இரா. தங்கப்பாண்டியன் கவிதைகள்
*********************************
1. தாயாதிகள்….
சேத்தாண்டி வேஷங்கட்டி ஆடிக் கொண்டிருக்கும்
பொன்னுக்காளை மாமாவின்
பதினைந்து வயது மகனையே
வைத்தகண் மாறாமல் பார்க்கிறாள்
சாந்தினி அக்கா…..
அவனுடைய
ஒவ்வொரு அடவும்
பொன்னுக்காளை மாமாவை
கண்முன் நிறுத்துகிறது…..
கரடி வேஷம்…..
கட்டவண்டி வேஷம்…..
கொரவன் வேஷம்…..
குடல் வேஷம்….
குடுகுடுப்பை வேஷம்….
கல்யாண மாப்ள வேஷம்…
என விதவிதமாக ஆடிய
மாமா தான்
பஞ்சம் பொழைக்கப் போன இடத்தில்
கொரோனா வந்து செத்துப் போனார்..
வேஷங்கட்டி பரம்பரை
நீர்த்துப் போகமலிருக்க
மாமா மகன் ஆடிக் கொண்டிருக்கிறான்……
மாமாவின் மீதிறங்கிய
முத்தாலம்மன்
மகன் மீதும்
அருளுறங்கி காட்சி தருகிறாள்….
“நல்லா இருங்க மக்கா…..”
அப்பனைப் போலவே
மகனும் விபூதி தந்து
சொந்தங்களை வாழ்த்துகிறான்…
தேசாந்திரியா
அலைஞ்சு திரிஞ்சாலும்
தாயாதிகளை
ஒண்ணு சேர்க்கவாவது
தேவைப்படுகிறது
உள்ளூர் திருவிழா…
*********************************
2.
கண்டும் காணாது
இருப்பது போல்தும்…
தெரிந்தும் தெரியாமல்
இருப்பதுபோல்தும்…
அறிந்தும் அறியாமல்
இருப்பது போல்தும்…
புரிந்தும் புரியாமல்
இருப்பது போல்தும்..
வாழ்ந்தும் வாழாமல்
இருப்பதே வாழ்க்கை.
கேட்டால்
அரசாங்க உத்தியோகம்
என
பீத்திக் கொள்வது.
அட
போங்கய்யா
உங்க ராஜாங்கத்தில்
எல்லாமே
மக்கிய தானியங்கள்தான்.
*********************************
3. தேவதைகளின் பணி ஓய்வு
வெள்ளி செவ்வாய்களில்
உதிரும் மல்லிகையின் வாசம்
இனி கிடைக்காது…..
தாழம்பூ குங்குமத்தின்
சிதறல்கள் படர வாய்ப்பில்லை
அடுக்கி வைத்த கோப்புகளுக்குள்
அந்துருண்டை வாசம் இருக்காது…..
எப்போதும் பூத்த புன்னகை
இனி இங்கிருக்காது….
விதவிதமான பலகாரங்களை
பண்டிகைக்கு மறுநாள்
கொடுக்க ஆளில்லை…..
எத்தனை முறை கேட்டாலும்
அசாராமல் பதில் சொல்லும்
அழகியல் இனி இல்லை.
யார் நீங்க என்ன. வேண்டும்
என்ற வினாக்கள் கூட
வெட்கத்தோடே
உதிரும் இதழ்கள் விடை பெறுகின்றன…
இன்று
தேவதையின் பணி ஓய்வு நாள்…
இனி மேல்
இந்த இருக்கையில் யார் அமருவார்…..?
ஒரு குடிகாரனோ
கொடுங்காரனோ
சொர்ணக்காவோ
அமரக் கூடும்.
ஓரிரு நாட்கள்
அருவருப்படைந்து
பையப்பைய
பழகிப் போய்விடும்
நாற்காலியும்
கோப்புகளும்….
தேவதைக்காக சிரித்தவர்கள்
தேவைக்காகவும்
சிரித்து வைப்பார்கள்…
சகித்துப் புசிக்கும்
சகஜநிலைக்கு
பழக்கப் பட்டவர்கள்.
*********************************
எழுதியவர்:
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

