Dr.ஜலீலா முஸம்மில் (Jaleela Muzammil) எழுதிய மூன்று கவிதைகள் | Tamil Poems | Tamil Kavithakal | தமிழ் கவிதை (Tamil Kavithai)

Dr.ஜலீலா முஸம்மில் (Jaleela Muzammil) கவிதைகள்

Dr.ஜலீலா முஸம்மில் (Jaleela Muzammil) எழுதிய கவிதைகள்

1.ஆதியின் பெருநெருப்பில்…

அலைத்து
நுரைத்த கடலின்
உப்பும் உள்ளீரமுமாய்
நாம்

உக்கிரமான பரவசத்தில்
ஆழ்த்தும் இன்னிசையின் இழைகள் நாம்

ஒன்றை ஒன்று
இடையறாது துரத்தும்
இரவும் பகலும் நாம்

அந்திவண்ணக்குழம்பிடை
பறந்து அடைகின்ற பட்சிகள் நாம்

ஆதியின் பெருநெருப்பில்
உழலும் பனித்துகள்கள்
நாம்

பேரன்பின் நிழலில் ஜனித்த
ஆதாம் ஏவாளாய்
நாம்

தீராத நேசத்துக்கு
தவங்கிடந்து தவங்கும்
ஆன்மாக்கள் நாம்!

2.காதல் பூ

கிளைகள்
எத்தனையோ
தழைக்கின்றன..
இலைகள்
எப்போதும்
துளிர்விடுகின்றன..

ஆனால்,
வேருக்குள்
ஒளிந்திருந்த பூ
கிளை நுனியில்
வெளிப்பட்டது போல இருந்தது
உன் மீதான காதல்
உன்னைக் கண்டதும்..!!

3.இழப்பு

வாழ்வின்
ஒவ்வொரு பொழுதிலும்
இழந்து கொண்டே இருக்கிறோம்…
வாழ்க்கையை!

4. வேறென்ன இருக்கக்கூடும்?

ஒரு வாழ்த்து
ஒரு சிலாகிப்பு

ஒரு நக்கல்
ஒரு திட்டு

சிறு கோபம்
சிறு நெகிழ்வு

ஒரு அடம்
ஒரு ஊடல்

ஒரு இனிப்பு
ஒரு உதவி

ஒரு புன்னகை
ஒரு புரிதல்

சிறு அன்பு
பெரும்பிரியம்

வேறென்ன எதிர்பார்ப்பு
இருக்கக்கூடும்
நேசப்பரிமாற்றத்தில்?

5. ரகசியங்களின் மூட்டை

திறக்கவே விருப்பமில்லை
ரகசியங்களின் மூட்டையை

பால்யம் தொட்டு தற்கணம் வரைக்கும் மனதிலிறைந்து கிடக்கும் அவை
எண்ணிக்கை அற்றதான நிலையில்

அடைந்து அடைந்து
அது நிரம்பிக்கொண்டே இருக்கிறது

அதை அப்படியே மறைத்துக்கொண்டு
மனது அல்லாடுகிறது

அதைத் தூக்கிச்சுமப்பதில்
சிலநேரம்
மூச்சுத்திணறல்

சிலநேரம் அவிழ்ந்து விட்டதோவென்று
பதற்றம்,பதறல்

யாரேனும்
ஏதாவது உய்த்துணரும் வழியுண்டோவெனப் பதைபதைக்கும் உள்ளம்

அவ்வாறேதும் நடக்கவில்லை எனும்போது
எப்பேர்ப்பட்ட நிம்மதி

சுதந்திரமான தருணங்களில் அவிழ்த்து அவிழ்த்து
அலாதி ஆனந்தம் கொள்ளும் மனது

அவ்வளவே என்று சொல்லமுடியாதளவுக்கு,

மூட்டைக்குள் அடைவதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கிறது…!!

6. இசைக்கும் மௌனம்

மௌனமென்பது
இசையாகிறது

நாம் சந்தித்து
பிரியும் தருணத்தில்

நரம்புகளை மீட்டி
நம்மிருவர் உள்ளங்களில்
ஒரே பாடலை இசைக்கிறது!!

7. ஆத்ம நேசம்

கொஞ்சம் கொஞ்சல்
நிறைய கெஞ்சல்

கொஞ்சம் ஊடல்
நிறைய கவியாடல்

கொஞ்சம் தேனீர்
நிறைய தாகம்

கொஞ்சம் சண்டை
நிறைய சமரசம்

கொஞ்சம் போடி
நிறைய போடா

கொஞ்சம் மௌனம்
நிறைய சொற்கள்

கொஞ்சம் வம்பு
நிறைய அன்பு

கொஞ்சம் குறும்பு
நிறைய அலட்டல்

கொஞ்சம் கண்ணீர்
நிறைய காதல்

கொஞ்சம் தூரம்
நிறைய நெருக்கம்

மீண்டும் மீண்டும்
முதல்தடவை போன்றே
முகிழ்க்கும்
நம் ஆத்ம நேசம்

8. கண்ணுற வேண்டுமென்று

ஒருபோதும் உன்னிடம் காண்பிக்காத விடயங்களை
நீ கண்ணுற வேண்டுமென்று அவள் ஆசைப்படுகிறாள்

ஒருபோதும் உன்னிடம் ‌சொல்லாத செய்திகளையும்
நீ செவியுறுவாய்‌ என்று அவள் கெட்டியாய் நம்புகிறாள்

புரிந்து ‌கொண்டிருக்கும் அனைத்து கருமங்களையும் நீயறிந்து
புரிந்து கொள்ள வேண்டும் என்று அவள்
அவாக்கொள்கிறாள்

உனக்கான பிரயத்தனங்கள் யாவற்றையும்
ஏகமனதாய் நீயேற்க வேண்டும் என்று
எண்ணம் கொள்கிறாள்

உனக்கான துயரங்களை அமுதாக்கி
அவளிதயத்துக்குப் பருக்கியவண்ணமே இருக்கிறாள்
உன் காவல் வலயத்திற்கு வெளியிலும்

மௌனத்தையும் அழகாக்கும் மாபிறவி அவள்
மிக அழகாகச் செதுக்கப்பட்ட சிற்பி அவள்

எழுதியவர் :

Dr.ஜலீலா முஸம்மில் (Jaleela Muzammil)
ஏறாவூர்
இலங்கை

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *