கோவி.பால.முருகுவின் கவிதைகள்
1. வழியைச் சொல்வீர்!
பாடு பட்டுப் பொருளைச் சேர்த்து
பட்டினி கிடந்து எளிமையாய் வாழ்ந்து
வீடு கட்டி விளைநிலம் வாங்கி
விரும்பிய படியே கல்வியும் அளித்தார்.
விருந்தில் வைக்கும் இனிப்பைக் கூட
விரும்பி உன்னும் மகனுக் காக
திருடன் போல வேட்டியில் மறைத்து
தின்னக் கொடுத்துப் பார்த்து மகிழ்ந்தார்
பட்டணம் சென்று படிப்ப தற்காய்
பல்லைக் காட்டி,கடனை வாங்கி
வட்டி கட்டியே ஓய்ந்து போனார்.
வாய்க்குச் சுவையாய் உணவும் உண்ணார்.
படித்து முடித்தனர் பணிக்குச் சென்றனர்.
பருவம் வந்ததும் திருமணம் முடித்தார்
பார்த்துப் பார்த்து சேர்த்த சொத்தைப்
பங்கு போட்டுக் கொடுத்தும் விட்டார்.
குறைந்தது மதிப்பு கூடியது வெறுப்பு
குறைகள் சொல்லும் மருமகள் ஏச்சு
உறைக்கும் படியாய்த் திட்டினான் மகனும்
உள்ளம் வெந்து உழன்றது நெருப்பில்
பாடையில் போக நாள்வர வில்லை
பச்சையாய்ச் சொன்னாள் மருமகள் நேராய்
உடம்புக் குறுகி உள்ளம் உடைந்தது
உயிரை விடவும் மானம் பெரிதே
பெயரன் பெயர்த்தியை விட்டுச் செல்வதா?
பெருகும் அன்பின் துணையைத் துறப்பதா?
வயலிலும் வரப்பிலும் வாழ்ந்ததை மறப்பதா?
வாழ்ந்திட ஏங்கும் ஆசை விடுவதா?
தாங்கும் பாறை மனத்தைத் தந்திடு
தராமல் இருந்தால் மரணமே முந்திடு
ஓங்கிய உலகில் முதியோர் நிலையை
உணர்த்திட எத்தகு பயிற்சியைத் தருவது?
தாங்கும் பயிற்சியை முதியோர் பெறுவதா?
தாங்கிட மகன்கள் பயிற்சி பெறுவதா ?
ஏங்கும் முதியோர் துயரம் போக்கிட
என்ன செய்யலாம் வழியைச் சொல்வீர்!
***************************************************
2. ஒலிக்கும் சிலம்பு
ஒலிக்கும் சிலம்பின் ஓசை கேட்டு
ஒடுங்கிய பாண்டியன் உயிரை விட்டான்
வலிக்கும் துன்பம் வலிமை தந்தது
வாதிடும் நேர்மை அரசை அழித்தது
குடிமகள் ஒருத்தி குலம்புகழ் மன்னனை
கூர்வாள் சொல்லால் குறுகச் செய்தால்
பிடியென சாபம் நாடே எரிந்தது
பீடுடைப் பெண்மைப் புகழில் சிறந்தது.
சங்க இலக்கியப் பெண்பாற் புலமை
சமத்துவம் கண்டது சாத்திரம் வென்றது
மங்கிய பெண்மை வேதம் தந்தது
மானுடப் பரப்பை மாற்றிப் போட்டது.
இன்றும் பெண்களுக் கில்லை விடுதலை
எங்கெனும் இன்னலே ஏனிந்த தொல்லை?
குன்றும் பெண்கள் நிலையென இருந்தால்
குவலயம் கீழே தாழ்ந்து போகும்
மக்கள் ஆட்சியில் மன்னராய் சிலபேர்
மதிப்பிலை மக்கள் குரலுக் கிடமிலை
திக்கெலாம் சாதி, தீயென மதவெறி
திகழ்ந்திட நன்னெறி ஓங்கி ஒலித்திடு!
***************************************************
3. தேசப் பதர்கள்….!
விடுதலைப் போரில் ஓடி ஒளிந்து
விழுந்து காலில் விண்ணப் பித்து
அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்த
அடிமைகள் நீங்கள் தேச பக்தர்கள்!
விடுதலைப் போரில் களத்தில் நின்று
வீரச் சமரைப் புரிந்த பரம்பரை
கொடுமை பலவும் அடைந்த வீரரைக்
கொண்ட நாங்கள் தேசத் துரோகிகள்!
மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே
மானுடப் பண்பில் உயர்ந்தவன் என்று
தகாதவ னுக்குக் கோயில் கட்ட
தாங்கிடும் நீங்கள் தேச பக்தர்கள்!
மகாத்மா காந்தியை மதித்துப் போற்றி
மண்ணில் அவரின் செயல்களை ஏற்றி
தகாது மதவெறி என்று சொல்லி
தடுத்திடும் நாங்கள் தேசத் துரோகிகள்!
மதவெறி ஊட்டி கலவரம் செய்து
மனித உயிரைக் கொன்று குவிப்பீர்
மதமெனும் பேயைப் பிடித்துக் கொண்ட
மாண்பிலா நீங்கள் தேச பக்தர்கள்!
மதவெறி எதிர்த்துப் போரிடும் களத்தில்
மாற்றம் இன்றி துணிந்து நின்று
எதையும் தாங்கி இன்னுயிர் தந்து
இழந்திடும் நாங்கள் தேசத் துரோகிகள்
மனிதனை மதத்தால் மோத விட்டு
மனத்தை இரும்பாய் மாற்றிக் கொண்டு
மனிதத் தலைகள் உருள்வது கண்டே
மகிழ்ந்திடும் நீங்கள் தேச பக்தர்கள்
மனித நேயத்தை மனதில் விதைத்து
மதவெறிப் பேயை முற்றாய் விரட்ட
இனிக்கும் இன்ப ஒற்றுமை மலர
ஏங்கும் நாங்கள் தேசத் துரோகிகள்!
உணவுடன் உடையும் பேசும் மொழியும்
ஒருவரின் வழிபாட் டுரிமை மறுத்து
இனத்தை சாதியை மதத்தை வளர்க்கும்
இன்னல் நீங்கள் தேச பக்தர்கள்!
உணவு ஆடை வழிபாட் டுரிமை
உரைக்கும் மொழியும் அவரவர் உரிமை
ஒற்றைக் கலாச்சார இந்துத்வா கொள்கை
ஒழித்திடும் நாங்கள் தேசத் துரோகிகள்!
வடமொழி இந்தியை மட்டுமே விரும்பி
வாய்க்கு மிடமெலாம் அதனைத் திணிக்க
வட்டமிட் டியங்கும் வல்லூறு போல
வாழும் நீங்கள் தேச பக்தர்கள்
அவரவர் மொழியை மதிக்கும் செயலில்
அன்புடன் அவரை நேசிக்கும் வழியில்
இவர்மொழி இழிவு அவர்மொழி மேன்மை
என்றிடா நாங்கள் தேசத் துரோகிகள்!
தேவா லயத்தை மசூதியை மற்றும்
தெரிந்த மதத்தின் அடையா ளமழித்து
தீவாய் கொண்டு கக்கும் வெறியின்
தீமை நீங்கள் தேச பக்தர்கள்!
கோயில் மசூதி தேவால யத்தை
கொள்ளும் பார்வை வெறுப்பு இன்றி
வாயில் வந்ததைப் பேசித் திரியா
வகையில் நாங்கள் தேசத் துரோகிகள்!
காவி மட்டுமே இருக்க நினைக்கும்
கயவர் கூட்டம், மதத்தின் பெயரால்
ஆவி பறிக்கும் அன்பிலாப் பாவிகள்
அதனால் நீங்கள் தேச பக்தர்கள்!
காவி பச்சை வெள்ளை மூன்றும்
கைகோர்த் திடவே என்றும் நினைத்து
பாவி மதவெறி பாழ்நிலை போக்கும்
பண்பில் நாங்கள் தேசத் துரோகிகள்!
மக்கள் விரோத சட்டம் அனைத்தும்
மன்ற விவாதம் எதுவும் இன்றி
திக்கெலாம் எதிர்ப்பினும் திரும்பியும் பார்க்கா
தீயவர் நீங்கள் தேச பக்தர்கள்!
உரிமைக் காகப் போராடும் மக்களின்
உற்ற தோழனாய் போர்க்களம் காணும்
விரிந்த மனத்தொடு கருணை கொண்ட
வீறுடை நாங்கள் தேசத் துரோகிகள்!
பத்து ஆண்டுகளாய் வாயால் வடைசுடும்
பகட்டு வேடதாரி அனைத்திலும் தோல்வி
வெத்து வேட்டு பிளவு வாதம்
வெறுப்பில் நீங்கள் தேச பக்தர்கள்!
பத்து ஆண்டு களாய்ப் போரிடும்
பாதித்த மக்களின் பக்கம் நிற்கும்
வித்தகப் போரில் வென்றிட ஓங்கும்
வீரர் நாங்கள் தேசத் துரோகிகள்
கருத்து ரிமையின் குரல்வளை நெறிக்கும்
காட்சி ஊடகம்,செய்தி ஊடகம்
இருக்கும் ஊடகச் சுதந்திரம் அனைத்தும்
எதிர்க்கும் நீங்கள் தேச பக்தர்கள்!
கருத்து ரிமைக்குக் குரலினைக் கொடுத்து
கண்ணியம் மிக்க விவாதம் செய்து
வெறுப்பு அரசியல் முகத்திரை கிழித்து
வெல்லும் நாங்கள் தேசத் துரோகிகள்!
இத்தனை கொடுமை செய்வீர் நாட்டில்
இன்னும் தொடர்வது அழிவின் கேட்டில்
பித்தர் தேச பக்தர்கள் இல்லை…!
பெருமை அழிக்கும் தேசப் பதர்கள்…!
***************************************************
எழுதியவர் :
✍🏻கவிஞர் கோவி.பால.முருகு
வடலூர்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
