Time (பொழுதுகள்) Short Story By Writer Ay. Tamizhmani. A Story Between Benny And Yuwana's Life. Book Day Is Branch Of Bharathi Puthakalayam.



ப்படியொரு பொழுது பென்னிக்கு வந்திருக்கக் கூடாது. என்ன செய்ய வந்துவிட்டது.

எப்பவும் பொழுதுகள் விண்ணப்பம் போட்டுவிட்டு வருவதில்லை. இந்த உலகத்தில் யாராலும் எதுவாலும் கட்டுப்படுத்த முடியாத யாருக்கும் அடங்காத ஒன்று பொழுது மட்டும் தான். உலகத்தின் எல்லா வாழினங்களுக்கும் அவரவர் அததின் வாழ்வியல் நிகழ்வுகளை குறிக்கும் விதமாக பொழுதுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. போன பொழுது திரும்பாது என பழமொழி உண்டு. அப்படித்தான் கடந்த பொழுதுகள் உண்மையாக மீள்வதில்லை. நம் நிகழ்வுகளின் காலநீட்சியைப் பொறுத்து பொழுதுகளின் நீட்சியை நாம் சொல்லிக் கொள்கிறோம். கடந்த பொழுதுகள் நடந்தவற்றை அசை போடவும் வரப்போகும் பொழுதுகள் கனவு காணவும் என மனிதர்களுக்கானதாக எழுதப்பட்டு விடுகிறது. 

பென்னி தன் அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தான். கடந்த சில நாட்களாக அவனுக்கு எந்த வேலையும் ஓடாமல் இருப்புக் கொள்ளாமல் தவித்தான். டேபிள் மேலிருந்த கண்ணாடிப் பீங்கான் உருண்டையை சுத்திவிட்டுக் கொண்டிருந்தான். அந்தப் பீங்கானுக்குள் ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்துக் கொண்டு நடனமாடியவாறும் அவர்கள் மீது பலவண்ணங்களில் இதயச் சின்னங்கள் மழைபொழிவது போன்றும்., அருகில் குட்டி வீடு ஒன்றும் குட்டி நாயொன்றும் என வடிவமைக்கப்பட்டிருந்தது. 

இப்பொழுது முன்னவும் விட வேகமாகச் சுழற்றினான். அந்தச் சுழலில் அந்த ஆணும் பெண்ணும் இடைவிடாது ஆடிக் கொண்டிருந்தார்கள். அந்த நாய்க்குட்டி அவர்களைச் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது., உலகின் அத்தனை இதயங்களும் கூடிப் பொழிந்து அவர்களை வாழ்த்தின. டேபிளிலிருந்து டக்கென சரிந்து தரையில் விழுந்த பீங்கான் உருண்டை உடைந்து சிதறியது. 

பீங்கான் உலகிற்குள் ஆடிக் கொண்டிருந்த ஆணும் பெண்ணும் நாயும் இதயங்களும் சிதறிப் போயின. பென்னி அதை வெறித்து பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் மனசு சின்னப் பதட்டம் கூட அடையவில்லை. ஏற்கனவே இவனும் உடைந்து போயிருந்தான். 

“என்ன சார் அந்தப் பொண்ணு உங்களுக்கு எவ்வளவு ஆசையாக் கொடுத்தது இப்படி ஒடச்சுட்டீங்களே..” என்றவாறு வேலைக்கார பெரியம்மா அதைப் பெருக்கி குப்பை கூடையில் அள்ளினாள்.

“அம்மா..”

“சொல்லுங்க சார்..”

“மனசு ஒடஞ்சு போச்சுன்னா இப்படி அள்ளிப் போடுறதுக்கு ஏதாவது கூடையிருக்காம்மா..” என்றான்.

“எப்பப் பாத்தாலும் வெளையாட்டுதேன் சார் ஒங்களுக்கு., ஒங்க மனசாவது ஒடையுறதாவது., எவ்வளவு வைராக்கியமான புள்ள நீங்க.. இதப் போட்டுட்டு வந்துறேன்” என்றவாறு அலுவலகத்தின் வெளியிலிருக்கும் குப்பைத் தொட்டியை நோக்கிச் சென்றார் பெரியம்மா.

உடையாமல் இருப்பதற்குப் பெயர் தானே வைராக்கியம்., உடைந்துவிடுமென்றால் வைராக்கியம் என்ற பெயர் ஏன் அதற்கு. இந்த உலகத்தில் உடையாதது ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் உடைசல்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த உடைசல்களுக்குள்ளும் ஒரு பூ பூத்து அந்த உடைசலின் தன்மையை மாற்றிவிடுகிறது. பூ பூத்ததும் அது குறித்து பெருமிதம் கொள்பவர்கள் அந்தப் பூ பூப்பதற்கான சூழல் குறித்தும் அதைப் பூக்கவித்த செடி குறித்தும் அச்செடியின் போராட்டம் குறித்தும் கிஞ்சித்தும் சிந்திப்பதில்லை. அவர்களுக்கு பூ கிடைத்துவிட்டது அவ்வளவு தான். இப்படியொரு சிந்தனை பென்னிக்குள் நடைபழக., வாயை ஓரமாய்க் குவித்து இச்சென்று விரக்திப் புன்னகையைச் சிந்தினான். பெரியம்மாவால் கூட்டியள்ளப்பட்ட பீங்கான்களின் இடங்களை அந்தப் புன்னகை இப்பொழுது நிரப்பியது. 

து மாலை நேரம்., எறும்பீஸ்வரர் கோவில், திருவெறும்பூரில் இருக்கிறது. அது மலைக்கோவில். மலையின் உச்சியில் கட்டப்பட்டிருந்த அந்தக் கோயிலின் இடுப்பளவு சுற்றுச் சுவரினைத் தாண்டி பாறைச் சரிவில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். 

மாலைநேரக் காற்று அவர்களை மயக்கிக் கொண்டிருந்தது., மேற்கில் மறையும் சூரியப்பெண் அந்த மயக்கத்திற்கு மஞ்சள் பூசிக் கொண்டிருந்தாள்.

யுவனா அடிக்கடி பென்னியின் தோளில் சாய்ந்து கொண்டும் நிமிர்ந்தும் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டே இருந்தாள். அவளின் பேச்சு ஒவ்வொன்றும் எதிர்காலக் கனவுகளைக் கட்டமைக்கும் கருவியகவே இருந்தது. அது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கிற ஆசை. அவளின் கனவுகளை நனவாக்குவதில் தனக்கு மட்டுமே பொறுப்பிருப்பதாக நினைத்தான் பென்னி.

“ஏங்க..” என்றழைத்தாள் யுவனா.

“ஏய்., லூசு அப்படிக் கூப்பிடாத ரொம்ப கூச்சமா இருக்குன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன். பேர் சொல்லிக் கூப்பிடு இல்லன்னா போடா வாடான்னு கூப்பிடு இன்னும் சந்தோசப் படுவேன்., கல்யாணத்துக்கு முன்னாடி இப்படில்லாங் கூப்பிடாத..” என்ற பென்னி அவளது தலையில் செல்லமாய் கொட்டு வைத்தான். அவளும் திருப்பி அவன் தலையில் ஒரு கொட்டு வைத்து வக்கனை காட்டிச் சிரித்தாள்.

அந்தச் சிரிப்பில் அவள் அவ்வளவு அழகாய்த் தெரிந்தாள் பென்னிக்கு. கபடமில்லாத சிரிப்பு யாரையும் ஒரு கணம் லேசாக்கிவிடுகிறது. அவள் சிரிக்கும் பொழுதெல்லாம் பென்னிக்குள் பூந்தோட்டமே பூத்துக் கொழிக்கும். பறக்கும் பாயொன்றில் வானத்தில் மிதப்பதாய் உணர்வான்.

“அதில்லங்க., என்னப் பொறுத்தவரைக்கும் காதல்ங்கிறது வேற கல்யாணம்ன்றது வேற., காதல் கைகூடாமக் கூடப் போகலாம். காதலுக்கு கட்டுப்பாடு இல்ல., ஆனா கல்யாணங்கிறதுக்கு கட்டுப்பாடு இருக்கு., இப்பக்கூடப் பாருங்க., கல்யாணத்துக்குப் பின்னாடி ஏங்கன்னு நீங்களே கூப்பிடச் சொல்றீங்க., என்னால அப்படில்லாம் திடீர்ன்னு மாத்திக்கிற முடியாது., அதேன் இப்ப இருந்தே ஏங்கன்னு ஒங்களக் கூப்பிடுறேன்.. புரியுதா ” என்றவள் பென்னியின் கண்ணத்தில் குழந்தையாய்க் கிள்ளி சின்னதாய் சிரித்தாள்.

Time (பொழுதுகள்) Short Story By Writer Ay. Tamizhmani. A Story Between Benny And Yuwana's Life. Book Day Is Branch Of Bharathi Puthakalayam.

“ஏ அப்படிச் சிரிக்காத எனக்கு என்னமோ பண்ணுது..” என்றான். அவளின் இந்தச் சிரிப்பு வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும்., அந்த மயக்கத்திலேயே வாழ்ந்துவிட வேண்டும் என நினைத்தான். இவனுக்கான எல்லாமும் அவள் தான்., அவளுக்கான எல்லாமும் இவன் தான். 

“ஏங்க..”

“ம்..”

“நாவொன்னு கேட்டா சொல்லுவீங்களா..”

“சொல்லுறதென்ன கொடுக்கவே செய்வேன்..” என்றோரு பார்வை பார்த்தான்.

“ச்சீ அப்படிப் பாக்காதீங்க..”

“ஏய்., லூசு என்னனென்னமோ நெனைக்காத., சரி சொல்லு..”

“இல்ல., நாஞ் செத்துப் போயிட்டா என்ன பண்ணுவீங்க..”

“ம்…” மீண்டும் உன்னிப்பாக அவளைப் பார்த்தான்.

“பாக்காதீங்க., சொல்லுங்க..” என்ற சிணுங்களில் இன்னும் அழகாய்த் தெரிந்தாள் பென்னிக்கு.

“நல்லாத்தான பேசிட்டிருந்த..” பொய் முறை முறைத்தான்.

“ம்.. சொல்லுங்க..” அவன் தோளில் சாய்ந்து கொண்டு அவனது சட்டைப் பட்டனோடு தனது கேள்வியையும் திருகினாள் யுவனா.

பென்னி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான் மணி ஏழைத் தாண்டியிருந்தது. நிலவெங்கோ மேகங்களுக்குள் மறைந்திருக்க நட்சத்திரங்கள் மட்டுமே மின்னிக் கொண்டிருந்தன. கோயில் நடையில் அடிக்கப்பட்ட பெரியமணியின் ஒளிச் சத்தத்தில் அங்கே சில செடிகளிலிருந்த மொட்டுக்கள் அதிர்ந்து விரிந்தன. சில வண்டினங்கள் தங்கள் இறக்கைகள் கொண்டு காதுகளை மூடிக் கொண்டன. பிரசாதம் பெற்றுக்கொண்ட பக்தர்கள் நமச்சிவாய நாமம் சொல்லி கன்னத்தில் போட்டுக் கொண்டும் நெஞ்சில் கை வைத்துக் கொண்டும் வெளியேறிக் கொண்டிருந்தனர். 

”நட சாத்தப் போறாங்க., வா., சாமியக் கும்பிட்டு கெளம்பலாம்..” என்றான்.

“சாமி இங்கதான இருக்கு எப்ப வேணாலும் கும்பிட்டுக்கலாம்., நீங்க சொல்லுங்க..” என்றாள் விடாப்பிடியாக சிணுங்கிக் கொண்டே. அவளின் கேள்வி அவனுக்குப் பைத்தியக்காரத்தனமாகப்பட்டது. கோபமாகவும் வந்தது., ஆனால் அவளின் குழந்தைத்தனமான சிணுங்களில் கரைந்து போயிருந்தான்.

“நாவொன்ன அப்படி விட்டுற மாட்டேன்..”

“சாவ யாருந் தடுக்க முடியாது., என்ன செய்வீங்க சொல்லுங்க..”

குழந்தையாய் பேசுகிறாள் என நினைத்தால் பெரிய மனுசி மாதிரி தத்துவம் பேசுகிறாளே என நினைத்தவன்.,

“சரி நீ என்ன செய்வ..” என்றான்

“மொத நீங்க சொல்லுங்க., நாந்தான மொதக் கேட்டேன்..”

“லேடீஸ் பர்ஸ்ட்..”.

“இப்படிச் சொல்லியே எங்கள மடக்கிடுவீங்களே., ஆம்பள புத்தியே இதான்..” என்று வெடுவெடுத்தவள் சட்டென எழுந்து நின்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“ஏய்., லூசு அப்படில்லாம் இல்ல., எனக்குச் சொல்லத் தெரியல்ல., நீதேன் இப்படில்லாம் யோசிக்கிற..” பென்னி அவளது கண்ணங்களைக் கைகளால் கொஞ்சி சமாதனப் படுத்தினான்.

”சரி சரி நானே சொல்றேன்..” என்றவள் அவனது கைகளை விலக்கிவிட்டவாறு.

“நான் வேறொருத்தனக் கல்யாணம் பண்ணிக்கிருவேன்..” என்றாள் தடாலடியாக., சற்றும் எதிர்பாராத அவளின் அந்தப் பதிலுக்கு.,

“நீ மட்டும் பண்ணிப்பாரு.. பெறகு என்ன பண்ணுவேன்னு தெரியும்..” என்றான் கோபமாக., அவளின் வார்த்தைகள் அவன் இதயத்தை பிசைந்துவிட்டிருந்ததது.

“என்ன பண்ணுவீங்க நீங்கதேன்., செத்துப் போயிருப்பீங்களே.” என வக்கனை காட்டிச் சிரித்தாள். பதிலுக்கு பென்னியும் சிரித்துவிட்டான். பொய்க் கோபமாய்..

“ஒன்ன..” என கையை ஓங்கினான். விலகியவள் ஓடினாள். இவனும் விரட்டினான். அந்தப் பாறைகளில் சுற்றிச் சுற்றி ஓடியவர்கள் கைகளை முழங்காலில் வைத்துக் கொண்டு மூச்சு வாங்கினார்கள். ஓருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். யுவனா திரும்பவும் ஓடிவந்து அவன் தோள்மீது சாய்ந்து கொண்டாள்.

“தொரைக்கு என்னாம்மா கோவம் வருது.. நான் அப்படியொன்னுஞ் சீக்கிரமா சாக மாட்டேன்.. ஒங்களுக்குப் பெறகுதேன் எஞ்சாவே..”

“லூசு லூசு.. வாழ்றதப்பத்தி பேசுறத விட்டுட்டு.. சாகுறதப் பத்திப் பேசுற..”

”சாவு தான வாழ்க்கையோட எல்ல., அதத் தொடாதவங்கன்னு இங்க யாரையும் எதையுஞ் சொல்ல முடியாது., அதப் பேசாம பெறகெங்க வாழ்றது..”

”என்னடி ஔவையார் மாதிரிப் பேசுற..” தோளில் கிடந்த யுவனாவை விலக்கி விட்டான் பென்னி. மீண்டும் அவன் தோளில் சாய்ந்து கொண்டவள்.

“ஏங்க… லூசு..” என பென்னியின் காதில் கிசுகிசுத்தாள். பென்னிக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது அவளின் ஏங்க லூசு என்கிற கள்ளமில்லா வார்த்தை அவனின் இதயத்தில் கசிவை ஏற்படுத்திவிட்டது. அவளை இறுகக் கட்டியணைத்துக் கொண்டான்.

“நீ இல்லன்னு வந்துட்டா அப்பவே., நாஞ் செத்துப் போவேன் யுவனா..” என்று தழுதழுத்தான்.

“என்னங்க இது சின்னப்புள்ளத்தனமா., இப்படித் தேம்புறீங்க., ஒங்கள பெரிய வீரன்ல்ல நெனச்சேன்..” என்றவளின் பதிலுக்கு கண்ணீர் பொங்க சிரித்துவிட்டான். 

“போடி லூசு..” என்றவனின் கண்களைத் தன் சுடிதார் துப்பட்டாவால் துடைத்துவிட்டவள்..

“ஒங்களுக்கு ஒரு கிஃப்ட் வச்சிருக்கேனே..” என்றாள். பென்னி ஆவலாய் எங்கே என்றான்.

தன் கைப்பையிலிருந்து அந்தப் பரிசுப் பெட்டியை எடுத்துக் கொடுத்தாள். வாங்கியவன் பரபரவெனப் பிரித்தான். 

“என்ன யுவனா பேப்பர் வெய்ட்ட வாங்கியிருக்க..”

“ஆமா உங்க ஆபிஸ் டேபிள்ல இருக்குற அந்த பேப்பர்வெயிட் நல்லால்ல., அதேன் இத வாங்கினேன்..”

“நல்லாருக்கு., கண்ணாடி உருண்டைக்குள்ள ஒரு லவ்வர்ஸ்., அவங்கள வாழ்த்துற மாதிரி நெறைய இதயங்கள்.. நாய்க்குட்டி வீடுன்னு., இத்துணூண்டுக்குள்ள இவ்வளவு வேல பாத்திருக்காங்க., செம்ம..”

“ஏங்க..”

“ம்..”

”நாவொன்னு சொல்லட்டா..” என்றவளின் கேள்விக்கு திரும்ப முதலிலிருந்தா என்ற பயம் பென்னிக்கு இருந்தாலும்..

“ம் சொல்லு..” என்றான்.

“இந்த பேப்பர் வெயிட்ல இருக்குற லவ்வர்ஸ் மாதிரி நாம சேர்ந்தே இருக்கணும்., நாம ரெண்டு பேருமாச் சேர்ந்து நெறையப் பிள்ளைங்களப் பெத்துக்கிறணும்., எல்லாப் பிள்ளைகளுக்கும் கண்ணு ஒங்கள மாதிரியும் மொகம் என்ன மாதிரியும் இருக்கணும்., கொழந்தைகளோட கொழந்தைகளா நாம ஹே ஹேன்னு வாழணும்… பெறகு..” என ஒரு கணம் தன் கண்களைத் தரை தாழ்த்தினாள் யுவனா.

“சொல்லு., பெறகு..” என்ற பென்னி அவளின் மோவாயத்தூக்கி அவளது வெட்கத்தை ரசித்தவாறு கண்களை ஊடுருவினான். இருவரின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன. கண்கள் நான்கும் அவர்களைக் காந்தமாய் ஈர்த்தன. பார்வையை விலக்கிக் கொள்ளாமல் யுவனா சொன்னாள்.,

“என்னயக் கெறங்க வைக்கிற ஒங்க கண்ண நாங் கடைசி வரைக்கும் பாத்துக்கிட்டே இருக்கணும்.

”தம்பி நாங் கெளம்புறேம்பா.. தம்பி…..”என்ற பெரியம்மாளின் சத்தமான நெடிய குரலுக்கு பென்னி பழைய பொழுதிலிருந்து நிகழ் பொழுதிற்குத் திரும்பினான். அவர் கிளம்பிப் போய்விட்டார். 

பென்னி தனது நாற்காலியின் சாய்மானத்தைப் பின்னுக்குத் தள்ளி சாய்ந்து கொண்டான். குப்பைக்குப் போன பீங்கான் உருண்டை அவன் மனதில் உருண்டு கொண்டிருந்தது. 

இன்று யுவனா அவனைப் பார்க்க வருவதாய் உறுதியளித்திருந்தாள். கடுமையான பொழுதுகளை தின்று செரித்த பென்னி அவள் வரும் பொழுதுக்காகவே காத்திருக்கிறான். காத்திருப்பின் ஒவ்வொரு வினாடியும் அவளுக்கான நினைவுகளை இவனுக்குள் தேன் ஈயைப் போல கொட்டிக் கொண்டிருந்தது. இதயத்தின் லப்டப்கள் அந்த அறை முழுக்க ஒலித்தது.

வருபவள்  எப்படியும் அவள் மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என தவித்தான் பென்னி.  அந்த ஒரு கணப் பொழுதில் யுவனாவிற்கு அப்படி நடக்காமல் இருந்திருந்தால்… என்ற தவிப்போடு தன் கண்களை மெதுவாக மூடிக்கொண்டான். திரும்ப பழைய பொழுதுகளின் காட்சிகள் அவனுக்குள் விரியத் தொடங்கின.

Time (பொழுதுகள்) Short Story By Writer Ay. Tamizhmani. A Story Between Benny And Yuwana's Life. Book Day Is Branch Of Bharathi Puthakalayam.

ரு மாதப் பயிற்சிகாக பென்னி மும்பை சென்றிருந்தான். ரயில்வே நிலையத்திற்கு யுவனா தன் தோழி வதனாவுடன் வந்து வழியனுப்பி வைத்தாள். ஒவ்வொரு நாளும் இரவும் அவனுக்காக காதல் கடிதமும் கவிதைகளும் எழுதுவாள். எழுதியதை அதிகாலையிலேயே வாட்ஸாப்பில் அனுப்பிவிடுவாள். அந்த உற்சாகத்தை அணிந்து கொண்டு பயிற்சிக்கு கிளம்பிவிடுவான் பென்னி. இவனும் பதிலுக்கு வாட்ஸாப் வார்த்தைகளில் அவளைக் கரைய வைப்பான். இப்படி விடியும் பொழுதும் மறையும் பொழுதுமென காதல் மனங்கள் சிறகடித்துக் கொண்டிருந்தன.

இவன் திரும்ப வரும் அந்தப் பத்து நாட்களுக்கு முன்பு அவளுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. இரவு பனிரெண்டு மணிவரை பேசுபவள் அன்று மாலை ஆறு மணிக்கு மேல் பேசவில்லை. அவளது செல்போன் சுவிட்ச் ஆஃப்பில் இருந்தது. 

அதிகாலை மூன்று மணிக்கு செல்போனில் பென்னியை அழைத்தாள் யுவனா.. தூங்காமல் தவித்துக் கொண்டிருந்தவன் முதல் ரிங்கிலேயே போனை எடுத்து.. ஆர்வமாக.,

“யுவி..” என்றான். மறுமுனையில் பலவீனமான குரலில் நிதானமாகப் பேசினாள் அவள்.

“ஏங்க.. நாவொன்னு சொன்னா கேப்பிங்களா..” என்றாள் எடுத்ததுமே முதல் வார்த்தையாய். வழக்கமாக அவள் கேட்கும் எப்பதான் வருவீங்க.,  சாப்பிட்டாசா., டிரெயினிங் எப்படிப் போகுது., க்ளைமேட் எப்படி இருக்கு., இன்னக்கி என்னென்ன செஞ்சீங்க., யாரும் குடிக்கச் சொன்னா குடிக்காதீங்க., என எதுவும் இல்லை. பென்னிக்கு இதுவே ஒரு இறுக்கத்தை ஏற்படுத்தியது.

“ம் சொல்லு..” என்றான்.

“திட்டக்கூடாது.. ப்ராமிஸ்..”

“ப்ராமிஸ்..”

“நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கங்க..ம்” என்றாள் கொஞ்சல் தொணியில்.

“ஏன்டி லூசு., நீ என்ன சுத்திவிட்டுப் பாக்குறீயா., இரு ஒன்ன வந்து கவனிச்சுக்கிறேன்..”

“ஏங்க நீங்க இப்படிக் கோபப்பட்டா நான் சொல்ல வந்ததச் சொல்லவும் மாட்டேன்., ஊருக்கு வந்தா ஒங்களப் பாக்கவும் மாட்டேன்..” மண்டைக்குள் வெடிக்கிற குழப்ப எரிமலையை அணைத்துக் கோண்டே.,

“ம்..சொல்லு..” என்றான். 

“அதில்ல.. நா சீரியஸாத்தேங்க சொல்லுறேன்.. கோபப்படாதீங்க., ப்ளீஸ்” கெஞ்சிப் பேசினாள் யுவனா. இந்த மாதிரியான் ப்ளீஸை இதற்கு முன் அவள் சொல்லி அவன் கேட்டதில்லை. கொஞ்சம் நிதானாமானவன்.

“ம்..புரியுது சொல்லு..” 

“நீங்க கல்யாணம் முடிச்சு இங்கேயே வந்துருங்க., உங்க சொந்த ஊருக்குப் போக வேணாம்., உங்க அம்மா அப்பாவையும் கூட்டிட்டு வந்திருங்க., நீங்களும் ஒங்க பொண்டாட்டியுமா நெறைப் புள்ளைகளப் பெத்துப் போடுங்க., எல்லாத்தையும் நானே வளக்குறேன்., எங்கண்ணு முன்னாடியே இருங்க., ப்ளீஸ்..” என யுவனா சொல்ல அரபிக்கடல் அப்படியே வானளவு எழுந்து இவனை உள்வாங்கிக் கொண்டது போலிருந்தது பென்னிக்கு. மூச்சு முட்டுவது போலிருந்தது. கண்களை மூடி மூச்சை இழுத்துவிட்டவன்..

“இங்க பாரு காலையில் மூனு மணிக்கு வெளையாடுற வெளையாட்டா.. இது..  ம்..சொல்லு..” கோபமானான் 

“ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க..” என்று போனை வைத்துவிட்டாள்.

எத்தனையோ முறை திரும்ப அழைத்துப் பார்த்தான் அவள் போனை எடுக்கவில்லை. மேஸேஜ்களுக்கும் பதிலில்லை. ஆனால் இவன் அனுப்புகிற அனைத்து மெஸேஜையும் பார்த்து விடுகிறாள். வாட்ஸாப் டிபியில் இவனது சிரித்த புகைப்படத்தினை பதிவேற்றம் செய்திருந்தாள். கடந்த நான்காண்டுப் பொழுதுகளைக் கடந்த காதலில் இப்பொழுது தான் முதல் முறையாக இவன் படத்தினை டிபி யில் வைத்திருக்கிறாள். அடுத்தப் பத்து நாட்களும் வினாடிகள் ஒவ்வொன்றும் பென்னிக்கு பிரளயமாய்க் கடந்தன., இரவுப் பொழுதுகளில் கடைசியாய் அவள் எழுதிய நாற்பது காதல் கடிதங்களும் அவனைப் பாடாய்ப் படுத்தின.

”நான்../ உன் விழி யுவி பேசுகிறேன்.,/ என் பென்னியான இமைகளே../ என்னை மூடிக்கொள்.,/ மீண்டும் திறக்காதே../ எனக்கான உலகம்../ நீ.. நீ.. மட்டும் தான்.!”

“நீ எப்பொழுது திரும்புகிறாய்../ எனக் கேட்கப் போவதில்லை../ நீ தான்../ என்னை விட்டுப் போகவே இல்லையே.!”

“வானம் எல்லோருக்குமான குடையாய்../ இருந்துவிட்டுப் போகட்டும்.,/ நீ / எனக்கான குடையாய் இரேன்.”

“யு என்றால் நீ../ வி என்றால் நாம்.,/ யுவிக்கு முதலில் நீ../ பிறகு தான் நாம்.!”

”காணாமல் போன../ நம் காலணிகளை.,/ நான்தான் பத்திரப் படுத்தியிருக்கிறேன்../ நம் காதலைச் சுமந்த../ முதல் தேர் அவைகள்.!”

“என் அம்மா../ எனக்கு.,/ வேறு மாப்பிள்ளை/ பார்ப்பதாய் சொன்னாள்../ என் வேர் நீதானே../ ம்../ விரைவில் புரிய வைத்துவிடுவேன்.!”

“என்னை/ நீ அணைத்துவிடுவாய்.,/ நம் காதலை.,/ நாமே நினைத்தாலும்../ அணைக்க முடியாது..”

”ஏங்க../ இன்று வானவில் பார்த்தேன்.,/அதில் உங்கள் நிறமில்லை../ வானவில்லை அழித்துவிட்டேன்.!” 

இப்படியெல்லாம் உருகி உருகி எழுதியவள் ஏன் இப்படிச் செய்கிறாள். விளையாட்டுக்காட்டி வெறுப்பேத்துகிறாளா.. இல்லை அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என நினைத்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது. 

நரகாமாய் நாட்களை நகர்த்தியவன் ஒருவழியாய் பயிற்சியை முடித்துவிட்டு ஊர் திரும்பினான்., அதிகாலை மேகங்களைக் கிழித்துக் கொண்டே ப்பாம் என்ற கூவலோடு நிலையத்திற்குள் நுழைந்த ரயில் நிற்பதற்குள்ளாகவே விருவிருவென இறங்கிய பென்னி நேராக யுவனாவின் வீட்டிற்குச் சென்றான். இவர்கள் இருவரின் காதலும் யுவனாவின் வீட்டிற்குத் தெரியும். காலிங் பெல்லை அழுத்தினான். அவள் அம்மாவுக்குத் தான் கொஞ்சம் பிடித்தமில்லை. ஆனாலும் பென்னி யுவனா ஜோடிப் பொருத்தம் அவரது மனதுக்கு நிறைவாகவே இருந்தது. 

யுவனாவின் அம்மா தான் கதவைத் திறந்தார். இவனைப் பார்த்ததும் அவரது கண்களில் காவிரி திரண்டு முட்டியது. தழுதழுத்தவாறு.,

“உள்ள வாங்கப்பா..” என்றார்.

“ஏய்.. யுவி.. யாரு வந்துருக்கானு பாரு..” என்றார் தன் சேலைத் தலைப்பால் திரண்டு நின்ற கண்ணீரைத் துடைத்தபடி. தன் அறையிலிருந்து வெளியே வந்த யுவனா பென்னியைப் பார்த்ததும் கதவை சடாரென்று அடித்துச் சாத்திக் கொண்டாள்.

“அவரப் போகச் சொல்லு., என்னாலப் பாக்க முடியல.,” என அறைகுள்ளேயே கதறித் தேம்பினாள். அவளின் அம்மாவுக்கும் பென்னிக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. பென்னி ஒரு கணம் கனத்துப் போனான். யுவனாவின் அம்மாவைப் பார்த்தான். அவரும் உடைந்து அழுதுவிடுவார் போலிருந்தது.

“வர்றேன் ஆண்ட்டி.,” எனக் காற்றே வராத வார்த்தைகளை உதிர்த்துவிட்டு வெளியேறினான்.

“என்னதான் நடந்தது அவளுக்கு..” என்ற அவன் நினைப்புக்கு முன்னால்.. சாலை மரங்களெல்லாம் கள்ளிச் செடியாய் முளைத்து நின்றன. சாலையெங்கும் பாலையாய்த் தெரிந்தன. யுவனாவின் வீட்டில் நடந்த சம்பவத்தை சுமக்க முடியாமல் சுமந்தவாறு நடக்க ஆரம்பித்தான். 

யுவனா அம்மாவின் முகம் எதையோ கேட்டுக் கெஞ்சுகிறது. அந்தத் தாயின் உள்ளம் தன் மகளின் வாழ்வுக்காகப் பரிதவிக்கிறது என்பது மட்டும் பென்னிக்குப் புரிந்தது.

ஆனால் யுவனாவின் பாக்க முடியல்ல என்ற கதறலுக்கும் தழுதழுப்புக்கும் பின்னால் என்ன என்பதே பென்னியின் குருதியை சுண்டிக் கொண்டிருந்தது.

விடையேதும் தெரியாத வினாத் தாள்களோடு பத்துக் கிலோ மீட்டர் தூரம் நடந்தே தனது அறைக்கு வந்து சேர்ந்தான்.

அறையின் சன்னல் கதவுகளைத் திறந்தான். வெளியில் இருந்த செடியில் யுவனா பூத்திருந்தாள்., சன்னலைச சாத்தினான். சுவர்க்கடிகாரத்தின் மீது இவன் பார்வைபட்டது நொடி முள்ளாய் யுவனா ஓடிக் கொண்டிருந்தாள். மணி முள்ளாய் இவன் நகர்ந்து கொண்டிருந்தான். கடிகாரத்தை உடைத்தான். பார்க்குமிடமெல்லாம் அவள். உடைப்பதற்கு அறையில் ஏதுமில்லை. அனைத்தையும் உடைத்துவிட்டிருந்தான். உடைத்தபொழுது சிதறிய பொருட்கள் பென்னியின் முகம் உடம்பு என சிறு காயங்களையும் ரத்தச் சொறிவையும் ஏற்படுத்திவிட்டிருந்தன. 

அழுதான் குமுறினான் குலுங்கினான் குளியலறைக்குச் சென்று சவரைத் திறந்துவிட்டு அப்படியே உட்கார்ந்துவிட்டான். கூனிக் குறிகிய அவனது உடம்பும் மனதும் நடுங்கின.

எவ்வளவு நேரம் ஆனது எனத் தெரியவில்லை. மாலை நிலா உலாவரத் தொடங்கியிருந்தது. சிண்டெக்ஸ் தண்ணீரும் பென்னியின் கண்ணீரும் வடிந்து விட்டிருந்தன. 

காலிங்பெல் குருவிகள் விடாமல் கத்தின., அவைகளின் தொடர் கத்தல்கள் பென்னியை அசைத்தன. வந்து கதவைத் திறந்தான்.

“எப்பண்ணா வந்தீங்க., தூங்கிட்டீங்களா..” என்றாள் வாசலில் நின்றிருந்த வதனா.

அவளை யாரென்று தெரியாதது போல பார்த்த பென்னி.,

“தூக்கம்.. ம்., எப்படி இருக்க உள்ள வா.,” என்றான்.

“யுவனாவப் பாத்தீங்களாண்ணா..?”

“அவ சொல்லித்தான் நீ வந்த்திருக்க., என்னன்னு சொல்லு..”

“இல்லண்ணா., ஒங்கள ஸ்டேசன்ல ட்ராப் பண்ணப்ப நீங்க சொன்ன டேட் நெனப்பு இருந்துச்சு அதான் வந்தேன்., நானும் யுவனாவப் பாத்து நாலு நாளாச்சு., என்ன வரக்கூடாதுன்னு எரிஞ்சு விழுந்துட்டா., ஃபர்ஸ்ட் ஸ்டேண்ட்ர்டுல இருந்தே நாங்க ப்ரண்டுண்ணா” வதனா சொல்லும் போதே தழுதழுத்தாள்.

பென்னிக்கு நிலைமை ஏதோ பெருஞ்சிக்கலாய்ப் பட்டது. அமைதியானான். வதனா துப்பட்டாவால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். உட்காரச் சொன்னான் உட்கார்ந்தாள். தண்ணீர் எடுக்துக் கொடுத்தான். ஒரு மடக்கு குடித்துவிட்டு பாட்டிலை ஓரமாய் வைத்துவிட்டு தலையைக் குனிந்து கொண்டாள்.

“சொல்லு வதனா., ஏன்.,?”

”நானும் அவளும் பத்துப் பன்னண்டு நாளைக்கு முன்னாடி பைக்கில் போய்க்கிட்டிருந்தோம்., சிட்டிக்குள்ள தான்ணா., திடீர்ன்னு சிக்னல்ல நிக்கிறப்போ பின்னாடி வந்த பஸ் இடிச்சிருச்சு., ரெண்டு பேருமே பைக்கோட பஸ்ஸுக்கு அடியில போய்ட்டோம்., அவளுக்கு அடி ஏதும் இல்ல சின்ன சின்ன சிராய்ப்புதான்., எனக்கு தான் நெத்தியில் அடி. அவ மயங்கிட்டா.,” திரும்ப பாட்டில் தன்ணீரை ஒரு மடக்கு விழுங்கியவள் தொடர்ந்தாள். பென்னி கவனப்பட்டான்.

“ஹாஸ்பிட்டல் போனப்போ., அவளுக்கு அவ்வளவு சீக்கிரமா மயக்கந் தெளியல., டாக்டர்ஸ் பாத்துட்டு ஸ்கேன் பண்ணச் சொன்னாங்க அவளுக்கு., ரிப்போர்ட்ல அவ பஸ்ஸுக்கு அடியில் விழுந்ததுல யுட்ரஸ்ல உள்காயமாகி வீங்கிருச்சு அண்ணா., அத ரிமூவ் பண்ணாதான் உயிர் பிழைக்க முடியும்ன்னு சொன்னாங்க., ஒன்னுக்கு நாலு டாக்டர்ஸ்கிட்ட காட்டியாச்சு., எல்லாரும் அதையே சொல்றாங்க., கொழந்த பெத்துக்கிற பாக்கியமில்லாமப் போச்சுன்ணா அவளுக்கு., நெகஸ்ட் வீக் ஆபரேசன்ணா.,” என்ற வதனா வார்த்தைகளை மவுனித்து தரையையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படியே உடம்பு குலுங்க பெருங்குரலெடுத்துக் குமுறினாள்.

 ”நாந்தாண்ணா பைக்கோட்டிட்டுப் போனேன்., யென்ன..?” என தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள் வதனா. 

நிறையக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் எவ்வளவு ஆசையோடிருந்தாள் யுவனா., அத்தனையிலும் மண் விழுந்துவிட்டதே. வானம் இடிய கத்த வேண்டும் போலிருந்தது அவனுக்கு. இப்படியொரு பொழுதா எங்களுக்கு வாய்க்க வேண்டும் என்றெண்ணினான்.

விழிகள் வற்றிப் போயிருந்த பென்னிக்கு இதயம் நடுங்கியது. தன் உடலைக் குறுக்கிக் கொண்டு தேம்பினான். 

Time (பொழுதுகள்) Short Story By Writer Ay. Tamizhmani. A Story Between Benny And Yuwana's Life. Book Day Is Branch Of Bharathi Puthakalayam.

மூடிய இமைகளைப் பொத்துக் கொண்டு நீர்த்துளிகள் கசிந்தன பென்னிக்கு நிகழ்பொழுதில். மூச்சை இழுத்துவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டான். நாற்காலியின் சாய்மானத்திலிருந்து நிமிர்ந்தவனுக்கு நம்ப முடியவில்லை., எதிரே யுவனா அமர்ந்திருந்தாள். 

அவள் முகத்தில் தெளிச்சி இருந்தது. நடு நெற்றியில் நுணுக்கமாய் அவள் வைத்திருந்த பொட்டு அவள் தீர்க்கமான ஒரு முடிவுடனே வந்திருப்பாள் போல. சின்னதாய் சிரித்தாள்.

இந்தச் சிரிப்புக்குத் தானே நான் கட்டுண்டு போயிருந்தேன்., இதற்காகத் தானே வாழ நினைத்தேன். நாம் நம் கனவுகளை சேமித்தோம்., என நினைத்தவனுக்குள் ஒரு சின்னப் பூ பூத்தது.

“என்ன யுவி எந்த ட்ரீட்மெண்ட்டுன்னு முடிவு பண்ணிட்டியா..?” உள்ளப் பரபரப்போடு கேட்டான். வதனா வந்து போன பிறகு தான் பேசிய விசயங்களில் அவள் சமாதானத்திற்கு வந்துவிட்டதாய் நினைத்தான் பென்னி.

“நீ நெனக்கிற மாதிரியெல்லாம் ஒன்னுமில்ல பென்னி.. ரொம்ப அடம் பிடிக்கிற., கொழந்த மாதிரி.,” குழந்தை என்ற வார்த்தையில் கொஞ்சம் நிதானப்பட்டவள்.

“ஒன்னோட வாழ்க்க கெட்டுறக் கூடாதுல., அதேன் பேசிட்டுப் போலான்னு வந்தேன்..” என்றவள் பென்னியின் முகத்தை நேராகப் பார்த்தாள்.

ஏங்க ஏங்க என்றழைத்தவளின் வாய்மலர் நீ என்றும் பென்னி என்றும் அழைத்ததே அவனைத் தலைகுப்புறத் தள்ளியது போலிருந்தது.

“அப்போ முடிவோட வந்திருக்க., அது எனக்கான முடிவில்ல., அப்படித்தான.,”

“இல்ல இது நம்ம ரெண்டு பேருக்குமான முடிவு., புதுத் தொடக்கம்., நாம நம்மள மாத்திக்கிறணும்.,”

“நீ வேணும்ன்னா ஒன்ன மாத்திக்கோ., என்ன மாத்திக்கிறது என்னோட உரிம., ஒன்னோட நெனப்புலேயே செத்துட்டுக் கூடப் போறேன்., நீ நல்லாரு., நீதேன் அடிக்கடி சாவப் பத்திப் பேசுவியே.” என்றான் பென்னி. 

”ஏன்டா புரிஞ்சுக்கிற மாட்டீங்கிற..” என்றவாறு தன் கைப்பையால் அவன் தலையிலும் தோளிலும் மாறி மாறி அடித்தாள். கைப்பை அறுந்து விழுந்தது. 

“யென்ன மறந்திடேன் ப்ளீஸ்.,” எனக் கதறினாள். பென்னி அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அந்தக் காந்தப் பார்வை அவளிடம் கெஞ்சியது. அவளால் தாங்க முடியவில்லை. அவன் தலைமுடியைப் பிடித்து கெரகமாடினாள். உணர்வற்ற உடலாய் ஆடினான். பித்துப் பிடித்தவனாய் தலையைக் கொடுத்துவிட்டிருந்தான்.

“புரிஞ்சுக்க ப்ளீஸ்., என்ன விட்டுறு., மறந்துதேன் தொலையேன்.,” என்றவள் பலமிழந்து அறையின் மூலையில் அமர்ந்துவிட்டாள்.

அவன் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். அறை முழு அமைதியானது. வெளியில் துடிக்கும் ஒலிகளால் அந்தப் பேரமைதியை ஊடுருவல் செய்ய முடியவில்லை. ஒரு சிட்டுக் குருவி அறையின் சன்னலில் அமர்ந்து சட்டத்தைக் கொத்தியது. யுவனாவின் பார்வை குருவியின் பக்கம் திரும்பியது., பார்த்துக் கொண்டே இருந்தவள் கலைந்த தன் தலைமுடியையும் உடையையும் சரி செய்தாள்., மீண்டும் பென்னியின் முன் நாற்காலியில் அமர்ந்தவள்.,

”நீ சொன்ன எல்லாத்தையும் யோசிச்சுப் பாத்துட்டேன்., எதுலேயுமே தீர்வில்ல., எல்லாமே நம்பிக்கை மட்டுந்தேன்., எத நம்பனும் நம்பக் கூடாதுன்னு நம்ம மனசுக்குத் தெரியனும்., வயசு போய்ட்டா வாழ்க்க வராது. தியாகம் அது இதுன்னு பைத்தியக்காரத்னமா நீ முடிவெடுக்குறதுக்கு நான் சப்போர்ட் பண்ண முடியாது. உனக்கு எப்படி நான் முக்கியமோ அப்படித்தான் நீ எனக்கும். ஆனா நாம முட்டாளுக இல்லையே..”  என்றவள் டேபிளில் இருந்த அவன் கைகளை அழுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“சயின்ஸ் டெவலப் ஆகிகிட்டிருக்கு., நெறைய கருத்தரிப்பு மையம் இருக்கு., என்ன அது எதுவும் எனக்கு உதவாது. சட்டியில இருந்தாத்தான அகப்பையில வரும்., அது சரி யுட்ரஸ் மாற்று சிகிச்சன்னு வந்தாதேன் ஆச்சு., அப்போ எனக்கு வயசும் போயிருக்கும் உடம்பும் போயிருக்கும் தாங்கணுமே.,”

“இந்தப் பக்கம் சித்தா ஆயுர்வேதம் இன்னும் என்னென்னவோ எல்லார்கிட்டேயும் போயிட்டு வந்தாச்சு., சான்ஸே இல்லன்னு சொல்லிட்டாங்க.,” 

“ப்ளிஸ் புரிஞ்சுக்கப்பா., நீ சொல்ற மாதிரி என் அண்ணனோட புள்ளைங்கள்ல ஒன்னையோ., இல்ல ஓந்தங்கச்சி புள்ளைங்கள்ல ஒன்னையோ எடுத்து வளக்கலாம் தான்., ஆனா அதுல எவ்வளவு சிக்கல் வரும்ன்னு யோசி., அத நாம தாங்க முடியுமா.?”

“ அதுவுமில்ல ஏதோ ஒரு பிள்ளைய நாம அடாப்ட் பண்ணிக்கிறம்ன்னு வையேன்., இருந்தாலும் அது நம்ம பிள்ள இல்லையே., நம்மக்குன்னு ஒன்னு இருந்து அது இல்லாம்ப போயி பெறகு அடாப்ட் பண்ணினாக் கூடத் தெரியாது. அதுக்குத்தேன் சான்ஸே இல்லியேப்பா..”

” ஒனக்கு நாங் கொழந்த.,  யெனக்கு நீ கொழந்தன்னு இருக்கலாந்தேன்., ஒங்க வீட்டுல நீ மூத்தவன்., ஒன்னோட பிள்ளைகளத் தூக்கி கொஞ்சனும்னு ஒன்னப் பெத்தவங்களுக்கு எவ்வளவு ஆசையிருக்கும்., அந்த ஆசையில யென்ன மண்ணள்ளிப் போடச் சொல்றியா..” 

“ என்னால தெனமும் அழுதுக்கிட்டு இருக்க முடியாது., நான் அழுறதப் பார்த்துட்டு நீ சும்மா இருப்பியா., வேதனையில துடிப்ப., அதையும் என்னால சகிக்க முடியாது., ப்ராக்டிக்கலா யோசிப்பா ப்ளீஸ்..”

”ஒவ்வொரு ராத்திரியையும் பகலையும் நான் கண்ணீரும் கம்பலையுமா., என்ன மறச்சுக்கிட்டு பொய்யா வாழ விரும்பல..” என்றவள் எழுந்து சென்று அவன் தலையை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

“இதாங் கடைசி., ஆறு மாசம் பாப்பேன்., நீ கல்யாணம் பண்ணிக்கோ., இல்லன்னா நீ என்ன எப்பவுமே பாக்கமுடியாது.” விருட்டென்று கீழே கிடந்த தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள் யுவனா.

என்ன நடந்ததென்றே தெரியவில்லை பென்னிக்கு. திடீரென முன்னமர்ந்தவள் இப்படிப் புயலாய் தாண்டவமாடிவிட்டுப் போய்விட்டாளே. விக்கித்துப் போனான். பொழுது கவிழந்து விடியத் துவங்கியது., அப்படியே நிலைகுத்தி அமர்ந்திருந்த பென்னியை அக்குரல் கலைத்தது.

வதனா நின்று கொண்டிருந்தாள். அவளது கரங்கள் இரண்டு கட்டைப்பைகளைச் சுமந்து கொண்டிருந்தன. அவைகளை மெதுவாகக் கீழே வைத்தாள்.

“யுவனா கொடுத்துவிட்டா., இதெல்லாம் நீங்க அவளுக்கு கொடுத்த கிஃப்ட்டாம்., இனி அவளுக்கு வேண்டாமா.” அவளும் உடைந்திருந்தாள். இவர்களது முதல் குழந்தைக்கு நான் தான் பெயர் வைப்பேன் என அடம்பிடித்து இருவரிடமும் சத்தியம் வாங்கியவள். இப்பொழுதில் அவளால் வேறென்ன செய்ய முடியும். வார்த்தைகளை உதிர்த்தவள் பென்னியின் பதிலுக்குக் காத்திருக்கவில்லை. சட்டென கிளம்பிவிட்டாள்.

பென்னியால் எதையும் உள்வாங்க முடியவில்லை. அந்தப் பைகளையே வெறித்துக் கொண்டிருந்தான். அமுங்கியும் துருத்தியும் பைகளை நிறைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பொருட்களும் கடிதங்களும் எத்தனை பொழுதுகளை இன்பகரமாகவும் நம்பிக்கையானவைகளாகவும் மாற்றியவை. இப்பொழுது யாருமற்ற அனாதைகளாய்த் தவித்துக் கொண்டிருக்கின்றன.

அந்தப் பொழுதுகள் பென்னிக்குள் எரிமலையாய்ப் பொங்கின., நீர்வீழ்ச்சிகளில் விழுகிற நீர்த் திவலைகள் கத்திகளாய் அவனுக்குள் இறங்கி ரணப்படுத்தின., யுவனா.. வென பெருங்குரலெழுப்பி வெட்கி அமைதியானான். திடீரென வெறி கொண்டவனாய் எழுந்தவன் யுவனா அவனுக்கு வாங்கிக் கொடுத்த அத்தனையையும் தேடித் தேடி எடுத்தான்.,

பைகளில் திணிக்கப்பட்டிருந்த அத்தனையும் கொட்டினான். வெறித்துப் பார்த்தான்., விம்மி விம்மியழுதான்.

அவனும் அவளும் இருவருக்குமாய் மாறி மாறிக் கொடுத்த அத்தனையையும் ஒரு பெரிய அட்டைப் பெட்டிக்குள் அடக்கிக் கட்டினான்.

“நான் கொடுத்ததத் திருப்பியா கொடுக்குறா., அவ கொடுத்ததையும் சேத்து அவ மொகத்துல விட்டெறியுறேன்..” எனப் புலம்பிக் கொண்டே பெட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியில் நின்ற பைக்கின் பில்லியனில் கட்டினான்.

“கிளிப் பிள்ளைக்குச் சொன்ன மாதிரியாச் சொல்லுறேன்., கெஞ்சுறேன்., எறங்க மாட்டேன்ட்டாளே., நான் யாருன்னு காட்டுறேன்..” எனப் புலம்பலைத் தொடர்ந்தவன் பைக்கின் கிக்கரில் கடுப்பைக் காட்டி புகை உறுமக் கிளம்பினான்., இவனிருக்கும் உறையூரிலிருந்து பிச்சாண்டார் கோயிலிலிருக்கும் யுவனாவின் வீட்டை நோக்கி. 

கவிழ்ந்த பொழுது கொஞ்சமாய் இருட்டத் தொடங்கியிருந்தது. சாலையில் பயணிக்கும் கிடக்கும் எதையும் கவனத்தில் கொள்ளாது பைக்கினை செலுத்திக் கொண்டிருந்தான்.

புறப்படும் பொழுதிருந்த வேகம் குறைந்திருந்தது. கண்களில் நீர் திரண்டு சாலையை மங்கலாக்கின., துடைத்துக் கொண்டான்., பீறிடும் இதயத்தின் அழுகையை கொஞ்சம் கொஞ்சமாய் பிரசவித்தான்.

“யுவனாவுக்காக வதனா வந்து கொடுத்துட்டுப் போய்ட்டா.. ஆனா எனக்காக நானே போறேன்., இப்பொ யுவனா என்னப் பாத்தா என்ன நெனப்பா., மொதல்ல பாப்பாளா.?”

“நான் சொன்னதையே கேட்கணும்ன்னு நெனக்கிறப்ப., அவ சொன்னதக் கேட்கணும்ன்னு அவ நெனைக்கக் கூடாதா..?”

“அவ சொல்றதுல என்ன தப்பிருக்கு., தனியா நின்னு பாத்தா அதுவும் நாயந்தான..”

“என்னமோ வலி எனக்கு மட்டுந்தேன்னு பீத்திக்கிட்டனே., அவ எடத்துல இருந்து யோசிடா நாயே..” சப்பென்று தன் கன்னத்தில் தானே அறைந்து கொண்டான்.

பைக் திருவரங்கம் காவேரிப் பாலத்தை வந்தடைந்திருந்தது.

வடகிழக்குப் பருவமழை ஓய்ந்த பொழுதுகள் அவை. பாலத்தில் பேருந்துகளும், கார்களும், ஆட்டோக்களும், பைக்குகளும், சைக்கிள்களும் அவைகளுக்கே உரித்தான குணங்களோடு சீறிக் கொண்டிருந்தன. காவிரியில் ஓடும் வெள்ளத்தை பாலத்தின் இரு புறங்களிலும் மனிதர்கள் குடும்பமாகவும் நண்பர்களாகவும் காதலர்களாகவும் ரசித்துக் கொண்டு வாகனப் புகையோடு காற்று வாங்கிக் கொண்டிருந்தார்கள். பாலத்தின் ஆங்காங்கே பானிபூரி விற்பவர்களும் கடலை, பஞ்சுமிட்டாய் விற்பவர்களும் உலவிக் கொண்டிருக்கும் மனிதர்களின் முகம் பார்த்து விற்றுக் கொண்டிருந்தார்கள். பென்னி பாலத்தின் மையப் பகுதியின் ஓரத்தில் பைக்கினை நிறுத்தினான். மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் காவிரியை மேற்காக நின்று பார்த்துக் கொண்டே இருந்தான்.

பாலத்தில் வரிசையாய் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகளின் பிம்பம் ஓடும் தண்ணீரில் அலையலையாய்த் தத்தளித்தது. அது பென்னியின் மனவோட்டத்திற்குள் புகுந்து பிசைந்தது. 

” நீங்க எனக்குக் கொடுத்தாலும் நான் ஒங்களுக்குக் கொடுத்தாலும் நீங்க எனக்கோ நான் உங்களுக்கோ திருப்பிக் கொடுக்க முடியாத ஒன்னு இருக்கு அது என்னன்னு தெரியுமா..”

”ஏய்., லூசு என்ன சொல்லுற., அப்படி என்ன இருக்கு..” பென்னி சொல்லி முடிப்பதற்குள் அவன் நெற்றியில் யுவனா அழுத்தமாய் ஒரு முத்ததைப் பதித்துவிட்டுச் சிரித்தாள்.

”ஏய்..” என்றான்.

“யோசி..” என்றாள்.

“ம்..” 

“நீங்க எனக்கு முத்தம் கொடுக்கலாம்., ஆனா நாங்கொடுத்த முத்தத்த திருப்பித் தரமுடியாதே..” என்று நாக்கைத் துருத்தி வக்கனை காட்டினாள். அவளை இழுத்தணைத்த பென்னி அவளது கன்னத்தில் தன் இதழ் பதித்து வெற்றிச் சிரிப்புச் சிரித்தான்.

“என்னதாங் குடுத்தாலும் இத என்னாலத் திருப்பித்தர முடியாதுங்க.. நீங்களுந்தான்..” என்றாள். 

யோசித்தவன் “ஆமால்ல..” என்றான்.

விளக்குகளின் பிம்பத் தத்தளிப்புகளிலிருந்து விடுபட்டவன்., பைக்கில் கட்டப்பட்டிருந்த பெட்டியைப் பார்த்தான்.

நானெல்லாம் அந்த முத்தத்துக்கு முன்னாடி சும்மாங்க என்று அந்தப் பெட்டி கூறுவது போலிருந்தது பென்னிக்கு.

பைக்கில் கட்டப் பட்டிருந்த பெட்டியை கழற்றியவன். அப்படியே தூக்கி ஓடுகிற தண்ணீரில் வீசினான். அவசரப்பட்டு வீசிவிட்டோமே என நினைத்த கணத்தில் தன்னை மறந்து பாலத்தைக் கடந்துவிட்டான்.

பாலத்தில் ஓடிக் கொண்டிருந்த வாகனங்கள் திடீரென்ற இவனது குறுக்கீட்டை எதிர்பார்க்காததால் சட் சட்டென பிரேக் அடித்துக் கிறீச்சிட்டன. அந்தச் சத்தத்தில் காற்று வாங்கிக் கொண்டிருந்தவர்கள் கதறி பதறிவிடார்கள். சில வாகனங்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டன. சைக்கிள்களும் ஆட்டோக்களும் நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டன. பயணித்தவர்கள் ஹேவெனக் கத்தி அமைதியானார்கள். 

பென்னி பாலத்தைக் கடந்திருந்தான். பாலத்தில் கூடிருந்தவர்கள் பென்னியை அடிக்க ஆரம்பித்தார்கள். பாலத்தில் கைப்பிடிச்சுவரில் குனிந்திருந்தவனின் முதுகுக்கு இப்பொழுது அடிப்பவர்களின் அடி சுரணையை ஏற்படுத்தவில்லை. அடுத்தக் கணப் பொழுது நிதானித்துவிட்ட வாகனங்கள் பென்னியை ஏசிவிட்டுக் கிளம்பின.

அந்தப் பெட்டி பென்னியயும் யுவனாவையும் சுமந்து கொண்டு வெள்ளத்தில் பயணித்தவாறு இருளுக்குள் மங்கிக் கொண்டிருந்தது. மிதந்து போய்க் கொண்டிருக்கும் பெட்டியைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். அந்தப் பொழுதின் நிலவு வெளிச்சத்தில் அந்தப் பெட்டி புள்ளியாய் மாறி பென்னியின் பார்வையிலிருந்து மறையத் தொடங்கி., மறைந்தேவிட்டது. 

அடித்தவர்கள் கலைந்துவிட்டிருந்தார்கள். அமைதியாய் அழுதான்.

சிந்திய பென்னியின் கண்ணீர் காவிரியின் வெள்ளத்தில் கலந்து பெட்டியைப் பின் தொடர்ந்தது. அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். வானத்தில் தனியாய் சுற்றும் நிலவு தன்னை மேகத்திற்குள் மறைத்துக் கொண்டிருந்தது.

முற்றும்.

அய். தமிழ்மணி
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *