நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவிஞர் தங்க. முருகேசனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘’வெப்பம் பூக்கும் பெருநிலம்’’ வெளிவந்திருக்கிறது. இவரது முதல் கவிதை நூலான ’’தழும்புகளின் விசாரணை’’ வெளிவந்து கால் நூற்றாண்டு கடந்துவிட்டன. இருப்பினும் இவர் மானிடவியல், இலக்கியம், இயக்கம் என பெருவானம் விரித்து பறந்துகொண்டிருப்பவர்.
இவருடைய கவிதைகளில் நுட்பமான சமூக உணர்வும் , விமர்சனமும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. எல்லாக் கவிதைகளிலும் அரசியல் இருக்கிறது. அதுவும் வெற்றுக் கோஷமாக இல்லாமல் கவிதைக்குரிய அழகியலோடு இருப்பது தனிச்சிறப்பு.
தேர்தல் ஜனநாயகம் பற்றிய ‘நிகழ்வு’ என்று ஒரு கவிதை, கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் காட்சிகள் மாறவில்லை ; கவலைகள் தீரவில்லை என்பதைச் சொல்லும் கவிஞர் ,
எத்தனை முறைதான்
வரிசையில் நிற்பது
கைவிரல் கரும்புள்ளிக்காக…
என்று பேசுகிறார். தேர்தல் விபரீதம் இப்படி இருக்கும் அதே நேரத்தில், அதே கவிதையில் வேறு ஒரு ஆபத்தையும்,
சலசலப்பின் ஊடே
சத்தம் இல்லாமல்
இந்தியப் பெருங்கடலில்
நவீனக் கப்பல்
நகர்ந்து வருகிறது
என்று சுட்டிக்காட்டி எச்சரிக்கவும் செய்கிறார்.
இவருடைய கவிதைகளில், ஆங்காங்கே பகடியும் எள்ளலும் கைகோர்த்து வருகிறது. பருவம் தப்பிப்போன மழையை இப்படிச் சொல்கிறார் :
மழையே
நீ தென்னாட்டைத் திரும்பிப் பார்க்காத
மத்திய அரசா
தெற்கே வர மறுக்கிற
பிரதமர் பதவியா ?
கவிதையில் சரியான முறையில் வெளிப்படும் இது போன்ற பகடியும், எள்ளலும் வாசிப்பு சுவையைக் கூட்டுகின்றன.
இப்போதெல்லாம், ஆண்ட பரம்பரை என்னும் அலட்டல்கள் ஆங்காங்கே கேட்கின்றன. இதை இப்படிப் பகடி செய்கிறார்.
ஆண்ட பரம்பரைகள் அனைத்தும்
ஆரியச் சூத்திரத்தில்
அடங்கிக் கிடக்கிறது.
ஐயோ, பாவம் !
இவர் கவிதைகளில் நேரடித் தன்மை இருக்கிறது. சொற்சேர்க்கையின் கட்டமைப்பு, வாசிக்க எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கிற அதேநேரத்தில், வரிகளைத் தாண்டியும் மனம் வேறு வேறு சிந்தனைத் தளங்களில் பயணிக்க வைக்கிறது. அதுதான் இவருடைய கவிதையின் நுட்பம்.
பாலியல் தொழிலாளியின் மகன் படும் மன அவஸ்தைகளை ‘பகலின் மறுபக்கம்’ என்று ஒரு கவிதை இப்படி பேசுகிறது.
ஏதேதோ மொழியில்
சரளமாகப் பேசுகிறாய்
தாயே !
எனக்குத் தந்தை மொழி உண்டா ?
என்று கேட்கும் போது இனம் புரியாத சோகம் நெஞ்சைக் கவ்வுகிறது. அதனுடைய உச்சம் இந்த வரிகளில் வெளிப்படுகிறது.
இப்படி மனிதப் பாடுகளை விதவிதமான அவதானிப்பில் கவிதைகள் ஆக்கியிருக்கிறார் தங்க. முருகேசன். கவிஞர் தன்னுடைய அரசியல் உணர்வுகளை , பார்வையை வெகு நுட்பமாக பதிவு செய்கிறார். தன் கருத்தியலை கவிதைப் போக்கிலேயே கதாபாத்திரங்களின் உணர்வுகளாக கட்டமைப்பதில் வல்லவர் என்பதைப் பல கவிதைகளில் உணர முடிகிறது.
படைப்பாற்றலும் , தெளிவான சமூக சிந்தனையும், மனித நேயமும் கொண்ட கவிஞர் தங்க. முருகேசனின் ’’ வெப்பம் பூக்கும் பெருநிலம் ’’ எனும் கவிதைத் தொகுப்பு மானுடத்தின் காலக் குரலாக ஓங்கி ஒலிக்கிறது.
– கவிஞர் கோவை காமு
நூல் : வெப்பம் பூக்கும் பெருநிலம்
ஆசிரியர் : தங்க. முருகேசன்
விலை : ₹ 70
வெளியீடு : கயல் வெளியீட்டகம்
24 எ, ராமச்சந்திரா நகர்,
எண் : 4 வீரபாண்டி,
கோவை – 641019.
8838882414
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.