’சி.பி.ஐ.(எம்) டைரி – இளம் கம்யூனிஸ்ட்டுகளின் கையேடு’ திருப்பூர் ஹரிஹரன் எழுதி, புதுகை ஓவியா பதிப்பகம் நேர்த்தியுடன் வெளியிட்டுள்ள அர்த்தமுள்ள, அழகான நூலாகும்.
2022இல் வெளிவந்த முதல் பதிப்பைவிட இந்த இரண்டாம் பதிப்பு மேம்பாட்டுடன் விளங்குகிறது. நூறு பக்கங்களில் அழகிய தாளில் வண்ணப் படங்களுடன் அச்சிடப்பட்டுள்ளது. கடமை உணர்வுடன் புத்தகத்தைக் கொண்டு வந்துள்ள ஹரிஹரனின் உழைப்பு பாராட்டுதலுக்குரியது. தோழர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சண்முகம் ஆகியோரின் வாழ்த்துரையுடனும், தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் அவர்களின் அணிந்துரையுடனும், தோழர் கவிவர்மனின் பதிப்புரையுடனும், தோழர் ஹரிஹரனின் முன்னுரையுடனும் நூல் பாங்குடன் வெளிவந்துள்ளது. பொலிவுடன் புதுகை ஓவியா பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலின் விலை வெறும் ரூ.150/ என்பது வரவேற்கத்தக்கது.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான கட்சிகள் உள்ளன. அதில் சி.பி.ஐ.-எம் தனித்துவமானது. இது வெறும் அரசியல் கட்சி அல்ல. இதுவொரு அரசியல் சித்தாந்தம். மார்க்ஸ் – எங்கெல்ஸ் என்ற இரண்டு மேதைகளின் உழைப்பில் உருவான சோசலிச சித்தாந்தம். இவ்விரு மேதைகளும் இணைந்து 1848இல் உருவாக்கிய ’கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ உலகையே உலுக்கிய படைப்பாகும்.
மார்க்ஸ் – எங்கெல்ஸ் இணையர்களுக்கு முன்னரே நிறைய தத்துவ நூல்கள் எழுதப்பட்டன. ஆனால் அத்தத்துவ நூல்கள் எல்லாம் உலகை விளக்கிட முற்பட்டன. ஆனால் மார்க்சியம் உலகை மாற்றுவதற்கானா தத்துவமாகியது. மார்க்ஸ்-எங்கெல்ஸ் வாழ்ந்த காலத்திலிருந்த சரித்திரம், பொருளாதாரம், தத்துவம், மானுடவியல், இயற்கை அறிவியல் அனைத்தையும் படித்து அதன் சாரம்சத்தைத் தருகின்றனர் இவ்விரு மேதைகளும். வரலாறு முழுவதும் வர்க்கங்களின் போராட்டமாக இருந்துள்ளது என்பதைக் குறிப்பிடுகின்றனர். இனிவரும் காலங்களில் மனித குலம் வர்க்கங்கள் அற்ற சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். படைப்பார்கள் என்று நம்பினார்கள்.
லெனின் எழுதிய ’அரசு’ என்ற நூலும் ’அரசும் புரட்சியும்’ என்ற நூலும் இவ்வுலகில் முதலில் சோசலிச சமூகத்தை உருவாக்கவும், அதற்கு அடுத்த கட்டமாக கம்யூனிச சமுதாயத்தை அமைப்பதற்கான வழியையும் எடுத்துக் கூறுகின்றன. அரசு என்பது எப்போதும் ஓர் அடக்குமுறை இயந்திரமாகவே இருந்திடும். ஆனால் கம்யூனிச உலகில் வர்க்கங்கள் அற்ற சமுதாயம் உருவாகிய பிறகு அரசு இயந்திரம் தேவையற்றதாக ஆகிவிடும். தானாகவே உதிர்ந்துவிடும் என்று லெனின் கூறுகிறார். இந்த லட்சியத்தை அடையவே உலகில் உள்ள நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் பாடுபடுகின்றன.
இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சி 1920இல் உருவாக்கப்பட்டது. இந்த நூறாண்டு காலத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் (சிபி.ஐ-எம்) இந்தியாவில் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்துவதை லட்சியமாகக் கொண்டு பீடுநடை போடுகிறது. இந்த நூறாண்டு காலத்தில் மார்க்சிய சித்தாந்தம் இந்தியாவில் வலது மற்றும் இடது திரிபுகளுக்கு உள்ளாகி பல பிரிவுகளுக்கு உட்பட்டது. 1964இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலது திரிபுவாதத்தை எதிர்த்து அதிலிருந்து வெளிவந்து ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தும் நோக்கத்துடன் சி.பி.ஐ-எம் என்ற புரட்சிகரக் கட்சி இந்தியாவில் உருவாகியது. மக்கள் ஜனநாயகப் புரட்சியை உருவாக்கப் பாடுபடுவதே இதன் லட்சியம் என்று கட்சி குறித்த அனைத்துத் தகவலையும் இந்நூல் கூறுகிறது.
மக்கள் ஜனநாயகப் புரட்சியை உருவாக்க ஓர் அமைப்பு; ஒரு புரட்சிகரமான கட்சி தேவை. தத்துவம் இல்லாத நடைமுறை குருட்டுத்தனம் போன்றது. நடைமுறை இல்லாத தத்துவம் மலட்டுத்தனம் போன்றது என்ற தோழர் லெனினின் வாக்கிற்கிணங்க கம்யூனிஸ்ட் கட்சியில் தத்துவமும். நடைமுறையும் ஒரு சேரக் கடைப்பிடிக்கப்படுகின்றன. கம்யூனிஸ்ட் கட்சி தியாகத்தில் கட்டப்பட்டதாகும். இந்திய விடுதலைக்கும் கம்யூனிஸ்டுகள் அளப்பரிய தியாகங்கள் செய்துள்ளனர். கடந்த நூறாண்டுகளில் கட்சித் தோழர்கள் எண்ணற்ற தியாகங்களைப் புரிந்து மார்க்சிஸ்ட் கட்சியை வளர்த்துள்ளனர்.
கடந்த நூறாண்டுகளாகச் செயல்பட்டும், பொதுவுடைமை இயக்கம் ஏன் மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை என்ற கேள்வி எழுவது இயல்பே. மற்ற முதலாளித்துவ கட்சிகள் எல்லாம் மொழி, இன, மத வெறியினை மக்களிடையே விதைத்து விரைவில் மக்களிடையே பரவுகின்றன. வெறுப்பு அரசியல் மூலம் மக்களிடையே பிரிவை ஏற்படுத்தி விரைவில் வளர்கின்றன. ஆனால் சி.பி.ஐ-எம் மக்கள் ஓற்றுமையை வலியுறுத்தும் கட்சி. முதலாளித்துவக் கட்சிகள் குறுகிய தேசியவாதம் பேசுகின்றன. ஆனால் கம்யூனிஸ்டுகள் குறுகிய தேசியவாதத்தைக் தவிர்த்து சர்வதேசியத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் ஆவர். போர்களற்ற உலகை உருவாக்க வேண்டும். உலகின் வாழும் மக்கள் அனைவரும், அனைத்தும் பெற்று மகிழ்ச்சி பொங்க வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள் என்பதை இக்கையேடு குறிப்பிடுகிறது.
இத்தகு சிறந்த லட்சியங்களைக் கொண்டவொரு கட்சியைக் கட்டுவது அவ்வளவு எளிதல்ல. சிறந்த கம்யூனிஸ்ட்டாக இருப்பது எப்படி என்ற நூலினை சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லியூ ஷோ சி என்பவர் எழுதியுள்ளார். ஒரு கம்யூனிஸ்ட் விமர்சனம், சுயவிமர்சனம் இரண்டையும் மேற்கொள்ள வேண்டும். கட்சித் திட்டத்தையும், அமைப்பு விதிகளையும் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும், கட்சி விதிக்கும் சந்தா அல்லது லெவியை நேர்மையுடன் செலுத்த வேண்டும். கட்சியின் ஏதேனும் ஒரு அமைப்பில் சேர்ந்து உழைக்க வேண்டும் எனும் கட்சியின் விதிகளைக் கையேடு பட்டியலிடுகிறது
இந்தியா போன்ற பெரிய நாடுகளில் மக்களைத் திரட்டி புரட்சி செய்வது சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுவது இயல்பானதே. இதற்கும் இக்கையேடு விளக்கம் அளிக்கிறது. குண மாற்றம் எண்ணிக்கை மாற்றத்தையும், எண்ணிக்கை மாற்றம் குண மாற்றத்தையும் கொண்டுவரும் என்பது இயற்கை விதி. இவ்வியற்கை விதிக்கு ஏற்ப தரமான கம்யூனிஸ்டுகள் கட்சியின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வார்கள். எண்ணிக்கை குண மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை. ஓவ்வொரு கம்யூனிஸ்டுக்கும் தேவை புரட்சிகரப் பொறுமை என்பதையும் நூல் சொல்கிறது.
உலகில் சீனா, வட கொரியா, வியட்நாம், கியூபா போன்ற நாடுகளில் சோசலிச அரசுகள் உருவாக்கப்பட்டுள்ளன. சோவியத் யூனியனில் கம்யூனிசக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதில் இருந்த பலவீனத்தினால் சோவியது யூனியன் சிதைந்தது. சோசலிச சிந்தனை வளர்ந்துவிடக் கூடாது என்பதில் முதலாளித்துவம் கண்ணும் கருத்துமாய் இருக்கிறது. கம்யூனிச சித்தாந்தத்துக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது. உலகில் சோசலிசம் மலர்ந்துவிடக் கூடாது என்பதில் முதலாளித்துவ நாடுகள் திட்டமிட்டு சதி செய்கின்றன. இத்தகு சதிக்கு பலியானதே சோவியத் யூனியன் என்பதையும் நூல் குறிப்பிடுகிறது.
அரிய படங்களுடன் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. 1964இல் கல்கத்தா நகரில் தோன்றிய கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் படம், 1964லில் கட்சியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரய்யா முதல் இன்றைய கட்சியின் செயலாளர் எம்.ஏ.பேபி வரை கட்சியின் ஆறு செயலாளர்களின் படம், இன்றைய கட்சியின் அரசியல் தலைமைக் குழு மற்றும் மத்தியக் குழுவினர்கள் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 1964 முதல் இன்றுவரை கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தவர்களின் படமும், இன்றைய தமிழ் மாநிலக் கட்சியின் மாநிலக் குழுவின் படமும் இடம் பெற்றுள்ளன.
கட்சி நடத்திய அகில இந்திய மாநாடுகளின் பட்டியலும், கட்சி சந்தித்த சதி வழக்குகள், கட்சிப் பணியில் இன்னுயிர் ஈந்த தியாகிகள் படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்டுகள் எப்படி இருப்பார்கள், எப்படி இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக விழுமியங்கள் என்ன என்பது விளக்கப்பட்டுள்ளது. கட்சியினர் அனைவரும் ஏதேனும் ஒரு கட்சிக் கிளையில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது விதி. கட்சி மாவட்டக் குழு, மாநிலக் குழு, மத்தியக் குழு, அரசியல் தலைமைக் குழு என்று பல அடுக்குகளாகக் கட்டப்பட்டிருந்தாலும் கட்சியில் ஜனநாயகம் வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. கட்சியின் பொறுப்புகளுக்கு தேர்தல் முறையாக நடத்தப்படுகிறது. கட்சியின் சாதாரண உறுப்பினரும் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவுடன் தொடர்பு கொள்ளலாம். கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் (Democratic Centralism) நடைமுறையில் உள்ளது.
மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கட்சிக் கிளைகள் தொடங்கி, மாவட்ட, மாநில, அகில இந்திய அளவில் மாநாடுகள் நடக்கின்றன. மாநாட்டில் செயலாளர்கள் முன்வைக்கும் அறிக்கை விவாதிக்கப்பட்டு தகுந்த திருத்தங்களுடன் நிறைவேற்றப்படுகின்றன. உலக அளவில் நடந்த மூன்று அகிலங்கள் குறித்த வரலாறையும் இந்நூல் வழி அறிகிறோம். முதல் அகிலம் 1864இல் மார்க்ஸ் – எங்கெல்ஸ் முயற்சியால் நடந்தது. இரண்டாவது அகிலம் 1889இல் எங்கெல்ஸ்- வில்லியம் லீப்னஹெட் ஆகியோரால் நடத்தப்பட்டது. மூன்றாவது அகிலம் 1919இல் மாஸ்கோவில் லெனினினால் ஏற்பாடு செய்யப்பட்ட வரலாறும் குறிப்பிட்டுள்ளார் நூலின் ஆசிரியர் ஹரிஹரன்.
புரட்சிக்குப் பின் நமது திட்டம் என்ற பகுதி மிகவும் காத்திரமானதாகும். மக்கள் ஜனநாயகப் புரட்சிக்குப் பின்னர் அமையும் மக்கள் ஜனநாயக அரசு என்ன செய்யும் என்பதையும் குறிப்பிடுகிறது. நூறு பக்கங்களுக்கு விரிந்து செல்லும் இந்நூலில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் வாழ்க்கை வரலாறும் இடம் பெற்றுள்ளது. இப்பிரபஞ்சம் தோன்றிய வரலாறும், பூமியில் உயிரினம் தோன்றிய வரலாறும் விளக்கப்பட்டுள்ளன. அடுத்த பதிப்பில் தோழர் ஹரிஹரன் நூலில் காணப்படும் பிழைகளைத் திருத்தி நூலினை மேலும் செழுமையாக்க வேண்டும்.
இக்கையேடு அனைத்துக் கட்சியினரும் படித்திட வேண்டிய நூலாகும். சமீபத்தில் ஸ்ரீரசா சோவியத் புரட்சியின் வரலாற்றை சித்திரங்களுடன் விளக்கிய நூல் வெளிவந்தது. பாரதி புத்தகாலயமும் ரெட் புக் என்ற பெயரில் மார்க்சிய சிந்தனைகளைத் தாங்கிய கையேடுகளை வெளியிட்டது. தோழர் என்.ராமகிருஷ்ணன் கட்சியின் வரலாறையும், கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி கட்சிக்கு பெரும் தொண்டாற்றினார். தோழர் அருணனும் ‘இந்திய கம்யூனிச இயக்க வரலாறு’ எனும் நூலை எழுதி கட்சியின் பெருமையை உலக அறியச் செய்துள்ளார். இது போன்ற முயற்சிகள் தொடர்ந்து நடக்க வேண்டும். புதிய யுக்திகளைப் பயன்படுத்திக் கட்சியின் கொள்கைகளை மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை இந்நூலின் வழி தோழர் ஹரிஹரன் வழிகாட்டியுள்ளார். பிறரும் இதுபோன்ற எழுத்துப் பணியில் ஈடுபடுவார்கள் என்று நம்புவோம். வாழ்த்துகள் தோழர் ஹரிஹரன்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | ’சி.பி.ஐ.(எம்) டைரி – இளம் கம்யூனிஸ்ட்டுகளின் கையேடு’ |
| ஆசிரியர்: | திருப்பூர் ஹரிஹரன் |
| வெளியீடு: |
புதுகை ஓவியா பதிப்பகம்
|
| விலை: | ₹.150 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻பெ.விஜயகுமார் |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
