மூன்று வரி ஹைக்கூ கவிதைதான் என்னைச் சென்னைக்கு அழைத்து வந்தது
– இயக்குநர் என்.லிங்குசாமி நெகிழ்ச்சி –
சென்னை.21. சென்னை கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன் தரைத்தள அரங்கில் நடைபெற்ற ‘ஹைக்கூ முற்றம்’ 4-ஆவது நிகழ்வில் பங்கேற்ற திரைப்பட இயக்குநரும் கவிஞருமான என்.லிங்குசாமி, “நான் வார இதழ் ஒன்றில் எழுதிய மூன்று வரி ஹைக்கூ கவிதை ஒன்றுதான், என்னைக் கைப்பிடித்து சென்னைக்கு அழைத்து வந்து, திரைத்துறையில் உன்னால் சாதிக்க முடியும் என்று உணர்த்தியது” என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வுக்கு கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையேற்றார். ‘ஹைக்கூ முற்றம்’ அமைப்பாளர் கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.
‘ஹைக்கூ என்றால் என்ன?’ எனும் கலந்துரையாடலைக் கவிஞர் மு.முருகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்வில் பங்கேற்ற கவிஞர்களின் ஹைக்கூ வாசிப்பரங்கம் நடைபெற்றது.
கவிஞர் என்.லிங்குசாமி எழுதிய ‘பெயரிப்படாத ஆறுகள்’ ஹைக்கூ நூலைத் திறனாய்வு செய்து கவிஞர் அன்புத்தோழி ஜெயஸ்ரீ பேசினார்.
நிறைவாக, ‘நானும் ஹைக்கூவும்…’ எனும் தலைப்பில் இயக்குநரும் கவிஞருமான என்.லிங்குசாமி பேசும்போது, “கல்லூரியில் படிக்கிற நாட்களிலேயே எனக்கு கவிதைகள் மேல் ஈடுபாடு உண்டு. நான் எப்போதுமே சின்னச் சின்னக் காட்சிகளைத்தான் கவிதைகளாக எழுதுவேன். அப்படியாக என் வாழ்வில் நான் பார்த்த, சந்தித்த பல நிகழ்வுகளைக் குறுங்கவிதைகளாக எழுதுவேன்.
அப்படி எழுதிய ஒரு கவிதை தான் ‘ஆனந்த விகடன்’ வார இதழில் வெளியான எனது ‘இஸ்திரி போடும் / தொழிலாளியின் / வயிற்றில் சுருக்கங்கள்’ எனும் கவிதை. அந்தக் கவிதை வெளியான போது நான் அடைந்த உற்சாகமும், அந்தக் கவிதைக்குச் சன்மானமாக வந்த சிறு தொகையும் எனக்குள் பெரிய நம்பிக்கையை விதைத்தன. அந்தக் கவிதை எனக்களித்த நம்பிக்கையில் தான் நான் சென்னைக்குப் புறப்பட்டு வந்தேன்.
நம்மாலும் திரைத்துறையில் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை எனக்கு ஹைக்கூ கவிதைகள் தான் தந்தன. இன்றைக்கும் எனக்கு மிகுந்த மனநிறைவையும் சந்தோசத்தையும் தருபவையாக ஹைக்கூ கவிதைகளே உள்ளன. எப்போதும் கவிதை எழுதுபவனல்ல நான். ஆனால், ஏதோ ஒரு காட்சி எனக்குள் இறங்கி, என்னை அதுவாகவே எழுத வைக்கிறது. இயற்கையோடு நான் இரண்டற கலந்திருக்கும் தருணமாக ஹைக்கூ எழுதும் கணங்களை எண்ணுகிறேன்.
திரைப்பட வெற்றிகளும் அது சார்ந்த பல சிறப்புகளும் எனக்குத் தந்த பெருமைகளை விட, எனது ஹைக்கூ கவிதைகளைப் படித்துவிட்டு, பல நண்பர்களும் நானும் ஹைக்கூ எழுதத் தொடங்கிவிட்டேன் என்று சொல்வதையே பெருமையாகக் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டார்.
நிகழ்வில், கவிஞர் தமிழ் இயலன், புலவர் சு.மதியழகன், முனைவர் பாஸ்கரன், கவிஞர்கள் ஜின்னா அஸ்மி, புதுகை ஆதிரா, ரமாதேவி, கா.பாபு சசிதரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
