மூன்று ஆசிரியர்கள் - மணி மீனாட்சிசுந்தரம் | என் கதை - நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை | Tamil Educational Article | www.bookday.in

மூன்று ஆசிரியர்கள் – மணி மீனாட்சிசுந்தரம்

மூன்று ஆசிரியர்கள்

– மணி மீனாட்சிசுந்தரம்.

காந்தியக் கவிஞர், நாமக்கல் கவிஞர் என அழைக்கப்படுகின்ற வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் எழுதுவதில் மட்டுமின்றி ஓவியம் வரைவதிலும் திறமை வாய்ந்தவர்.

அவரது இளம் வயதில் ஏற்பட்ட ஓவிய ஆர்வத்திற்கு ஆசிரியர்கள் எவ்வகையில் உதவினார்கள் என்பதை தன்னுடைய தன் வரலாற்று நூலான ‘என் கதையில்’ விரிவாக எழுதியிருக்கிறார். அது, ஆசிரியர்கள் வெறும் பாடத்தைக் கற்பிப்பவராக மட்டும் இருந்தால் போதுமா? மாணவரிடம் காணப்படுகின்ற பிற திறமைகளைக் கண்டுணரவும் வழிகாட்டவும் உதவ வேண்டாமா? ஆசிரியர் மாணவரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பன‌ போன்ற வினாக்களுக்கு விடை கூறும் விதமாகவும், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் – வழிகாட்டல் குறிப்பாகவும் அமைந்து நம் கவனத்தை ஈர்க்கிறது.

இராமலிங்கர் முதன்முதலில் தன் வீட்டுக்கு அருகில் உள்ள ‘ நம்மாழ்வார் பள்ளிக்கூடத்தில்’ தொடக்கக் கல்வி பயின்றார். ஸ்ரீ நம்மாழ்வார் என்ற நாடகக்காரர் நடத்திய பள்ளி அது. அவரே அங்கு ஆசிரியராகவும் இருக்கிறார். பள்ளிக்கூடத்துக்குப் பொறுப்பாக ஒரு ‘ பெரிய வாத்தியார் ‘ (தலைமையாசிரியர்) நியமிக்கப்பட்டிருந்தாலும் ஸ்ரீ நம்மாழ்வாரும் நாடக வேலை இல்லாத போது வகுப்புக்கு வந்து பாடம் நடத்துவார்.

இராமலிங்கர் அப்பள்ளியில் நான்காம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள், மாணவர்களுக்கு ஒரு கணக்குக் கொடுத்து சிலேட்டில் செய்யச் சொல்லி விட்டு நாடக வேலை தொடர்பாக வெளியே சென்று விடுகிறார் ஸ்ரீ நம்மாழ்வார். சிலேட்டில் கணக்கை எழுதிக் கொண்டிருந்த இராமலிங்கருக்கு ஒரு நாடகக் கம்பெனியின் விளம்பரத்தாள் ஒன்று கையில் கிடைக்கிறது. அந்த விளம்பரத்தில் இருந்த படம் இராமலிங்கருக்குப் பிடித்துப்போக, உடனே எழுதிக்கொண்டிருந்த கணக்கைப் பாதியில் நிறுத்திவிட்டு, சிலேட்டின் மறுபக்கத்தில் அந்தப் படத்தை வரையத் தொடங்குகிறார்.

இரண்டு மூன்று தடவை அழித்து அழித்து அந்தப் படத்தை வரைந்து முடித்தவர், அதிலும் திருப்தியில்லாமல் சிலேட்டின் மறுபக்கத்தைத் திருப்பி, தான் பாதி செய்திருந்த கணக்கை அழித்துவிட்டு அதிலும் அந்தப் படத்தை வரைந்து முடிக்கிறார். அப்போது வெளியே சென்றிருந்த ஸ்ரீ நம்மாழ்வார் வகுப்புக்குள் வந்துவிடுகிறார்.

உடனே மாணவர்கள் ஒவ்வொருவராக வரிசையில் சென்று ஆசிரியர் முன் சிலேட்டை உயர்த்தித் தாம் செய்த கணக்கைக் காட்டுகின்றனர். விளம்பரத்தில் இருந்த படத்தை நன்றாக வரைந்து விட்ட மகிழ்ச்சியில் இருந்த இராமலிங்கர், ஆசிரியரிடம் சிலேட்டைக் காண்பிக்கிறார். கணக்கிற்குப் பதிலாகப் படம் வரைந்திருப்பதைப் பார்த்த ஸ்ரீநம்மாழ்வாருக்குக் கோபம் தலைக்கேறுகிறது.

“இவ்வளவு திமிரா உனக்கு.கணக்குப் போடச் சொன்னால் பொம்மையை வரைந்து கொண்டுவந்து என்னிடமே காட்டுகிறாயா? ” என்று இராமலிங்க ரின் முழங்காலுக்குக் கீழே பிரம்பால் அடித்து விடுகிறார். அடித்த இடம் நன்றாகத் தடித்துச் சிவந்து ரத்தம் வந்துவிடும் போல் இருக்கிறது. அடி பொறுக்க முடியாமல் தேம்பித்தேம்பி அழுகிறார் இராமலிங்கர் .நான்காவது படிக்கும் சிறுவனான இராமலிங்கருக்கு தன் ஓவிய ஆர்வத்தால் கிடைத்த முதல் தண்டனை அது.

பிறகு கோயமுத்தூரில் உள்ள ‘ பிராஞ்சு ஸ்கூலில் மூன்றாவது பாரம் படிக்கும்போதும் இதேபோல் ஒரு நிகழ்வு நடக்கிறது. அந்தப் பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியர் எஸ்.பி.ராமகிருஷ்ண ஐயர். இராமலிங்கர் அவரைப்பற்றி ஒரு வர்ணனையே செய்கிறார். ” அவர் அழகான முகவெட்டு உள்ளவர். …. அசாதாரணமாக உயர்ந்து நீண்ட கூரான அவர் மூக்கு மட்டும் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். ஒரு தரம் அவரைப் பார்த்தவர்கள் எதை மறந்தாலும் அவருடைய மூக்கை மட்டும் மறக்கவே மாட்டார்கள். மாணவர்களை மிகவும் கடுமையாகத் தண்டிப்பார். வெகு கண்டிப்பானவர். அடிக்க அஞ்ச மாட்டார். கணக்குப் பாடத்திற்கு அவர்தான் ஆசான்”.

எஸ்.பி. ராமகிருஷ்ண ஐயர் அன்று வகுப்பில் ஒரு கணக்கைக் கொடுத்துப் போடச் சொல்லிவிட்டு நாற்காலியில் அமர்ந்து ஒரு புத்தகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். கணக்கை எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனையில் இருந்த இராமலிங்கருக்கு ஆசிரியர் அமர்ந்திருக்கும் தோற்றமும், அவரது உருவ அழகும் படம் வரையும் ஆசையைத் தூண்டி விடுகிறது. உடனே இராமலிங்கர் ஓவிய நோட்டை எடுத்து ஆசிரியரை வரையத் தொடங்குகிறார். இராமலிங்கர் ஆசிரியரது உருவத்தை ஒரளவு திருப்தியாக வரைந்து முடிக்கையில், அருகில் இருந்த மாணவன் அதைப் பார்த்துவிட்டு நோட்டை இழுக்கிறான்.

இதை ஆசிரியர் பார்த்துவிட்டு சடக்கென்று எழுந்து வந்து நோட்டை வாங்கிப் பார்த்துவிடுகிறார். கணக்கு நோட்டில் எழுதியது எழுதியபடியே இருக்க, ஓவிய நோட்டில் படம். அதுவும் தன்னை வரைந்திருப்பதைப் பார்த்ததும் ஆசிரியருக்கு மிகுந்த கோபம் வருகிறது.” ஏண்டாலே, கணக்கிலே சுத்த சூன்யமாக இருந்துண்டு கணக்குப் ‘பீரியேட்லே’ டிராய்ங்கா போட்றே? ‘ காரிகேச்சர்’ (கேலிப்படம் ) போட்டிருக்கையா? ஏன்? மூக்கை இன்னுங் கொஞ்சம் ஒசரமா நீட்டிப் போட்றதுதானே? ” என்று சொல்லிக்கொண்டே பியூனை அழைத்துப் பிரம்பைக் கொண்டு வரச் சொல்கிறார்.

