நூல் அறிமுகம்: தோழர் அறம் அவர்கள் தீக்கதிர் நாளிதழில் எழுதிய தெரிந்தெடுக்கப்பட்ட தமிழாக்கக் கட்டுரைகள்
– பெ.விஜயகுமார்.
அழகு தமிழில், எளிய நடையில் மொழியாக்கம்
தோழர் அறம் என்று எல்லோரும் அன்புடன் அழைக்கும் அறம் வளர்த்த நாதன் அம்பாசமுத்திரத்தில் பிறந்து திண்டுக்கல்லில் வாழ்ந்தவர். தன் பெயருக்கேற்ப அறம் வளர்த்து வாழ்ந்தவர், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்துடன் நீண்ட நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆழ்ந்த புலமை கொண்டிருந்தவர். ஆங்கிலத்தில் மார்க்சியச் சிந்தனைகளைத் தாங்கிவரும் சிறந்த கட்டுரைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்து தீக்கதிர் இதழுக்கு நேரில் கொண்டுவந்து கொடுப்பதைத் தன்னுடைய கடமையாகக் கருதியவர். தோழர் அறம் எழுதிய 23 கட்டுரைகளைத் தெரிந்தெடுத்து நூல் வடிவில் தோழர் ஆர்.எஸ்.மணி அவர்கள் கொண்டுவந்துள்ளது பாராட்டுதலுக்குரியது. நூலில் ’முதல் பாகம்’ என்று குறிப்பிட்டிருப்பது அடுத்த பாகம் விரைவில் வரவிருப்பதை உணர்த்துகிறது. வாசகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
1990களில் தீக்கதிர் அலுவலகத்தில் கட்டுரை எழுதுபவர்கள் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் தோழர் அறத்தை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பை நான் பெற்றேன். பழகுவதற்கு இனிமையான தோழர். எளிமை, நேர்மை, மார்க்சியத்தில் ஆழ்ந்த புலமை, எழுதும் திறன் ஒருங்கே அமையப் பெற்றவர். மொழிபெயர்ப்பு சிரமமானதொரு கலை. இரு மொழிகளிலும் வல்லமை கொண்டிருக்க வேண்டும். அறம் அவர்களின் கட்டுரைத் தொகுப்பே இதற்குச் சாட்சியாகும். ஆங்கிலம் அறியாத பொதுவுடமை இயக்கத் தோழர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளை அழகு தமிழில், எளிய நடையில் மொழியாக்கம் செய்து தீக்கதிர் இதழில் வெளியிட்டார். People’ Democracy, Front Line, The Hindu போன்ற ஆங்கில ஏடுகளில் வெளிவரும் அரிய கட்டுரைகளை முழுவதும் உள்வாங்கி அவற்றினை தெள்ளிய தமிழில் எழுதி யாவரும் படித்துப் பயனடைய வழி செய்தார்.
தொகுப்பில் உள்ள 23 கட்டுரைகளில் தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிபாட் ஒன்பதும், தோழர் ஹரி கிஷன் சிங் சுர்ஜித் ஆறும், அஸ்கர் அலி எஞ்சினியர் மூன்றும், ஏ.ஜி.நூரானி இரண்டும், தாமஸ் ஆப்ரஹாம், ஜான் செரியன், மிருதுள்டே ஆகியோர் தலைக்கு ஒரு கட்டுரையும் எழுதியுள்ளனர். இ.எம்.எஸ். சுர்ஜித் இருவரும் கட்சியின் பொதுச்செயலாளர்கள் என்ற முறையில் கட்சி நிலைமைகள் குறித்து காத்திரமான கட்டுரைகளை அவ்வப்போது People’s Democracyயில் எழுதுபவர்கள்.
அஸ்கர் அலி எஞ்ஜினியர் மிகப் பெரிய இஸ்லாமிய அறிஞர்.
இந்தியாவின் மதநல்லிணக்கம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டவர். Institute of Islamic Studies எனும் நிறுவனத்தின் மூலம் ஒட்டு மொத்த இஸ்லாமிய மதத்திலும், குறிப்பாக இஸ்லாமியப் பெண்கள் மத்தியிலும் சீர்திருத்தங்களைச் செய்திட மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் Centre for Study of Society and Secularism (CSSS) என்ற மையத்தை உருவாக்கி இந்தியாவில் மதநல்லிணக்கம் சிறக்க அரும்பாடுபட்டார். இந்தியாவில் விடுதலைக்கு முன்னும், பின்னும் நடந்த மதக் கலவரங்கள் குறித்து ஆழ்ந்த ஆய்வுகள் நடத்தி நிறைய நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
ஏ.ஜி.நூரானி சிறந்த வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இந்தியாவில் இந்துராஷ்டிரத்தை நிறுவிட வேண்டும் என்ற வெறியுடன் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பற்றி முழுமையான ஆய்வுகள் மேற்கொண்டு நூல்கள் எழுதியுள்ளார். ஃப்ரண்ட் லைன், இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஸ்டேட்ஸ்மென், ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஆகிய இந்திய பத்திரிகைகளிலும் டான் என்ற பாகிஸ்தானிய பத்திரிகையிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய் ‘ஆர் எஸ் எஸ் – இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ எனும் நூலினை தோழர் ஆர்.விஜயசங்கர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர உறுப்பினரும், சிறந்த மார்க்சிய சிந்தனையாளருமான மிர்துள்டே வங்காளம், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நிறைய கட்டுரைகளும், நுல்களும் எழுதியுள்ளார். ஜான் செரியன் ஃப்ரண்ட் லைன் இதழில் உலக அரசியல் குறித்த கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருபவர். தாமஸ் ஆப்ரஹாம் சிறந்த பத்திரிகையாளரும், கட்டுரையாளரும் ஆவார். ‘சார்ஸ்- இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொற்று நோய்’ என்ற புத்தகத்தை எழுதியவர். இத்தகு மாபெரும் ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இதனை தொகுத்துக் கொடுத்த ஆர்.எஸ்.மணியின் பணி தொடரட்டும்.
அரசியல் வழியே அறம் வளர்க்கும் தோழர்
தோழர் ஜி.ராமகிருஷ்ணனின் ‘களப்பணியில் கம்யூனிஸ்டுகள்’ நூலில் தோழர் அறம் பற்றி எழுதிய ‘அரசியல் வழியே அறம் வளர்க்கும் தோழர்’ என்ற கட்டுரையை இப்புத்தகத்தில் இணைத்தது முத்தாய்ப்பாக இருக்கிறது. தோழர் அறத்தின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றைப் படித்துவிட்டு புத்தகத்தை வாசிக்கச் செல்வது நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை. இத்தகு செம்மாங்கு வாழ்வு வாழ்ந்த மனிதரால் மட்டுமே இப்படியான அர்ப்பணிப்புடன் செயல்பட முடியும் என்பதை தோழர் ராமகிருஷ்ணனின் கட்டுரை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அறம் இளமையிலேயே பொதுவுடைமை இயக்கத்துடன் தொடர்பு கொன்டு வாழ்நாள் முழுவதும் அதனுடனேயே பயணித்துள்ளார் என்பதறிந்து மனம் நெகிழ்ச்சி அடைகிறோம். கல்லூரியில் படிக்கும்போதே கைதாகி, சிறை சென்று, காவல்துறையினரின் சித்தரவதைகளுக்கு ஆளாகி அனைத்து தியாகங்களையும் செய்துள்ளார்.
தீக்கதிரை மக்களிடம் எடுத்துச் சென்றவர்…
பள்ளிகளில் பணியாற்றிய காலத்தில் மாணவர்களுக்குச் சரியான அரசியலையும், வரலாற்றையும் கற்பித்துள்ளார். திண்டுக்கலில் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்ற பின்னர் பணி ஓய்வு பெற்றுள்ளார். கழுகுமலையில் ஆசிரியராகப் பணியாற்றும்போது அந்நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டும் பணியை பல சிரமங்களுக்கும் இடையில் சாதித்துள்ளார். அச்சமயத்தில் வார இதழாக வந்த தீக்கதிரை மக்களிடம் எடுத்துச் செல்லும் வேலையையும் பொறுப்புடன் செய்துள்ளார். அவர் வீட்டுக்கு தோழர்கள் பி.ராமமூர்த்தி, ஏ.கே.கோபாலன், பி.சீனிவாசராவ், நல்லக்கண்ணு, ஜீவானந்தம், வி.பி.சிந்தன் போன்ற மாபெரும் தோழர்கள் எல்லாம் வருவார்கள் என்ற செய்தியே நம்மை பிரமிக்கச் செய்கிறது. ஆர்.எஸ்.மணிக்கு தத்துவ ஆசானாக இருந்ததுடன் அவரைத் தன் மருமகனாகவும் தோழர் அறம் வரித்துக் கொண்டார் தோழர் அறத்துடன் சிறுவயதில் பூத்த தோழமை அவர் மறையும்வரை நீடித்தது ஆர்.எஸ்.மணி பெற்ற பெருமையாகும்.
ஒரு புதிய நாகரிகத்தை நோக்கி……
’ஒரு புதிய நாகரிகத்தை நோக்கி’ என்ற தொகுப்பின் முதல் கட்டுரையின் தலைப்பே கவித்துவமாக அமைந்துள்ளது. சார் மன்னரை வீழ்த்திய சோவியத் புரட்சியை இவ்வார்த்தைகளால் அழகுடன் விவரித்தவர்கள் சிட்னி வெப்- பியாட்ரிஷ் வெப் தம்பதிகள். பெரும் எழுச்சியுடன் உருவான சோவியத் யூனியன் 74 ஆண்டுகள் கடந்து 1991இல் வீழ்ந்தபோது முதலாளித்துவம் ’சோசலிசம் முடிந்துபோனது’ என்று கொக்கரித்தது. ’முதலாளித்துவத்துக்கு மாற்றில்லை’ (There is no Alternative) என்று ஆணவத்துடன் பேசியது. இச்சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1993இல் கல்கத்தா நகரில் உலக நாடுகளின் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியது. முதலாளித்துவத்துக்கு மாற்று சோசலிசமே என்று உரக்கக் கூறியது. இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகளை தோழர் இஎம்எஸ் விளக்கும் கட்டுரையே தொகுப்பின் முதல் கட்டுரை.
”சோவியத் யூனியனும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் தற்காலிகமான ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளன. மார்க்சியமும், லெனினிசமும் இன்றுங்கூட காலத்துக்கும் பொருந்தும் தத்துவங்களே என்று மாநாடு விளக்கியது. அவை மீண்டும் உயிர்த்துடிப்புடன் எழ வேண்டுமென்றால், சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் நிகழ்ந்த தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க உலகெங்கிலும் உள்ள மார்க்சிஸ்ட் – லெனினிஸ்டுகள் ஆழ்ந்து பரிசீலனை செய்திட வேண்டும். முன்னாள் சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மீண்டும் ஒரு ‘புதிய நாகரிகத்தை’க் கொண்டுவர பாடுபட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்கு நாம் நேசக்கரங்களை நீட்டுவோம். அந்நாடுகளில் மீண்டும் ஒரு முறை புதிய நாகரிகம் துளிர்க்கத் தொடங்கியுள்ளது. தங்களது பாதையில் கோர்பசேவ், எல்ட்சின் போன்றோர் வீசிய தடைக்கற்களை தகர்த்தெறிந்துவிட்டு அம்மக்கள் முன்னேறிச் செல்வார்கள் என்ற நம்பிக்கையுடன் அந்த மாநாடு முடிந்தது.
விமர்சனமும், சுயவிமர்சனமும்
தோழர் இஎம்எஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நடைபெறும் விமர்சனம் மற்றும் சுயவிமர்சனங்களின் தேவை பற்றி இரண்டு கட்டுரைகளில் விளக்குகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதன் கொள்கைகள், ஸ்தாபன வளர்ச்சி குறித்து மனந்திறந்த விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் மேற்கொள்கிறது. இதுவே இக்கட்சியின் பலமாகும். இதைப் புரிந்துகொள்ளாத மற்ற கட்சிகள் கம்யூனிஸ்ட் கட்சியும் கோஷ்டி பூசல்களில் சிக்கித் தவிக்கிறது என்று சரடு விடுகின்றன என்கிறார் இஎம்எஸ். விமர்சனங்கள் மூலமே கட்சி தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேற முடியும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சர்வ தேச கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தொடர்ந்து பல விவாதங்கள் நடத்தியதன் விளைவாக 1951ஆம் ஆண்டில் நடந்த கட்சியின் சிறப்பு மாநாட்டில் நடைமுறைக் கொள்கைகளில் நிலவிய தவறுகள் திருத்திக் கொள்ளப்பட்டன.
அதேபோல் 1959 முதல் 1964 வரை கட்சிக்குள் இரண்டு விதமான சித்தாந்தங்களுக்கிடையே கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இரண்டு மாறுபட்ட கொள்கைத் திட்டங்கள் கட்சிக்குள் நடந்த விமர்சனங்கள் மூலம் வெளிவந்தன. இதனால் 1964இல் கட்சி பிளவுபட்டது. பிளவுபட்ட பின்னரும்கூட விமர்சனங்களும், சுய விமர்சனங்களும் இரண்டு கட்சிக்குள்ளும் நடந்தன. இதன் விளைவாக மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து நாக்சலைட் குழுவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து டாங்கே குழுவும் வெளியேறும் நிலை ஏற்பட்டது. ’செயற்கையான ஒற்றுமை சாத்தியமல்ல’ என்று இஎம்எஸ் தெளிவுபடுத்துகிறார்.
காஷ்மீர் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றி…
தோழர் சுர்ஜித் காஷ்மீர் குறித்து 1995 பிப்ரவரியில் எழுதிய இரண்டு கட்டுரைகள் இன்றும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியா சுதந்திரம் பெற்று பாகிஸ்தான் உதயமாகிய நாளிலிருந்து காஷ்மீர் பிரச்சனை ஒரு தீப்பொறி பறக்கும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. நரசிம்மராவ் தலைமையிலான இந்திய அரசு காஷ்மீர் நிலைமைகள் குறித்து தொடர்ந்து எடுத்துவரும் தவறான முடிவுகளை சுர்ஜித் சுட்டிக்காட்டுகிறார். காஷ்மீர் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றி, அந்த மாநில அரசுக்கு சுயாதிபத்திய அந்தஸ்தை அளித்து மதச் சார்பற்ற இந்திய நாட்டுக்குள் ஒரு அங்கமாக அந்த மாநிலத்தை உருவாக்கிட வேண்டும் என்று சுர்ஜித் அன்று சொன்னது இன்றும் மிகப் பொருத்தமாக இருப்பதைக் கண்டு வியப்படைகிறோம்.
காஷ்மீர் மக்களின் தனித்துவத்தைப் பாதுகாப்பதே காஷ்மீர் பிரச்சனைக்கான தீர்வென்றும், இதற்காக அரசியல் சட்ட விதி 370ஐ வலுவாக்கி காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கட்சி மாநாடு சுட்டிக்காட்டியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கும் இது பொருந்தும். பொதுமக்களின் பணத்தை ராணுவத்துக்காகச் செலவு செய்வதைத் தவிர்த்து நாகாலாந்து, மணிப்பூர், அஸ்ஸாமிய மக்களின் தேவைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கட்சியின் 15ஆவது மாநாடு எடுத்த முடிவை சுர்ஜித் குறிப்பிடுகிறார்
மக்கள் ஜனநாயக முன்னணியின் தேவை
தோழர் சுர்ஜித் கட்சியின் பதினைந்தாம் மாநாட்டின் பெருமைகளை இரண்டு கட்டுரைகளில் எடுத்துரைக்கிறார். மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்திட மக்கள் ஜனநாயக முன்னணி தேவை. இந்த முன்னணியை ஏற்படுத்த இடது மற்றும் ஜனநாயக சக்திகள் வலுப்பெற வேண்டும். கட்சி என்ன நடவடிக்கைகள் எடுக்கப்போகிறது என்பதை அறிய கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல சாதாரண மக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். புதிய பொருளாதாரக் கொள்கைகளால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, மதவாதம் அதிகரித்து நாட்டின் ஒற்றுமைக்கு ஏற்பட்டிருக்கும் அபாயம் இவ்விரண்டையும் எதிர்கொள்ள என்ன நடவடிக்கைகளைக் கட்சி மேற்கொள்ளப் போகிறது என்பதை அறிய மக்கள் ஆவலுடன் உள்ளார்கள். ஏகாதிபத்தியத்திற்கும், சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடே மைய முரண்பாடென மாநாடு மீண்டும் தெளிவாக்கியது. இத்தகு முக்கியமான முடிவுகளை கட்சியின் 15ஆவது மாநாடு எடுத்ததை சுர்ஜித் குறிப்பிடுகிறார்.
மதக் கலவரங்களின் பின்னணி
அஸ்கர் அலி எஞ்சினியர் இந்தியாவில் நடக்கும் மதக் கலவரங்கள் பற்றி ஆழ்ந்த ஆய்வுகள் நடத்தி அதற்கான காரணங்களைப் பட்டியல் இடுகிறார். இந்திய விடுதலைக்கு முன்னர் நடந்த மதக் கலவரங்கள் பிரிட்டிஷ் அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக நடந்தன என்றோம். விடுதலையுடன் சேர்ந்தே வந்த இந்தியப் பிரிவினையால் மாபெரும் மதக் கலவரம் வெடித்தது. விடுதலைக்குப் பின்னரும் மதக் கலவரங்கள் நடப்பதேன்? ஆட்சியைக் கைப்பற்றிட மதவெறியைப் பயன்படுத்தும் கட்சிகளாலேயே மதக் கலவரங்கள் நடைபெறுகின்றன. மதவாதக் கட்சியான பாஜகவில் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியிலும் மெல்லிய மதவாதம் இருப்பதை அஸ்கர் அலி எஞ்சினியர் சுட்டிக் காட்டுகிறார். 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் அமைதியுடன் கைகட்டி வேடிக்கை பார்த்ததைக் குறிப்பிடுகிறார்.
கேரள மாநிலம் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான மாநிலம். 1956இல் அங்கு செல்வாக்கு பெற்றிருந்த கம்யூனிஸ்டுகளை பதவிக்கு வராமல் தடுக்க காங்கிரஸ் கட்சி முஸ்லிம் லீக் கட்சியை உருவாக்கி வளர்த்தது. நாயர் சமூகம் தான் வளர வேண்டும் என்பதற்காக ஆர்எஸ்எஸ் துணையை நாடியது. தேர்தலில் வெற்றி பெற்றிட மத்தியிலும், மாநிலங்களிலும் கட்சிகள் மதம் மற்றும் சாதி வெறிகளைப் பயன்படுத்துகின்றன.
1991இல் ஏற்பட்ட நவீன தாராளமயக் கொள்கையால் பாதிக்கப்பட்ட மக்கள் சாதி, மதவெறியர்களின் பிரச்சாரத்துக்கு இரையானார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நவீனதாராளமயப் பொருளாதாரக் கொள்கையினால் வலதுசாரி அரசியல் தலைதூக்கும் என்பதை அன்றே எச்சரித்தது. பொருளாதாரக் காரணங்களுக்காகவும் மதக் கலவரங்கள் வெடிக்கின்றன. இரண்டு மதப் பிரிவினர்களைச் சார்ந்த வியாபாரிகள் அல்லது சிறு உற்பத்தியாளர்கள் மத்தியில் ஏற்படும் போட்டி மதக் கலவரங்களாகத் திட்டமிட்டே மாற்றப்படுகின்றன. அலிகார், காசி, மீரத், ஹைதராபாத், கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் நடந்த மதக் கலவரங்களுக்கு வணிகர்களிக்கிடையேயான போட்டியும் ஒரு காரணம் ஆகும். 1989ஆம் ஆண்டு பீஹார் மாநிலத்தின் பகல்பூர் நகரில் நடந்த மதக் கலவரத்தின் பின்னணியையும், கொடூர விளைவுகளையும் அஸ்கர் அலி எஞ்சினியர் இரண்டு கட்டுரைகளில் விளக்கியுள்ளார்.
புலி தன் குணத்தை மாற்றிக் கொள்வதில்லை
மதவெறியர்களின் குணத்தை ஏ.ஜி.நூரானி புலியின் குணத்துக்கு ஒப்பிடுகிறார். புலிகளைப் போலவே மதவெறியர்களும் இரத்தவெறி பிடித்து அலைகிறார்கள் என்கிறார். மகாராஷ்டிராவில் சிவசேனைக் கட்சி வன்முறையை நம்பியே இருக்கிறது. சிவசேனைக் கட்சியின் தலைவர் பால்தாக்கரே எப்போதும் வன்முறையை ஆதரிப்பவர். நீதிமன்றத்தையும், பத்திரிகைகளையும் கடுமையாகத் தாக்குபவர், ஜனநாயகத்துக்கு எதிரானவர். ’நாதுராம் கோட்சே பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்’’ என்று எந்தவொரு மன உறுத்தலுமின்றி பேசினார். சீக்கியர்கள் காலிஸ்தானுக்காகப் போராட்டம் நடத்தியபோது பால்தாக்கரே, ”காலிஸ்தான் அமைக்கப்படும் பட்சத்தில் சகல சீக்கியர்களும் அங்கே அனுப்பப்பட வேண்டும். பாகிஸ்தான் அமைந்தபோது நாம் செய்த தவறை மீண்டும் செய்துவிடக்கூடாது” என்றார்.
ஸ்டாலின், ஜுகாவ் பெயர்கள் வீரத்தின் அடையாளம்
1945ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் நாள் மாஸ்கோ நகரின் லெனின் சமாதி அருகே நின்றுகொண்டு ஸ்டாலின் சோவியத் செஞ்சேனையின் ராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்டார். அப்போது வெள்ளைக் குதிரையின் மீது அமர்ந்து ஜுகாவ் ராணுவ அணி வகுப்பைத் தலைமையேற்று நடத்தினார். இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் பெற்ற வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் மக்களும் ஒன்றுபட்டு நின்று பல தியாகங்கள் புரிந்திராவிட்டால் ஹிட்லரின் ஃபாசிசத்தை வீழ்த்தி இருக்க முடியாது. உலகை உலுக்கிய சோவியத் புரட்சிக்குப் பின்னர் நடந்த மகத்தான சாதனை இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரை தோற்கடித்ததாகும். இதனைச் சாதித்த ஸ்டாலின், அன்றைய ராணுவத் தளபதி ஜுகாவ் இருவரும் என்றென்றும் போற்றுதலுக்குரியவர்கள் என்கிறார் மிருதுள்டே தன்னுடைய கட்டுரையில்.
தொகுப்பில் இருக்கும் அனைத்துக் கட்டுரைகளும் சிறப்பானவையே. அனைத்தைப் பற்றியும் இக்கட்டுரையில் சொல்லிட முடியவில்லை. நூலை வாங்கிப் படித்துப் பயனடையுங்கள். அறம் அவர்களின் மொழியாக்கக் கட்டுரைகளின் இரண்டாம் பாகம் வெளிவரும் நாளை எதிர்நோக்கியிருக்கிறோம். தோழர் ஆர்.எஸ்.மணி அந்தப் பணியையும் விரைவில் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நூலினை திண்டுக்கல், வாமடை வெளியீடு பிழைகள் ஏதுமின்றி பாங்குடன் கொணர்ந்துள்ளது பாராட்டுதலுக்குரியது.
நூல் அறிமுகம் செய்தவர்:
பேரா.பெ.விஜயகுமார்
முன்னாள் பொதுச்செயலாளர் மூட்டா.
மதுரை – 18
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.