மக்களால் பெரிதும் போற்றப்படும் கலை வடிவம் கதை இலக்கியம். இத்தகைய கதை இலக்கிய வடிவத்தின் பெரும் மாற்றம் இந்நாவல். அத்தோடு மட்டும் நின்று விடாமல் சமூகத்தினுடே சென்று மக்களின் வாழ்க்கையும் உரக்க பேசியது. இதுவரை இலக்கியத்தில் யாரும் பேசாத மொழிநடை, யாரும் பார்க்காத களம்- சேரி, யாரும் முகராத வாசனை – மலம், யாரும் யோசித்திராத வாழ்க்கை என தகழி சிவசங்கரப் பிள்ளை அவர்களால் 1947 இல் எழுதப்பட்ட நாவல் “தோட்டியின் மகன்”

ஊர் தனியாய், சேரி தனியாய் என பிரிக்கப்பட்டு வாழும் மக்களை பற்றியும் , அவர்கள் இந்த சமூகத்தில் சக மனிதனாய் வாழ்வதற்காக ஏங்கி தவிப்பதை பற்றியும் தன் எழுத்தின் மூலம் அனலாய் பொரித்து தள்ளிவிட்டார்.

மறுஉருவாக்கம் :

                தோட்டியின் வாழ்விலும் அன்பு, ஸ்பரிசம், காதல், ஆசை, விருப்பம் ஆகியன உண்டு என்பதை உணர்ந்தவராய் மனங்கசந்து மொழி பெயர்த்தார் சுந்தர ராமசாமி அவர்கள்.தகழியை தன் ஆசானாய் ஏற்று 1951ல் தமிழில் இந்நூலை எழுதினார்.

தோட்டிகளும் தொழிலாளி வர்க்கம்தான் என்ற கேள்வியோடு தொடங்கினார் ஜி.நாகராஜன். தோட்டிகளும் தன் வாழ்விடங்களை தன் பிள்ளைகளின் வாழ்க்கை சக மனிதர்கள் போல வாழ எண்ணி நடைபெறும் போராட்டமே தோட்டியின் மகன். இந்நாவல் சுடலை முத்துவின் வாழ்க்கை போராட்டதை படமாக்கியுள்ளது.

சுருக்கம்:

         இந்நாவல் கேரளாவில் ஆலப்புழை பகுதியை கதைகளமாக கொண்டுள்ளது. இங்கு மக்கள் தமிழ்நாட்டின் திருநல்வேலி பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட மலம் அள்ளும் தொழில் செய்பவர்கள்.அங்கு மக்கள் தீடிர் தீடிர்னு ஏற்படும் காய்ச்சலுக்கும், காலரா நோய்க்கும் பாதிக்கப்பட்டு கொத்து கொத்தாக மாண்டு போனார்கள்.

பனுவல் மணம்: தோட்டியின் மகன்

இப்படி தனது ஆயுட்காலம் முழுவதும் வாளியும் மண்வெட்டியுமாக மலம் அள்ளும் தொழில் செய்து வந்த இசக்கிமுத்து என்னும் தோட்டி காய்ச்சல் காரணமாக இறந்து போகிறார். அவரின் மகன் அவரது தொழில் வாரிசாக வாளியையும் மண்வெட்டியையும் கையில் ஏந்தியபடி செல்கிறான். இந்த சுடலை முத்துவின் முழு வாழ்க்கை லட்சியமும் இவரது மகன் இந்த தொழிலுக்கு வரக்கூடாது என்பதே. இவரது மகன் என்னவாக போகிறான் என்னும் பெரும் கேள்வியோடு நாவல் தொடங்கி நடைபெறும்.

சுடலை முத்து:

         இசக்கி முத்துவின் மகன் சுடலை முத்து இவன் வேண்டா வெறுப்பாய் தன் தந்தையின் தொழில் வாரிசாக மாற்றப்பட்டான். அவன் தன் தந்தையை போல இல்லாமல் வாழ ஆசைப்பட்டான். பின் அவன் தோட்டியாக இருந்தும் தோட்டிகளை போல வாழமல் இருக்க நினைத்தான். அவனுக்கு பணத்தை சேர்த்து வைக்கவும் அதனை பத்திரப்படுத்தி வைக்கவும் தெரியும். இவன் கள் குடிக்க மாட்டான். இவன் கண்களில் தோட்டியின் பேடித்தனமும் இல்லை. இவன் தன்னை தாழ்வாக எண்ணி கொள்ளவும் இல்லை. இவனது வாழ்கையை நெறியாக வாழ்ந்ததோடு தன் அடுத்த தலைமுறை தோட்டியாக இருக்ககூடாதென எண்ணினான்.

காதல் வாழ்க்கை:

        தோட்டிகள் ஒன்றுசேரும் மலக்கிடங்கு ஒன்றில் வள்ளியை கண்டான், காதல் கொண்டான் அவளிடம் தன் வாழ்வின் இலட்சியத்தை ஆசைகளை வெளிப்படுத்தினான். இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மணம் முடிந்த மறுநாளே பழங்குடிசை செப்பனிடப்பட்டது. வீட்டுக்கு தேவையான எல்லாச் சமான்களும், செப்பு பாத்திரங்களும், தவளை, குவளை, கட்டிலும், பெட்டிகளும் என அந்த சேரியில் இருந்த மற்ற வீடுகளை விட சற்றே வித்தியாசப்பட்டது இவனது வீடு.

தெருவாசிகளை போல் கடவுள் நம்பிக்கை கொண்டு பட்டையும் கொட்டையும் போட்டுக் கொண்டான். வீட்டின் ஓரத்தில் முருகன் படம் மாட்டி வைத்துக் கொண்டான். தன் மனைவியையும் தன்னைப்போல் தெய்வப்பக்தி உடையவளாகவும், தூய்மையாகவும் இருக்க பழக்குவிக்கிறான். இந்நிலை சுடலைக்கும் வள்ளிக்கும் மகன் பிறக்கிறான் தன் மகனுக்கு தான் வேலை பார்க்கும் வீடுகளில் இருக்கும் பிள்ளைகள் போல் பெயர் வைக்க எண்ணினான். தன் மகனுக்கு “மோகன்” என்று பெயர் சூட்டினான்.

மறுதளிப்புகள்:

          மோகனுக்கு நல்ல கல்வியை தர வேண்டும் என பள்ளிக்கூடம் தேடி சென்றான். அங்கிருந்த ஆசிரியர் மோகனை பள்ளியில் சேர்க்க மறுதளித்தனர். அரசு பள்ளியை தேடி தன் பிள்ளையை அழைத்துக்கொண்டு சென்றான் சுடலை. அங்கேயும் மறுதளிப்பு நிகழ தனக்கு தெரிந்தவர் ஒருவர் மூலமாய் இருபது ரூபாய் லஞ்சம் கொடுத்து தன் மகனை பள்ளியில் சேர்த்து விடுகிறான். சுடலையின் வாழ்க்கை தன் லட்சிய‌ இலக்கை தொட்டது.

தலித்திய அரசியல் பதிவுகளில் ...

தோட்டியின் மகன் பள்ளிக்கு செல்கிறான், மோகன் ஒரு தோட்டியின் மகனாக இருக்கலாம் ஆனால் மோகனின் மகன் தோட்டியின் மகனாக இருக்கவே கூடாது என எண்ணிக் கொண்டான். தன் தகப்பனின் இறந்த சடலத்தை தொடக்கூட முடியாமல் நீலம் பரவி இருந்த அவரது அழுகி போன முகத்தை தூரத்தில் நின்று கண்டு கதறி அழுதது போன்ற நிலைமையெல்லாம் தன் மகனுக்கு நிகழ்வே கூடாது. அவன் எப்படியாவது படித்து முன்னேறி விட வேண்டும் என்று பேராவல் கொண்டான்.

மோகனின் நிலை:

       மோகனை தோட்டியின் மகன் போல் தெரியாமல் வளர்க்க அவனது பெற்றோர் மிகுந்த மெனக்கெடுகிறார்கள். ஆனால் இந்த சமூகம் அவனையும் விடவில்லை. அவனது ஆசிரியர்கள் இவனுக்கெல்லாம் படிப்பே வராது என்று எப்போதும் அவனை அடித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவன் தான் தோட்டியின் மகன் என்பதை உணர தொடங்கிவிட்டான். படிப்பின் மீது மெல்ல மெல்ல வெறுப்பு வந்தது. அவனும் தோட்டியாவதற்கு தயாராக்கப்பட்டான். சுடலை மற்றும் வள்ளியின் அத்தனை பிராயசங்களும் வீணாக்கப்பட்டது. மோகன் ஒரு வாலிப தோட்டியாக கையில் வாளியை ஏந்தினான்.

என்ன இந்த தலைமுறை தோட்டிகளுக்கென ஒரு சங்கம் இருந்தது. இவர்களுக்கு தங்கள் சம்பளம் எவ்வளவு என்று தெரியும். மோகன் ஒரு புரட்சிக்காரனாக உலா வந்தான். ஒரு போராட்டத்தில் குண்டடிப்பட்டு இறந்தும் போகிறான்.

முடிவுரை:

“ஒரு சாதி இந்துவுக்குப் பிறந்த குழந்தை நீதிபதி ஆவதற்கான கனவை கொண்டுருக்கிறது. ஆனால் தோட்டியின் பிள்ளையோ இன்னொரு தோட்டியாவதற்கான கொடூர யதார்த்தத்தைப் கொண்டுருக்கிறது”.
                                -அம்பேத்கர்

நிலம், கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் குரலாக ஆசையாக லட்சியமாக இங்கு ஒலிக்கும் குரல் சுடலைமுத்துவுடையது. மறுதளிக்கப்பட்ட தோட்டியின் மகனாக போராளியாக ஒலிக்கும் குரல் மோகனுடையது. இப்படியாக இவர்களின் வாழ்வை வலி நிறைந்த வார்த்தைகளால் எழுதிய தகழியும். மொழி பெயர்த்த சுந்தர ராமசாமியும் போற்றுதலுக்குரியவர்கள்.

புத்தகம்: தோட்டியின் மகன் 
ஆசிரியர்:தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில்: சுந்தர ராமசாமி

-திவ்யா ரகுபதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *