தங்கேஸ் எழுதிய மூன்று புதிய தமிழ் கவிதைகள் | 1. குரல் | 2. அசைவற்ற பொழுது | 3. சாப விமோசனம் | www.bookday.in

தங்கேஸ் கவிதைகள் 

தங்கேஸ் கவிதைகள் 

*****************************************************************************

1. குரல்

பாசி படர்ந்த செங்குளத்தின்
தவளைக் கூச்சல்
இப்பொழுது சன்னமாக
தண்ணீர்ப் பாம்பின் தொண்டைக்குள்

பிஞ்சு முருங்கை இலைகளின்
அநாதை அலறல்கள்
இப்போது
அசை போடும் வெள்ளாடுகளின்
தாடைக்குள்

பயிராகி வளர்ந்து புரளும் காலத்தை
உண்டு கொழுக்கின்றன
வன் குரல்கள்

மேய்ப்பர் அழைக்கிறார்
தந்தையும் கூட.
தலைவர்கள் அழைக்கிறார்கள்
தொண்டர்கள்
அலுவலர்கள் ஊழியர்கள்
மனைவி குழந்தைகள்

செவிப்பறைகளில் விழுந்திருக்கும்
அத்தனை துளைகளுக்குள்ளும்
ஒவ்வொரு குரலும்
துப்பாக்கி ரவையாக ப் புதைந்திருக்க

அழைக்கும் மில்லியன் குரல்களில்
உனது குரல் எது?

அலைகளின் கரங்கள் கிழித்தெறிந்த
படகுத் துகள்கள்
இந்த கடல் வீதி எங்கும் தேடி அலையும் முகவரி தான் யாது?

*****************************************************************************

2. அசைவற்ற பொழுது

அசைவற்ற புழுக்கமான இரவு அது
அவ்வளவு அடர்த்தியாக இருந்தது
நகராத பொழுது

நீண்ட மௌனத்தில்
ஒரு பழுத்த இலையின்
கடைசி பிரார்த்தனையை
கடவுள் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்

திடீரென எந்த நேரத்தில் வீசியதோ
பலத்த காற்று
மனதும் தன் நினைவுகளையெல்லாம்
உதிர்த்து விட்டு
மொட்டை மரமாகத்தான்
நின்று கொண்டிருந்தது

மனிதர்களையெல்லாம் பறவைகளாக
நான் பார்க்கத் தொடங்கியிருந்த
காலம் அது

புறாக்களாக கிளிகளாக
நாரைகளாக காக்கைகளாக
செம்போத்துகளாக குருவிகளாக

நாம் அவர்கள் மேல் வைத்திருந்த
நம்பிக்கைகளை
அவர்களே பொய்த்துக் கொண்ட போது
சிறகுகளற்ற ஈசல் பூச்சிகளாக
உதிர்ந்து கொண்டிருநதார்கள்

கண் முன்னால் பார்த்து
தேம்பிக் கொண்டிருக்கும் போது
வானமும் பூத்த ஓவியம் போல
ஒரு நீல மரமாகி
ஒவ்வொரு நட்சத்திரமாக
உதிர்த்துக் கொண்டிருந்தது தன் பங்கிற்கு

*****************************************************************************

3. சாப விமோசனம்

கொஞ்சமே கொஞ்சம் கள்ளமற்ற சிரிப்பு
அன்பில் தோய்த்தெடுத்த இரண்டொரு வார்த்தைகள்
ஆதரவாய் ஒரு தலை தொடல்
இவை கிடைத்தால் கூட போதும்
இந்த நாளுக்கான சாப விமோசனம் நிச்சயம் கைகூடி விடும்

மாமாங்கமாய் மறந்து போன புன்னகை
உதட்டில் ஒரு பீடித்துண்டாக வந்து ஒட்டிக்கொள்ளலாம்

எவரோடோ பேசிக்கொண்டிருப்பது போல
தன்னோடு பேசிக்கொண்டிருக்க வேண்டியதிருக்காது

ஒரு கல்பொறுக்கி பிணம் போன சாலையில்
சிதறிக்கிடக்கும் ஒற்றை ரூபாய் நாணயங்களை எடுத்து
சாப்பாட்டிற்காக சட்டைப் பைக்குள் திணிக்க வேண்டிய
அவசியமிருக்காது

அப்பட்டமாய் வண்ணச்சாயம் பூசிக்கொண்டு
ஆட்டோவிற்காகக் காத்திருக்கும் மாது
இவ்வளவு அகலமாக உதடுவிரித்து சிரிக்க வேண்டியதிருக்காது

அவசரமாகப்போகிற வழிப்போக்கர்கள்
அரசமரத்துப் பிள்ளையாரை கடக்கும் போது
தலையில் குட்டிக்கொள்வதற்கு அஞ்சி
இப்படி பாராமுகம் காட்டியும்
நடக்க வேண்டியதிருக்காது

*****************************************************************************

எழுதியவர் : 

✍🏻 தங்கேஸ்
தமுஎகச
சின்னமனூர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. தங்கேஸ்

    நன்றி தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *