நாம் பள்ளிக் காலங்களில் சொல்லிக் கொடுக்கப்பட்ட கலகங்கள் எப்படிப்பட்ட எழுச்சிக் கொண்டது என்பதை அறிந்து கொள்ள உதவும் மிக முக்கியமான நூல் இது. வரலாற்றை உண்மைத்தன்மையிலிருந்து எழுதவேண்டும் என்பதையும் அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க தவறுவது என்பது வேதனைக்குறிது என்பதையும் நம்மை அறியச் செய்யும் நூல் திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908.
”திருநெல்வேலி எழுச்சிக்கும் அதில் பங்கு கொண்டு உயிரும் உடமையையும் வாழ்வும் இழந்தவர்களுக்கும் ஒரு நினைவுச்சின்னம் கூட இல்லை.”
நூலின் இறுதியில் சொல்லப்பட்டிருக்கும் இந்த வாக்கியம் என்பது மனசை ஏதோ செய்கிறது. ஆம் அந்த எழுச்சியில் சுட்டுக்கொள்ளப்பட்ட அந்த நான்கு பேர் யார்? சுதந்திரம் அடைந்த பின் அவர்களுக்கு என்ன செய்துவிட்டோம்.
அந்த எழுச்சியில் பங்கு பெற்றவர்களின் பங்களிப்பு என்ன என்பதை படிக்க படிக்க நமக்கு புரியவரும். கல்லூரி மாணவர்களுக்கு சவுக்கடி, குதிரை வண்டிக்காரர்களுக்கும், ரோட்டோர சிறு உணவு வைத்திருந்தவர்களுக்கும் சிறை வாசம். பெரும் தலைவர்களுக்கு இரட்டை ஆயில் தண்டனை. அதுமட்டுமல்ல, அன்றைக்கு அந்த பகுதியில் இருந்த அனைத்து மக்களுக்கும் திமிர் வரி. (திமிர் வரியை தனியாக தெரிந்து கொள்ளவும், அது எப்படிப்பட்ட கொடுமை என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.) துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் பலி. அவர்கள் குறித்த முழுமையான தகவல் இன்மை. வழக்கு நடத்துவதற்கு போதுமான நிதி இல்லாமை. தண்டனை காலம் முடிந்தும் மேலும் பல மாதங்கள் சிறை தண்டனை. இப்படி பல்வேறு தியாகங்களில் வழியில் பிறந்தது என்ன?
வெள்ளையரை கண்டால் அவன் கண்ணிலிருந்து மறையும் வரை ஒளிந்து கொள்வது. துப்பாக்கியுடன் ஒரு போலீசாரை கண்டால் அவன் கண்ணில் படாமல் இருந்து கொள்வது. தண்டல் காரனை கண்டால் பயப்படுவது போன்ற நிலையை இந்த எழுச்சி மாற்றி இருப்பதை இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெள்ளையனை கண்டால் வந்தே மாதரம் என்று நேருக்கு நேர் சத்தமிடும் தைரியம் எழுந்தது. இதனால் வெள்ளையர்கள் பயம் கொண்டனர்.
சமீபத்தில் நாம் கண்ட எழுச்சி என்பது ஜல்லிகட்டுப் போராட்டம். இறுதி நாளில் அமெரிக்கன் கல்லூரி அருகே இருந்தவர்களை போலீசார் எப்படி அடக்கி ஒடுக்கினார்களோ அது போன்றதே அன்று நடைபெற்றிருக்கிறது. இங்கே எப்படி தலைமையின்றி போராட்டம் மக்களாக தொடங்கினார்களோ அப்படி அங்கே வஉசி மற்றும் சிவா அவர்களின் கைதை கண்டித்து எழுச்சி உருவாகியுள்ளது என்பதை நாம் இந்த நூலின் மூலம் அறிய முடிகிறது.
வரலாற்றை வெள்ளையர்களின் அறிக்கைகளிலிருந்தும், அன்றைய பத்திரிக்கை செய்திகளிலிருந்தம், கடிதங்களிலிருந்தும்தான் நாம் பெற முடிகிறது. உண்மையில் அன்றைக்கு அங்கு என்ன நடந்ததுஎன்று பாதிக்கப்பட்டர்களின், பார்த்தவர்தவர்களின், பங்கேற்றவர்களிடமிருந்து நமக்கு எதுவும் கிடைக்காதது பெரும் ஏமாற்றமே.
அந்த எழுச்சியின் முக்கிய காரண கார்த்தாக்கலான வ.உ.சி மற்றும் சிவாவின் பிற்கால நிலையை குறித்தும் இந்த புத்தகத்தில் சிறு குறிப்பு உள்ளது என்பதையும் பார்க்க முடிகிறது.
இந்த புத்தகம் வ.உ.சி, சிவா மட்டுமல்லாமல் கண்ணுக்கு தெரியாத தியாகிகளையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
வரலாற்றை ஆய்வு செய்ய நினைக்கும் மாணவர்களுக்கு அவர்கள் எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும் என்பதையும். தரவுகளை எவ்வாறு பெற வேண்டும், தொகுக்க வேண்டும் என்பதையும் இந்த நூல் கற்று தருகிறது. அதுமட்டுமல்ல தலைப்புகளையும் கூட நீங்கள் தெரிவு செய்து கொள்ள உதவும். குறிப்பாக வஉசியின் மனைவி மீனாட்சியின் இன்னல்களையும், பாடுகளையும் வஉசி சிறைக்கு சென்ற பின் எவ்வாறு குடும்பத்தை நடத்திச் சென்றார் என்பதையும் தேடி எழுதுவதன் மூலம் ஒரு சுதேசி இயக்கத் தலைவரின் மனைவியின் உள்ளார்ந்த நம்பிக்கையும், தலைமைப்பண்பையும் அறியச் செய்ய முடியும். இதையும் கூட ஆசிரியர் அது தனியாக பேச வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
ஒரு அற்புதமான ஆய்வு நூலை ஒரு நாவல் போல விருவிருப்பாக தரவுகளை கொண்டு நிரப்பிஉள்ள பாங்கு உண்மையிலேயே மிகச் சிறந்த யுத்தியாக தெரிகிறது. இந்த நூலின் வழியாக கலங்கள் என்று சொல்லப்படும் ஆங்கிலேர்களின் சொல்லாடல் உண்மையில் மக்கள் எழுச்சியாகத்தான் இருக்கும் என்பதை அறிய உதவும் நூல் இது. மக்கள் அனைவரும் நம் தமிழக வரலாற்றின் வெள்ளையன் எதிர்த்து நடந்த எழுச்சி குறித்து அறிந்து கொள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். குறிப்பாக உள்ளுர் வரலாற்று ஆய்வாளர்களும், வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்களும், இளம் தலைமுறையுனரும் வாசிக்க வேண்டிய நூல்.
தலைப்பு: திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908
(சாகித்திய அகாதெமி விருது பெற்றது)
ஆசிரியர்: ஆ.இரா. வேங்கடாசலபதி
வெளியீடு: காலச்சுவடு
பக்கங்கள்: 248
விலை: ரூ.320
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
(நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் 1995 முதல் 1998 வரை முனைவர் த.வி.வெங்கடேஷன் தலைமையில் 1995வரை தமிழில் வெளிவந்த அறிவியல் நூல்களின் நூலடைவுகளை தொகுக்கும் பணியில் இடுபட்இருந்தேன். என்னுடன் எட்டு பேர் கொண்ட குழு இருந்தது. அப்போது ஒரு முறை இந்த நூலின் ஆசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதியை சந்தித்துள்ளேன். அப்போது அவர் 1950 சென்னை பல்கலை கழகம் வெளியிட்டிருந்த டிக்ஜனரியை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அதே கால கட்டத்தில் அவர் பாரதியாரின் கார்டூன்களை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டிருந்தார். தமிழில் முதன் முதலில் கார்டூனை பயன்படுத்தியவர் பாரதி என்பதை தெரிவித்தார். அதன் பிறகு அவரை சந்திக்க முடியவில்லை.)
*****************
கட்டுரையாளர்:
– மொ. பாண்டியராஜன்
மதுரை.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.