பாவலனின் மூன்று கவிதைகளை விளக்கும் வண்ணப் பென்சில் ஓவியம்; இடப்பக்கம் கவிஞரின் முகம், சமத்துவ உலகம், சாதிய விலங்குகளை உடைக்கும் காட்சிகள் மற்றும் 'பாவலன் எழுதிய மூன்று கவிதைகள்' என்ற கருப்பு நிற பேனர்.

பாவலன் கவிதைகள்

பாவலன் கவிதைகள்

***********************************************
1. என் கவிதை அதன்
பணியைச் செய்யும்.என் எழுத்து
உன்னைத் திருப்திப்படுத்தாது‌.

அதில் நீ எதிர்பார்க்கும் எதுவும்
ஒளிந்து கொண்டிருக்காது.

நீச்சி வாடையும்
முடை நாற்றம் வீசும்.

ஒரு மலம் அள்ளும்
பெரும் தொழிலாளியைப்
போல என் கவிதை அதன்
பணியைச் செய்யும்.

நீ என் எழுத்தில் எதையும்
தேடி அலைய வேண்டாம்.

உன்னிடம் மறைப்பதற்கு
ஒன்றுமில்லை.

நீயும் நானும்
வேறுவேறானவர்களாக
இருந்ததில்லை.

நீ எனக்கு
நண்பனாக இருந்தாய்.

கடவுள் தோன்றுவதற்கு முன்பு
நாம் எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தோம்.

இதில் உனக்கு நம்பிக்கை
இருக்குமென்று நம்புகிறேன்.

நம் முன்னோர் ஏதோ
ஒரு ஆணும் பெண்ணும்
புணர்ந்து புணர்ந்து
இதோ இந்த ஜனத்திரள்களை
உண்டு பண்ணினார்கள்.

சென்ற பாதையை
மறந்தது போலவும்
திருவிழாவில் தொலைந்த
குழந்தையைப் போன்றும்
யாரோடு ஒட்டிக்கொண்டாய்.

அவர்கள் உன்னை
கொண்டாடவும் இல்லை.
நிராகரிக்கவும் இல்லை.

தவிர்க்க முடியாத சூழலில்
பெயரளவுக்கு ஏற்றுக் கொண்டார்கள்.

அவர்கள் முற்றிலும்
மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள்.

ஏதோ நாகரீகத்திற்கு
கட்டுப்பட்டும்
பழக்க வழக்கங்களில்
மாறுபட்டும்
இருக்கிறார்கள்.

இப்பொழுது நீ சொல்.

எளிதில் உன்னை ஏற்றுக்
கொண்டார்களா என்ன?

***********************************************

2

இன்னும் உன் பழமை
ஊறிய மூளைக்குள்
இணைந்து பிணைந்தாடுகிறது
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று.

விடியலின் தலைக்குப்புற
விழுந்து கிடக்கும் இரவாய்
வெளிச்சத்துக்கு ஏங்கித் தவிக்கிறேன்.

பனி பொழியும் இரவில்
நனையாத அங்கங்களின்
கதகதப்போடு சில்லிட்டுப்
பேசுகிறேன் உன்னிடம்.

பெருமை கொண்டு இந்திய
தேசத்தில் முகவரி
சாதியும் மதமும் தான்.

எங்கள் துயர் துடைக்க
உன் கரம் படருமென்று
நம்பினோம்.

ஆனால் எங்கள் துயரமே
உங்கள் கரம் தான் என்பதை
இப்பொழுது அறிந்து கொண்டோம்.

எம் இனத்தின் விடுதலையை
நாங்களே மீட்டெடுப்போம்.

கூட்டுக்கு உதவாத
உன் பழம் புராணத்தையும்
வேதத்தையும்
தீயிட்டுப் பொசுக்கு.

அப்பொழுதாவது அதன்
சூட்சுமத்தை அறிவாய்
வேதிய புராணங்களும்
வேள்விச் சடங்குகளும்
அதை அறியாத
மக்களைத்தான்
அண்ணாந்து பார்க்க வைக்கும்

***********************************************

3

உங்கள் வெற்றுக் கூச்சலுக்கு மத்தியில்
என் உலகத்தை
நானே சமைத்து கொள்கிறேன்

அந்த உலகம்
அவ்வளவு அழகாக
இருந்தது.
எனக்கானவற்றை
நானே
உருவாக்கிக் கொள்கிறேன்.

எப்பொழுதும்….
ஒருநாளும்
அந்த வாழ்நாளை வெறுக்கவில்லை.

அச்சமும்
பயமும்
கிஞ்சித்தும் இல்லை.

எனக்கு
வாழப் பிடித்து இருந்தது.
அங்கு எந்த
பாகுபாடும் வேறுபாடும்
யாரும் யாரிடமும்
காட்டவில்லை.

எல்லோரும் எல்லாரிடமும்
இயல்பாகப் பழகுகிறார்கள்.
அழகானவர்களாகவும் இருக்கிறார்கள்.

நிறவேற்றுமை
சாதிப் பாகுபாடு
பெண்ணடிமை
வன்புணர்வு
வன்கொடுமை
தீட்டு
குடிநீரில் மலம்
இரட்டைக் குவளை
தலையில் மலச்சட்டி
சாணிப்பால்
சவுக்கடி
எந்தக் கொடுமையும் இல்லை.

கடவுளைப் பற்றிய
தேவையும்
அங்கு இல்லை‌.

அங்கு
குரோதமான
வன்மம் நிறைந்த
மனிதர்கள்
இல்லவே இல்லை.

பெண்கள் தேவதைகள்
போன்று அழகாக
இருந்தார்கள்.
அவர்களின்
காதலுக்கு
யாரும் தடையாக
இருந்ததில்லை.

மனித உருவத்தில்
கடவுளர்களாக
காட்சியளித்தனர்.

எல்லா உயிர்களையும்
தம்முயிர் போன்று
நேசிக்கிறார்கள்.

குழந்தைகளைக்
குழந்தைகளாகவே
பார்க்கிறார்கள்

பாலின வேறுபாடு
வயது வித்தியாசமின்றி
அனைவரும் அனைவரிடத்திலும்
சமமாக நடந்து கொள்கின்றனர்.

பணத்தேவை
அங்கு இல்லை
அதனால்
நாட்டைக் காட்டிக் கொடுக்கும்
கயவர்களும் அங்கு இருந்ததில்லை.

சொல்லப்போனால்
பாரத மாதாவுக்கு ஜே என்னும்
வெற்றுப்
பாவனைகள் ஏதுமில்லை

அரசு
பற்றிய அச்சம்
எதுவும் இல்லை.

ஒதுக்குபவர்களும் இல்லை
ஒதுக்கப்பட்டவர்களுமில்லை
ஓரங்கட்டுபவர்களும் இல்லை
ஓரங்கட்டப்பட்டவர்களுமில்லை
ஒடுக்கப்பட்டவர்கள்
என்ற சொல் புழக்கத்தில்
இருந்தது கூட இல்லை.

நாங்கள்
நினைத்த இடங்களுக்கு சுதந்திரமாக
சென்று வந்தோம்.
விரும்பிய உணவை உட்கொண்டோம்.

ஒருவரை ஒருவர்
பார்க்கும் பொழுது
அன்பு பாராட்டி
ஆரத் தழுவிக்
கொண்டோம்.

நாங்கள் முழு சுதந்திரமாக
இருப்பதை உணர்ந்தோம்.

நான்கு வர்ணம்
நாங்கள்
அறிந்திருக்கவில்லை.

அதனால்…
அதனால்…
பிரம்மா
விஷ்ணு
சிவன்
போன்ற
கடவுளர்களும்
புத்தன்
இயேசு
நபி
போன்ற போராளிகளையும்
நாங்கள் அறிந்ததில்லை.

எங்களுக்குள்
சாதியே
இல்லாதபோது
சாதிப் பெருமை
பேச வேண்டிய
அவசியம் இல்லை.

தூங்கி எழுந்தவுடன்
தலையைத் தொட்டுப் பார்த்து
‘உயிருடன் தான்
இருக்கிறேன்’
என்று
உறுதி கொள்ளும் அவசியமில்லை

நாங்கள்
விரும்பிய
கல்வியைக் கற்றோம்.
விரும்பிய உணவை
உட்கொண்டோம்.

எங்கள்
கரங்களில் இருந்து
எந்தப் புத்தகங்களும்
களவாட படவில்லை.
எழுதுகோல் தாராளமாக
எங்கள் கரங்களில்
தவழ்ந்து விளையாடியது.

காற்றில் பரவும் இசையைப் போல
எல்லா இடங்களிலும்
நீக்கமற நிறைந்திருந்தோம்.

எங்கள்
குழந்தைப் பருவம்
எப்படியோ?
அப்படியே
இருந்தது
முதுமையும்.

எந்த சுரண்டலுக்கும்
உள்ளாக்கப்படவில்லை.
வயசு பேதமும் இல்லை
வர்க்க பேதமும் இல்லை.

மானுட தத்துவத்தின்
அடையாளமான
மனிதர்களாக
மட்டுமே இருந்தோம்.

***********************************************

📚 எழுதியவர் : 

✍🏻 பாவலன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *