நூல்: துளிர் – அறிவியல் கட்டுரைகள்
வெளியீடு: TNSF வெளியீடு
விலை: ரூ.150/-
ஆஹா ! ஆஹா !
அற்புதமான 50 அறிவியல் கட்டுரைகளை உள்ளடக்கிய “துளிர் – அறிவியல் கட்டுரைகள்” TNSF வெளியீடாக சமீபத்தில் வெளிவந்துள்ளது.
30 ஆண்டுகளாக , மழலை எழுத்துகளில் அறிவியலை , தமிழகத்தின் மூலை முடுக்குகளெல்லாம் கொண்டு சேர்த்த மாத இதழல்லவா !
அதன் செறிந்த அனுபவமும் , வடிவமைப்பின் தரமும் இதழின் ஒவ்வொரு பக்கத்திலும், பத்தியிலும், வார்த்தையிலும் தனித்துத் தெரிகின்றது.
மூடப்பட்ட,முடக்கப்பட்ட, முடங்கியிருந்த காலகட்டத்தில் நம்மை நாமே மீட்டுக்கொள்வதற்கான்எளிமையான வழிவகைகளை Dr.ராமானுஜம் சிறப்பாக விளக்குவதில் முதல் கட்டுரை துவங்குகிறது.
“எதையும் செய்து பார்த்து உணர்வதும் அறிவியல் ஆராய்ச்சியாளராவதற்கான அடிப்படை.இது எல்லாவற்றுக்கும் முதன்மையானதும் ஆகும்”
இவற்றை முன் வைக்கும் இரண்டாவது கட்டுரைக்கு சொந்தக்காரர் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மரியாதைக்குரிய முனைவர்.ச.கண்ணப்பன் அவர்கள்
கொரோனாவுக்கு எதிரான போரில் பொறியியல் தொழில் நுட்பத்தின் பங்களிப்பு குறித்து இராணுவ விஞ்ஞானி Dr.வி.டில்லிபாபு அவர்களின் கட்டுரை விளக்குகிறது. மேலும் மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களில் அரசு முக்கியக் கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்து,அதற்கான முக்கியத்துவத்தையும் பட்டியலிட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
நாம் சாதாரணமாக தினசரி காணும் கரிச்சான் பறவைக்கும் , காலநிலை மாற்றதுக்குமான தொடர்பை , எளிய நடையில், மக்கள் மொழியில் விளக்கும் Dr.தினகரன் அவர்களின் கட்டுரை , அறிவியலை விளக்க புரியா மொழியும்,சிக்கலான விளக்கமும் தான் தேவை என்கிற மாயையை தகர்க்கச் செய்கிறது.
சூரியகாந்திப் பூ சூரிய ஒளிக்கு தலைநிமிரும் ஓர் அழகிய செயலை அடிப்படையாக கொண்டு , புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலப்பயன்பாட்டில் ஒரு புதிய புரட்சிக்கு வித்திட்டிருப்பதை வண்ணமயப் படங்களோடு்அலசுகிறது Dr.TVV அவர்களின் கட்டுரை.
“என்னம்மா கண்ணு..நல்லியா?” என ஜாலிமொழியோடு துவங்கும் பேரா.சோ.மோகனாம்மாவின் கட்டுரை , முடியும் வரையிலும் அதே ஜாலி மொழியைக் கொண்டு “தாடிக்கார வல்லூற்றின்” வாழ்க்கையை நமக்கு காட்சிப்படுத்தியிருக்கிறார்.
“அறிவியல்ஆய்வு என்பது பகட்டானதும்,பணக்காரர்களுக்குமானதல்ல.அது ஏழை மக்களுக்கானது” என்பதை,நிகழ்த்தப்பட்ட பல முன்மாதிரியான உதாரணங்களோடு , அறிவியலை நம் அனைவரது சட்டைப்பைக்குள்ளும் சமவாய்ப்பை வலியுறுத்தி இழுத்து வருவதில் பேரா.நா.மணி அவர்களின் எழுத்து வெற்றி பெற்றுவிடுகிறது.
– இப்படியாக 50 கட்டுரைகளுக்கும் அறிமுகம் கொடுத்துக் கொண்டே போகலாம்.இருந்தாலும் நான் விரும்பிப் படிக்கும் Dr.நாராயணி, Dr.ஹேமபிரபா,ஏற்காடு இளங்கோ,என்.மாதவன்,சிதம்பரம் இரவிச்சந்திரன்,தேமொழிச்செல்வி,சி.இராமலிங்கம்,நிவேதிதா லூயிஸ் உள்ளிட்டோரின் பல கட்டுரைகளும் , அவர்களின் சுருங்க விளக்குகின்ற பாங்கும் , இத்தொகுப்பிற்கு கூடுதல் பொலிவைத் தந்தன..
தெரிந்த அறிவியல் எழுத்தாளர்களைப் போலவே , எனக்குத் தெரியாத பல புதிய(எனக்கு) எழுத்தாளர்களின் அறிவியல் எழுத்துக்கான ஆளுமைப் பண்பையும் உணர முடிந்தது.
குறிப்பாக அமிதா , பி.மாரியப்பன் , பெர்ஜின்.ஞா,ஆரண்யா,உதயசங்கர்,ஜெகதீசன் சைவராஜ் உள்ளிட்டோரின் எழுத்துக்கள்,
அறிவியல் பரப்பும் பணிகளின் எதிர்காலத்திற்கு வலுவான நம்பிக்கையை அளித்திருக்கின்றன.
~நிச்சயமாக,ஒவ்வொருவரின் வீட்டிலும் கட்டாயமாக இருக்கவேண்டிய நூல் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை~
இதனை இவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்து வெளிக்கொண்டு வந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
-புத்தகத்தைப் பெற,
அந்தந்த மாவட்ட அறிவியல் இயக்க நண்பர்களை அணுகுங்கள்.
இயலாதவர்கள் எனக்கே விருப்பம் தெரிவியுங்கள்.நானே அனுப்பி வைக்கிறேன்.
விலை ரூ.150/- (அனுப்புகைச் செலவுடன்).
பள்ளி, கல்லூரி, வீட்டு சுற்றுப்புறத்தில் உள்ள அனைவருக்கும் இந்நூலை அன்பளிப்பாகக் கூட வழங்கலாம்.

