வாசிப்பு என்னும் ரசவாதம்
முக்கால் லட்ச ரூபாய் புத்தகங்கள் பரிமாற்றம்
தமுஎகச கோவை இலக்கியச் சந்திப்பு 250 – ச. தமிழ்ச்செல்வன் படைப்புகள் திறனாய்ரங்க நிகழ்வு குறித்து….
தமுஎகச பொன் விழா இலச்சினை வெளியீடு மற்றும் கோவை இலக்கியச் சந்திப்பு 250 – ச.தமிழ்ச்செல்வன் படைப்புகள் திறனாய்வு நிகழ்வு 7 ஜூலை – ஞாயிறு அன்று வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.
அருமையான உரைகள், கருத்தாழமிக்க அமர்வுகள், தோழமைக் கொண்டாட்டங்கள் என அரங்கத்தின் உள்ளே நடைபெற்ற நிகழ்வுகளுக்கு எந்த விதத்திலும் மாற்றுக் குறையா வண்ணம் அரங்கத்திற்கு வெளியே நடைபெற்ற நிகழ்வுகளைக் காண் நேர்ந்தது.
தோழர் தமிழ்ச்செல்வனின் புத்தகங்கள் அன்று ஒரு நாளில் மட்டும் 50,050 ரூபாய்க்கு விற்பனை ஆகியிருந்தது (தகவலுக்கு நன்றி தோழர் முத்தையா மோகன்). திராவிட இயக்கத் தோழர் சோமசுந்தரம் ரூ.8,000க்கு புத்தகங்கள் விற்றதாக மகிழ்வோடு பகிர்ந்து கொண்டார். பிற புத்தகக் கடைகளில் ஏறத்தாழ ரூ.2,000க்கு விற்பனை நடந்து இருக்கிறது.
அரங்கின் உள்ளே பரிசாக அளித்தவை, முன்னுரை எழுத அளித்தவை, தோழர்கள் பரிமாறிக்கொண்டவை எனக் கணக்கிட்டால் ஏறத்தாழ 15,000 ரூபாய் விலை மதிப்பிடத் தக்க புத்தகங்கள் இருக்கலாம்.
(விலை மதிப்பிட முடியா புத்தகங்களை – ஓரு வசதிக்காக) பண மதிப்பில் கணக்கிட்டால் ஏறத்தாழ முக்கால் லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாசிப்பவர் கைகளுக்குச் சென்று சேர்ந்திருக்கின்றன –
இவ்வளவும் ஒரே நாளில் நடந்து இருக்கிறது.
வாசிப்பு இயக்கத்தையும், சுழல் நூலகத்தையும் இரு கண்களாகப் பாவித்து முன்னெடுக்கும் தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆகச்சிறந்த மரியாதைகளில் ஒன்றாக இந்த விற்பனை மற்றும் புத்தப் பரிமாற்றம் கருதப்படவேண்டும்.
இதுவே இந்த நிகழ்வின் குறிப்பிடத்தக்க வெற்றிகளில் ஒன்றாகும்.
பாவ்லோ கோய்லோவின் ரசவாதி நாவலில் வரும் சிறுவன் சந்தியாகு கிழவனார் வேடமிட்ட பேரரசருக்கு அளித்த புத்தகத்தைப் போல, தமுஎகச கோவை மாவட்டக்குழு தோழர் தமிழ்ச்செல்வனுக்கு கோவை மக்களின் வாசிப்பின் மீதான பேரார்வத்தை உறுதியளித்திருக்கிறது.
இதைச் சாத்தியப்படுத்தியது கோவை மாவட்டக்குழுத் தோழர்களின் இடையறா உழைப்பும், அரங்கு நிறைந்த பார்வையாளர்களும், அருகாமை மாவட்டத் தோழர்களும், சிறப்பு விருந்தினர்களும் தான்.
பெரிய்ய இவன் கணக்காத்தான் பேசிக்கொண்டு திரிந்தான். கருப்பசாமி இந்த ரெண்டு நாளாக கூலிங் கிளாஸ் கண்ணாடி, சோப்பு, பவுடர் எல்லாம் அவன் கிட்ட இருக்காம். அதான் அப்படி பேசிக்கொண்டு திரியறான்.
தமிழ்ச்செல்வனின் ‘கருப்பசாமியின் அய்யா’ சிறுகதையில் இருந்து.
(நிகழ்வு அளித்த உற்சாகத்தில்)
இனி, கொஞ்ச நாளைக்கு நாங்களும் இப்படித்தான் திரிவோம் தோழர்!
எழுதியவர் :
ந. அருள்மணி
கோவை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.