வளவ. துரையன் கவிதைகள்
*****************************************************************
1. உருவமில்லாச் சுவர்
உனக்கும் எனக்குமிடையில்
உருவமில்லாத ஒரு
சுவர் விழுந்துவிட்டது,
நாம் எய்யும் சொல்லன்புகள்
நம்மைத் தாக்காமல்
அதன்மீது விழுகின்றன.
காயப்பட்டுக் காயப்பட்டு
அது தழும்பேறி நிற்கிறது.
ஆனாலும்
அது இன்னமும் வளர்கிறது.
அதன் அஸ்திவாரம் மிகவும்
ஆழமானது பலமானது.
பிறரால் வரும் பேய்ப்பூகம்பங்களும்
வசைச்சொல் சுனாமியும்
வலுவிழந்து போகின்றன.
அந்த மாயவலையின்
பின்னல்களின் இடைவெளியில்
நாம் புதைந்து போக வேண்டும்.
சிலந்தி வலையின் பின்னலில்
சிக்கிய பூச்சியாய் மாறிச்
சின்னாபின்னமாக வேண்டும்.
அப்போதுதான்
பீனிக்ஸ்போல் மீண்டெழுந்து
சுவர் மீது எட்டி உதைப்போம்.
சுக்குநூறாக்குவோம்.
*****************************************************************
2. படிச் சொல்வேன்?
நேற்றிலிருந்து நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்
அப்பா கேட்டார்
“என்ன தேடுகிறாய்?
வண்டி சாவியா?
இதோ இருக்கிறதே”
அண்ணன் கேட்டார்
“நேற்றுப் படித்துப் பாதியில்
வைத்த வெண்முரசு நாவல்தானே”
தம்பி கேட்டான்
“கிரிக்கெட் பந்தா தேடுகிறாய்
தோட்டக் கதவின் பின்னால்
ஒளிந்து கொண்டிருக்கிறது”
தங்கை கேட்டாள்
“அந்தக் கோடு போட்ட சட்டைதானே?
அலமாரியில் பார்த்தேனே
அங்கேதான் இருக்கும்”
இல்லை இல்லை
இல்லவே இல்லை
இவர்களுக்கு நான்
எப்படிச் சொல்வேன்
என்னைத் தொலைத்துவிட்டுத்
தேடுகிறேனென்று
*****************************************************************
3. மழை
தேர்ந்த மட்டைக்காரன்
ஆறு அடிப்பது போல
வேகமாகக் கொட்டாமல்
பெய்கிறது மழை.
இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டாலும்
செல்லமாய்ச் சிணுங்கும்
குழந்தைபோல் கொஞ்சுகிறது.
மெல்லிய நீர்க்கோடுகள்
மேலிருந்து விழும்போது
கண்கள் சிரிக்கின்றன.
தூண்களுக்கிடையே
சிறுவர் ஓடிப் பிடித்தாடுவது
மழைத் தாரகைகளுக்கிடையே
பட்டாம் பூச்சிகள் பறப்பது போல
பார்த்துக் கொண்டே
இருக்க வைக்கிறது.
ஒருவேளை
அதிகமாகப் பெய்தால்
நமக்குத் தாங்காதோ என்று
அளவோடு பெய்கிறதோ?
*****************************************************************
📚 எழுதியவர் :
✍🏻 வளவ. துரையன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