” ஒனக்குக் கார்ப்பொரல் பனிஷ்மென்ட் தான் சரி. வாத்தியாரைக் கேலி செய்றவனுக்குப் படிப்பு எங்கே வரும். நீட்டு கையை ” என்று சொல்லி ஒவ்வொரு கையிலும் மூன்று அடி ஓங்கி அடித்துவிட்டுப் பிரம்பை பியூனிடம் வீசிவிட்டுச் செல்கிறார்.

இராமலிங்கருக்கு மூன்று நாள்களாகியும் கை வீக்கம் குறையவில்லை. அவருடைய வலதுகையால் பத்துநாள் வரையும் எழுத முடியவில்லையாம்.

இராமலிங்கர் சொல்கிறார், ” இந்த நிகழ்ச்சியை இன்றைக்கு நினைத்தாலும் என் கை வலிக்கிறது.

பிராஞ்சு ஸ்கூலை விட்டுப் போகிற வரையிலும் எந்த நேரத்திலும் எதைக் கண்டாலும் டிராயிங்கு எழுதுகிற என்னுடைய பழக்கமும் துடிதுடிப்பும் உற்சாகமும் ஒடுங்கிக் கிடந்தது”.

பிறகு, ப்ராஞ்சு பள்ளிக்குக்கு அடுத்து நாலாவது பாரம் படிக்கக் கல்லூரிக்குச் செல்கிறார் இராமலிங்கர். அங்கு அவரது ஓவிய ஆர்வம் மீண்டும் துளிர்விட ஆரம்பிக்கிறது. அங்கு ஈ.ஹெச். எல்லியட் என்ற துரை, இராமலிங்கருக்கு ஆங்கில ஆசிரியராக வருகிறார்.அவர்தான் அங்கு ‘பிரின்ஸ்பாலாகவும்’ இருக்கிறார். ஆங்கிலத்தில் கட்டுரை எழுதப் பயிற்சியளிக்கும் பாடவேளையின் ஆசிரியர் அவர். “உயரமான கனத்த மனிதர். வயது ஐம்பத்தைந்து இருக்கும். காது கொஞ்சம் மந்தம். ஏதாவது ஒரு விசயத்தைப் பற்றி வியாசம் ( கட்டுரை) எழுதச் சொல்லிவிட்டுத் துரை உட்கார்ந்திருப்பார். அந்தப் பாட நேரம் முடிகிற வரையிலும் துரை பெரிய வகுப்புகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய பாடப்புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்”. இது அவரது வகுப்பின் வழக்கமான நடைமுறை.

ஒருநாள் ‘civilized hahits’ என்ற தலைப்பைப் பற்றி விவரித்துவிட்டு மாணவர்களை அது பற்றிய கட்டுரை எழுதச் சொல்லிவிட்டு நாற்காலியில் உட்கார்ந்து விடுகிறார். இராமலிங்கர், ஆசிரியர் கொடுத்த தலைப்பின்கீழ் தனக்குத் தோன்றியவற்றைக் கட்டுரையாக எழுதிவிட்டு நிமிர்ந்து பார்க்கிறார். ஆசிரியர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் தோற்றம் அவருக்கு ஓவிய ஆசையைத் தூண்டுகிறது.

மேசையில் கவிழ்த்து வைக்கப்பட்ட புத்தகம், அதனருகில் அவரது மூக்குக் கண்ணாடி. அதனருகில் அவரது தொப்பி. இடது முழங்கையை மேசையில் ஊன்றிக்கொண்டு, பெருவிரலால் தாழ்வாயைத் தாங்கிக்கொண்டு, வலக்கையால் நாற்காலியில் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்திருக்கும் ஆசிரியர் ஆகிய காட்சிகளை வரைய இராமலிங்கரின் கை பரபரக்கிறது.

இராமலிங்கர் வரைய ஆரம்பிக்கிறார். ஆசிரியரின் உருவம், தொப்பி, புத்தகம், மூக்குக் கண்ணாடி, கரும்பலகை, அதில் எழுதப்பட்டிருந்த ‘ civilized habits’ என்ற வரிகளும் இராமலிங்கரின் நோட்டில் படமாக மாறுகிறது. ஆசிரியரின் முகத்தில் இன்னும் கொஞ்சம் திருத்தம் கொண்டு வரவேண்டும் என நினைக்கும் இராமலிங்கர் அதை மட்டும் அழித்துத் திருத்துவதில் நீண்ட நேரம் தலைகுனிந்தபடியே இருக்கிறார். இதைக் கவனித்துவிட்ட ஆசிரியர் எல்லியட் துரை எழுந்து வந்து இராமலிங்கரின் அருகில் நிற்கிறார். இதைக் கவனிக்காத இராமலிங்கர் படத்தைத் திருத்துவதிலேயே முனைப்பாக இருக்கிறார். தற்செயலாக இதைப் பார்த்துவிட்ட மாணவர்கள் அனைவரும் சத்தமாகச் சிரிக்கும் சத்தம் கேட்டு இராமலிங்கர் நிமிர்ந்து பார்க்கிறார்.

எல்லியட் துரையைக் கண்டதும் இராமலிங்கர் எழுந்து தான் எழுதிய கட்டுரையைக் காண்பிக்கிறார். அதைப் படித்துப் பார்த்துவிட்டு இராமலிங்கரிடமிருந்த ஓவியநோட்டை வாங்கி அவர் வரைந்த ஓவியத்தைப் பார்க்கிறார். தன்னையும் மேசையில் இருந்த பொருள்களையும் ஓவியத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பதுபோல் பார்க்கிறார். நோட்டை மேசை மீது வைத்துவிட்டு பியூனைக் கூப்பிடுகிறார். உடனே இராமலிங்கருக்கு ஆசிரியர் ராமகிருஷண‌ ஐயரிடம் வாங்கிய அடிகள் நினைவுக்கு வருகின்றன. எல்லியட் துரை பியூனிடம் தலைமையாசிரியரை அழைத்துவரச் சொல்கிறார்.

இராமலிங்கருக்கோ மேலும் பயம் கூடுகிறது. தென்னிந்தியாவின் மிகச் சிறந்த கல்விமான்களில் ஒருவரான சி.என். கிருஷ்ணசாமி ஐயர்தான் தலைமையாசிரியர். அவரிடம் இராமலிங்கர் வரைந்த ஓவியத்தையும் அவரது கட்டுரை நோட்டையும் நீட்டுகிறார் துரை எல்லியட். அவரிடம், “படத்திலிருப்பது யார்?” என்று கேட்கிறார் எல்லியட். தலைமையாசிரியர் முகத்தில் புன்னகை படருகிறது. “நீங்கள் தான்” என்று பதில் கூறுகிறார் தலைமையாசிரியர்.

எல்லியட் துரை இராமலிங்கரைப் பார்த்து ஆங்கிலத்தில்,” நான் உன்னை மிகவும் மெச்சுகிறேன்.உன்னுடைய சித்திரம் நன்றாக இருக்கிறது” என்று பாராட்டுகிறார். அத்துடன் அடுத்து வரப்போகின்ற கல்லூரி விழாவில் இராமலிங்கருக்குப் பரிசளிக்க வேண்டுமென்றும் தலைமையாசிரியரிடம் சிபாரிசு செய்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இராமலிங்கர் ஓவியத்தை நிறைவு செய்யும் வரையில் வகுப்பிலேயே அமர்ந்திருக்கிறார். இராமலிங்கர் முழுதும் வரைந்து முடித்ததும் அவரது கையைப் பிடித்துக் குலுக்கி ” தம் சட்டைப் பையிலிருந்த தங்கக் குழாயும் மூடியும் உள்ள ஒரு பென்சிலை எடுத்துப்” ( அது 18 காரட் தங்கம். கீழே விழுந்துவிடாதபடி சட்டையில் மாட்டுவதற்கு ஒரு கொக்கியும் சங்கிலியும் சேர்ந்தது) பரிசளிக்கிறார்.

அத்துடன் நிற்கவில்லை அவர். உடனே ஓவிய ஆசிரியரை அழைத்து இராமலிங்கரின் ஓவியத் திறமையை அவரிடம் எடுத்துக்கூறி அவரது திறமை மேலும் வளர உதவ வேண்டும் என்று உத்தரவிடுகிறார்.

இராமலிங்கர் சொல்கிறார், ” இப்படி எல்லியட் துரையவர்கள் அளித்த ஆதரவின் உற்சாகத்தால் என்னுடைய சித்திரப் பழக்கம் வெகு சீக்கிரத்தில் நல்ல விருத்தியடைந்தது”.

இராமலிங்கருக்கு ஆசிரியராக அமைந்த ஸ்ரீ நம்மாழ்வார், எஸ்.பி.ராமகிருஷ்ண ஐயர், ஈ.ஹெச். எல்லியட் துரை ஆகிய மூவருமே தம்மிடம் படிக்கும் மாணவர்கள் தாம் கற்பிக்கும் பாடங்களில் சிறந்தவர்களாக உயரவேண்டும் என்ற எண்ணமுடையவர்களே. ஆனால், முதலிருவர் தம் கடுமையான நடவடிக்கைகளின் மூலம் அச்சுறுத்தி, அடித்து அதைச் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள். மூன்றாமவரான எல்லியட் மாறுபட்டவர்.

எல்லியட் மாணவர்களுக்கு ஆங்கிலக் கட்டுரை எழுதப் பயிற்றுவிக்கும் ஆசிரியர். அவர் மாணவர்களிடம் நடந்துகொள்ளும் முறையை இராமலிங்கர் இப்படி விவரிக்கிறார். “ஒவ்வொரு வியாசத்தையும் திருத்தி, குற்றங்களைப் பற்றி அந்தந்த நோட்டில் குறிப்பு எழுதி, அடுத்த வாரம் கொண்டு வருவார். அதிக தப்புள்ள நோட்டுகளில் சிலவற்றை எடுத்து அவற்றிற்குச் சொந்தக்கார பையன்களை எழுந்து நிற்கச் சொல்லி, அவருக்குக் காது மந்தமானதால் தாமே அந்தப் பையன்களின் நிற்கிற இடத்திற்கு சென்று, அருகில் நின்று கொண்டு வெகு அன்பான வார்த்தைகளில் குளிர்ந்த முகத்துடன் அவரவர்கள் எழுதியிருப்பதில் உள்ள குற்றங்களை சுட்டிக்காட்டிவிட்டு எல்லா நோட்டுகளையும் திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்வார். அதிக தப்பும் தவறுமாக எழுதினவனையும் கூட கடுத்துப் பேச மாட்டார். குற்றங்களை மட்டும் சுட்டிக்காட்டுவார். அவருடைய வகுப்பு கம்பீரமாக நடக்கும். துடுக்கான பையன்களும் அடக்கமாக இருப்பார்கள்…”.

மூன்று ஆசிரியர்களில் ஒவ்வொருவரும் கற்பிக்கும் தரத்தை அளவிடும்போதும் ஆசிரியர் எல்லியட் துரையே சிறந்தவராகத் தெரிகிறார்.

ஆனால், பாட ஆசிரியர் என்பதைத் தாண்டி ஒரு மாணவரின் தனிப்பட்ட திறமையைக் கண்டறிவதிலும் ஊக்குவிப்பதிலும் முதலிரண்டு ஆசிரியர்கள் தகுதியற்றவர்களாகத் தெரிகிறார்கள்.மாணவனின் தனிப்பட்ட திறமையை கண்டுணரும் திறனற்று அதற்குத் தண்டனை வழங்கும் கீழான நபர்களாகவே அந்த ஆசிரியர்கள் இருக்கின்றனர். துரை எல்லியட் சிறந்த பாட ஆசிரியராக மட்டுமின்றி, மாணவனின் தனிப்பட்ட திறமையைக் கண்ணுற்ற போது அதைப் பாராட்டவும் பரிசளிக்கவும் முன்வருகிறார். அவனது வளர்ச்சிக்கான பாதைகளைச் செம்மைப்படுத்துகிறார்.

அதனால் மூன்று ஆசிரியர்களில் எல்லியட் துரையே சிறந்தவராக இராமலிங்கருக்கு மட்டுமல்ல நமக்கும் தெரிகிறார். இப்படிப்பட்ட ஆசிரியரே மாணவ சமூகத்தை முன்னின்று இயக்கி, ஆசிரிய சமூகத்திற்கும் முன்னோடியாகத் திகழ்வர்.

உதவிய நூல்:

என் கதை – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை – 60014

கட்டுரை ஆசிரியர் குறிப்பு :

எழுத்தாளர் தி.ஜானகிராமனின் (Thi. Janakiraman) முள்முடி சிறுகதை சுருக்கம் (Moolmudi Short Story) | சிதறல்கள் சிறுகதை கட்டுரை

மணி மீனாட்சி சுந்தரம், மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 2 Comments

2 Comments

  1. Lakshmi Vaidyanathan

    ஐயா வணக்கம்.
    நாமக்கல் கவிஞர் எழுதிய
    “என் கதை” யில் அவருடைய ஆசிரியர்கள் பற்றி
    தங்கள் வழி
    அறிந்தது மிக்க மகிழ்ச்சி.
    உங்கள் பணி பாராட்டிற்குரியது.
    கவிஞரின் கவிதை பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். முழுமையாகத் தெரியாமல் இருந்தாலும் முதல் 4, 5 வரிகள்,
    நடுவரிகள் , இறுதி வரிகள்
    என இது நாமக்கல் கவிஞரின்
    கவிதை என்பதை அறிந்து விட முடியும். என் கதை என்பது
    அவர் எழுதிய சுயசரிதை நூல் என்று
    வகுப்பறையில் மாணவர்களிடம்
    எடுத்துக் கூறி இருப்போம். ஆனால்
    என் கதையை படித்திருப்போமா?
    என்றால் ஆசிரியர்களாக இருந்தாலும் நம் பலரின் பதில் இல்லை என்றுதான் வரும். ஆனால்
    தங்களின் மூன்று ஆசிரியர்கள்
    என்ற “முத்தான பகிர்வில்” ஆசிரியர்கள் தற்காலத்தில் மூன்றாவது ஆசிரியரைப் போல்
    இருப்போம் & இருக்க வேண்டும்
    என்பதை மறைமுக வலியுறுத்தலாக
    வருடிச்சென்றதோடு
    மட்டுமல்லாது, என் கதையை – நாம் படித்து விட வேண்டும் என்று படிக்கும்
    உணர்வைத்தூண்டும் விதமாய் அமைந்துள்ளது ,
    ‘மூன்று ஆசிரியர்கள்’
    என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
    மேன்மேலும் தொடரட்டும்
    உங்கள் பணி!
    வாழ்த்துகள் ஐயா.

    நம் அனைவருக்கும் தெரியும்.

  2. இ நாகேந்திரன்

    மிகவும் சிறப்பு ஐயா. மூன்று விதமான ஆசிரியர்கள் பற்றியும் அவர்களது குணநலன்கள் பற்றியும் சிறப்பாக பதிவு செய்து உள்ளது சிறப்பு. வாழ்த்துகள் ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *