Tip Tip Tip Book By Anandhakuma Bookreview By Pavannan நூல் அறிமுகம்: ஆனந்த்குமாரின் டிப்டிப்டிப் - பாவண்ணன்பலாப்பழத்தின் மணம்
                                   – பாவண்ணன்

நவீன தமிழ்க்கவிஞர்களின் வரிசையில் பரவசமூட்டும் தருணங்களையும் மன எழுச்சியூட்டும் தருணங்களையும் முன்வைத்து ஒருவித கொண்டாட்ட மனநிலையை உருவாக்கித் திளைப்பவர்கள் மிகச்சிலரே. தேவதேவன், முகுந்த் நாகராஜன், ந.பெரியசாமி என எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களே அந்த வரிசையில் உள்ளனர். அவ்வரிசையில் இணைத்துக் கருதத்தக்கவராக ஆனந்த்குமாரைச் சொல்லலாம்.  அவருடைய முதல் கவிதைத்தொகுப்பாக சமீபத்தில் தன்னறம் வெளியீடாக வந்திருக்கும் டிப் டிப் டிப் அதற்குச் சாட்சி.
’வலது கையில்
அவளந்த
மலரை மலர்த்தியபோது
இடது காலை
அங்கு கொண்டு
சரியாக வைத்துவிட்டது
நடனம்’

தெய்வம் என்று இக்கவிதைக்குத் தலைப்பிட்டிருக்கிறார் ஆனந்த்குமார். கையில் மலரை ஏந்தியிருப்பது குழந்தையா, சிறுமியா, இளம்பெண்ணா, தாயா, காதலியா என எந்தக் குறிப்புமில்லை. அவள் அந்த மலரோடு வந்து கையை மலர்த்திக் காட்டுகிறாள். அதைப் பார்ப்பவனுக்கு அக்கணத்தில் அந்த மலரின் மீது தன் மலர்ப்பாதத்தை வைத்து நடனமிடும் தெய்வத்தின் தரிசனமே கிடைத்துவிடுகிறது. மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி. கச்சிதமான வடிவத்தைக் கொண்ட அக்கவிதையை வாசிப்பவர்களின் கண்களுக்கும் அந்தத் தரிசனம் கிடைக்கிறது. திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என ஆனந்தக் கூத்தாடும் ஆழ்வார்களின் பரவசத்தையும் ஆனந்தகுமாரின் பரவசத்தையும் ஒரே சரட்டில் இணைத்துக்கொள்ளலாம்.
பால்கனிச் செடிகளின்கீழ்
ஊறித் தேங்கும் தண்ணீரைப்
பருக வரும்
காலைப் புறாக்கள்
இன்று வெயிலேற வந்தது
ஒற்றைக் காலில்லாத
பொன்கண் புறா

துளசியின் கீழ்
தேங்கிய நீரை
முகர்ந்து பார்த்தபின்
தத்தித்தத்தி நகர்கிறது
ரோஜாவின் பக்கம்

பருகிப்பருகி ஒரு பக்கம்
மயங்கிச் சாயும் உடலை
மறுபக்கம்
காற்றில் ஊன்றித் தாங்குகிறது
ஒற்றைச் சிறகு

இக்கவிதையில் ஆனந்த்குமார் முன்வைக்கும் கோணம் மிகமுக்கியமானது. ஆரவாரத்துடன் பறந்துவந்து இறங்கும் புறாக்களுக்கு மட்டுமன்றி, தனித்து மெல்ல மெல்ல பறந்துவந்து ஒற்றைக்காலுடன் தத்தித்தத்தி வரும் புறாவுக்கும் இங்கே தேங்கியிருக்கும் நீரில் சமஉரிமையைத் தந்திருக்கும் இயற்கையின் மாட்சியை போகிற போக்கில் கோடிட்டுக் காட்டிவிடுகிறார்.
தூர்வாரிச் சுத்தப்படுத்துகையில்
அவர் எனக்கு அந்த
தண்ணீர்த்தொட்டியை
காண்பித்துத் தந்தார்
அவர் வீட்டுக்கு அடியிலும்
நீண்டு சென்றது
அது நிரம்பியதும்
வீட்டிற்கு மேலுள்ள தொட்டியை நிரப்புவாராம்
இரண்டும் நிறைந்து
நடுவில் நீந்தும் வீட்டில்
கொஞ்ச நேரம் இருந்துவந்தேன்

இருவித தண்ணீர்த்தொட்டிகளுக்கு இடையில் நீந்தும் உயிராக வீட்டைச் சித்தரிக்கும் ஆனந்த்குமாரின் கற்பனை மனத்தைக் கவர்கிறது. குழந்தைமைக்கு மட்டுமே சாத்தியமான ஒரு புள்ளியை அல்லது கனவை கவிஞனால் மட்டுமே மீண்டும் மீண்டும் தொட்டுவிட்டுத் திரும்ப முடிகிறது. 

ஆனந்தகுமாரின் கவிதையுலகம் இத்தகு பரவசங்களால் நிறைந்திருக்கிறது. இத்தொகுதியில் இந்த வாழ்க்கை மானுடக்கு அளித்திருக்கும் சின்னச்சின்ன மகிழ்ச்சித்தருணங்களை அவர் நமக்கு திரட்டி அளித்திருக்கிறார்.  எல்லாமே கற்பனை மிக்க கண்களாலும் நுண்ணுணர்வாலும் பார்த்து திளைக்கத்தக்க தருணங்கள். வாழ்க்கையைப் பற்றிய புதியதொரு பார்வையை அவர் கவிதைகள் பதிவு செய்திருக்கின்றன.
பல வருடங்களுக்குப் பிறகு
பார்க்கச் சுருங்கியிருக்கிறது
நான் வளர்ந்த வீடு

நான் முடிவில்லாமல்
தவழ்ந்த அறை
இப்போது எனக்கு மட்டும்
படுக்க கொள்கிறது

எல்லையே அறிந்திடாத
எனது ஊரை
இன்றைக்கே மூன்றுமுறை
ஊரைச் சுற்றிவிட்டேன்

தாமரைக் குளமிறங்கி குளிக்கையில்
கால்தடவி அடியில் கண்டுகொண்டேன்
சிறுத்துவிட்ட அதே வழுக்குப்பாறையை

அதில் ஏறி நின்றவன் கால்கொள்ளாமல்
வழுக்கி விழுந்தேன்
ஒரு நொடி
அதே பழைய ஆழத்துள்
திமிறி மூச்சடக்கி
துள்ளி மேலெழுந்தேன்
கண்டேன்
நீலவெளி

ஒரு சின்ன அனுபவக்குறிப்பைப்போல தோற்றமளிக்கும் இக்கவிதை ஆழமானதொரு உணர்ச்சியை நெஞ்சில் ஏற்படுத்துகிறது. குழந்தையாக இருந்து வளர்ந்து பெரியவனாக பிறகு சொந்த வீட்டையும் சொந்த ஊரையும் பார்க்கும்போது முதலில் எல்லாம் மாறிவிட்டதைப்போல நினைத்துக்கொள்கிறான் அவன். உலகமே மாறிவிட்டதாகத் தோன்றி ஒருவித நினைவேக்கத்தில் ஆழ்ந்துபோகிறான். தற்செயலாக வழுக்குப்பாறையிலிருந்து தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி, திகைத்துத் தவித்து மூச்சடக்கி நீந்தி மேலே வந்துவிடுகிறான். கண்டேன் நீலவெளி என்னும் இறுதி வரியின் வழியாக அவன் தான் பெற்ற ஒரு தரிசனத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறான்.

அறையை, வீட்டை, சுவர்களை, தெருக்களை, ஊரைச் சுற்றிச்சுற்றி பார்க்கும்போது பார்க்காத வானத்தை தண்ணீரிலிருந்து எழுந்துவரும் தருணத்தில்தான் அவனுக்குப் பார்க்க வாய்க்கிறது.  அத்தருணத்துக்கு முன்பாக அவன் கண்ட நீரின் ஆழமும் அப்போது அவன் கண்ட நீலவெளியின் காட்சியும் அவனுக்கு ஒரு செய்தியை உணர்த்திவிடுகின்றன. எல்லாம் மாறிவிட்டது என்ற அவனுடைய எண்ணத்தை ஒருபோதும் மாறாத விண்ணும் மண்ணும் அழித்துவிடுகின்றன. மாறிக்கொண்டே இருக்கும் மானுட இருப்பும் மாறாத இயற்கையின் இருப்பும் சக்தியின் ஆடலென புரிந்துகொள்ள அக்கணம் அவனுக்குத் துணையாக இருக்கிறது. 

பாட்டிக்கும் பேரனுக்கும் உள்ள நெருக்கத்தைப்பற்றிய சித்திரத்தை அளிக்கும் ஒரு கவிதை அழகான அனுபவம். இக்கவிதைகளை மூன்று காட்சிகளின் தொகுப்பாக ஆனந்த்குமார் பின்னியிருக்கிறார். 

முதல் காட்சியில் பாட்டி வெண்டைக்காய் நறுக்குகிறாள். வெட்டுண்டு ஒதுக்கப்பட்ட வெண்டைக்காய் கொண்டைகளையெல்லாம் எடுத்து முகத்தில் ஒட்டிக்கொண்டு சிரிக்கிறான் பேரன். அவன் கோலத்தைப் பார்த்து பாட்டியும் சிரிக்கிறாள். 

இரண்டாவது காட்சியில் தோட்டத்தில் விளையாடுகிறான் பேரன். அங்கே வளர்ந்துநிற்கும் ரோஜாச்செடியின் தளிர்களை ஏதோ விளையாட்டு எண்ணத்தில் கிள்ளி வீசுகிறான். தற்செயலாக அந்தப் பக்கம் வரும் பாட்டி அக்காட்சியைப் பார்த்து ஓடோடி அவனைக் கிள்ளி கண்டிப்பதுபோல பேசிவிட்டுச் செல்கிறாள். 

மூன்றாவது காட்சியில் மாலை வேளையில் பாட்டி ஓய்வாக அமர்ந்திருக்கிறாள். அவளுக்காக வாங்கிவரப்பட்டு பிரிக்காமலேயே வைத்திருந்த மாத்திரை உறையைப் பிரிக்கிறாள். அதைக் கண்ட பேரன் அவளுக்கு உதவும்பொருட்டு மாத்திரைப்பெட்டியை எடுத்துக்கொண்டு அவளுக்கு அருகில் ஓடுகிறான். பிரித்த உறையிலிருந்த மாத்திரைகளையெல்லாம் எடுத்து பெட்டிக்குள் போடுகிறாள் பாட்டி. பிறகு பாட்டியும் பேரனும் சேர்ந்துகொண்டு ஆளுக்கொரு உறையை எடுத்துவைத்துக்கொண்டு அதிலிருக்கும் பிளாஸ்டிக் குமிழ்களை உடைத்து, அதிலிருந்து வெளிப்படும் டிப்டிப்டிப் சத்தத்தை ரசிக்கிறார்கள். இனி எந்த இடத்தில் பிளாஸ்டிக் உறை உடைபடும் டிப்டிப் சத்தம் கேட்டாலும் நினைத்துக்கொள்ளத் தக்க கவிதை ஒன்றை அளித்திருக்கிறார் ஆனந்த்குமார்.

இன்னொரு சித்திரம். நன்றாகத் தெரிந்த ஒருவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக, அதுவரை சென்றே இராத அவருடைய ஊருக்குப் புறப்பட்டுச் செல்கிறான் ஒருவன். அந்த ஊருக்குள் நுழையும்போதே பாதையெங்கும் இறைபட்டுக் கிடந்த பூக்களின் தடத்தைப் பார்த்துவிடுகிறான். இறுதி ஊர்வலம் சென்றுவிட்ட செய்தியை அது சொல்லாமல் சொல்கிறது. சுடுகாட்டுக்குச் சென்று பார்த்துவிடலாம் என அவன் நினைக்கிறான். ஒருவரும் அறிமுகமில்லாத ஊரில் சுடுகாடு எங்கே இருக்கிறது என எப்படி, யாரிடம் கேட்பது என்று புரியாமல் குழம்புகிறான். பிறகு குத்துமதிப்பாக பூவின் தடத்தையே பின்தொடர்ந்து சென்றால் சுடுகாட்டை அடையலாம் என நினைத்து பூத்தடத்தைத் தொடர்கிறான். அவன் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக அந்தத் தடம் ஒரு வீட்டு வாசலில் சென்று முடிவதையும் நீர்தெளித்து கழுவிவிடப்பட்ட வாசலையும் திகைப்புடன். பார்த்து நிற்கிறான். இறுதித்தருணத்தில் உருவாகும் புன்னகையே இக்கவிதையின் மகத்துவம்.

இன்னொரு சித்திரம். இதுவும் பாட்டியைப்பற்றிய சித்திரமே. தாத்தா இறந்த பிறகு வெகுகாலம் அவள் கோவிலுக்குச் செல்லாமலேயே இருக்கிறாள். அவள் காலமெல்லாம் வணங்கிய அம்மன் தாத்தாவின் உயிருக்குக் காவலாக இல்லையே என்கிற சீற்றம் அவளை வதைக்கிறது. காலம் அவள் சீற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துவிடுகிறது. மீண்டும் அவள் கோவிலுக்குச் செல்லத் தொடங்குகிறாள். சீற்றம் தணிந்தாலும் வருத்தம் குறையாத பாட்டி, கோவிலில் வாசலிலேயே இருக்கும் பிள்ளையாரை வணங்குவாளே தவிர உள்ளே இருக்கும் அம்மனைப் பார்ப்பதில்லை. அம்மனுக்காக அவளே தொடுத்து எடுத்துச் சென்றிருக்கும் பூச்சரத்தையும் அணிவிப்பதில்லை. மாறாக, வாசலிலேயே நின்று கோவிலுக்குள் செல்பவர்களுக்காகக் காத்திருந்து, அவர்களிடம் ஒப்படைத்து அம்மன் பாதத்தில் வைக்குமாறு சொல்லிவிட்டுத் திரும்புகிறாள். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான வழக்குக்கு இப்படியும் ஒரு பரிமாணத்தை வழங்குகிறார் ஆனந்த்குமார்.

பலாப்பழத்தை முன்வைத்து ஒரு கவிதையை எழுதியிருக்கிறார் ஆனந்த்குமார். அவருடைய கவிதையுள்ளம் பலாப்பழத்தின் மணத்தை ஒரு குழந்தையின் மணத்துடன் இணைத்துக்கொள்கிறது. பழத்தை வெட்டியதும் வீடுமுழுக்க அதன் மணம் நிறைகிறது. அதன் சுளைகளை ஒரு சின்ன பாத்திரத்தில் வைத்து மூடி எடுத்துக்கொண்டு பக்கத்துவீட்டு நண்பருடைய வீட்டுக்குச் செல்கிறார்.  அழைப்புமணியை அழுத்திவிட்டுக் காத்திருக்கிறார். அச்சுளையை அவர் பெண்குழந்தையாகவே நினைத்துர்க்கொள்கிறார். அதனால் அந்த நண்பரிடம் ‘”உங்களுக்குச் சம்மதமென்றால் இவளை இங்கே கொஞ்சம் விளையாட விடுகிறேன்” என்று ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். தொகுப்பின் தொடக்கத்திலேயே இருக்கும் இக்கவிதை ஒருவகையில் ஆனந்த்குமார் வாசகர்களிடம் வைத்திருக்கும் கோரிக்கையைப்போலவே தோன்றுகிறது. அதனால் “இந்த வீட்டின் கதவு உங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கிறது, நீங்கள் அவளை எப்போது வேண்டுமானாலும் அழைத்துவந்து விளையாடவிடலாம்” என்று நாமும் அவருக்குத் தெரிவித்துவிடலாம்.

நூல்: டிப்டிப்டிப்
ஆசிரியர்: ஆனந்த்குமார்
வெளியீடு: தன்னறம் வெளியீடு
விலை: ரூ150

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *