சந்தியா பதிப்பகம் வெளியிட்டு வரும் ஊர் வரலாறுகளில் திருநெல்வேலி குறித்து என் அருமைத் தோழர் இரா.நாறும்பூநாதன் எழுதியது. திருநெல்வேலி நகரம் என்பதாக இல்லாமல் பழைய அந்த ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் வரலாறாக விரியும் நூல்.
41 கட்டுரைகளில் திருநெல்வேலியின் கல்வி நிலையங்கள், மதம் பரப்ப வந்து தமிழ்தொண்டாற்றிய கிறிஸ்துவப் பெரியோர்கள், நெல்லையின் அன்றைய இன்றைய படைப்பாளிகள், உணவுகள், கோவில் சிற்பங்கள் என்று தொட்டுத் தொட்டுச் செல்கிறார் நாறும்பூநாதன்.
நான் ஒரு தகவல் கொண்டாடி என்ற போதிலும், இணையத்தில், மற்ற புத்தகங்களில் தேடினால் கிடைக்காத தகவல்கள் தரும் கட்டுரைகள், புத்தகங்களே என் மனதுக்கு நெருக்கமாகின்றன. அந்த வகையில் நெல்லையின் கல்வி நிறுவனங்கள், அவற்றின் நிறுவனர்கள், மத போதகர்கள், பற்றிய பல கட்டுரைகள் நெல்லை பற்றியும், அந்த மண்ணில் வாழ்ந்து அந்த மண்ணை செழிக்கச் செய்த பெரியோர் பற்றியும் நிறைய நிறைய தகவல்களைச் சொல்லிக் கொண்டே போகின்றன என்றாலும் என்னை ஈர்த்தவை நான் முற்றிலும் அறியாத புதிய செய்திகளைச் சொல்லும் கட்டுரைகளைத்தான். அவையும் இந்தப் புத்தகத்தில் நிறையவே உள்ளன.
உமறுப்புலவர் பற்றி இப்போதுதான் விரிவாக அறிகிறேன். பாரதியின் தந்தை ஆரம்பித்த நூற்பாலை எங்கிருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். பத்தமடைப் பாய் பற்றி அறிந்தேன். மெல்லத் தமிழினி சாகும் என்று சொல்லி பாரதியிடம் திட்டு வாங்கியவர் யார்? என்று அறிந்தேன் ( செவி வழிச் செய்திதான் போலும். ஆனால், அப்படியான செய்திகள் தரும் சந்தோஷம் தனிதானே !) பாடகர் டி.எல்.மகாராஜனின் பெயர்க் காரணம் பற்றிய செய்தியை அறிந்தேன். சாத்தூர் டீ ஸ்டால் பற்றி அறிந்ததைவிட, கி.ராவின் கதவு கதை யாருடைய கதை? என்ற அந்த கதவின் சொந்தக்காரர் பற்றிய தகவலை அறிந்து மகிழ்ச்சியில் பொங்கினேன். காலத்தால் அழியாத அந்தக் கதையை கி.ராவிற்கு அளித்தவரல்லவா அந்தப் பெரியவர் !
சிறிய இடைவெளியில் திரும்பவும் சந்திக்கிறேன் என்கிறார் நாறும்பூ. அப்போது நமக்கு இன்னும் நிறையவே கிடைக்கலாம்.
புத்தகத்தில் கிளாரிந்தா, ரேனியஸ் ஐயர், சாராள் தக்கர், வ.உ.சி, தொ.ப போன்ற பெரியோர்களை விட தவசுப்பிள்ளை அருணாச்சலம் பிள்ளை, ஆரெம்கேவி விஸ்வநாதன், மனக்காவம்பிள்ளை, மகாராஜ பிள்ளை, அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளையை ரா.பி.சேதுப் பெருமகனார் என்று ஜாதிப்பெயரை தவிர்த்து அழைக்கும் வளனரசு ஐயா ஆகியோர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகிவிட்டார்கள்.
இவர்களை விட த.மு.கட்டிடத்தின் பெயர் காரணம் கேட்கும் அந்த கணேசன். நாறும்பூ அதை விசாரித்துச் சொன்னதும், இந்தத் தகவலைத் தந்தது யார்? என்கிறார் கணேசன். விவேகானந்தன் என்கிறார் நாறும்பூ.
“அவருக்கு என் சார்பில ஒரு வாழ்த்து சொல்லு… அவருதாம்ல திருநெவேலி ஆணி வேரு… “ என்று சொல்லிவிட்டு வேகமாக பஸ் ஏறுகிறார் கணேசன். எனக்கு அந்த கணேசனைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.
நெல்லையின் ஆணிவேர்களை கோட்டுச் சித்திரமாகக் காட்டிய என் அன்புத் தோழர்.நாறும்பூநாதனை இங்கிருந்தே ஆரத் தழுவி வாழ்த்துகிறேன்.
நூல்: திருநெல்வேலி நீர்-நிலம்-மனிதர்கள்
ஆசிரியர்: இரா.நாறும்பூநாதன்
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
விலை: ரூ270.00
பக்கங்கள்: 270
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Leave a Reply
View Comments