வாழ்க்கையே ஆடுகளம்
முகட்டில் நின்று கொண்டு குதித்திடலாம் போல…
திணறுகிறது சிறகொடிந்த பறவை…
வானத்தை அண்ணாந்தும்
பள்ளத்தைப் பார்த்துப் பரிதவித்தும்
பார்த்துக் கொண்டே தள்ளாடுகிறது…
எழுவது சாத்தியமில்லை
வீழ்வது சரித்திரமாகும்..
வெறிச்சோடிக்கிடக்கிறது
அதன் விழிகள்
எப்படியும் ஒரு புறம் சாயத்தான் வேண்டும்…
என்றே காயங்களை விரல்களால் எண்ணிக்கொண்டே
கடத்துகின்றன காலங்களை…
பொதி
ஒவ்வோர் சதுர அடியாகத் தள்ளி வைத்து
கடத்தும் அந்தக் கூலிக்காரனின் முதுக்குக்குத் தான் பாரம் அதிகம்..
பொதி எப்போதும் போல பல்லக்கில் பவனி வருகிறது….
முதலாளிகளின் பணப்பொதி சுமந்து..
தண்டுவடத்தைத் தாங்கத் தான் வக்கற்று நிற்கிறது
அவனின் ஒட்டிய வயிறு…
கங்கையின் சங்கமம்
உயிர் துறந்த பிணங்களையும்
மனிதம் தொலைத்த குணங்களையும்
மாக்களின் கழிவுகளையும்
மக்களின் மனச் சுழிகளையும்
சடங்குக் குப்பைகளையும்
சம்பிரதாயக் குறிகளையும்
அரசியல் சூதுகளையும்
ஆதிக்க வன்மத்தையும்
வம்படியாய் அழுத்திய பின்பும்
சூடிக் கொண்டு புனிதமாகிறாள்
வளைந்தோடும் கங்கை…
கடைசி இருக்கை
கனவுகளையும்
காந்தங்களையும்
உணர்வுகளையும்
உளைச்சல்களையும்
கொண்டாட்டங்களையும்
சிடுக்குகளையும்
சீர்திருத்தங்களையும்…
கண்ணீரையும்..
சில நேரங்களில்
மனதின் செந்நீரையும்
சன்னமாக இன்றும்
முணுமுணுத்துக் கிடக்கிறது
என்னைச் சுமந்த கடைசி இருக்கை…