இளம் படைப்பாளியான மலர்வதிக்கு ‘தூப்புக்காரி’ இரண்டாவது படைப்பு. சாகித்திய அகாடமியின் இளம் எழுத்தாளர் விருது பெற்ற நாவல் தூப்புக்காரி. இது கவிதையா உரைநடையா என மயங்க வைக்கும் சொல் வளத்தில் வட்டார வழக்குகளை லாவகமாகக் கையாளும் நேர்த்தியில் வெளிப்படுகிறது. தூப்புக்காரி என்ற சொல்லின் பொருள் அறியாமல் படிக்கத் தொடங்கிய எனக்கு நாவலின் இறுதியில் என்னை அறியாமலே கண்ணீர் வெளிப்பட்டு, துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டது.

சாதிதான் சமூகமெனில்

இக்கதை நடைபெறும் இடம் கன்னியாகுமரி மாவட்டம். இம்மாவட்டம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது அதன் இயற்கை வளங்கள், மலையாள வாசனை வீசும் மக்கள், தமிழகத்தின் தென்கோடி எனப் பல விடயங்கள் இருப்பினும் சொல்லப்படாத துயரம் நிறைந்த கதைகளும் உள்ளன என்பதை இப்புதினம் வெளிப்படுத்துகிறது. இக்கதையின் ஆசிரியர் மலர்வதி மிகவும் எதார்த்தமாக உண்மை கதையினை தன் வார்த்தைகளால் வடித்துள்ளார். கதையின் முதன்மைப் பாத்திரம் தூப்புக்காரி கனகமும் அவளது மகள் பூவரசியும். கனகம் அங்கே மிகப் பிரபலமான மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்கிறாள். அவளின் மகள் ஏழாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் தையல் வேலை செய்து கொண்டிருக்கிறாள். ஒரு நாள் கனகம் வேலை செய்யும் இடத்திற்கு மகள் பூவரசி தேயிலை கொண்டு வருகிறாள். அங்கே கிடந்த நாயின் மலத்தை அவளின் தாய் அள்ளிக் கொண்டிருப்பதையும் குப்பைத்தொட்டியில் மனித மலங்களும் மாதவிடாய் துணிகளும் கிடப்பதைப் பார்த்து பூவரசுக்குக் குமட்டிக் கொண்டு வருகிறது. இதற்காகத்தான் உன்னை இங்கு வரவேண்டாம் என்று கூறுகிறேன் ஆனால் நீயோ வந்து விட்டாய் என பூவரசியிடம் கனகம் கூறிக்கொண்டிருக்க பூவரசி திரும்பி பக்கவாட்டில் பார்க்கிறாள். அங்கே மூன்று வருடமாக கண்களால் மட்டும் பேசியே காதலித்துக் கொண்டிருக்கும் காதலன் நிற்கிறான். அவனைப் பார்த்து சிறிது வெட்கத்துடன் திரும்பி வீட்டிற்குச் செல்கிறாள் பூவரசி.

இப்புதினத்தில் ஆசிரியர் மலர்வதி துப்புரவுப் பணியாளர்களின் வாழ்க்கை நிலையை விளக்கி உள்ளார் மற்றும் மனிதர்களை மனிதர்களாகப் பார்க்காமல் சாதியின் அடிப்படையிலும் தான் செய்யும் தொழிலின் அடிப்படையிலும் பிடித்துக் கசக்கி பிழிந்து எடுக்கின்ற சாதிய சமூகத்தை எதிர்த்து கேள்வி எழுப்புகிறார். பொதுவாக நம் சமூகத்தில் துப்புரவு பணி செய்பவர்களைப் பெருமளவிலான மக்கள் அவர்களுக்கு உண்டான மரியாதை கொடுப்பதில்லை. அதுமட்டுமன்றி அவர்களை மிகக் கேவலமாகவும் சில சமயம் அசிங்கப்படுத்துவதும் இச்சமூகத்தின் வழக்கமாக இருக்கிறது. உலகில் பல்வேறு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால் இம்மாதிரியான துப்புரவு பணி செய்பவர்களுக்கு உதவும் வகையில் இயந்திரங்களை கண்டுபிடிப்பதில் மெத்தனமான போக்கேயுள்ளது. இது நமது சமூகத்தின் சாதிய மனோபாவத்தோடு தொடர்புடையதே. இன்றும் மனிதர்கள் சாக்கடைக்குள் இறங்கி அதைச் சுத்தம் செய்யும் அவல நிலையும் அதில் நிறைய தொழிலாளர்கள் இறந்து போவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

பூவரசியின் காதல்

கனகம் தான் வாங்கிய கடனை கழிப்பதற்காக மருத்துவமனையிலேயே வேலை உறுதி பெற்றுவிட்டாள். இப்புதினத்தில் ஒரு காட்சியில் கனகம் துப்புரவு பணி செய்து கொண்டிருக்கும் போது ஒரு பிரசவ வார்டில் இருந்து ஒருவர் அழைத்து ஒரு பெண்ணின் தூமத் துணியைக் கொடுத்து சுத்தம் செய்யச் சொல்லி 20 ரூபாய் தருகிறார். அவள் கண்முன்னே அந்த நாற்றத்தை விட அந்த 20ரூபாய் பெரிதாகத் தெரிகிறது. துணிகளை எல்லாம் துவைத்த பிறகுத் தன் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் அந்த 20ரூபாயை எடுக்கும்பொழுது தவறி அந்த காசு சாக்கடைக்குள் போய்விடுகிறது அப்பொழுது அவளின் மனம் படும்பாடு நம் மனத்தையும் கிழிக்கிறது. மேலும் அவள் தன் மகளுக்காக உணவு வாங்க முற்பட்டபோது அவளுக்கு அவ்விடத்தில் கிடைத்த அவமானம் மிகக் கொடியது.

தன் மகளுக்கு ஒரு திருமணம் செய்யும் அளவிற்குக் கூட தன்னிடம் வசதி இல்லை என்பதை அறிந்து வேதனைப்படுகிறார். ஒருநாள் கனகத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அன்று அவள் பூவரசியின் காதலனான மனோவின் அண்ணன் திருமணத்தில் எச்சில் இலை எடுக்கும் பணிக்குச் செல்லவேண்டியிருந்தது. கனகத்திற்கு பதிலாக எச்சில் இலை எடுக்க பூவரசி செல்கிறாள். அங்கே அவமானம் நேருகிறது. முதல் முறையாக தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வீட்டிற்கு வந்து பூவரசி அழுகிறாள். மனோ பூவரசியை சமாதானப்படுத்த வீட்டிற்குள் செல்கிறான். அங்கே இருவரும் மூன்று வருடங்களாக அடக்கி வைத்திருந்த தங்கள் காதலை வெளிப் படுத்துகின்றனர். அதன்பின்பு மனோ பூவரசியை விட்டு விலக ஆரம்பிக்கிறான். அதனால் பூவரசி மனமுடைந்து அவனிடம் கதறி அழுவதைப் பார்த்து கனகம் தற்கொலை செய்து கொள்கிறாள். தான் இறந்து விட்டால் தன்னுடைய தூப்புக்காரி என்கின்ற பட்டம் தன் மகளுக்குச் செல்லும் என்ற வேதனையுடன் தான் அவள் இறந்துபோகிறாள்.

மனோ தன் பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப ஒரு பெண்ணை மணந்து கொண்டு சென்று விடுகிறான். தவிர்க்கமுடியாத வாழ்க்கைச் சூழலால் கனகத்தின் தூப்புக்காரி வேலையை பூவரசி மேற்கொள்கிறாள். இப்புதினத்தில் மிகவும் சிறப்பான பாத்திரத்தை வகித்திருப்பவன் மாரி. மாரியும் மலம் அள்ளும் தொழிலைச் செய்பவன்தான். அவன் பூவரசியை மிகவும் விரும்பினான். ஆனால் பூவரசி மனதில் மனோ இருப்பதை அறிந்து விலகிச் செல்கிறான். எல்லாம் கடந்த ஒரு நிலையில் பூவரசி துப்புரவு வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும்போது அவள் குழந்தையை தன் குழந்தையாக ஏற்றுக்கொண்டு சாகும் வரையிலும் உறுதுணையாக இருக்கிறான் மாரி. அக்குழந்தையை இம்மாதிரியான துப்புரவு தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்க என்னால் இயன்றதை செய்வேன் என்று உறுதி ஏற்று தன்னுடைய வேலையை நோக்கி நகர்கிறாள் பூவரசி.

 

புத்தகத்தின் பெயர் : தூப்புக்காரி

ஆசிரியர் : மலர்வதி

பதிப்பகம் : மதிபதிப்பகம்

பக்கங்கள் : 136

விலை : ரூ 120/-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *