தூறல் நின்னு போச்சு! குறுங்கதை – அன்பாதவன்

தூறல் நின்னு போச்சு! குறுங்கதை – அன்பாதவன்




அது 2014 பின்பனிக்காலப் பிப்ரவரி! வங்கியின் இன்ஸ்பெக்க்ஷன் பிரிவில் பணியென்பதால் கேரளம், தமிழகம் என நேஷனல் பெர்மிட் லாரிபோல சுற்றிக்கொண்டிருந்தேன் !

கேரளத்து காஞ்சிராப்பள்ளியில் புறப்பட்டு காஞ்சிபுரம் இறங்கினேன்! வங்கிப்பணியில் காலாட்டியெல்லாம் பிழைக்க ஏலாது அய்யாமாரே! ஆய்வுப்பணிகள் பின்னிப் பெடலெடுத்த பிற்பகல். குஜராத்திலிருந்து தமிழ்க்குரல் அழைத்தது….

“நண்பரே… அதிர்ஷ்டக்காரர்…. நீர்… அயலகப்பணிக்காக துபாய்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீகள்… நல்வாழ்த்துக்கள்….”

“அய்யா! மெய்யா பொய்யா!” என்ற குழப்பத்தில் தூக்கமின்றி மெய்யாலுமே காலாட்டிக்கொண்டிருந்தேன் தூக்கமின்றி!

மும்பை, சென்னை போலவே இப்போதும் ‘ஒண்டிக்கட்டை’ வாழ்க்கை தான். என் ’அடுப்பங்கரை அமைச்சரவை’ முடிவெடுத்து பழைய பாத்திரங்கள் சிலதை பரிசளித்த்து

பெருநகரத்தில் பணியாற்றிய மகனோ ‘சூட், கோட், டை, ,ஷூ’ என என்னை நவநாகரீகத்தின் பிரதிநிதியாக்கினான்.

“வாழ்வுதான் போ!” … என அவ்வை சண்முகி சிறுமிக்குரல் அசரிரீயாய் ஒலிக்க. கடனட்டை தேய்ந்து கட்டெறும்பாகியது.

உள்ளூர் காவல் நிலையத்தில் கல்லூரி நண்பர் தான் அதிகாரி..“ரொம்ப நல்லவர்” என என்னைப் பரிந்துரைக்க பாஸ்போர்ட் பணிகளில் பெயிலாகாமல் சின்ன கரும்பச்சை புத்தகம் மூலம் நானுமொரு இந்திய பிரஜை தானென முத்திரைக்குத்தப்படேன்

வடிவேலு அறிமுகப்படுத்திய துபாய்க் காட்சிகள் விரிய இன்ப அதிர்ச்சியொரு, புறமிருக்க,நிறமில்லாக் குழப்பங்கள் நிறைய… “நம்மூர் உணவுப் பொருட்கள் கிடைக்குமா… பொன்னியரசி.. புளி, பருப்பு…. எண்னெய் என… ஆங்கிலம் போதுமா… அரபி மலையாளமென பக்கவாத்தியம் வேண்டுமா…எவ்வளவு சந்தேகங்கள்!

அலுவலக முறைமைகள் என்ன… கடுமையான சட்டங்கள் என்று கேள்விப்பட்டிருந்த தால் பயப்பாம்பு பாதம் சுற்றியவனானேன்!

இதற்கிடையில் முதல் தாரத்தையே மறுதரம் கல்யாணம் செய்து பதிவு செய்தேன்….. மகனும் மகளும் காட்சி கையெழுத்திட!

அந்த நாளும் வந்தது! வழியனுப்ப வந்த துணைவியும் மகளும் விடைபெற்றுக்கிளம்ப … விமானநிலைய அதிகாரிகள் “இந்தி தெரியாதா உன்க்கு” எனக் கேட்காமல் நல்லவேலையாக கனிமொழி பேசி நிலையத்தினுள் அனுப்ப… போக வேண்டிய விமானம் தாமதமென்பதை புன்சிரிப்போடு சொன்னாள் வெள்ளைத்தேவதை.

அதற்குள் வழியனுப்ப வந்தவர் வீடு சேர்ந்த செய்தி!

ஒரு வழியாய் வந்ததென் விமானம்! நள்ளிரவில் ஏறி நள்ளிரவில் இறங்கினான் ஒளிமயமான துபாய்!

விடியலில் எழுந்து காலாற நடக்க…. வெள்ளிக்கிழமை விடுமுறையென்பதால் பக்கத்து சதுக்கத்தில் பெருங்கூட்டம். தேனாய்ப் பாய்ந்தது. “எலேய் நல்லாயிருக்கியா…”யாரோ யாரையோ கேட்டது. யப்பாடி… தப்பித்தேன்…. அங்குமிங்கும் உடைந்த தமிழ் உரையாடல்கள் துபாய் காற்றில் கலக்க…. கால் சென்ற பாதையில் வரவேற்ற சரவணபவன் காஃபி வாசம்…..பிரபஞ்சனை ஞாபகப்படுத்த. கொஞ்சம் நடந்தேன்… “நாடார் மளிகை” கடல் கடந்தாலும் சாதியும் மதமும் நம் பின்னாடியே வருதே…

’இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே’ பாடலைப் பாடியபடி அறைக்கு திரும்பினேன்.

சட சட வென இளந்தூறல்…சட்டென்று மாறுதோ வானிலை

– அன்பாதவன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *