ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – “பிரம்மைகளின் மாளிகை” – நா.வே.அருள்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – “பிரம்மைகளின் மாளிகை” – நா.வே.அருள்

 

 

“பிரம்மைகளின் மாளிகை”
இந்திரன் – உலக வரைபடத்தில் ஒரு உள்ளூர்க்காரன்

இந்திரனின் கவிதை உலகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறார். 1965 முதல் அவர் கவிதைகளில் இயங்கி இருந்தாலும் அவருக்கான புழங்குதளம் மரபுக் கவிதை உலகமாக இருந்திருக்கிறது. அதுதான் ஞானம்பாடியாக அவர் இருந்த கூட்டுப் புழு பருவம். 1982 வரையிலும் இந்தக் கூட்டுப்புழுவுக்குப் புதுக்கவிதைச் சிறகுகள் முளைக்கவில்லை. 1982 க்குப் பிறகுதான் புதுக்கவிதைத் தோட்டத்தில் பட்டாம் பூச்சியாகப் பறந்து திரிந்திருக்கிறார்.

பிரம்மைகளின் மாளிகை என்கிற இந்தத் தொகுப்பு பட்டாம் பூச்சிப் பருவத்தைத்தான் சுமந்து வருகிறது.

1982 இல் அவரது அறைக்குள் வந்திருக்கிறது ஆப்பிரிக்க வானம். அவர் கவிதையின் நீலத்தையும், மேகங்களையும், சந்திர சூரியரையும், நட்சத்திரங்களையும், வானவில்லையும் அந்த வானத்தில்தான் தரிசித்திருக்கிறார்.

இந்திரனை நான் பரிசோதனைகள் மீகாமன் என்பதற்குப் பல காரணங்களைச் சொல்ல முடியும். முதற்காரணம் அவர் தன்னை ஒரு விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ளுவது மட்டுமல்ல, வாசகரின் மறுவிசாரணைக்காகவும் காத்திருக்கிறார். அவரது தாழ்வாரத்தில் எப்போதுமே தற்காப்புக் கலைக்கான ஆயுதங்கள் தயாராகவே இருக்கும்.

இன்னமும் கூட கவிதைகளை எழுதுவதில் களைப்பு வராத பவளவிழா நாயகனைப் பரிசோதனைகளின் மீகாமன் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல?

அர்த்தமில்லாத கவிதைகளை எழுதுகிற கவிதை நாயகர்களின் காலகட்டத்தில், கவிதைகளை எழுதுவதன் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுவது விசித்திரம்தான்.

இந்திரன் இலக்கியப் போர்க்களத்தில் வெற்றிகண்ட மன்னன் என்று தன்னை அறிவித்துக் கொள்ளவில்லை. ஆனால் தொடர் தோல்விகளினால்தான் அவரது புதிய புதிய பரிசோதனை முயற்சிகளைத் தொடர்ந்திருக்கிறார்.

“என் கவிதைகளை நான் காலத்துக்குக் காலம் மாற்றிக் கொண்டே வந்திருக்கிறேன். அது ஏன்? பாழுங்கிணற்றுக்குள் விழுந்து விட்டவன் இதுவா அதுவா என்று புரியாத சமிக்ஞைகளைக் காட்டி வெளியில் இருப்பவர்களை அவை தொடவில்லை என்பதால் புதுப் புது சமிக்ஞைகளை முயற்சி செய்து பார்ப்பது போல நான் பல்வேறு கவிதை வகைமாதிரிகளைப் பரீட்சித்துப் பார்த்து வந்திருக்கிறேன் என்றுதான் தோன்றுகிறது” என்கிறார் இந்திரன்.

1975 களில் அப்போதைய பம்பாய் வாழ்க்கையின் பரிச்சயம் இலக்கிய ரீதியாக இந்திரனின் கருதுகோள்களை இடம்பெயர்த்திருக்கிறது. இந்திரனின் வார்த்தைகளில்…. “ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயா, நிசிம் எசிகீல், கமலாதாஸ், ப்ரியா அதர்கர் ஆகியோருடனான பழக்கம் கவிதை மொழியைக் கையாளும் முயற்சி குறித்தும் எனக்கு இருந்த பழைய நம்பிக்கைகளில் பலவற்றில் உடைப்புகள் ஏற்பட்டன”

இந்த எண்ணங்களின் வெளிப்பாடாக அறைக்குள் வந்ததுதான் ஆப்பிரிக்கவானம்.

பிரம்மைகளின் கடைக்கால் இப்படித்தான் தொடங்கப்பட்டது. அதனுடைய வழிதான் ஒரு நதி வருவதுபோல இந்திரனின் கவிதை நதி நகர்ந்து வந்திருக்கிறது. சமீபத்திய நதி தீரம்தான் “பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம்”.

அந்நியன் முதல் பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம் வரையிலுமான ஒரு நெடும்பயணத்தைத்தான் “பிரம்மைகளின் மாளிகை” நடத்தியிருக்கிறது. தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கியமான கவிதைத் திசைகாட்டி மரமாக இந்திரன் இருந்திருக்கிறார் என்பதற்கு அவரது கவிதைகள் எழுத்து சாட்சிகளாக இருக்கின்றன.

“இத்தொகுதியில் இருக்கும் கவிதைகள் 21ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் யுகத்தைச் சேர்ந்த மனிதன் என்ற வகையில் எனது குரலைப் பதிவு செய்து தீர வேண்டும் எனும் கட்டாயத்தின் ஒரு வெளிப்பாடு” என்கிற இந்திரன் சந்கேமேயில்லாமல் டிஜிட்டல் கவிஞர்தான்.

கறுப்பு இலக்கியம் முதல் ஜெர்மன் எக்ஸ்பிரஸினிசம் வழியாக எதிர் கவிதைகள் வரை நடைபோடுகிற உலக கவியின் அனுபவங்கள் வாய்ந்த ஒருவர் நம் உள்ளூரில் இருக்கிறார் என்பதே பெருமிதம்தான். ஐரோப்பாவின் பசிபிக் கடலின் உப்பு புதுவைக் கடற்கரையிலும் கரிக்கும்தானே?

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *