மனித வாழ்வியல் முறையில் மிகச் சரியாக இயற்கையோடு ஒன்றி சந்தோசத்திற்கு இமி அளவும் குறைவில்லாமல், ஒவ்வொரு நொடிப்பொழுதும் அழகாகவும், சந்தோஷமாகவும் வாழும் ஒரே இடம் கிராமம் மட்டுமே.நாம் பலபேர் கிராமத்தில் பிறந்து, வேலை நிமித்தமாக நகரம் என்னும் ராட்டினத்தில் ஏறிவிட்டோம். அந்த ராட்டினத்தில் சுற்றும் பொழுது அது முதலில் அளவிலா சந்தோஷத்தைத் தரும்.
அதுவே போகப் போக வெறுப்பாக மாறும். அதிலிருந்து இறங்க மனம் இருந்தும், பல காரணங்களுக்காக அதை விட்டு இறங்காமலேயே தொடர்ந்து அதிலே பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதிலேயே ஊறிப் போய் நமது சந்தோஷத்தைத் தொலைத்து விட்டோம். அந்த ராட்டினத்தில் பழுது ஏற்பட்டால் ஒழிய நம்மால் அதிலிருந்து விடுபட முடியாது. அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நாம் வாழ்ந்த சந்தோசமான நினைவுகளே நம்மை ஆற்றுப்படுத்தும். ஆனால், அந்த அழகான நினைவுகள் அவ்வளவு எளிதாக நாம் நினைவில் கொள்ளமாட்டோம்.
எழுத்தாளர் சோலச்சி அவர்களின் “தொவரக்காடு” புத்தகத்தை வாசிக்கும் பொழுது கிராமத்தில் வாழ்ந்த அழகிய நாட்கள் நம்மிடம் மீண்டும் துளிர்விடும். நகரத்தில் பிறந்து வளர்ந்த நபராக இருந்து இந்த புத்தகத்தைப் படித்தால் நிச்சயம் ஏதாவது ஒரு கிராமத்தை நோக்கி உடனே புறப்பட ஆயத்தமாவது உறுதி.
“சுக்குநூறாய்” கதை பள்ளி நாட்களில் படிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி, நட்பு, ஈர்ப்பு, போட்டி, பொறாமை, ஏமாற்றம் இவை அனைத்தையும் மிகச் சரியான விகிதத்தில் கொடுத்து நம்மை பள்ளி பருவத்திற்கு கூட்டி செல்வார் எழுத்தாளர் சோலச்சி. இக்கதையைப் படித்து முடித்ததும் நிச்சயம் நம்முடைய பள்ளி கால நினைவுகள் நம்மை விட்டு நீங்காமல் பல மணி நேரம் சுற்றி கொண்டே இருக்கும்.
“பால்கார நந்தன் ” கதையில் பால்காரர்களின் வாழ்வியலை மிக எதார்த்தமாகச் சொல்லி இருப்பார். அதிகாலை சேவல் உடன் போட்டிப் போட்டுக் கொண்டு எழுந்து நந்தனும் அவரது மனைவியும் ஆண் பெண் பேதம் இன்றி பால் கரந்து, நாம் கண்விழிக்கும் வேளையில் நம் வீட்டு வாசலுக்கு பால் கொண்டு வரும் நந்தனின் கதை. நந்தனும் அவனது மனைவியும் எப்படி பால் வியாபாரம் செய்ய தொடங்கினார்கள். எவ்வளவு சிரமப்பட்டு இன்று எப்படி இருக்கிறார்கள் என்றும், காலையில் நமக்கு கிடைக்கும் பாலுக்கு பின்னாடி எவ்வளவு கதையும், கண்ணீரும் இருக்கிறது என்று பலரும் அறியாத விஷயத்தை நமக்கு அழகாக தெரியபடுத்துகிறார்.
இக்கதை படித்தபின் பால்காரர் நம் வீட்டிற்கு தாமதமாக வந்தால் இனிமேல் அவரை யாரும் வசைப்பட மாட்டார்கள். அதுதான் இந்த கதையின் சிறப்பு.
“ரெண்டாள் வீதி” கதை கிராமத்தில் இருந்து டவுனுக்கு வேலைக்கு சென்று வரும் எளிய நபர்களைப் பற்றி விவரிக்கிறது.
அவர்களுடைய வாழ்வியல் எப்படி இருக்கும். அவர்கள் பயணப்படுவது எப்படி.? அவர்கள் வேலை முடித்து வீட்டிற்கு திரும்புவது எப்படி..? என்பதைப் பற்றி மிக அழகாகவும் நேர்த்தியாகவும் சொல்லப்பட்டிருக்கும். காலையில் தேனியாய் சுறுசுறுப்பாய் வேலைக்குச் செல்பவர்கள், சிலர் இரவில் வீடு திரும்பும் பொழுது நத்தை போல மண்ணில் ஊர்ந்து வருவது எப்படி என்று விவரித்து இருக்கும். பெரிய பேருந்து நிலையம் அருகிலேயே இருக்கும் மதுபான கடையும் டிலாக்கி லாட்ஜ்ம் எப்படி உழைத்துக் களைத்து வருபவர்களின் களைப்பைப் போக்கி அவர்களுக்கு தெரியாமல் அவர்களை ஓட்டாண்டி ஆக்கும் என்பதை கண்முன்னே திரைப்படமாக ஓட்டிக்காட்டும்.
ஒவ்வொரு பேருந்து நிலையம் அருகிலும் ராத்திரி தனியாக இருக்கும் ஆட்களை பார்த்து என்ன சார் ரூம் வேணுமா என்று குரல் கேட்டால் அனைவருக்கும் இந்த கதை நிச்சயம் ஞாபகம் வரும். வேண்டாம் என்று அலறி அடித்து ஓடுவார்கள்.
“தொவரக்காடு” என்கிற கதை போதும் பொண்ணு என்ற பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி விவரிக்கிறது. தொடர்ந்து நான்கு பெண் பிள்ளைகள் பிறக்கவே ஐந்தாவதாக போதும் பொண்ணு என்று பெயர் காரணத்துடன் பிறந்தவள்.
அந்த போதும்பொண்ணுவுடன் அதிகமாக பாசம் வைத்து நேசித்து அதிக நேரம் சுற்றித் திரியும் குட்டிப் பையன் அருண் மட்டுமே. அருண் போதும்பொண்ணை விட பதினைந்து வயது சிறிய பையன். அவன் எப்பொழுதுமே அத்தை என்று உருக போதும்பொண்ணு அருணை தனது மகனாகவே பாவித்து வளர்க்கிறார். போதும்பொண்ணு அருணுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவனுக்காக எதையும் செய்யக் கூடியவள்.
வயதுக்கு வந்தவுடன் அதாவது பருவம் அடைந்தவுடன் வயல் வேலைக்குச் செல்வதை நிறுத்தி விட்டு பக்கத்து கிராமத்தில் லாரியில் மணல் ஏற்றும் வேலைக்குச் செல்கிறார். இரவுதான் வீடு திரும்புவாள். இந்த காலகட்டங்களில் அருண் போதும்பொண்ணுவை பார்க்காமல் தவிக்கிறான். போதும் பொண்ணு லாரி ஓட்டுனர் ஒருவனால் நயவஞ்சகமாக ஏமாற்றப்படுகிறாள். போதும்பொண்ணு வீட்டில் தெரியவே பெரிய கலவரம் வெடிக்கிறது. அந்த நயவஞ்சகன் மீது கோபம் கொண்ட போதும்பொண்ணு வீட்டிலிருந்து தொவரக்காட்டிற்குள் நடந்து செல்கிறார். அங்கு நடக்கும் சம்பவம் மனதை நிலைகுலையச் செய்கிறது. பாசம் வைத்தால் ஒரு பெண் பனைமரமும் ஏறுவாள். அதே பாசத்தினால் தனது வாழ்க்கையையும் இழப்பாள் என்று பல பெண்களின் வலியை பற்றி எழுதி இருப்பார்.
அந்தப் பெண்ணுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலமை வந்தது என்று நம்மையே கேள்வி கேட்க வைத்து விடும். வெளியில் தெரியாமல் எத்தனையோ போதும்பொண்ணுகள் துன்பப்படுகிறார்கள் என்பதை நம்முன்னே காட்சிப்படுத்தி இந்தச் சமூகத்தின் மீது நம்மூலமாக கேள்விகளை கேட்க வைக்கிறார் எழுத்தாளர் சோலச்சி.
இதுவரை நாம் கிராமத்து மனிதர்களை பார்த்த பார்வைக்கும் இந்த புத்தகத்தை படித்த பின்பு அவர்களை பார்க்கும் பார்வைக்கும் ஆயிரம் வித்தியாசம் கண்டிப்பாக நமக்குள் ஏற்படும். அதுவே எழுத்தாளர் சோலச்சியின் மிகப் பெரிய சாதனை. இக்கதையின் வாயிலாக எழுத்தாளர் சோலச்சி அவர்கள் கிராமத்திலே பிறந்து கிராமத்திலே வளர்ந்திருக்கக் கூடாதா என்று நம்மை ஏங்க வைத்து இருப்பார்.
புதுக்கோட்டையின் வட்டார மொழியினை வழக்கு மாறாமல் மண்வாசனையோடு வாரி வழங்கியிருக்கும் எழுத்தாளர் சோலச்சி அவர்களும் அவரது எழுத்துகளும் தமிழ் உலகில் கொண்டாடப்பட வேண்டும். இந்த வருடத்தில் நான் படித்த மிகச்சிறந்த சிறுகதைப் புத்தகம் இந்த “தொவரக்காடு”. 112 பக்கம் கொண்ட இந்நூலை அகநி வெளியீடு பதிப்பித்து வெளியீடு செய்திருக்கிறது.
பாஸ்கர்கோபால்
நூலின் பெயர் : தொவரக்காடு
ஆசிரியர் : சோலச்சி
பதிப்பகம் : அகநி வெளியிடீடு
விலை : ரூ 120
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்
அருமை