடைபெற்றது. நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தார். கருப்பின மக்கள் கொடும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியம், தென் ஆப்பிரிக்க வெள்ளை நிறவெறி அரசை ஆதரித்தது. தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசை உலகம் முழுவதும் பல நாடுகள் எதிர்த்தன.  குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகள் தென்ஆப்பிரிக்காவை புறக்கணித்தன.

இதன் ஒரு பகுதியாக 1976 ஆம் ஆண்டு கனடா ஒலிம்பிக் போட்டியை ஆப்பிரிக்க நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்று தான்சானியா நாட்டின் தலைமையில் அணி திரண்டனர். காரணம் இந்த ஒலிம்பிக் போட்டியில் தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசுடன் விளையாட்டு தொடர்புகளை வைத்திருந்த நியூசிலாந்து அணி பங்கேற்பதை ஆப்பிரிக்க நாடுகள் எதிர்த்தன. 28 ஆப்பிரிக்க நாடுகள் பங்கு பெறவில்லை. இந்த புறக்கணிப்பால் டிக்கெட் கட்டணமாக 10 லட்சம் டாலரை திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. குறிப்பாக தடகளப் போட்டிகள் பாதிக்கப்பட்டன. தடகளத்தில் கென்யா, தான்சானியா நாடுகள் அதிகமான பதக்கத்தை பெறக்கூடிய நாடுகள். இந்தப் புறக்கணிப்பை அமெரிக்க ஆதரிக்காததால், கருப்பின மக்களுக்கு எதிரான – தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசுக்கு ஆதரவானது அமெரிக்கா என்ற வலுவான கருத்து ஆப்பிரிக்க மக்களிடம் ஏற்பட்டு இருந்தது. அதன் எதிரொலி முகமது அலியின் பயணத்தின் போது வெளிப்பட்டது.

ஆப்பிரிக்க பயணத்தின்போது கேள்விகளால் துளைக்கப்பட்ட முகமது அலி, ஒரு கட்டத்தில், நிலைமைகளை புரிந்து கொண்டு சுயமான முடிவுக்கு வந்தார். ‘‘தென் ஆப்பிரிக்கா மீதான கருப்பின ஆப்பிரிக்காவின் உணர்வுகளை அமெரிக்க அரசாங்கம் உணரவில்லை என்று நான் நினைக்கிறேன்’’ என பத்திரிக்கையாளரிடம் கூறினார். ‘‘1976 இல் அமெரிக்கா எங்களோடு (ஆப்பிரிக்க நாடுகளோடு) ஒத்துழைக்காத போது, தற்போது நாங்கள் ஏன் அமெரிக்காவுக்கு ஒத்துழைக்க வேண்டும்’’ என்ற அவர்களின் கேள்வி நியாயமானதுதான் என்று அலி கூறினார். தென் ஆப்பிரிக்கா விவகாரத்தை இதர ஆப்பிரிக்க நாடுகள் எப்படி பார்க்கின்றன என்று எனக்குத் தெரியாமல் போனது. அது என் பயணத்தை பாதிக்கும் என்பதை நான் கருத்தில் கொள்ளவில்லை என்றும் முகமது அலி கூறினார்.

இஸ்லாமிய ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் கைப்பற்றியதில் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளான நான் ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் ஜிம்மி கார்ட்டரின் பிரதிநிதியாக ஆப்பிரிக்காவிற்கு வந்தேன். ஆனால் நான் அமெரிக்காவின் கருத்துக்களை என் மக்கள் மீது திணிக்கும் கிளிப்பிள்ளை போல் இங்கு இருக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். தான்சானியாவில் நிருபர்களை சந்தித்த பொழுது” ஒருவேளை நான் தவறான ஒன்றை செய்ய பயன்படுத்தபட்டு இருக்கலாம். நீங்கள் என்னை வித்தியாசமாக பார்க்க வைக்கிறீர்கள். நான் சொல்வது தவறு என்று எனக்குத் தெரிந்தால் நான் அமெரிக்காவுக்கு சென்றுவிடுகிறேன். முழு பயணத்தையும் ரத்து செய்கிறேன் என்று கூறினார். முகமது அலி அமெரிக்காவுக்கு திரும்பி ஜிம்மி கார்ட்டரிடம் நடந்தவைகளை தெரிவித்து அந்த விவகாரத்தை அத்துடன் முடித்துக் கொண்டார்.

முகமது அலி அமெரிக்க அரசுக்கு ஆதரவான தனது ஆப்பிரிக்க பயணத்தில் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பை சந்தித்ததற்கு காரணங்கள் இருக்கின்றன. தென்னாப்பிரிக்க வெள்ளை நிறவெறி அரசை சோவியத் யூனியன் எதிர்த்ததுடன் ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெற்ற பல மக்கள் எழுச்சிகளையும், புரட்சிகரமான நடவடிக்கைகளையும், விடுதலை போராட்டங்களையும் ஆதரித்தது. சோவியத் யூனியனின் இது போன்ற நடவடிக்கைகள் ஆப்பிரிக்க மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.  இதை பயணத்திற்கு முன்பு முகமது அலி அறிந்திருக்கவில்லை. அதே நேரத்தில் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் சோவியத் நாட்டின் கூட்டாளிகள் அல்ல. ஆனால், அமெரிக்காவின் நோக்கங்கள், நடவடிக்கைகள் ஆப்பிரிக்க நலன்களுக்கு எதிராக இருந்தது என்பதை அந்த நாடுகளின் மக்கள் உணர்ந்து இருந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி, ஒரு அரசியல் செயல்பாட்டாளராக தன்னை களம் இறக்கியது தனது மதிப்பை குறைக்கும் என்பதை உணர அலி தவறிவிட்டார். ஜயர்  நாட்டின் மொபுடு, பிலிப்பைன்ஸ் மார்கோஸ் போன்ற சர்வாதிகாரிகள் குத்துச்சண்டைப் போட்டிக்கு அழைத்த பொழுது அதில் முகமது அலி கலந்து கொண்டது பற்றி ஏற்கனவே அவர் மீது விமர்சனம் இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி அரசு இருந்தவரை அந்த  நாட்டிற்கு அவர் செல்லவில்லை. தென் ஆப்பிரிக்கா வெள்ளை நிறவெறி ஆட்சியை வெளியேற்றிய பிறகு, 27 ஆண்டுகள் சிறைப்பட்ட நெல்சன் மண்டேலா விடுதலையான பிறகு 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தென்ஆப்பிரிக்காவிற்கு சென்று  மண்டேலாவை முகமது அலி சந்தித்தார்.

அந்தப் பயணத்தைப் பற்றி அலி குறிப்பிடும் பொழுது,  தீயில் எரிந்த  நாட்டிற்கு நான் வருவது ஒரு அமைதிக்கான பணி என்று தெரிவித்தார். ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளரான கிரீஸ் ஹானி தனது வீட்டிற்கு வெளியே படுகொலை செய்யப்பட்டிருந்ததால் தென் ஆப்பிரிக்கா கொந்தளித்துக் கொண்டிருந்தது. உள்நாட்டு போர் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அந்தப் பதட்டமான சூழலில் சோவெட்டோவில் நடைபெற்ற கிரீஸ் ஹானியின் இறுதி நிகழ்வில் முகமது அலி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். வெளிப்படையான ஆபத்துக்கள் இருந்த போதும் முகமது அலி அனைத்திற்கும் துணிந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் நிரம்பிய இடத்தில் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

முகமது அலி கருப்பின தேசியவாத கருத்துக்களில் மிகத் தீவிரமான நிலையிலிருந்தும், கருப்பின மேலாதிக்கம் என்ற நிலையிருந்தும், இனசமத்துவம் என்ற நிலைபாட்டிற்கு மாறிஇருந்தார், அதே நேரத்தில் கருப்பின சுயநிர்ணயத்தை நோக்கிய கருத்துக்களிலும் செயல்பாட்டிலும், காலனிய எதிர்ப்பு நிலையிலும் தொடர்ந்து களமாடி வந்தார். அவரது தோல்வியுற்ற மாஸ்கோ ஒலிம்பிக் எதிர்ப்பு பிரச்சாரம் அவர் மேற்கொண்ட கடைசி ராஜதந்திர பணி அல்ல. 90 ஆம் ஆண்டு மேலும் ஒரு சில பணிகளை அவர் மேற்கொண்டார்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *