மொழிபெயர்ப்பு கவிதை: வானம்பாடிக்கு ஒரு கானம்..! – ஷெல்லி | தமிழில் தங்கேஸ்கவிதை சூழல்

மகாகவி ஷெல்லி தன் உடலின் ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான் எலெக்ட்ரான் நீயூட்ரான்களுக்குப் பதிலாக சுதந்திரத்தின் மூச்சுக்காற்றை நிரப்பி வைத்திருந்த மகா கவிஞன்.

அந்தி சாயும் நேரம் சூரியன் மேற்கே மூழ்கிப்போவதற்கும் முன்பு இரத்தச்சிவப்பில் மேற்கே தகதகக்கிறான். அவனது ஒளி வெள்ளத்தில் மலைமேல் மிதக்கும் முகில்களெல்லாம் தங்கத் தகடுகளாக தகதகக்கின்றன. அப்போது அங்கே தென்படும் ஒரு வானம் பாடி தன் மந்திரக்குரலால் ஒரு இன்னிசைக்கச்சேரி நடத்துகிறது.

செவியுற்ற மகாகவி கட்டற்ற உயரத்தில் சுதந்திரமாய் மிதந்தபடி ஆனந்தக்கச்சேரி பொழியும் அந்த வானம் பாடியை தன்னோடு அடையாளப்படுத்திக்கொள்கிறான். ஷெல்லியை பொறுத்தவரை மேற்கு காற்றாக இருந்தாலும் வான்மழையாக இருந்தாலும் இந்த உலகில் எவை எவை ஒப்பற்ற உன்னதமான ஜீவன்களோ அவையாவும் தன்னுடைய அம்சம் என்று அடையாளம் கண்டு கொள்வான், அப்படித்தான் இந்த வானம்பாடியை அச்சம் தவிர்த்த சுதந்திரத்தின் குறியீடாக கண்டு கொண்டு இந்த நெடுங்கவிதையை எழுதுகிறான்.

இந்தக்கவிதையில் வரும் ‘’Our sweetest songs are those that tell of saddest thought.’’என்ற ஒப்பற்ற வரி இந்த உலகில் ஒவ்வொரு நாளும் மேற்கோள் காட்டப்பட்டு மனித வாழ்வை படம்பிடிக்கும் அற்புதமான வரியாகும்.

ஏறத்தாழ இருபது பத்திகளுக்கும் மேல்நீண்டு செல்லும்
இந்த அற்புதக்கவிதை முழுக்க முழுக்க இன்னிசை , இயற்கை , வானம் பாடி வசந்தம்
என்று பிரபஞ்சத்தின் உயிர்களை கொண்டாடி தீர்க்கிறது எனலாம்.

Keats-Shelley Blog
To A Skylark, By: P. B. Shelley

இனி கவிதை

வானம்பாடிக்கு ஒரு கானம் !
( மகாகவி ஷெல்லி )

வாழ்க வானம்பாடியே !
மகிழ்ச்சியூட்டும் சக்தியே !
எளிதில் காணக்கிடைக்காத நீ
எங்கிருந்து வருகிறாய் ?
சொர்க்கத்திலிருந்தா ?
அதன் சுற்றத்திலிருந்தா ?
உன் இதயத்தில் ததும்பி வழியும்
திட்டமிடா தேனிசையை
எங்கள் செவிகளில் தாரை வார்கவோ
நீ வான் வெளியில் இன்னிசை கச்சேரி நடத்துகிறாய் ?

பூமியிலிருந்து உயரமான
அதி உயரமான
நீலவானத்தின் அடுக்குகளில்
நெருப்பு மேகமென
நீ சிறகை விரித்துவிட்டாய் !
அங்கிருந்ததோ
உன் இன்னிசைக்கச்சேரியை
ஆரம்பித்து விட்டாய்?
தன்னிகரற்று உயர்ந்து கொண்டே
செல்கின்றனவே
உன் சிறகுகளும்
அதோடு உன் நாதமும் …..

மூழ்கும் சூரியனிலிருந்து
எழும் பொன்னிற ஒளியில்
வெண்ணிறமேகங்கள் காண கண்கூசுகின்றன
உடலற்ற ஆனந்தம் இசையாய்
உருக்கொண்டு பொங்குவதுபோல்
வெட்ட வெளியின் எல்லையின்மையில்
நீயோ அலையலையாய் மிதந்துகொண்டிருக்கிறாய்

சொர்க்கத்தில் கரையும்
நட்சத்திரங்கள் போல
வெளிர் ஊதா மேகங்களும்
உன் ஆனந்த கானமதில்
தானாக கரைகிறதே !
கண்ணுக்குத் தெரிவதில்லை
இசையே உன் உருவம்
ஆனால் காதில் கேட்கிறதே
பிசிறில்லாத சங்கீதம்

விண் என்னும் கோளத்திலிருந்து
வெளிப்பாயும் ஒளி அம்புகள்
அத்தனை கூர்மையானது
ஆனாலும் வெளிச்த்தின் பேரொளியில்
விழிகளுக்குள் பாயாது
ஆனால் புலன்களுக்குள் பாயும்
அது தானே உன் இசை

ஓ சிறு புள்ளே !

உன் வசீகரக் குரலால்
விண்ணையும் மண்ணையும்
ஒரு சேரவல்லவோ
நீ நிறைத்துக்கொண்டிருக்கின்றாய் .
இரவு தன் உடை களைகிறது
ஒரே ஒரு ஒற்றை மேகத்திற்குள்
ஒளிந்திருக்கும் வெண்ணிலவு
குளிர்ந்தஒளிக்கற்றைகளை
வாரி வழங்குகிறது
விண்ணகம் வெளிச்சத்தில் தழுதழும்புகிறது

நிஜமாகவே
நீ யாரென்று நாங்கள் அறியோம்
உன்னைப்போல் யாருள்ளார் சொல் ?
வானவில் பூக்கும் மேகங்கள்
பொழியும் வண்ணமழையும்
நீ பொழியும் இன்னிசைமழை போல்
இதயத்தை நிறைப்பதில்லை

கற்பனையில் மூழ்கிய கவிஞனின்
சிந்தையில் முகிழ்க்கும்
உன்னத கவிதைபோல
உலகத்தை வசப்படுத்துகிறது
உன் கனியும் குரல்
பரிவும் நம்பிக்கையும் அதன் மீது படர்கிறது
வெறுப்பும் பயமும் மெல்ல மெல்ல மறைகிறது

உயர்ந்த அரண்மனையின்
உள்ளறையில்
காதலின் தாளாத துயரத்தை
தன் இன்னிசையால்
ஆற்றிக்கொண்டிருக்கும்
இளவரசியின் குரலைப்போல
பொங்கி பிரவாகமெடுத்தோடுகிறது
உனது குரல்

பனி படர்ந்த பள்ளத்தாக்கினில்
தன்னொளிதன்னை
பூக்களிலும் புற்களிலும்
பிரதிபலிக்கும்
மின் மின்பூச்சியைப்போல
இந்த வெளியெங்கும்
உன் இன்னிசையைப் பாய்ச்சுகிறாய புள்ளே

பச்சை இலைகளுக்குள்
பருவ ரோஜா மறைந்திருந்தாலும்
காற்றின் கைகள் அதை லாவகமாய்
களவாடி செல்லும் போது
சுவாசிக்கும் இதயங்களை
மயங்கிச்சரிய வைக்கும்
அதன் சுகந்தம் போல
உன் இசை போதேயூட்டுகிறது புள்ளே

வசந்த கால சாரல்களின் ஓசைகள்
மின்னிக்கொண்டிருக்கும் புற்களில்
ஒலிக்கின்றன
மிதமழை உறங்கி கொண்டிருந்த
பூக்களை எழுப்பி விட்டது
ஆனந்தம் தெளிவு உற்சாகம்
அவை அத்தனையையும்
இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டதே
ஓ புள்ளே !
உன் உன்னதமான இன்னிசைக்குரல்

நீ பறவையா ? பரிசுத்த ஆன்மாவா ?
எங்களுக்கும் கொஞ்சம் போதிக்க கூடாதா?
இன்னிசையின் பிண்ணனியில்
என்னென்ன நினைவுகளோ உன்னிடம்?
ஆதிக் காதலை அல்லது போதை ஒயினை
புகழும் எந்த இசைப்பாடலிலும்
உன் போல தெய்வீக பேரின்ப வெள்ளம்
பொங்கி வழிவதை நான் எங்கும் கேட்டதில்லையே

மணவிழா கீதங்கள்
வெற்றிவிழா பாடல்கள்
இவைகளை உன் இசையோடு ஒப்பிட்டால்
அவை உன் காலடி தூசுகளே
எட்டாத உயமே உன் நாதம்
விண்ணிசையோடு போட்டியிடும்
வெற்றுக்கூச்சல்கள் அவைகள்

உன் இன்னிசையின் ஊற்றுக்கண் எது ?
என் இனிய புள்ளே
வயல் வெளிகளா ? நீரலைகளா ?
மலைச்சிகரங்களா?
விண்ணெடுக்கும் விதவிதமான உருவங்களா ?
இன்னொரு புள்ளின் மீது காதலா ?
அல்லது அந்த புள்பிரிந்து சென்ற துயரமா ?

அமிர்தம் வழியும் உன் குரலின் மொழி
ஓர் நாளும் துயரமாக இருக்க முடியாது
துன்பத்தின் நிழலும் உன்னை நெருங்காது
நீ காதல்வயப்படுவாய்
ஆனால் காதலின் துயரம்
எந்நாளும் உன் குரலில் இழையாது

ஓ இசைப்புள்ளே !
விழித்திருக்கிறாயா ?
மீளாத் தூக்கத்திலிருக்கிறாயா ?
மரணம் மட்டும் தானே
முழு விழிப்புணர்வை தரும்
வாழ்க்கையை கனவில் கடத்தும் மனிதர்களால்
உன்னைப் போல் பொருட்களின்
புலனறியத்தான் முடியுமோ ?
அள்ளிச் சிதறப்பட்ட வெள்ளி நீரோடைபோல
வெளியெங்கும் சிதறிப்பரவுதே
உன் இசைத்திவலைகள் ..

மனிதர்களின் அவலம் அறிவாயோ நீ
இறந்த காலத்தை தேடுவோம்
எதிர்காலத்தையும் தேடுவோம்
எது எங்களிடம் இல்லையோ
அதற்காக ஏங்குவோம்
எங்களின் மனம் விட்ட சிரிப்புகளுக்கும் பின்னால்
எப்போதும் ஒரு வலி உறுத்திக்கொண்டேதானிருக்கும்
எங்களின் இனிமையான பாடல்கள் யாவும்
சோகங்களை சுமந்திருப்பவை தானே ..

நாங்கள் பிறந்தது கண்ணீர் சிந்த அல்ல என்றால்
வெறுப்பை கர்வத்தை பயத்தை விட்டொழித்தால்
உன்னைப்போல் அளவில்லா ஆனந்தத்தை
அடைந்துவிட இயலுமா
அல்லது அதனருகிலாவது வர இயலுமா
துயரங்களின் கைதிகள் தானே மனிதர்கள்
எத்தனை இன்னிசைகளை நாங்கள் உருவாக்கினாலும்
உன்னிசைக்கு அவை ஈடாகுமா அதிசய புள்ளே
புத்தகங்களில் புதைந்திருக்கும்
அத்தனை புதையல்களையும்
கொட்டி வைத்தாலும்
உன் ஒற்றை கீதத்திற்குத்தான் அவை ஒப்பாகுமா
எந்தக்கவிஞனின் மகா கவிதையும்
உன் மகோன்னதத்தை எட்ட முடியுமா
சொல் புள்ளே

உன் பரவசத்தில் பாதியை
எனக்கருள்வாய் என் இனிய புள்ளே
உன்மத்தத்தின் உச்சத்தில்
என் உதடுகள் உச்சரிக்கும் கவிதைகளை
இந்த உலகம் மெய்மறந்து கேட்க வேண்டும்
இப்பொழுது நான் உன் பாடலை கேட்பதைப்போல

மூலம் – ஷெல்லி
மொழிபெயர்ப்பு – தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)