Three Poetries by Vasanthadheepan வசந்ததீபனின் மூன்று கவிதைகள்



(1)துக்கம்
தலையில் சுமந்தால்
தைரியமாய் இருக்கலாம்.
முதுகில் சுமந்தால்
நம்பிக்கையாய் இருக்கலாம்.
இடுப்பில் சுமந்தால்
எதிர்பார்ப்போடு இருக்கலாம்.
வயிற்றில் சுமந்தால்
வெளியேற்ற நேரம் ஒன்று இருக்கும்.
மனசில் அல்லவா சுமக்கிறோம்.
இறக்கவும் இயலவில்லை…
சுமக்கவும் முடியவில்லை…
அந்த முதல் வரியை காகிதத்தில்
இளைப்பாற்றி
காற்றிடம் ஒப்படைக்கிறேன்.
வேகாமல் தணியுமோ காடு…?

(2) மரப்பாச்சிகள்
அன்பில்லாமல் வாழ்கிறார்கள்
அரக்கத்தனமின்றி வாழ்கிறார்களா?
தைரியமில்லாமல் வாழ்கிறார்கள்
பயமின்றி வாழ்கிறார்களா?
நம்பிக்கையில்லாமல் வாழ்கிறார்கள்
நிராசையில்லாமல் வாழ்கிறார்களா?
வீடில்லாமல் வாழ்கிறார்கள்
குடும்பமில்லாமல் வாழ்கிறார்களா?
கஞ்சியில்லாமல் வாழ்கிறார்கள்
கனவில்லாமல் வாழ்கிறார்களா?
உணர்வில்லாமல் வாழ்கிறார்கள்
உயிரின்றி வாழ்கிறார்களா?

(3) நீங்கள் யோசிக்க வேண்டிய நேரம்
பஸ்ஸை மறிக்க வேணாம்
பாவப்பட்ட ஜனம் போகுமுங்க
ரயிலை தடுக்க வேணாம்
தட்டு தடுமாறிய மக்க ஏறியிருக்குமுங்க.
கடையடைக்காதீங்க
கஞ்சிக்கு இல்லாத கூட்டம் கசங்கியிருமுங்க
கல்லெறிஞ்சு கைகலந்து கலவரமெதுக்குங்க
கடைசியில கஷ்டமெல்லாம் நமக்குத்தானுங்க.
எரியற வீட்டுல பிடுங்குறது லாபமுன்னு
எப்பவும் ஒரு கூட்டம் இங்க அலையுதுங்க
அட…
தும்ப விட்டுட்டு
வால பிடிக்காதீங்க.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *