பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்து நிறைய முரண்பாடுகளைச் சந்தித்த காலமாகும். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் சமூகம் கொண்டிருந்த நம்பிக்கைகளை எல்லாம் அசைத்துப் பார்த்த காலம். பகுத்தறிவு சிந்தனைகள் மதக் கோட்பாடுகளைக் கேள்விக்குறியாக்கிய காலம். மனித குலம் இதுவரை உயர்த்திப் பிடித்த அறநெறிகளை எல்லாம் மக்கள் சந்தேகத்துடன் பார்க்கத் துவங்கிய காலம். தாமஸ் ஹார்டி என்ற மாபெரும் நாவலாசிரியன் இம்முரண்பாடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்களைக் கதாபாத்திரங்களாக மாற்றி நாவல் இலக்கியம் படைத்த காலம். ஹார்டியின் நாவல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டையும், கவிதைகள் இருபதாம் நூற்றாண்டையும் பிரதிபலிப்பது அவன் படைப்பின் விநோதம். ஆம்! 1871-1895 கால இடைவெளிக்குள் பதினான்கு நாவல்கள் எழுதிய ஹார்டி நூற்றாண்டின் திருப்பத்தில் கவிதைக்கு நகர்ந்து அதிலும் வெற்றி கண்ட விசித்திர படைப்பாளி.
தாமஸ் ஹார்டியின் கடைசி இரண்டு நாவல்களான ’டெஸ்’ மற்றும் ’ஜூட் தி அப்ஸ்கியுர்’ மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. ரோமன் கத்தோலிக்க சர்ச் வெகுண்டெழுந்து தடை செய்தது. கிறித்துவத்துவத்தை எதிர்த்து எழுதப்பட்ட இலக்கியம் என்று நிந்தனைக்குள்ளாயின. எதிர்ப்புகளுக்குப் பயந்து கடைகளில் புத்தகப் பிரதிகளுக்கு அட்டைகள் அணிந்து விற்றனர். வேக்ஃபீல்டு எனும் இடத்தின் பாதிரியார் வால்சம் கோபத்தின் உச்சத்தில் புத்தகப் பிரதிவொன்றை பொதுவிடத்தில் வைத்து எரித்தார். ”நல்ல வேளை நான் அவர் கண்களில் படவில்லை; இல்லையென்றால் என்னையும் எரித்திருப்பார்” என்று ஹார்டி நகைப்புடன் சொன்னார். சகிப்புத் தன்மையற்ற அன்றைய சமூகத்தின் சீற்றத்தை எதிர்கொள்ள மனமின்றி ஹார்டி நாவல் எழுதுவதிலிருந்து விலகி கவிதைக்கு மாறிக்கொண்டார்.
இங்கிலாந்தின் தென் மேற்கிலிருக்கும் ‘வெசக்ஸ்’ ஹார்டி பிறந்து வளர்ந்த இடமாகும். இதுவே அவரது நாவல்களின் கதைக்களமாகவும் விளங்குகிறது. கிராமப்புற ஏழைகளின் கள்ளங்கபடமற்ற வாழ்வின் ஏற்ற இறக்கங்களைச் சித்தரிப்பதில் ஹார்டி சிறந்து விளங்கினார். இதனை விட்டுவிலகி நகர்ப்புற நாகரீக வாழ்வை சித்தரிக்கும் போதெல்லாம் தோல்வியையே தழுவினார். இயற்கையுடன் மல்லுக்கட்டி வாழும் அப்பாவி மக்களின் சோக கீதங்களாகவே ஹார்டியின் நாவல்கள் தென்படுகின்றன. இந்த மண்ணின் மணத்தைச் சுமந்த வண்ணமாகவே கதாபாத்திரங்கள் சுற்றி அலைவதை வாசகர்கள் எளிதில் உணர முடியும். இயற்கை இவர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்து சகமனிதனாகவே காட்சி அளிக்கிறது. இருப்பினும் இவர்கள் துயரத்தில் உழலும்போது துயர்துடைக்காமல் விதியின்வசம் அவர்களை ஒப்படைத்து, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது.

திருமணங்கள் கடவுளால் நிச்சயிக்கப்படுகின்றன என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட சமூகத்திலும், பொருத்தமற்ற தம்பதிகள்தான் வாழ்வின் நியதியாக இருப்பதை ஹார்டி அவதானிக்கிறார். மனதளவில் இணையாத தம்பதிகளால் ஹார்டியின் நாவல்கள் நிறைந்திருப்பதைக் காண்கிறோம். ‘தி ரிடர்ன் ஆஃப் தி நேடிவ்’ நாவலில் காணப்படும் இரு இணையர்கள் (”வைல்டீவ்- தொமாசின்” மற்றும் ”கிளிம் யோபிரைட் – யுஸ்டேஷியா”) எதிரும் புதிருமாய் இணைந்து வாழ்வைச் சூன்யமாக்கி நிற்பது விதியின் விளையாட்டன்றி வேறேன்ன என்று நாவலாசிரியர் கேட்கிறார். இக்கொடிய இயற்கை விதியிலிருந்து மனிதகுலம் தப்பிக்கவே முடியாதோ என்ற ஏக்கம் ஹார்டியின் கதாபாத்திரங்களை மட்டுமின்றி வாசகர்களையும் கவ்விக் கொள்கிறது. ஹார்டியின் கதாபாத்திரங்கள் பலரும் விதியின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு அல்லல்படுபவர்களாகவே பார்க்கிறோம். துயரம் நிழல் போல் துரத்துகிறது. விதியும் ஒரு கதாபாத்திரமாக இவர்களின் அருகிலேயே இருந்து ஆட்டுவிக்கிறது.
’ஜூட் தி அப்ஸ்கியுர்’ நாவலின் நாயகன் ஜூட் கிராமத்தில் வாழும் அனாதைச் சிறுவனாக அறிமுகமாகிறான். கிராமப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்கும் ஜூட் தன்னுடைய ஆசிரியர் ஃபிளோட்சனின் அறிவாற்றலினால் ஆகர்சிக்கப்படுகிறான். பள்ளி ஆசிரியர்கள் இளம் மாணவர்களின் மனதில் ஏற்றிவைக்கும் ஒளி விளக்கு எளிதில் அணைவதில்லை. ஆசிரியர் ஃபிளோட்சன் மேற்படிப்புக்காக கிரைஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகம் செல்கிறார். அவரைப் பின்பற்றி தானும் கிரைஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்து அறிவாளியாக வேண்டும் என்ற கனவு ஜூட் மனதில் கனலாக எரிந்து கொண்டிருக்கிறது. தினமும் ஊரின் கடைக்கோடியில் இருக்கும் குன்றின் மீதேறி தூரத்தில் தெரியும் கிரைஸ்ட்மின்ஸ்டர் நகரத்தின் விளக்குகள் மின்னுவதைக் கண்டு ஏங்குகிறான்.

சாதாரண கல்தச்சனான அவனுக்கு மேட்டுக் குடி மக்களுக்கு மட்டுமே சாத்தியப்படும் உயர்கல்விக் கனவு நிறைவேறாது என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாத இளம் பருவம். இரவின் மடியில் அமர்ந்து எண்ணெய் விளக்கு தரும் மெல்லிய ஒளியில் கிரேக்கம், லத்தீன் மொழிகளைக் கற்க ஆரம்பிக்கிறான். இதற்கிடையில் வாலிப விருந்தாக வந்தடைகிறாள் அரபெல்லா எனும் கிராமத்துக் கட்டழகி. அரபெல்லாவின் உடற் கவர்ச்சியிலிருந்து விடுபடமுடியாத ஜூட் அவள் விரிக்கும் வலையில் விழுந்துவிடுகிறான். இந்த இளம் வயதுக் காதல் தன் மனதில் கொழுந்துவிட்டு எரியும் கல்விக் கனவை அணைத்துவிடும் என்பதறியாது தடுமாறுகிறான்.
பன்றி மேய்ப்பவளான அரெபெல்லா தான் கருவுற்றிருப்பதாகப் பொய் சொல்லி அவனைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்கிறாள். ஒரு நாள் அவன் சற்றும் எதிர்பாராத தருணத்தில் அவனைப் பன்றியைக் கொன்று இறைச்சியை எடுக்கும்படி செய்கிறாள். அன்றிரவே கிராமத்தைவிட்டு ஓடுகிறான். அவனுடைய கனவுலகை நோக்கி ஓடுகிறான். கிரைஸ்ட்மின்ஸ்டரில் அதிர்ச்சியும், அவலமுமே காத்திருக்கின்றன. அவன் படித்திருந்த கொஞ்ச கிரேக்கமும், சிறிது லத்தீனும் போதாது என்பதுடன், கிரைஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் கதவுகள் அவன் போன்ற ஏழைகளுக்கு திறக்காது என்பதையும் தெரிந்து வேதனைப்படுகிறான். தனக்குத் தெரிந்த கல்தச்சு வேலை செய்து அன்றாட வாழ்வைக் கடத்துகிறான். புண்பட்ட மனதுக்கு ஆறுதலாக சூ பிரைடுஹெட் எனும் தூரத்து உறவுப் பெண்ணைத் தற்செயலாகச் சந்திக்கிறான். அவளின் அன்புக்காக ஏங்குகிறான்.

வேலை தேடி கிரைஸ்ட்மின்ஸ்டர் வரும் அவளைத் தானறிந்த ஸ்கூல் மாஸ்டர் ஃபிளோட்சனுக்கு அறிமுகப்படுத்துகிறான். அவர் வேலை பார்க்கும் பள்ளியில் சூவும் ஆசிரியையாகச் சேருகிறாள். ஜூடின் காதலைப் புரிந்து கொள்ளத் தவறுவதுடன், ஸ்கூல் மாஸ்டர் ஃபிளோட்சனை திருமணம் செய்து கொள்ளும் தவறான முடிவையும் சூ எடுக்கிறாள். ஃபிளோட்சனின் காதலற்ற காமம் கண்டு ஏமாற்றமடைகிறாள். ஃபிளோட்சனுடன் சேர்ந்து வாழ மனமின்றி அவனைப் பிரிந்து ஜூடிடம் அடைக்கலம் அடைகிறாள். இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும், உண்மையான அன்புடனும் அன்னியோன்னியமாக வாழ்கின்றனர். சூ திருமணம் எனும் சடங்கில் நம்பிக்கை இழக்கிறாள். கருத்தொருமித்த காதலர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் அன்பை மட்டுமே கைப்பற்றி வாழ முடியும் என்று நம்புகிறாள். திருமணம் குறித்த அன்றைய சமூகத்தின் மதிப்பீடுகளை சூ பிரைட்ஹெடால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
திருமண பந்தம் உடல் இன்பத்தைத் தாண்டியதாக இருக்க வேண்டும் என்ற அவளின் மனநிலைக்கும் சமூகத்தின் வரைமுறைகளுக்குமான இடைவெளி நீண்டதாக இருந்தது. ஜூட்-சூ இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே இணைந்து வாழ்ந்து, இரு குழந்தைகளையும் பெற்றெடுக்கிறார்கள். இதற்கிடையில் ஆஸ்திரேலியா சென்று மறுமணம் செய்து கொண்ட அரபெல்லா கணவனின் மரணத்திற்குப் பின் மீண்டும் இங்கிலாந்து வருகிறாள். ஜூட் மூலம் அவள் பெற்றிருந்த மகனை ஜீடிடம் விட்டுவிட்டுச் செல்கிறாள். இச்சிறுவன் தன் குழந்தைமையைத் தொலைத்து, இளம் பருவத்திலேயே தன் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் காணப்படுகிறான். இதனால் அச்சிறுவனுக்கு ’Little Father Time’ என்று பெயர் சூட்டுகின்றனர். ஜூட்- சூ தம்பதிகள் வேலைகளை இழந்து, வறுமையில் உழல்கின்றனர். மூன்று குழந்தைகளையும் வளர்ப்பதற்கு வசதியின்றி வாடுகின்றனர். சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. வசிப்பதற்கு வீடு கொடுக்க மறுக்கிறது. சமூக விலக்கல் கொடூரமாக இருக்கிறது.
திருமணம் எனும் நிறுவனத்துக்குள் அன்பும், புரிதலுமின்றி வாழும் போலி வாழ்வை ஏற்றுக்கொள்ளும் சமூகம், ஜூட்- சூ இவர்களுக்கிடையே நிலவும் அன்பின் வழிப்பட்ட காதலுக்கு ஒப்புதல் தர மறுக்கிறது. குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். நகரம் முழுவதும் வீடு தேடி அலைகிறார்கள். ஒரு கொடிய நாளில் ஜூடும், சூவும் பகல் முழுவதும் வீடு தேடி அலைந்து களைப்புடனும், சோகத்துடனும் தங்குமிடம் திரும்புகின்றனர். தாங்க முடியாத சோகம் காத்திருக்கிறது. அந்தக் கொடூரத்தை அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாது. சிறுவன் ‘Little Father Time’ குழந்தைகள் இருவரையும் தூக்கில் தொங்கவிட்டு, தானும் தூக்கில் தொங்கி இறந்து கிடக்கிறான்.

“நாங்கள் மூவரும் உங்களுக்குப் பாரமாக இருக்க வேண்டாம் என்றெண்ணி எங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறோம்”, என்று கடிதம் எழுதிவைத்துள்ளான். மனம் உடைந்த காதலர்கள் பிரிகின்றனர். சூ மீண்டும் ஃபிளோட்சனுடன் சேர்ந்து வாழச் சென்றுவிடுகிறாள். ஜூட் கிராமத்துக்குத் திரும்புகிறான். அவனால் சூ மீதான காதலை மறக்க முடியவில்லை. சில நாட்கள் கழித்து சூவை சந்தித்து மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என்று கேட்கிறான். அவள் உறுதியாக மறுத்துவிடுகிறாள். மனமுடைந்த ஜூட் முப்பது வயதில் நோயுற்று இறந்துவிடுகிறான்.
நாவலின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை சோகம் இழையாடுவதைக் காண்கிறோம். தாமஸ் ஹார்டியின் சிறந்த நாவல்களாகக் கருதப்படும் ’ஃபார் ஃபரம் தி மேடிங் கிரவுட்’ ‘தி ரிடர்ன் ஆஃப் தி நேடிவ்’. ’மேயர் ஆஃப் காஸ்டர் பிரிட்ஜ்’. ‘உட் லாண்டர்ஸ்’ ‘டெஸ்’. ’ஜூட் தி அப்ஸ்கியுர்’ என ஆறு நாவல்களும் துயரத்தில் தோய்ந்துள்ளன. ஹார்டி வாழ்வின் மீது அவநம்பிக்கை கொண்டவர் (Pessimist) என்று திறனாய்வாளர்கள் சொல்வதுண்டு. ஹார்டியின் நாவல்கள் மிகை உணர்ச்சிகளைக் (Melodramatic) கொண்டதாக இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுமுண்டு. ஹார்டியின் நாவல்கள் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் வரையறுக்கும் செவ்வியல் இலக்கியக் கோட்பாடுகள் அடிப்படையில் இருப்பதாகப் போற்றுவோருமுண்டு. ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களுக்கு இணையானது என்று கொண்டாடுவோரும் உண்டு.
— பெ.விஜயகுமார்.