சூரியதாஸ் கவிதைகள்
***************************************************************
1. வரிசையில் நிற்பதில்லை
முகத்துக்கு முகம் பார்க்காமலேயே
உன்னை நேசித்தவன்
உன் பெயர் சொல்லி
எவெரெவரையோ விசாரித்தவன்
உன் முகம் பார்த்த தருணத்தில்
மழை முகிலில் நனைந்தவன்
உன் புன்னகையில் மின்சாரம் குடித்தவன்
உன் சொல்லுக்குள் கசிந்த
சர்க்கரையை ருசித்தவன்
உன் கண்ணுக்குள் முகிழ்த்த
கவிதையை ரசித்தவன்
மறுபடியும் சந்திக்க
மலரொன்று பூக்கட்டும்
ஒரு குடையில் உறவாட
மழையொன்று பெய்யட்டும்
சிறு மூக்குத்தி போலுந்தன்
நினைவினில் நானிருந்தால்
நெருப்புக்குள் கருகாத நிழல்போல
எப்போதும் உந்தன் அருகிருப்பேன்
உன்னை நேசிக்கக்
கோரிக்கை மனுவோடு நிற்போரின்
வரிசையில் எத்தனையாவது ஆள்
நான் என்றென்னைத் தேடாதே
வரிசையில் நிற்பதில்லை காதல்
***************************************************************
2. தெறிக்க விடலாங்க…
ஓட்டுப் போடக் கூட்டம்
கூட்டமா வாங்க -அஞ்சு
காசுக்கு ஆகாதவங்களக்
காலி பண்ண வாங்க
காத்து மழையப் போல நீங்க
வேக வேகமா வாங்க – நம்ம
சுட்டு விரலால் திருடர்களைத்
தெறிக்க விடலாங்க
கட்டுக் கட்டா நோட்டை
அள்ளி வீசுறான் – அதுக்கு
அஞ்சு வருஷம் நாட்டை
எழுதிக் கேக்குறான்
ஆறு குளம் மலையை வெட்டிச்
சாய்க்கிறான் – நம்ம
அடி வயித்துல மண்ண
அள்ளிப் பூசுறான்
வறுமையில கோடி ஜனம்
பசியோட வாழுறான் – இவன்
எருமை போல எட்டுச் சுத்துப்
பெருக்குறான்
தலைநகரில் விவசாயி போராடிக்
கெஞ்சுறான் – இவன்
முதலாளி நலனுக்காக ஊரு ஊராச் சுத்துறான்
பதவியில இருந்ததே சாதனைன்னு
சத்தியம் செய்யிறான் -நல்ல
திட்டமேதும் இல்லாம
வெறும் வாய மெல்லுறான்
வாழ உரிமை கேட்கும் மக்களக்
குண்டு போட்டு மிரட்டுறான் – எந்த
முகத்தோட நம்ம எதிரில் வந்து
ஓட்டுக் கேட்கிறான்
அடிமையாக வாழுறத ஆட்சியின்னு
சொல்லுறான் – நம்மயும்
அடிமையாக மாற்ற
ஓட்டுக் கேட்டுச் சுத்துறான்
நடந்ததெல்லாம் மறந்துட்டதா பல்ல
இளிச்சிப் பேசுறான் – நம்ம
முகத்தில் மீண்டும் கரியப் பூச
அதிகாரம் கேக்குறான்
நாம உயிரக் கொடுத்து உழைச்சும்
வாழ வழி இல்லீங்க
இவங்க வளர்ச்சி பார்த்தா வாயப்
பொழந்து நிப்பீங்க
ஊர அழிக்கப் பதவி தேடுமிந்த
உதவாத கூட்டத்த – நம்ம
ஒத்த ஓட்ட ஓங்கிக் குத்தி ஓட ஓட விரட்டுங்க
***************************************************************
3. புள்ளிகள்
புள்ளி சூழ் வளைவுகள் கோலங்களாகும்
புள்ளிகளில் தொடங்குகிறது
எழுத்தும் வாழ்க்கையும்.
பள்ளியறை விளையாட்டெல்லாம்
தலைவால்
புள்ளி நோக்கிய பாய்ச்சல்தான்.
காற் புள்ளியானாலும்
கணக்காய் வைத்தால்
பெரும்புள்ளி ஆகலாம்.
புரியாதவற்றின் அருகே
சிலர் புள்ளி வைப்பதுண்டு
புள்ளி இல்லாததால்
சில புரியாமல் போவதுண்டு
சிலவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து
சாதனையாளராய் வளர்ந்ததுண்டு.
புள்ளிகளாய் கிடப்போர்
ஒன்று சேர்ந்தால் புலிகளாகலாம்.
புள்ளிகளை எப்போதும் நமக்குப் பின்னால்
வைத்திருக்க வேண்டும்
முன்னால் வைத்தால்
நாம் பின்னமாகிப் போகலாம்.
புள்ளிகளைக் கையாளக்
கற்றுக்கொள்ள வேண்டும்
களத்திலும் கவிதையிலும்
***************************************************************
எழுதியவர் :
✍🏻 – சூரியதாஸ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

