தொரட்டி | Thoratti

சிறுவயதிலிருந்து, எத்தனை கதைகள் கேட்டாலும், ஒவ்வொன்றும் புதியது போலவே தோன்றுகிறது. ஏனெனில், ஒவ்வொருவருக்குள்ளும் ஓராயிரம் கதைகள் இருக்கிறது. வீடில்லை, காரில்லை, நகையில்லை என புலம்பும் ‘கம்பஃர்ட் ஜோன்’ ல் இருக்கும் பெண்களுக்கு, வாழ்க்கையே இல்லாமல் போன பல பெண்களை இதுபோன்ற கதைகள் தான் அறிமுகம் செய்கின்றன.

” அரிதரிது பெண்ணாய் பிறத்தல் அரிது பெண்ணாய் பிறந்து ஆண்மையின் ஆதிக்கம் வன்முறை கொடுமை அல்லாமல் வாழ்தல் அரிது ” என்னும் வரிகளையும் ஔவை தன் ‘அரியது கேட்கின் வரிவடி வேலோய்’ என்ற பாடலில் சேர்த்திருக்க வேண்டுமோ என்று ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது இந்த புத்தகம்.

மூக்குத்தி என்னும் கதையில் சிறுமி பருவம் முதல் வயதான பருவம் வரை மாய உலகில் வாழ்ந்து வந்த பாட்டியின் அணிய விருப்பமில்லாத மூக்குத்தியை ஒரே வார்த்தையில் தன் பேத்தி அதை கழட்டி எறியும் படி கூறியதும் இவ்வளவு காலமாக தான் சுமந்திருந்த பாரத்தை ஒரே விநாடியில் இறக்கி வைக்க முடிந்ததை எண்ணி பாட்டி – வெண்ணிலாவின் மனம் இலகுவானது.

எந்த ஒரு எதிர்பார்ப்புமற்ற , நிபந்தனையுமற்ற தாயின் அன்பையும் அரவணைப்பையும் பற்றி நினைத்து நம்மை ஆனந்தப் பட வைக்கிறது ‘தொலைந்து போன பாசம்’ என்னும் பாசமான சிறுகதை.

சுகுணா என்னும் பெண்ணிற்கு நடந்த பெரிய கொடுமையை, ” ஒரு பொண்ணுக்கு ஒரு தடவதான் தாலி ஏறும் ” என்று கூறி ஒரே வரியில் சொல்லிவிட்டு கடந்து சென்ற சுகுணாவின் அப்பாவிற்கு தன் மகளின் விருப்பமின்றி, அனுமதியின்றி ஒருவன் அவளுக்கு தாலி கட்டியதை விட தன்மானமும், ஊர் மக்கள் அவர் மேல் வைத்திருக்கும் மரியாதையும் தான் முக்கியம் என்று நினைக்கும் ஆண்மை தான் பலமாக மேலோங்கி நிற்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது தொரட்டி என்னும் புத்தகத்தின் தலைப்பையே கதையின் பெயராக கொண்ட சிறுகதை.

பெண்ணின்‌‌ மனதை சிறிதும் புறிந்து கொள்ளாத ஆண்களைப் பற்றி எடுத்துரைக்கிறது செவிட்டு செவிகள் என்ற கதை.

கணவனின் பொறுப்பற்ற தன்மையினால் அவதிப்படும் மனைவியின் நிலையைக் கண்டு மனம் வருந்த வைக்கிறது நீர்க்கோலம் என்னும் கதை.

” நீ போயி இத யார் கிட்டயும் சொல்லாத. அப்புறமா சாரதி பேரு கெட்டுடும்” என்று தாய் தன் மகளிடம் கூறுவதைப் படித்தால் நீங்கள் நினைப்பதைப் போல சாரதி என்பவன் வேறு யாரோ இல்லை…..அதே தாயின் மகன் தான்…..!!!
தனது மகன் தனது மகளுக்கு இழைத்த வன்முறையை மறைக்கும் தாயும் – ஒரு பெண் தான் என்பதை உணர்ந்ததும் நமது சமுதாயமே சாக்கடையாக உள்ளது என்று வெளிப்படையாக தெரிகிறது.
நமது வீடும், வீட்டில் இருக்கும் நமது குடும்பத்தினர்களும் தான் நமக்கு பாதுகாப்பு என்று நாம் நினைத்து கொண்டு…… இல்லை இல்லை நம்பிக் கொண்டு இருந்ததை சுக்குநூறாக உடைக்கிறது ‘நெருஞ்சி முள் படுக்கை’ என்னும் கதை – மிகவும் பொருத்தமான தலைப்பு – முள் மீது படுப்பது என்பது எவ்வளவு வலி என்பதை நாம் அறிவோம் ; ஆனால் இந்த கதையைப் படித்த பிறகு அந்த வலியை அனுபவித்த உணர்வு தான் ஏற்படுகிறது.

‘ அவிழ்க்கப்படாத முடிச்சுகள் ‘ என்ற கதையில் வரும் ராமன் என்பவனின் ஒழுக்கமற்ற வாழ்க்கையைத் திருத்த அவனது தாய்க்கும் வக்கில்லை , அவனது மனைவிக்கும் அதை கண்டு வருத்தப்படுவதைத் தவிர அதை தைரியமாக எதிர்த்து நிற்க துணிச்சல் இல்லை.
இச்சமூக பெண்கள் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் இழந்தவராக இருக்கிறார்களோ என்று ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது இக்கதை.

இத்தொகுப்பை வாசித்து முடித்தவுடன், நமக்குக் கிடைத்திருக்கின்ற வாழ்க்கை உண்மையிலே அரிய பொக்கிஷம் . ஆகையால், நாம் நன்றியுணர்வுடன், இல்லாதவர்களோடு, பொருளை மட்டுமல்ல, வார்த்தைகளையும், தைரியத்தையும், புரிதலையும் பகிர்ந்து வாழவேண்டும் என்ற உணர்வே மனம் முழுதும் நிரம்பியிருந்தது.

நன்றி!

 

நூலின் தகவல்கள் 

நூல் : தொரட்டி

ஆசிரியர் : இறைமொழி
                        டிசம்பர் 2023

பதிப்பகம் : நம் பதிப்பகம்

பக்கங்கள்: 120

விலை : 160ரூ/-

 

எழுதியவர் 

பா. கெ. கௌசல்யா

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

One thought on “இறைமொழி எழுதிய “தொரட்டி” – நூலறிமுகம்”
  1. நமது சிந்தனையை தூண்டும் விமர்சனம். சிறப்பு வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *