மிகவும் நம்பிக்கையிழக்க வைக்கும், ஆழ்ந்த மனவருத்தத்தில் ஆழ்த்தும் இந்தக் காலத்தில் நம்பிக்கையூட்டக் கூடிய ஊக்கமூட்டக் கூடிய பதிவுகள் தேவைப்படுகின்றன. போன ஆண்டு இதே நேரத்தில் எனக்கு அந்த ஊக்கத்தை அளித்தது மால்கம் எக்ஸ் வாழ்க்கை வரலாறு. இப்போது எனக்குக் கிடைத்தது தாமஸ் சங்காரா-வாழ்வும் சிந்தனையும்.

புத்தகத்துக்குள் நுழைவதற்கு முன் நானும் ஒரு ‘புரட்சி’ செய்யலாமா என்று ஒரு எண்ணம். பயப்பட வேண்டாம். வழக்கமான செயல்பாட்டைப் புரட்டிப் போட்டால் அது புரட்சி. (புரட்டு அல்ல) ஒரு மொழிபெயர்ப்பு புத்தகம் குறித்து அறிமுகம் செய்யும்போது புத்தகத்தைப் பற்றியும், எழுத்தாளரைப் பற்றியும் விழுந்து விழுந்து எழுதி விட்டுக் கடைசியில் ஒரே வாக்கியத்தில் இன்னார் மொழிபெயர்த்துள்ளார் என்று கடந்து விடுவார்கள். அதிகமாகச் சொன்னால் தமிழில் எழுதியது போலவே இருக்கிறது என்று முடித்து விடுவார்கள். சில சமயம் பெயர் கூட இருக்காது. இதை மாற்றினால் என்ன என்ற முயற்சியை நான் தொடங்குகிறேன்.

தாமஸ் சங்காரா பற்றிய இந்த அற்புதமான தமிழ் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகளைத் தேடிப் பிடித்து அதிலிருந்து சிறந்த கட்டுரைகளைத் தொகுத்து மொழிபெயர்த்து நமக்குக் கொடுத்திருப்பவர் இளைஞர் அ.சி.விஜிதரன். ஈழத்தில் பிறந்து தமிழகத்தில் வளர்ந்தவர். அண்ணாமலை பல்கலையில் முனைவர் பட்டப்படிப்புப் படிக்கிறார். எடுவர்டோ கலியானோவின் ‘தினங்களின் குழந்தைகள்’, ஜாக் லண்டனின் ‘இரும்புக் குதிகால்’ ஆகியவை அவரது மொழிபெயர்ப்புகள். இதில் இரும்புக் குதிகால் வாசகசாலை விருதைப் பெற்றது. ஈழ அகதிகளைப் பற்றி ஏதிலி என்ற புதினம் எழுதியுள்ளார். 28 வயதில் மிகப்பெரிய சாதனை என்றே கூற வேண்டும். மேலும் மேலும் இவர் தமிழுக்குப் பங்களித்து வளர வாழ்த்துக்கள்.

இனி புத்தகத்துக்குள். தாமஸ் சங்காரா என்றொரு புரட்சியாளர் இருந்ததை எப்போதோ ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன். அவரது நாடு ஆப்பிரிக்காவில் எங்கோ ஒரு இடத்தில் இருப்பதாகும். நம்மில் பெரும்பாலோர் அந்த நாட்டின் பெயரைக் கூடக் கேட்டிருக்க மாட்டோம். கானா, மாலி ஆகிய நாடுகளுக்கு அருகில் இருக்கும் பர்கினாபே தான் அவரது நாடு. முன்பு அதன் பெயர் அப்பர்வோட்டா. அதாவது வோட்டா நதிக்கு மேல் இருக்கும் நாடு. பல பழங்குடியினரும் பல மொழிகளும் கலந்த நாடு. செயற்கையாக ஒன்றிணைக்கப்பட்ட பழைய பிரெஞ்சு காலனி.நம் நாட்டுக்கும் அதற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. நாம் பிரிட்டிஷ் காலனியாக இருந்து விடுதலை பெற்றோம். அவர்கள் பிரான்சின் காலனியாக இருந்து விடுதலை பெற்றனர். நமக்கும், அவர்களுக்கும் விவசாயம் பிரதானத் தொழில். விடுதலை பெறும்போது மிக மோசமான நிலையில் இருந்த நாடுகள் நம் இருவருடையதும். பெயரளவுக்கு ஜனநாயகத் தேர்தல்கள் நடந்தாலும், இராணுவப் புரட்சிகள்தான் அடிக்கடி நடந்தன. அப்படி ஒரு இராணுவப் புரட்சியில் ஆட்சியில் அமர்ந்தவர் தாமஸ் சங்காரா. ஆனால் அடிப்படையில் அவர் ஒரு மார்க்சியப் புரட்சியாளராக இருந்ததால், அவர் ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டுகளில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். கொள்ளையடித்தவர்களை ஈவிரக்கமின்றி தண்டித்தார். கல்வி, தண்ணீர் வசதி, மருத்துவம் என அனைத்துக்கும் ஏற்பாடு செய்தார். இராணுவத்தினரை மக்கள் பணியில் ஈடுபடுத்தினார். பெண்களை விடுவிக்கக் கடும் முயற்சி எடுத்தார். எல்லாப் புரட்சிகளிலும் நடப்பது போல் அங்கும் சில தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடமிருந்து அன்னியப்படவும் செய்தனர். ஆனால் பின்னர் அவற்றை சரி செய்வதற்கும் முயற்சி எடுத்தார் சங்காரா. மக்களிடம் பேசுகையில் நேராகக் கேள்வி கேட்டு அவர்களிடம் பதில் பெறும் பேச்சு வழக்கம் அவருடையது. நம் நாட்டிலும் பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்றோர் அப்படி உரையாற்றுவதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் வழக்கம் போல் முதலாளித்துவம் மீது கை வைத்தால் என்ன நடக்குமோ அது அவருக்கும் நடந்தது. அவருடன் சேர்ந்து புரட்சி செய்து அவரது வலது கையாக இருந்த ஒரு இராணுவ அதிகாரியால் படுகொலை செய்யப்பட்டார் சங்காரா.

அந்த நாட்டில் தொழில் வளர்ச்சி அவ்வளவாக இல்லாததால் தொழிலாளர்கள் உதிரித் தொழிலாளி வர்க்கமாகவே இருந்தனர். எனவே வேறு பெரிய வழிகாட்டுதல் அவருக்கு இல்லையென்று அவர் குறிப்பிட்டார். ஆனால் அவருக்கு லெனினின் அரசும் புரட்சியும் வழிகாட்டியிருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார். அவருக்கு மிகவும் மதிப்புடைய தலைவராக காஸ்ட்ரோ இருந்துள்ளார். சேவின் இருபதாவது நினைவு நாளை பர்கினாபேயில் அனுசரித்த சங்காரா அங்கு ஒரு சாலைக்கு சேவின் பெயரை வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அவரது உரையாடல்கள், விவாதங்கள் அவரைக் கடைசியில் மார்க்சியத்துக்குக் கொண்டு சேர்த்தன என்பதை ஒரு பேட்டியில் ஒப்புக் கொள்கிறார்.

ஆப்பிரிக்க நாடுகளின் கடன்கள் குறித்து அடிசபாபாவில் நடந்த மாநாட்டில் அவர் பேசியதையும், சமோரா மார்ச்செல் இறப்பின் போது அவர் ஆற்றிய உரை ஆகியவற்றையும் படிக்கும் போது, ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ புத்தகம் நினைவுக்கு வருகிறது. இந்தப் புத்தகத்தில் எழுதப் பட்டிருக்கும் விஷயங்களை முன்னறிந்து அவற்றைக் கோடிட்டுக் காட்டுகிறார் சங்காரா. கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியாது. அந்தப் பணம் எங்களுடையது. நீங்கள் எங்களுக்குப் பெரிய வளர்ச்சித் திட்டங்களைக் கொடுப்பதாகக் கூறி எங்களை கடன் வலையில் மாட்டியவை என்று கர்ஜிக்கிறார். எப்படி இந்தக் கடன் வலையில் வளரும் நாடுகளையும், ஏழை நாடுகளையும் மாட்டி விட்டோம் என்று ஜான் பெர்கின்ஸ் விவரிப்பார். எப்படி நாடுகளின் அதிபர்கள் செயற்கையாக விமான விபத்துக்களில் கொல்லப்பட்டனர் என்பதையும் பெர்கின்ஸ் விவரிப்பார். அவற்றை நடைமுறையில் அறிந்து கூறுகிறார் சங்காரா.

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட காஸ்ட்ரோவுக்குப் பெரிய தங்குமிடங்கள் மறுக்கப்பட அவரை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டது கருப்பர் பகுதி. அதே போல் சங்காராவும் ஹார்லெமில்தான் தங்குகிறார். அங்கு அவர் ஆற்றிய உரைகள் ஆவேசமானவை, உணர்வூட்டுபவை.1987, மார்ச் 8 அன்று அவர் சர்வதேசப் பெண்கள் தினத்தில் ஆற்றிய உரையும் இதில் தொகுக்கப்பட்டுள்ளது. அவர் இதில் தொடாத விஷயம் இல்லை என்றே கூறலாம். பல புரட்சிகரமான அறைகூவல்களை அவர் விடுக்கிறார். பெண்கள் ஆண்களுக்காகத் தம்மை அலங்கரிக்கிறோம் என்று தம் உடல்மீது வன்முறை ஏவுவதாகக் கூறுகிறார், பெண்கள் திருமணம் செய்யாமல் தனித்திருப்பதைத் தவறாகப் பேசுவதை எதிர்க்கிறார், பிறப்புறுப்பு சிதைப்பு, ஆண்களுக்கு அடிமையாக வைத்திருத்தல், புரட்சியில் பங்கு பெறும் ஆண் வீட்டில் பெண்ணை அடிமையாக வைத்திருப்பது, பெண் ஆணுக்குப் புரட்சியில் உதவ மறுப்பது, பெண்மையின் மேன்மை (ஏறத்தாழ இந்திய சிந்தனையாகவே இருக்கிறது), பெண்கள் சங்கத்தை புரட்சி வழிநடத்துவது என அவரது உரை ஒரு என்சைக்ளோபீடியாவாகவே உள்ளது.

சங்காராவும், காஸ்ட்ரோவும் முதலில் சந்தித்தது இந்தியாவில் நடந்த அணிசேரா மாநாட்டில் என்பது நமக்கு மகிழ்ச்சியான செய்தி. பின்னர் காஸ்ட்ரோவுடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார். கியூபாவும் பர்கினாபேவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

அவரது நம்பிக்கையான வார்த்தைகளுடன் முடிப்போம்:

”நமது புரட்சி மற்ற எல்லா புரட்சிகளையும் போல தர்க்கரீதியான விதிமுறைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத புரட்சியாக நமது புரட்சியை நம்மால் அறிவிக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் இந்த தர்க்க ரீதியான விதிகள் இல்லை என்றால் நாம் வழிதவறிப் போய் விடுவோம். புரட்சிகரத் தத்துவம் இல்லாமல் புரட்சி இருக்க முடியாது. அதே நேரத்தில் நமது புரட்சி புரட்சிகரக் கோட்பாட்டின் மூலம், நமது அரசியல் நோக்க உரையை ஆழமாக்குவதன் மூலம் உலகின் மற்ற புரட்சிகள் அளவுக்குப் பெரிதாக வளரும். அது ஒருநாள் நிச்சயமாக நடக்கும்!.”

கி.ரமேஷ்.

நூல்: தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும்
தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: அ.சி.விஜிதரன்
பக்கம்: 429; விலை: ரூ.450/-
வெளியீடு: சிந்தன் புக்ஸ்


One thought on “நூல் அறிமுகம்: அ.சி.விஜிதரனின் *தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும்* – கி.ரமேஷ்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *